Published:Updated:

இனி எல்லாம் லாபமே !

டாக்டர் எஸ்.கார்த்திகேயன் ஓவியம்: ஸ்யாம்

இனி எல்லாம் லாபமே !

டாக்டர் எஸ்.கார்த்திகேயன் ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

வெற்றிகரமான முதலீட்டுக்கு...

லாபம்! இந்தச் சொல்லை விரும்பாதவர்கள் நம்மிடையே இருக்கமுடியாது! இதனை அடைவதற்கு நம் அனைவரிடமுமே அளவுகடந்த விருப்பம் இருந்தாலும், எல்லோராலும் இதை அவ்வளவு சுலபத்தில் அடைந்துவிட முடிகின்றதா என்ன?

சும்மாவா? லாபம் என்ற ஊருக்குச் சென்று சேர்வதற்குள் எத்தனை இடைஞ்சல்களைக் கடக்க வேண்டியிருக் கின்றது! லாபம் என்றவுடனேயே அதனுடன் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவியும் நமக்கு நினைவுக்கு வந்துவிடுகின்றதே! அதுதான் சார், நஷ்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்போதுமே லாபம் பெறவும் நஷ்டம் தவிர்க்கவும் நம்முடைய மனம்கிடந்து அல்லாடுகின்றது. லாபம் பெற நம்முடைய மனதுகிடந்து தவிக்கின்ற மாதிரி, நஷ்டத்தைத்  தவிர்க்கவும் நம்முடைய மனதுகிடந்து தவிக்கவே செய்கின்றது.

இந்தத் தவிப்பே நம்முடைய நடவடிக்கைகளை மாற்றுகின்றது. இந்தத் தொடரில் நாம் பார்க்கப் போவது, எப்படி நாம் நம்முடைய மனநிலைதனை சரிப்படுத்துவதன் மூலம் லாபம் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்திக்கொள்வது என்பதைத்தான்.

லாபம் குறித்த மனநிலை, நஷ்டம் குறித்த மனநிலை, லாபம் வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கும்போது நம்முடைய மனநிலையும் நடவடிக்கைகளும் செயல்பாடு களும் எப்படி இருக்கும்/இருக்கவேண்டும், நஷ்டம் வருவதற்கான வாய்ப்பு இருக்கும்போது நம்முடைய மனநிலையும் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் எப்படி இருக்கும்/இருக்க வேண்டும் என்பதையும் இந்தத்தொடரில் பார்ப்போம்.

இனி எல்லாம் லாபமே !

இப்படி ஒவ்வொரு விதமான சூழ்நிலையிலும் எப்படி தெளிவைப் பெற்று லாபத்தைப் பெருகின்ற வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்வதற்கான வழிகளில் மெள்ள மெள்ள அடிஎடுத்து வைப்பது என்பதைப் புரிந்துகொள்ள முயலுவோம்.

லாபம் பார்க்க இரண்டு விஷயங்கள் நமக்குத் தேவைப்படுகின்றது. லாபம் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை. அதேபோல், நஷ்டம் வந்துவிட்டால் என்ன செய்வது என்கின்ற பயம்.

இந்த ஆசையும் பயமும் (கிரீட் அண்ட் ஃபியர்) மனதில்தானே தோன்றுகின்றது. அதனாலேயே லாபத்தில் மனதுக்கு முக்கியப் பங்கு இருக்கின்றது. நம்முடைய மனநிலையும் நடவடிக்கைகளுமே, நம்மை நோக்கி லாபத்தைக் கொண்டுவருவதில் பெரும்பங்கு வகிக்கின்றது என்பதைப் பல்வேறு ஆய்வுகளின் மூலம் கண்டறிந்து நிரூபித்துவரும் துறையைத்தான் “பிஹேவியரல் ஃபைனான்ஸ்” என்று அழைக்கின்றோம்.
1948-ம் ஆண்டுதான் பிஹேவியரல் ஃபைனான்ஸுக்கு ஆராய்ச்சி ரீதியாக அடிக்கல் நாட்டப்பட்ட வருடம் எனலாம். அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், வீட்டுக்கு ஃபயர் இன்ஷூரன்ஸ் எடுக்கும் நபர் லாட்டரி டிக்கெட்டையும் வாங்குகின்றாரே ஏன் என்ற கேள்வியை எழுப்பினார்கள் (இன்றைக்கு லாட்டரி டிக்கெட் என்பது நம் ஊரில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டுவிட்ட ஒன்று).

