நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

இன்னுமொரு சரிவை நோக்கிச் செல்கிறதா நம் பங்குச் சந்தை?

டாக்டர் அனந்த நாகேஸ்வரன், சர்வதேச பொருளாதார நிபுணர்.

இந்திய பங்குச் சந்தையின் வளர்ச்சி குறித்து எழுதுவதில் சிஎல்எஸ்ஏ முதலீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் வுட் மிக முக்கியமானவர். சமீபத்தில் அவர் வெளியிட்ட ரிப்போர்ட்டில், வழக்கமாக அவர் பின்பற்றும் பெஞ்ச்மார்க்கைவிட மூன்று மடங்கு அதிகமாக இந்திய பங்குகளைத் தனது பரிந்துரை போர்ட்ஃபோலியோவில் வாங்கும்படி சொல்லியிருந்தார்.

‘பேராசையும் பயமும்’ என்கிற தலைப்பில் அவர் வெளியிடும் ரிப்போர்ட்டில், ஆசியாவிலும், வளர்ந்துவரும் நாடுகளிலும், ஏன் உலகிலேயே மிகச் சிறந்த பங்குச் சந்தையாக  இந்திய பங்குச் சந்தையைச் சொல்லி இருந்தார்.

இந்திய பங்குச் சந்தைகள் பற்றி இப்படி புகழ்ந்து சொல்லப்படும் வார்த்தைகளைப் படிக்கும்போது நான் பதற்றம் அடையத் தொடங்கிவிடுகிறேன். ஏன் தெரியுமா?

குறைந்த கால முதலீடு மிக அதிகமாக   இந்தியாவை நோக்கி படையெடுப்பதே இதற்குக்  காரணம். இந்தக் குறைந்த கால முதலீடு இந்திய அரசாங்கத்தையும் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களையும் அதில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களையும் தற்போதிருக்கும் நிலையில் திருப்தி கொள்ள வைத்து மேலும் வளர்ச்சிக்கு வழிவகுக்காமல் செய்துவிடும். அதீதமான நம்பிக்கை எப்போதும் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும்.

இன்னுமொரு சரிவை நோக்கிச் செல்கிறதா நம் பங்குச் சந்தை?

அப்படிப்பட்ட ஒரு அதீதமான நம்பிக்கைதான் இப்போது உருவாகி மேலெழுந்து வரத்தொடங்கி இருப்பதாக நான் நினைக்கிறேன்.இந்திய பங்குச் சந்தை இந்த ஆண்டு மிக நன்றாகவே செயல்பட்டி ருக்கிறது. உலக அளவில் நன்கு செயல்படும் சந்தைகளில் இந்தியப் பங்குச் சந்தை மிகச் சிறப்பாகவே இருக்கிறது. உலக அளவில் நிலவும் குறைந்த வளர்ச்சி மற்றும் பலவீனமான தலைமை என்கிற சூழலில் இந்தியாவின் மீது எல்லோரின் கவனமும் இருப்பது இந்திய சந்தையை மேல்நோக்கி கொண்டு சென்றிருக்கிறது.

ஆனால், இங்குதான் ஆபத்து இருக்கிறது. காரணம், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் காட்டிலும் பன்மடங்கு வேகமாகப் பங்குச் சந்தை வளர்ச்சிகண்டு வருகிறது. பொருளாதாரத்துக்கும் பங்குச் சந்தைக்கும் இருக்கும் இந்த இடைவெளியானது இன்னும் அதிகமாகவே வாய்ப்புள்ளது. 

ஏனெனில், அமெரிக்கா தனது நிதிக் கொள்கையை 2015-ல் பெரிதாக மாற்றி அமைக்கிறமாதிரி தெரியவில்லை. தவிர, ஜப்பானும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார ஊக்குவிப்பைச் செய்யப் போகிறது. இதனால் எக்கச்சக்கமாகப் புழக்கத்தில் இருக்கும் பணம், முதலீட்டுக்காக வந்துகொண்டிருக்கிறது. இதன்காரணமாக சொத்துக்களின் விலை கண்டபடி உயரும். இந்தநிலையில் சிறு சரிவு வந்தாலும் நீர்க்குமிழி உடைவதுபோல் சொத்துக்களின் மதிப்பும் பெரிய அளவில் சரிவதற்கு நிறையவே வாய்ப்புள்ளது.

இன்னுமொரு சரிவை நோக்கிச் செல்கிறதா நம் பங்குச் சந்தை?

இந்திய பங்குச் சந்தையில் உற்சாகம் அதிகமாக இருந்தாலும், தொழில்துறை உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் உற்பத்தியானது எந்த வகையிலும் வேகமான வளர்ச்சியைக் கண்டுவிடவில்லை. எனினும்கூட, 2016-ம் ஆண்டில் நமக்கும் சீனாவுக்கும் இருக்கும் இடைவெளியானது மிகச் சிறிய அளவிலேயே இருக்கும் என்று பொருளாதார நாளிதழ்கள் எழுதுகின்றன.

இது மிகவும் தவறான வழிகாட்டுதல் ஆகும். இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது 2016-ல் சீனாவின் வளர்ச்சி விகிதத்துக்கு அருகில் இருக்கலாம். சிறிய அளவில் அதைத் தாண்டிக்கூடச் செல்லலாம். ஆனால், இந்திய பொருளாதாரத்தின் அளவு சீனப் பொருளாதாரத்தின் அளவுடன் ஒப்பிட முடியாதபடி மிகக் குறைவாகவே இருக்கும் என்பதில்  சந்தேகமே இல்லை.

