நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

ஷேருச்சாமி ஆருடம்!

18 மாசத்துக்கு குறையாம முதலீடு செய்யுங்க! ஓவியம்: ஹரன்

பத்தாம் ஆண்டு சிறப்பிதழுக்கு சாமியைப் போய் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே மொபைல் போனில் ஷேருச்சாமி அழைத்தார். பட்ஜெட் முடிஞ்சதும் இந்தப்பக்கம் வந்தீங்க! அதுக்கப்புறம் ஆளையே காணோமே! மார்க்கெட்டுல சூப்பர் சம்பாத்தியமோ என்று கலாய்த்தார்.

‘‘இல்லீங்க சாமி! கொஞ்சம் ஆபீஸில் பிஸி. நாங்களே உங்களைப் பாக்கணும்னு நினைச்சிக்கிட்டிருக்கும்போது நீங்க கூப்டுட்டீங்க. எப்ப வந்தா சவுகரியப்படும் சாமி?’’ என்றேன்.

‘‘இன்னைக்கு முழுக்க ஃப்ரீதான். எப்ப வேண்டுமென் றாலும் வரலாம்’’ என்றார் சாமி. செல்லும் நானும் உடனடியாக புறப்பட் டோம். பட்ஜெட் பற்றி கேட்கப்போன போது உங்க தனி ஸ்ட்ராட்டஜியில ஏதாவது பங்குகள் இருக்குமேன்னு நான் கேட்க, சாமி சொன்ன மூணு பங்குகளை வாங்கி நல்ல லாபம் பார்த்ததால் செல் உற்சாகமாய் புறப்பட்டு வந்தான்.

பங்களாவுக்குள் நுழைந்தவுடன் வழக்கமான வரவேற்புகள் முடிந்தது. டேபிள் மேல் கிடந்த ஷேருச்சாமியின் லேட்டஸ்ட் ஐ-பேடில் இந்தியா இன்வெஸ்ட்மென்ட் கான்ஃபரன்ஸ் நோட்ஸ் என்ற ஃபைல் ஓப்பனாகியிருந்தது. ‘‘சொல்லுங்க பசங்களா! எப்படி இருக்குது வியாபாரம்?’’ என்றார்.
‘‘நல்லாத்தான் போகுது சாமி! ஆனா...’’ என்று இழுத்தான்.

ஷேருச்சாமி ஆருடம்!

‘‘ஆனா என்ன ஆவன்னா?! உன் சந்தேகத்தை உடைச்சுக் கேளுடே’’ என்றார் சாமி. ‘‘இல்லே இண்டெக்ஸ் வேகமா ஏறுச்சு. அதுக்கப்புறம், கொஞ்சம் ரேஞ்ச் பவுண்ட்டா மாறிடுச்சே’’ என்றான்.

‘‘ஆமாம்ப்பா டெய்லி நூறு பாயின்ட்டா ஏறிச்சுன்னா நீ சிரிச்சுக்கிட்டே இருப்பே. நீ நினைக்கிற மாதிரி தினமும் நூறு பாயின்ட் ஏறினா, வருசத்துக்கு 24000 பாயின்ட் ஏறணும்’’ என்று வீரப்பா மாதிரி சிரித்தார். ‘‘அதில்லீங்க சாமி. ஒரு 300 பாயின்ட் இப்படியும் அப்படியுமா இருக்குது. ஆனா, ஸ்ட்ராங்கா இருக்குது. பி/இ ரேஷியோவெல்லாம் பார்த்தா பயமாவும் இருக்குது. அதனால குழப்பமாவும் இருக்குது’’ என்றான் செல்.
‘‘தெளிவில்லாத குழப்பமும், பயமும் சந்தையில எப்பவுமே இருக்கத்தான் செய்யும்.