எல்லா வீடும் தீப்பிடித்து எரிந்துவிடப் போவதில்லை. தீ பிடிப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தாலுமே, அது நடந்துவிட்டால் நஷ்டம் வந்துவிடுமே என நினைத்து ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை இன்ஷூரன்ஸுக்கு இழக்கத் தயாராக மனிதர்கள் இருக்கின்றனர். அதனாலேயே, இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கின்றனர்.

இனி எல்லாம் லாபமே !

லாட்டரியில் பணம் விழுவது என்பது மிக மிக அரிதான விஷயம். ஃபயர் இன்ஷூரஸுக்குப் பணம் கட்டிய அதே மனிதர்கள் லாட்டரி டிக்கெட்டும் வாங்குகின்றனர். லாட்டரியில் பரிசு விழுந்து பணம் வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று நன்றாகத்தெரிந்திருந்தும், அதாவது, லாபத்துக்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பது தெரிந்தபின்னரும் - லாட்டரி டிக்கெட்டை பணம் செலவழித்து மனிதர்கள் வாங்கவே செய்கின்றனர்.

நஷ்டத்துக்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று தெரிந்தபோதிலும் அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள ஒரு சிறுதொகையை இழக்கத் தயாராகும் மனிதன், லாபத்துக்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று தெரிந்த பின்னரும்கூட அந்தத் திட்டத்தில் (லாட்டரி) பங்கேற்க ஒரு தொகையை இழக்கத் தயாராக இருக்கின்றான்.

இனி எல்லாம் லாபமே !

இது என்ன, முன்னுக்குப்பின் முரணான எண்ண ஓட்டமாக இருக்கின்றதே! இதுபோன்ற மனநிலையில்தான் மனிதன் எல்லா விஷயங் களிலும் செயல்படுகின்றானா? என்ற கேள்வி தோன்றுகின்றது இல்லையா? இந்தக் கேள்விதான் ஆய்வாளர்கள் மத்தியில் உதயமானது.
நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் மனிதர்களின் மனதில் இருக்கும் எண்ணம் என்றால், ஏன் ஒருவர் குறைந்த லாபம்/வருமானம் தரும் தொழிலில் இருக்கின்றார்? லாப நோக்கே பெரிதாக மனதில் வியாபித்திருந்தால், குறைந்த ரிட்டர்னைத் தரும், ஆனால் ரிஸ்க் குறைவான அரசாங்கப் பத்திரங்களில் ஏன் மனிதர்கள் முதலீடு செய்கின்றார்கள்?

செய்யும் தொழில் மற்றும் முதலீடுகளில் பகுத்தறிவுடன் (ரேஷனல்) மனிதன் செய்லாற்று கின்றான் என்றால், எல்லோரும் சூப்பர் சம்பளம்/லாபம் தரும் வேலைக்கோ/தொழிலுக்கோ தானே போக வேண்டும். அதை நோக்கித்தானே முயற்சிகள் அனைத்தும் நிலை நிறுத்தப்பட வேண்டும். ஆனால், மனிதர்களோ குறைவான சம்பள மானாலும் ஆயுட்கால உத்தரவாதம் இருக்கும் அரசுப் பணியில் சேர்ந்து விடவேண்டும் என்றல்லவா துடிக்கின்றார்கள்?

