நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

10 வருடப் பயணம்.... உச்சங்களைத் தொட்ட பங்குச் சந்தைகள் !

10 வருடப் பயணம்.... உச்சங்களைத் தொட்ட பங்குச் சந்தைகள் !

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணித்துச் சொல் வதற்கு முக்கியமானதொரு அளவுகோலாக இருப்பது பங்குச் சந்தைகள். மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் 2004 முதல் 2014ம் ஆண்டு வரை இரண்டு மிகப் பெரிய ஏற்றங்களையும், ஒரு மிகப் பெரிய இறக்கத்தையும் சந்தித்தது.

கடந்த 10 வருடங்களில் இந்திய சந்தைகள் பலமுறை புதிய உச்சங்களைத் தொட்டு வர்த்தகமாகின.

சென்செக்ஸ் 2004-ம் ஆண்டு வரை 5000 புள்ளிகள் என்ற அளவிலேயே வர்த்த கமாகி வந்தது. 2004-க்குப் பின்புதான் இந்திய சந்தைகள் அதிவேக வளர்ச்சியைச் சந்திக்கத் துவங்கின.

முதன் முதலாக 2004, ஜூன் 2-ம் தேதி சென்செக்ஸ் 6000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது. இதற்குப்பின் அதிவேகமாக ஏற்றம் காண ஆரம்பித்தது சென்செக்ஸ்.

2006-ம் ஆண்டு 10000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமான சென்செக்ஸ், அடுத்த இரண்டு வருடத்தில் இரட்டிப்பாகி 20000 புள்ளிகளுக்கு மேல் சென்று வர்த்தகமானது.

2008-ம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவால் இந்திய சந்தைகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

10 வருடப் பயணம்.... உச்சங்களைத் தொட்ட பங்குச் சந்தைகள் !

 20000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமான சென்செக்ஸ்  10000 புள்ளிகளுக்குக் கீழ் வீழ்ந்தது. மிகச் சில ஆண்டுகளில் கிடுகிடுவென வளர்ந்த பங்குச் சந்தை, அடுத்த சில மாதங்களில் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது.

என்றாலும், இந்திய பொருளாதாரம் வேகமாக வளரத் தொடங்கியதால், சரிவிலிருந்து மீண்ட சந்தை மீண்டும் சராசரியான வேகத்தில் வளர்ச்சி காணத் தொடங்கியது.

இந்த நிலையில், நரேந்திர மோடியின் தலைமையில் புதிய ஆட்சி கடந்த 2014, மே மாதம் அமைய, மீண்டும் அதிவேகத்தில் வளரத் தொடங்கின பங்குச் சந்தைகள்.

22000-த்திலிருந்து   உயரத் தொடங்கி, 28000 என்ற புதிய இலக்கைத்  தொட்டிருக்கிறது சென்செக்ஸ். இதேபோன்ற வளர்ச்சியைச் சந்தித்த நிஃப்டியும் 8400 புள்ளிகளைக் கடந்து வர்த்த கமாகிக் கொண்டிருக்கிறது.

மேலும், புதிய உச்சங்களைத் தொடும் என்ற நம்பிக்கையில் அடுத்த பட்ஜெட்டுக்குள் சென்செக்ஸ் 30000 புள்ளிகளை கடக்கும் என்ற பலமான எதிர்பார்ப்பு சந்தையில் நிலவி வருகிறது.

அடுத்த 10 வருடங்களில் சென்செக்ஸ் 100000 புள்ளிகளைத் தொட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.