நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

பரத நாட்டிய வகுப்பு கட்டணத்துக்கு வரிச் சலுகை பெற முடியுமா?

பரத நாட்டிய வகுப்பு கட்டணத்துக்கு வரிச் சலுகை பெற முடியுமா?

கேள்வி - பதில்

?என் மகள் தனியார் பள்ளியில்  பரதநாட்டியம் படிக்கிறாள். இதற்கு மாதம் ரூ.1000 கட்டணம் செலுத்துகிறேன். இந்தத் தொகைக்கு வரிவிலக்கு பெற முடியுமா?

- குமரன், சென்னை. சார்லஸ், ஆடிட்டர்.

“வருமான வரிப் பிரிவு 80சி-ன் கீழ் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்துக்காக ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு பெற முடியும். முழு நேரமாக மத்திய மற்றும் மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பயிலும்போது செலுத்தும் கட்டணத்துக்கு வரி விலக்கு பெற முடியும். இதைத் தவிர்த்து தனியார் நிறுவனங்கள் அல்லது வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பயிற்சியாளர்களிடம் பயிலும்போது செலுத்தும் கட்டணத்துக்கு வரிச் சலுகை பெற முடியாது.”

?ஐபிசிஏ லேபாரட்டரீஸ் பங்கை ரூ.800-க்கு வாங்கினேன். அந்தப் பங்கு தற்போது ரூ.600-க்கு வர்த்தகமாகிறது. இந்தப் பங்கு மீண்டும் விலை உயருமா?

 - மீனாட்சி, திருச்சி. எம்.எஸ்.ஓ.அண்ணாமலை, ஷேர் புரோக்கர், சேலம்.

“ஐபிசிஏ  லேபாரட்டரீஸ் நிறுவனத் தின் விற்பனை குறைந்திருந்தது. அதாவது, கடந்த ஆண்டு இதே செப்டம்பர் காலாண்டில் நடந்த விற்பனையைவிட மிகவும் குறைந்த அளவு விற்பனையே இந்த ஆண்டு இருந்தது. இதேபோல, லாபமும் 60% வரை குறைந்துள்ளது. இந்தக் காரணங்களினால் பங்கின் விலை சரிய ஆரம்பித்துள்ளது. அடுத்துவரும் காலாண்டுகளில் இந்த நிறுவனம் நல்ல வருமானம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பங்கு விலை உயர வாய்ப்புள்ளது. உங்களால் அடுத்த 3-6 மாத காலம் காத்திருக்க முடியும் எனில், வைத்துக்கொள்ளலாம். ஆனால், இந்தப் பங்கின் விலை ரூ.900 வரை உயர வாய்ப்பில்லை. ரூ.800 வரை உயரலாம்.”

பரத நாட்டிய வகுப்பு கட்டணத்துக்கு வரிச் சலுகை பெற முடியுமா?

?என் அம்மாவின் வயது 62. அவருக்குச் சொந்தமான நிலத்தை அரசு நலத் திட்டங்களுக்காக எடுத்துக் கொண்டார்கள். கொடுத்த தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்துகொண்டார்கள். இதைத் திரும்பப் பெற என்ன செய்ய வேண்டும்?

- கவிதா, வல்லக்கோட்டை. எஸ்.கிருஷ்ணன், ஆடிட்டர்.

“விவசாய நிலம் தவிர்த்து, வேறு எந்த வகையான நிலத்தை அரசு கையகப் படுத்தினாலும், அந்தத் தொகைக்கு உண்டான மதிப்பில் 10 சதவிகித தொகை வரியாக  வருமான வரி பிரிவு 194எல்ஏ-ன் கீழ் பிடித்தம் செய்யப்படும். இந்தத் தொகையைத் திரும்பப் பெற முடியும். நிலம் வாங்கிய விலை, விற்பனை தொகையின் அடிப்படையில் மூலதன ஆதாய வரிச் செலுத்த வேண்டும். கிடைக்கும் தொகையில் உங்களுக்கு வேறு எந்த வருமானமும் இல்லையெனில், வருமான வரி வரம்புபோக மீதமுள்ள தொகைக்கு வரிச் செலுத்த வேண்டும். அதாவது, சொத்தின் மூலமாக ரூ.6 லட்சம் வருமானம் கிடைக் கிறது என வைத்துக்கொள்வோம். அதில் நீங்கள் மூத்த குடிமக்கள் பிரிவின் கீழ் ரூ.3 லட்சத்துக்கு வருமான வரி போக மீதமுள்ள தொகைக்கு மூலதன ஆதாய வரிச் செலுத்த வேண்டும்.