பலரும் சிறியதாய் தொழில் செய்து வாழ்வதை நாம் கண்ணால் பார்க்கின்றோமே! அது ஏன்? ஏன் இவர்கள் எல்லோரும் அதிக வருமானம்/அதிக லாபம் என்று கிளம்பவில்லை. போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என எல்லோரும் செட்டிலாகிவிடுவதில்லையே! ஒரு சிலர் ரிஸ்க்கைக் கண்டு பயந்து ஓடுவதும் வேறு சிலர் ரிஸ்க் எனக்கு ரஸ்க் சாப்பிடுவதைப்போல் என்று அசால்ட்டாக வாழ்வதும் எதனால்? இந்தவகை மாறுபாடுகள்தானே தொழிலிலும் வேலை யிலும் லாபத்தின் அளவை கூட்டி, குறைத்து ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகின்றது.
ரிஸ்க்கே கூடாது என்ற மனநிலை உள்ளவர்கள் ஒரு நியாயமான நடுத்தர அளவு ரிஸ்க்கைக்கூட எடுக்க மறுத்துவிடு கின்றார்கள். உதாரணத்துக்கு,  ஒரு செயலில் வெற்றி பெற்றால் ஒரு ரூபாய் லாபம் பெறவும், தோல்வி அடைந்தால் ஒரு ரூபாயை இழக்கவும் வாய்ப்புள்ளது என்பதனை ஒரு நல்ல தொழில் வாய்ப்பு என்றே சொல்லலாம்.

இதில் ஈடுபடுவதைக்கூட இந்தவகை நபர்கள் தவிர்த்துவிடுகின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு நியாயமான விஷயத்தில் ஈடுபட மறுக்கும் இவர்களே மிக அதிக ரிட்டர்ன் தரக்கூடிய வாய்ப்பினைக் காட்டும், அதேசமயம் கடுமையான ரிஸ்க் இருக்கும் (லாபத்துக்கான வாய்ப்பைவிடப் பல மடக்கு அதிகமான நஷ்டத்தை உண்டாக்கிவிடக் கூடிய) கவர்ச்சித் திட்டங்களுக்கு இரையாகி விடுகின்றார்கள். இது ஏன் நடக்கின்றது?


உதாரணத்துக்கு, மிகவும் கட்டுப்பெட்டியாக வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி நீண்ட காலத்துக்குச் சேமித்து, சேமித்த அனைத்தையும் ரொம்பவும் பாதுகாப்பான முதலீடாக(!) தங்கமாகவே வாங்கி வைத்து பின்னர், ஒரு கவர்ச்சிகரமான அதிக ரிட்டர்ன் தரும் (ரிஸ்க் எக்கச்சக்கமான) முதலீட்டுத் திட்டத்தை நம்பி கையில் இருக்கும் தங்கத்தை அடகுவைத்து முதலீடு செய்து, முதலீட்டையும் அடகில் இருந்த தங்கத்தையும் இழக்கும் இந்தவகை மனிதர்களைச் சொல்லலாம்.

மனிதன் இப்படி முரண்பாடுகளின் மொத்த உருவமாகத்தான் செயல்படுகின்றான் என்றால், இதைத்  தீர ஆராய்ந்தால்  இரண்டு விஷயங்களுக்கு இது உபயோகமாக இருக்குமே!

இனி எல்லாம் லாபமே !

ஒன்று, வியாபாரச் சந்தையில் எப்படி செயல்பட வேண்டும் என்று அனைவரும் புரிந்து கொள்ளலாம். அதன்மூலம் லாபம் பார்க்கும் வாய்ப்பையும் அதிகரித்துக்கொண்டு நஷ்டம் தவிர்க்கும் வழிகளையும் கண்டறியலாம் என்பதைத்தான் ஆய்வாளர்கள் இந்தவித ஆய்வுகளைச் செய்ய முற்பட்டார்கள் எனலாம்.

அதெல்லாம் 1948-ல் சார். இன்றைக்கு கம்ப்யூட்டர் யுகம். பிஹேவியரல் ஃபைனான்ஸ் எல்லாம் வொர்க் அவுட் ஆகாது என்று சொல்பவர் களையும் நாம் பார்க்கவே செய்கின்றோம். ஆசையும் பயமும் மனதில் வருவதால், அதுபற்றி பேசும் பிஹேவியரல் ஃபைனான்ஸ் குறித்துத் தெரிந்துகொள்வதில் தவறேதும் இல்லை.

இதைத் தெரிந்துகொள்வதன் மூலம் லாபம் பெறுவதற்கான வாய்ப்பை ஒரு சதவிகிதம் அதிகரித்துக்கொண்டால்கூட அது நன்மை தருவதாகவே இருக்கும் இல்லையா?

(லாபம் தொடரும்)