நெகட்டிவ் சென்டிமென்ட் இருக்கிறப்பகூட முதலீட்டாளர்கள் தெளிவா இருப்பாங்க. ஒண்ணு கையில இருக்கிறதை வச்சுக்குவோம். அல்லது வித்துட்டு வெளியில போயிடுவோ முன்னு இரண்டே முடிவுதான் அப்ப தேவைப்படும். ஆனா, இப்ப இருக்கிற மாதிரி சென்டிமென்ட் பாசிட்டிவ்வான சூழலிலே எக்கச்சக்க குழப்பமும் பயமும் வரத்தான் செய்யும். வாங்காமவிட்டா ஏமாந்துடு வோமோ? கையில இருக்கிறதை வித்தா ஏமாந்துடுவோமோ? கையிலயிருக்கிறதை விக்காட்டா ஏமாந்துடுவோமோன்னு எக்கச்சக்க ஆப்ஷன்களை நினைத்து பயம் தலைவிரித்து ஆடத்தான் செய்யும்.

இந்தப் பயம் நல்லதுக்குத்தான். பயம் இருந்தா என்ன செய்வே? அன்றாட நிகழ்வுகளை கவனிப்பே. பிஎம் என்ன சொல்றாரு, எஃப்எம் என்ன சொல்றாரு, அமெரிக்க அதிபர் என்ன சொல்றாரு, தொழிலதிபர்கள், அனலிஸ்ட்டுகள் இப்படி சம்பந்தப்பட்ட எல்லோரும் என்ன சொல்றாங்கன்னு காதுகொடுத்து கேட்பீங்கல்ல?’’ என்றார்.

‘‘சாமி, ஒரு மீட்டிங்கூட நாங்க விடறதில்லை. ஒரு பேப்பர் விடறதில்லை. இப்படி எல்லாத்தையும் கேட்டாலும் படிச்சாலும் நீங்க என்ன நினைக் கிறீங்கன்றதையும் கொஞ்சம் தெரிஞ்சுக்க விரும்பித்தான் இப்ப வந்திருக்கோம்’’ என்று பேச்சை கரெக்ட்டான ரூட்டுக்குத் திருப்பினேன்.
‘‘சரி, என்ன வேணும், கேளு’’ என்று கேட்டவுடன், தயாராக வைத்திருந்த கேள்விகளை அடுக்கத் தொடங்கினான்.
‘‘சந்தை அடுத்த வருஷம் எப்படியிருக்கும், நம்பி வாங்கலாமா, இந்த லெவலிலே இருந்து இன்னமும் மேலேயே போகுமா, இல்லை, இறங்கி பின்னாடி ஏறுமா?’’ என்றான் செல்.

‘‘அது மட்டுமில்ல சாமி, பி/இ ரேஷியோ வெல்லாம் நிறைய கம்பெனிகளில எங்கேயோ போய்க்கிட்டிருக்கு. எங்கே போயி நிக்குமுன்னே தெரியலியே அதனாலதான்...’’ என்று இழுத்தேன் நான். எங்கள் இருவரையுமே ஏற இறங்க பார்த்த சாமி, ‘‘வெரிகுட்! ரொம்பவுமே யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்களே. சரி, நான் ஒரு கேள்வி கேக்குறேன், சொல்லுங்க. நீங்க ரெண்டுபேரும் டிரேடரா, இல்லை, இன்வெஸ்ட்டரா?’’ சாமியின் இந்த திடீர் கேள்வி என்னையும் செல்லையும் கொஞ்சம் தடுமாறச் செய்தது.

‘‘நாங்க ரெண்டும்தான் சாமி. சில பங்குகளை வாங்கி வச்சுருக்கோம். சில பங்குகளை லாபம் கிடைச்சுடுச்சுன்னு விக்கவும் செய்றோம். ஆனாலும், குறைஞ்ச காலத்துல அதிகமா லாபம் சம்பாதிக்கணுங்கிறதுக்குதான் மனசு ஆசைப்படுது’’ என்றோம் நாம்.
‘‘அப்ப உங்களுக்கு டிரேடர் மனோபாவம்தான் அதிகமா இருக்கு. நல்ல லாபம் பார்க்க உங்களுக்கு இப்ப உள்ள நேரம் சரிப்பட்டுவராது. ஏன்னு சொல்றேன் கேளுங்க.