இந்த வரித் தொகை அரசு டிடிஎஸ் பிடித்தம் செய்த தொகையைவிட குறைவு எனில், மீதமுள்ள தொகையைப் பெற முடியும். அதுவே, அதிகமாக இருக்கும்போது மீதமுள்ள தொகையை நீங்கள் செலுத்த வேண்டும். இதற்கு  வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். மேலும், நீண்ட கால மூலதன ஆதாய வரிச் செலுத்தாமல் இருக்க வேண்டும்  எனில், வருமான வரி பிரிவு 54 F-ன் கீழ் நிலம் கையகப்படுத்தல் மூலம் கிடைத்த தொகைக்கு வீடு வாங்கும்போது மூலதன ஆதாய வரிச் செலுத்தத் தேவையில்லை. பணம் கிடைத்த இரண்டு ஆண்டுக்குள் இதைச் செய்ய வேண்டும். இல்லை யெனில், அந்தப் பணத்தை மூலதன ஆதாய வரி பாண்ட் அல்லது டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்து வரியை மிச்சப்படுத்தலாம். இது, வருமான வரிப் பிரிவு 54EC-ன் கீழ் வரும்.”

?என் மனைவி அரசுப் பணியில் இருக்கும்போது ரூ.10 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தார். இப்போது அவர் பணி ஓய்வுபெற்று விட்டார். இந்த பாலிசியைத் தொடர முடியுமா?

- வீரன், ஈரோடு. ராமகிருஷ்ணன் வி. நாயக், இயக்குநர், தக்‌ஷின் கேப்பிட்டல்.

“உங்களின் மனைவி எல்ஐசி அல்லது வேறு தனியார் நிறுவனத்தில் பாலிசி எடுத்துள்ளாரா அல்லது வேலை பார்க்கும்போது குரூப் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துள்ளாரா என்பதைக் கவனிக்க வேண்டும். பாலிசியின் காலம் முடியவில்லை எனில், தொடர்ந்து பிரீமியம் செலுத்தி பாலிசியைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.”

பரத நாட்டிய வகுப்பு கட்டணத்துக்கு வரிச் சலுகை பெற முடியுமா?

?தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த நான், கடந்த வருடம் விஆர்எஸ் வாங்கினேன்.   இன்னும் என் பிஎஃப் பணம் கிடைக்கவில்லை. பிஎஃப் அலுவலகத்தில் கேட்டால், என் கணக்கில் அந்த நிறுவனம் பணம் செலுத்தவில்லை என்கிறார்கள். பணத்தைப் பெற என்ன செய்ய வேண்டும்?

- ரங்கராஜ், பொள்ளாச்சி. கே.எம்.ரமேஷ், வழக்கறிஞர்.

“இதுகுறித்து பிஎஃப் அலுவலகத்தில் உள்ள அமலாக்க அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம். அந்த நிறுவனம் தற்போது செயல்பட்டுக் கொண்டிருந்தால், அந்த நிறுவனத்தின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து, உங்களிடம் பிடித்த பணத்தையும், அலுவலகம் செலுத்த வேண்டிய பணத்தையும் பெற முடியும்.''

?ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்டில் கடந்த 27 மாதங்களாக எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறேன். இதைத் தொடரலாமா? இதற்கான வருமான வரி எப்படி கணக்கிட வேண்டும்?

- கோவிந்தன், தூத்துக்குடி முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.

“பேலன்ஸ்டு ஃபண்ட் வகையைச் சேர்ந்த ஹெச்டிஎஃப்சி ஃபண்ட் சிறந்த ஃபண்டாக உள்ளது. எனவே, இந்த ஃபண்டில் முதலீட்டை தொடரலாம். இந்த ஃபண்டில் முதலீடு செய்யப்படும் தொகை 65%  ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் வரிச் சலுகையை நீங்கள் பெற முடியும். முதலீட்டை ஓராண்டுக்குமேல் வைத்திருக்கும்போது நீண்ட கால மூலதன வரிச் செலுத்தத் தேவையில்லை. அதுவே, ஓராண்டுக்குள் முதலீட்டை வெளியே எடுக்கும்போது லாபத்துக்கு குறுகிய கால வரியாக 15% செலுத்த வேண்டியிருக்கும்.”

?விவசாய நிலம் வாங்க நினைக்கிறேன். இது சிறந்த முதலீடாக இருக்குமா?

- கண்ணன், சென்னை. பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்.

‘‘நல்ல முதலீடுதான். அதில் என்ன பயிர் செய்கிறோமோ அதை கிராம நிர்வாக அலுவலர் (VAO) அடங்கல் எனும் பதிவேட்டில் பதிவு செய்வார். விவசாயம் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு வருமான வரி கிடையாது. மேலும்,  விவசாய நிலத்தை விவசாய நிலமாகவே மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விற்பனை செய்தால் அதில் பெறும் லாபத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி கிடையாது. அதனால், லாபமாகவே இருக்கும்.’’

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள்.

எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.