உதாரணத்துக்கு, சில புள்ளிவிவரங்களைச் சொல்கிறேன். 2013-ல் கிடைக்கிற புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், 2005 விலையிலான சீனாவின் உண்ைமயான ஜிடிபி-ன் மதிப்பு சுமார் 4.86 ட்ரில்லியன் டாலர். (ஒரு ட்ரில்லியன் டாலர் என்பது 1 லட்சம் கோடி டாலர்!) ஆனால், இந்தியாவின் உண்மையான ஜிடிபி என்பது 1.46 ட்ரில்லியன் டாலர்தான். சீனாவின் தற்போதைய (பணவீக்கம் சரிக்கட்டாமல்) ஜிடிபியின் மதிப்பு 9.2 ட்ரில்லியன் டாலர். ஆனால், இந்தியாவின் தற்போதைய ஜிடிபி மதிப்பு 1.9 ட்ரில்லியன் டாலர் மட்டுமே.

சீனாவின் சராசரி தனிநபர் வருமானம் 3,583 டாலர் (இந்திய ரூபாயில் சுமார் 2.20 லட்சம்). ஆனால், இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானம் 1,167 டாலர் (இந்திய ரூபாயில் சுமார் 72 ஆயிரம்) மட்டுமே. சீனப் பொருளாதாரம் 1979-ல் சீர்திருத்தம் செய்யப் பட்டபின் அதன் ஜிடிபியானது கடந்த 35 ஆண்டுகளில் 10 சதவிகிதத்துக்குப் பக்கத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனால், இந்திய பொருளாதாரம் 1990-ல் சீர்திருத்தம் செய்யப் பட்டபின் கடந்த 24 நான்கு ஆண்டுகளில் 6.4 சதவிகித வளர்ச்சி மட்டுமே கண்டு வருகிறது.

சீனாவுக்கு வாராக் கடன், தலைக்குமேல் தொங்கும் கத்தியாகப் பயமுறுத்தி வருகிறது. இந்தியாவுக்கும் இதேமாதிரியான பிரச்னை இருக்கவே செய்கிறது. சீனாவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதால், அங்கு காற்றும் நீரும் மாசுபட்டுள்ளது. இந்தியாவிலும் அதே பிரச்னைதான். ஆக, சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில், சீனாவுக்கு உள்ள அத்தனை பிரச்னைகளும் இந்தியாவுக்கும் இருக்கிறது. ஆனால், சீனாவின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவிடம் இல்லை.

இன்னுமொரு சரிவை நோக்கிச் செல்கிறதா நம் பங்குச் சந்தை?

இந்தியாவில் தற்போது புதிதாக அமைந்திருக்கும் அரசாங்கத்தின் ஆரம்ப முயற்சிகள் அருமையாக இருந்தாலும், இந்திய பொருளாதாரம் சீரான வளர்ச்சி காண்பதற்கு பல முக்கியமான வேலைகளை இன்னும் நிறையவே செய்யவேண்டி இருக்கிறது.

இந்தியாவின் மின் உற்பத்தியும் விநியோகமும் இன்னும்கூட சிக்கல் மிகுந்ததாகவே இருக்கிறது. முதலில் இந்தச் சிக்கலை சீர்செய்ய வேண்டும். நிலக்கரி ஏலம் விடுவதற்கு இன்னும் பல முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வங்கி களின் மூலதனத்தைப் பெருக்குவதற்கு அரசாங்கத்தின் தரப்பில் எந்த காலதாமதமும் இருக்கக்கூடாது. தொழில் துறைக்குத் தேவை யான நிலங்களை ஆர்ஜிதம் செய்வதில் இருக்கும் தடைகளை உடனடியாக களைய வேண்டும். மனித வள மேம்பாட்டுத் துறையில் நல்ல வாய்ப்பினைச் செயலாக்க  காலம் கடத்திக்கொண்டே வருகிறோம்.

இந்திய பொருளாதாரத்துக்கு அதிக அளவில் பணம் கிடைப்பது தவறான முதலீட்டுக்கே வழிவகுக்கும். இதனால் நீண்ட கால வளர்ச்சியை மறந்துவிட்டு, குறுகிய காலத்தில் பங்குச் சந்தை ஏற்றம் காண்பதி லேயே கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கடந்த 2004 - 2008-ல் இதுதான் நடந்தது.

தற்போது இந்திய அரசாங்கமும் இந்திய தொழில்துறை நிறுவனங்களும் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவருகின்றன. ஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடந்த தவறுகளை இந்த அரசாங்கம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். பங்குச் சந்தையில் யூகத்தின் அடிப்படையிலான கருத்துக்களை எல்லாவகையிலும் ஒதுக்கித்தள்ள வேண்டும். மூலதனமானது யூகம் நிறைந்த, குறைந்த கால முதலீட்டில் செல்வதைத் தடுக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கியும், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசாங்கமும் தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.

மகிழ்ச்சியைப்போல, வளர்ச்சியும் இயற்கையாக உருவாக வேண்டுமே ஒழிய, செயற்கையாக உருவாகக் கூடாது. குறைந்த கால வளர்ச்சிக்கும் லாபத்துக்கும் ஆசைப்பட்டு பங்குச் சந்தையைப் பலிகடாவாக ஆக்கக் கூடாது. நீண்ட கால வளர்ச்சி ஒன்றே தன் குறிக்கோள் என்பதை இந்தியா நிரூபிக்க வேண்டும்.

இதற்குத் தேவை பொறுமை; மெதுவாக, நிதானமாகத்தான் இந்த வளர்ச்சியை அடைய முடியும் என்பதை இந்தியா எடுத்துச் சொல்ல வேண்டும். இன்றைய நிலையில், இந்தியா குறுகிய காலத்தில் இன்னுமொரு வீழ்ச்சியைத் தாங்க முடியாது.