புது அரசாங்கம் வந்த பின்னாடி எதிர்பார்ப்புகள் எகிறுனதால சந்தை வேகமான ஏற்றத்தைச் சந்திச்சது. எஃப்ஐஐகளுக்கும் உலக அளவுல வேற மார்க்கெட்டுகள் ஒண்ணும் இந்த அளவுக்கு பிரகாசமா இல்லாததால பணத்தை ஒரேயடியாய் கொண்டுவந்து கொட்டிக்கிட்டு இருக்கிறாங்க. அரசாங்கமும் பல்வேறு திட்டங்களையும், சீர்திருத்தங் களையும் கொண்டுவந்துகிட்டுதான் இருக்குது.

ஷேருச்சாமி ஆருடம்!

இதுக்கு நடுவுல அடுத்த பட்ஜெட் கூடிய சீக்கிரத்துல வரப்போகுது. பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பும் சந்தையை இன்னமும் பாசிட்டிவ் சென்டிமென்ட்டுக்கே கொண்டு போகும். அதிர்ஷ்டவசமாக கச்சா எண்ணெய் விலை வேற குறைஞ்சிருக்கிறதால, எல்லா பாயின்ட்டுலேயும் இந்திய பொருளாதாரமும் சந்தையும் எல்லோருக்குமே பிரகாசமான எதிர்காலத்தை கொண்டிருக்கிறமாதிரி தெரியுது. உண்மையும் அதுதான்.
ஆனா, ஜில்லுனு ஆகிப்போன பொருளாதார இன்ஜின் கொஞ்சம் கொஞ்சமா சூடுபிடிச்சு வேகமா ஓடறதுக்கு கொஞ்சம் காலம் பிடிக்கும். அதுவரைக்கும் முதலீட்டாளர்கள் காத்திருக்க மாட்டங்க. நல்லாப் போகப்போகுதுன்னு யூக அடிப்படையிலேயே முதலீடுகளை செய்ய ஆரம்பிச்சிடுவாங்க.

அந்த அடிப்படையிலதான் சந்தை இப்போ படுஸ்ட்ராங்கா இருக்குது. இதனாலதான் சொல்றேன், ஒன்றரை வருஷத்துக்கு குறைவா முதலீட்டுக் காலம் வச்சிருக்குற முதலீட்டாளர்கள் கொஞ்சம் சந்தையைவிட்டு ஒதுங்கியே இருப்பது நல்லது’’ என்றார் சாமி. ‘‘குழப்பமா இருக்கே சாமி, எல்லாம் நல்லாப் போகுதுங்கிறீங்க. அதேசமயம் 18 மாசத்துக்கு குறைஞ்சு முதலீடு செய்யறவங்க சந்தையை விட்டு விலகி இருக்கணுமுன்னும் சொல்றீங்களே?’’ என்றேன்.

‘‘ஏற்கெனவே முதலீடு செய்திருக் கிறவங்க அதை ஹோல்டு செய்யலாம். இல்லே, சரியான சூழ்நிலையில் லாபத்தோட வெளி யில வந்துடலாம். புதுசா 18 மாதத்துக்கோ அதற்கு குறைவான காலத்துக்கோ உட்பட்ட முதலீடுகளைச் செய்யப்போறவங்க இப்போதைக்கு கொஞ்சம் விலகியிருப்பதே நல்லது’’ என்றார்.

‘‘ஏன் சாமி திரும்பத் திரும்ப இப்படி சொல்றீங்க?’’ என்றான் செல்.

‘‘அடேய், அடுத்த பட்ஜெட் பொருளாதார சீர்திருத்தத்துக்கு ஒரு மைல்கல்லா இருக்குமுன்னு எதிர்பார்க்கிறாங்க. எப்பவுமே சீர்திருத்தங்கள் கொண்டுவரும்போது கொஞ்சம் எதிர்வினைகளும் தோன்றவே செய்யும். அந்த எதிர்வினைகள் கடுமையானதா இருந்தா, சந்தை கொஞ்சம் வாலட்டைலா மாறி இறக்கத்தைக்கூட சந்திக்கலாம். இதை எதிர்பார்த்து அரசாங்கமே எல்லா சீர்திருத்தத்தையும் ஒரே ஸ்ட்ரோக்குல கொண்டு வராம கொஞ்சம் கொஞ்சமா கொண்டுவருவதற்கான வாய்ப்பு இருக்கு.  சந்தை இப்ப ஏன் எக்கச்சக்கமா ஏறியிருக்குன்னா, எல்லா சீர்திருத்தமும் ஒரே ஸ்ட்ரோக்குல வந்துடுமுங்கிற எதிர்பார்ப்பி னாலத்தான். அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமா சீர்திருத்தங்களைக் கொண்டு வரலாமுன்னு நினைச்சாலுமே, சந்தை கொஞ்சம் இறங்கி அப்புறமாத்தான் ஏறும் வாய்ப்பிருக்கு.

