நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

பத்தாண்டுகளில் நல்ல லாபம் தந்த 10 ஃபண்டுகள்!

- சி.சரவணன், படம்: ஹரிகரன்.

கடந்த ஓராண்டு காலத்தில் பங்குச் சந்தை நல்ல லாபத்தைத் தந்திருக்கிறது. இதன்காரணமாக மியூச்சுல் ஃபண்ட் முதலீடுகளும் நல்ல லாபத்தை அள்ளித் தந்திருக்கிறது. இதனால் பல லட்சம் புதிய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை புதிதாகத் தொடங்கியுள்ளனர். நன்கு விஷயம் தெரிந்த முதலீட்டாளர்களே பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடியும். ஆனால், பெரிய அளவில் விஷயம் தெரியவில்லை என்றாலும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து லாபம் பார்க்க முடியும் என்பதால், மக்கள் அதனை விரும்பித் தேர்வு செய்துவருகின்றனர். இந்த நிலையில், நாணயம் விகடன் பத்தாம் ஆண்டு சிறப்பிதழுக்காக கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக லாபம் தந்த 10 ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து தரும்படி சென்னையைச் சேர்ந்த ஓம் ஸ்பெக்ட்ரம் ஃபைனான்ஷியல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் என்.சுவாமிநாதனிடம் கேட்டோம்.

பத்தாண்டுகளில் நல்ல லாபம் தந்த 10 ஃபண்டுகள்!
பத்தாண்டுகளில் நல்ல லாபம் தந்த 10 ஃபண்டுகள்!

தற்போது செயல்பட்டுவரும் ஃபண்டுகளை பல கோணத்தில் ஆராய்ந்து, கடந்த 10 ஆண்டுகளில் நன்கு செயல்பட்ட  10 ஃபண்டுகளை (பார்க்க அடுத்த பக்கத்திலுள்ள அட்டவணை) தேர்வு செய்து தந்தார். இந்த ஃபண்டுகளை தேர்வு செய்ததற்கான காரணங்களை அவர் நம்மிடம் எடுத்துச் சொன்னார்.

‘‘கடந்த பத்து ஆண்டுகளில், ஆண்டுக் கூட்டு வளர்ச்சியாக 20% மற்றும் அதற்குமேல் வருமானம் தந்த ஃபண்டுகளை எடுத்து அலசினோம். பத்தாண்டு என்பது நீண்ட காலம் என்பதால், நாம் ஈக்விட்டி ஃபண்டுகளை அதுவும் ஈக்விட்டி டைவர்ஸிஃபைடு மட்டுமே எடுத்துக் கொள்வோம். 

மொத்தம் 108 ஃபண்டுகள் இந்தப் பிரிவின் கீழ் வருகின்றன. இதில் வருமானத்தின் அடிப்படையில் டாப் 10 ஃபண்டுகளைத் தேர்வு செய்தோம். இதில் லார்ஜ் கேப், லார்ஜ் அண்ட் மிட் கேப், மிட் அண்ட் ஸ்மால் கேப், மல்டி கேப் ஃபண்டுகள் கலவையாக இடம்பிடித்துள்ளன. மேலும், வரிச் சலுகை அளிக்கும் இஎல்எஸ்எஸ் ஃபண்டுகள் இரண்டு, அதிக வருமானம் தந்தப் பிரிவில் இருக்கின்றன.

இந்தப் பத்து ஃபண்டுகளும் கடந்த பத்தாண்டுக்கு மேலே சந்தையின் ஏற்ற இறக்கத்தைத் தாண்டி, நல்ல வருமானத்தைத் தந்தவையாக இருக்கின்றன. இவை ஈக்விட்டி ஃபண்டுகள் என்பதால், டிவிடெண்ட் வருமானம் மற்றும் நீண்ட காலத்தில் (ஓராண்டுக்குமேல்) யூனிட்களை விற்று பணமாக்கும்போது வருமானத்துக்கு வரி எதுவும் கட்டத் தேவை இல்லை. காலத்தை வென்று நல்ல லாபம் கொடுத்த அந்த ஃபண்டுகள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த அட்டவணையை கூர்ந்து கவனித்தால் உங்களுக்கு சில விஷயங்கள் புலப்படும்.  மிட் அண்ட் ஸ்மால் கேப் மற்றும் லார்ஜ் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டுகள் அதிக வருமானத்தை தந்திருப்பது தெரியவரும். அடுத்து இந்த ஃபண்டுகளின் டாப் போர்ட்ஃபோலியோவில் நிதிச் சேவை, தொழில்நுட்பம், எரிசக்தி போன்ற துறைகள் பிரதான இடத்தை பிடித்திருக்கின்றன.

Click to Enlarge
பத்தாண்டுகளில் நல்ல லாபம் தந்த 10 ஃபண்டுகள்!

 மியூச்சுவல் ஃபண்டில் கடந்த காலத்தில் கிடைத்த வருமானம் எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதேநேரத்தில், இதை ஓர் அளவுகோலாக எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அந்த வகையில், புதிய ஃபண்ட் வெளியீட்டில் (என்எஃப்ஓ) முதலீடு செய்வதைவிட சந்தையின் ஏற்ற இறக்கத்தில் நீண்ட காலத்தில் நல்ல  வருமானம் தந்திருக்கும் ஃபண்டுகள் முதலீட்டுக்கு சிறந்தவை என்று கூறலாம்.

பத்தாண்டுகளில் நல்ல லாபம் தந்த 10 ஃபண்டுகள்!

இவற்றில் எஸ்ஐபி முறையில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதன் மூலம் கணிசமான லாபத்தைப் பெற முடியும். கடந்த ஐந்தாண்டுகளில் பங்கு சார்ந்த முதலீடு பெரிதாக லாபம் தரவில்லை என்று ஒதுங்கி இருக்காமல், அடுத்த ஐந்தாண்டுகளின் வளர்ச்சியைப் பயன்படுத்தி லாபம் பார்க்க ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வது புத்திசாலித் தனமான முடிவாக இருக்கும்” என்றார் சுவாமிநாதன். 

அதே சமயம் அதிக ரிஸ்க் வேண்டாம் என்கிறவர்கள் பேலன்ஸ்ட் ஃபண்டுகளை முதலீட்டுக்கு தேர்ந்தெடுக்கலாம். (அட்டவணை அருகில்) இந்த ஃபண்டுகளில், நிறுவனப் பங்குகளில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு 65% தொடங்கி 75% வரை செல்கிறது. மீதமுள்ள  தொகை கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கும்.