குறைந்த காலத்துக்கான முதலீடுகளை செய்யறவங்க இந்தமாதிரியான இறக்கங்களின் போது தாக்குப்பிடிக்க மாட்டாங்க. ஏன்னா பணத்தேவை இருக்கறப்ப ஷேரை வித்துட்டு வெளியேற நினைக்கிறப்ப நஷ்டம் வந்துட வாய்ப்பு இருக்கு. அதுவும் போக மீண்டும் கச்சா எண்ணெய் விலை ஏறினாலோ, டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பிழந்தாலோ, இன்ஃப்ளேஷன் ஏற ஆரம்பிச்சாலோ, சந்தை ஒரு சிறிய அளவிலான வீழ்ச்சியைச் சந்திக்கும். அந்தச் சூழலும் இந்தமாதிரி குறைந்த கால முதலீட்டாளர்களுக்கு சிரமத்தை உண்டுபண்ணிடும்’’ என்றார்.
‘‘முடிவா என்னதான் சொல்றீங்க சாமி?’’ என்றான் செல்.

‘‘இந்திய பொருளாதாரம் வளர்ச்சியைச் சந்திக்கும் அப்படீங்கிறதுல சந்தேகமே இல்லை. ஆனா, படிப்படியான மாறுதல்கள் வந்துதான் அந்த வளர்ச்சியைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூண்டிவிடும். இந்த படிப்படியான வளர்ச்சியை சந்தை ஏத்துக்குமாங்கிறதுதான் இப்போதைக்கு முக்கியமான கேள்வி. அதனால ஷார்ட் டேர்ம்ல (18 - 36 மாதங்களில்) சந்தை அப்பப்ப கொஞ்சம் வீக்காகி சரியாக வாய்ப்பிருக்குன்னே இப்போதைக்கு சொல்ல முடியுது. ஆனா, மூன்று வருடமும் அதற்கு மேற்பட்ட காலத்திலும் சந்தை சூப்பரா போகவே வாய்ப்பிருக்கு.
அதனாலதான், நான் மூன்று வருடத்துக்குமேல் வெயிட் பண்றவங்க மட்டுமே சந்தையில் இந்த லெவலிலே ஒரு முதலீட்டாளரா முதலீடு செய்யலாமுன்னு சொல்றேன்.  ரிஸ்க் எடுக்கக்கூடிய டிரேடரோ அல்லது முதலீட்டாளரோ தொடர்ந்து இறக்கங்களில் ரெக்கவரியை எதிர்பார்த்து முதலீடு செஞ்சுகிட்டே இருக்கலாம்’’ என்றார்.

‘‘என்னைய மாதிரி டிரேடர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்குமா சாமி?’’ என்றான் செல்.

‘‘கையில பணம் வச்சிகிட்டு டிரேட் பண்ற டிரேடர்களுக்கு அடுத்த ஒன்றரை வருடத்துக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்’’ என்றார் சாமி.  ‘‘கடைசியாக கொஞ்சம் பங்குகளைச் சொன்னீங்கன்னா...’’ என்று இழுத்தான் செல்.

‘‘வருஷக் கடைசியில பங்குகள் வேண்டாம். நிறைய போர்ட்ஃபோலியோக்கள் ரீ-அட்ஜெஸ்ட்மென்ட் ஆகும். புது வருசத்தப்போ வந்து பாரு. அப்ப சொல்றேன்’’ என்று சொல்லிவிட்டு சட்டென எழுந்து அவருடைய ஸ்டாண்டர்டான கும்பிடைப் போட்டார். நாங்களும் நன்றாக சாப்பிட்டுவிட்டு, அப்படியே கும்பிடையும் போட்டுவிட்டு, வீட்டுக்குத் திரும்பினோம்!