நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

ஷேர்லக் - வாங்கிக் குவிக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் !

ஷேர்லக் - வாங்கிக் குவிக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் !

பத்தாம் ஆண்டு சிறப்பிதழ் ஏறக்குறைய முடிவடையும் நேரம், நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். அட்டையைப் பார்த்து வாழ்த்துச் சொன்னவர்,  கட்டுரைகளை எல்லாம் நோட்டம்விட்டுவிட்டு, சிறப்பிதழ் அருமையாக வந்திருக்கிறது என்று பாராட்டினார். அவருக்கு சின்னதாக ஒரு நன்றி சொல்லிவிட்டு, கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

‘‘சந்தை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறதே! அடுத்து என்ன?’’ என்று கேட்டோம்.

‘‘நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் பல சீர்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்கிற எதிர்பார்ப்பு மற்றும் சீனாவில் 0.4% வட்டி குறைப்பு போன்ற காரணங்களால் சந்தை வேகமாக ஏறியது. சென்செக்ஸ் 28542 புள்ளிகளும் நிஃப்டி 8530 புள்ளிகளுக்கும் உயர்ந்திருக் கிறது. நடப்பு ஆண்டில் இந்திய பங்குச் சந்தை 34%க்கு மேல் வருமானம் தந்திருக்கிறது. இது சர்வதேச அளவில் டாப் 10 சந்தைகளில் முதல் இடமாகும். பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் கருத்துப்படி, சர்வதேச அளவில் அனைத்து நாட்டு முதலீட்டாளர்களும் விரும்பும் முதலீட்டு சந்தையாக இந்தியா இருக்கிறது. மேலும், கடந்த 15 மாதங்களில் நம் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் 50% பங்குகளின் விலை 100%க்குமேல் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, சென்செக்ஸ், பிஎஸ்இ 500, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப் பங்குகளில் சுமார் 430 பங்குகளின் விலை 100 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம்” என்றார்.

ஷேர்லக் -  வாங்கிக் குவிக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் !

‘‘ஐடிசி பங்கு விலை வீழ்ச்சிக் கண்டிருக்கிறதே?’’ என்று விசாரித்தோம்.

‘‘மத்திய அரசு மக்களின் நலன்கருதி, சிகரெட் விற்பனையைப் படிப்படியாக குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக சில்லறையில் சிகரெட் விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவல் வெளியானதை அடுத்து, ஐடிசி பங்கின் விலை ஒரேநாளில் 5% இறங்கியது. இந்தத் தடையால் ஐடிசிக்கு அதிக பாதிப்பு இல்லை; அதன் வணிகத்தின் பெரும்பகுதி எஃப்எம்சிஜி மற்றும் ஹோட்டல் வணிகத்தின் மூலம் வருகிறது என்கிற கணிப்பில் பிற்பாடு இந்தப் பங்கின் விலை உயரத் தொடங்கியுள்ளது.

இந்தநிலையில், ஐடிசி பங்கில் முதலீடு செய்யலாமா என சிலர் கேட்கிறார்கள். வழக்கமாக சந்தை காளையின் பிடியில் இருக்கும்போது ஐடிசி பங்கு கொடுக்கும் வருமானம் சென்செக்ஸ் வருமானத்தைவிட குறைவாக இருப்பதை அனலிஸ்ட்டுகள் சுட்டிக்காட்டுகிறார்கள். கடந்த 2004 மற்றும் 2007 இடையே காளைச் சந்தையில் சென்செக்ஸ் 350 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் ஐடிசி பங்கின் விலை 130 சதவிகிதமே உயர்ந்துள்ளது. தற்போது காளைச் சந்தை நடப்பதால், ஒருமுறைக்கு இருமுறை யோசித்து இந்தப் பங்கில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம்’’ என்றார். 
  
‘‘பொதுத்துறை வங்கிகளில் பங்கு மூலதனத்தைக் குறைக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக இருக்கிறதே?’’ என்றோம்.
‘‘பொதுத்துறை பங்குகளை விற்க ஹோல்டிங் கம்பெனி ஒன்றை ஏற்படுத்த 2012-ல்  காங்கிரஸ் அரசாங்கம் திட்டமிட்டது. அதற்கு மோடி அரசில் உயிர்கொடுக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது’’ என்றவருக்கு, சூடான டீ தந்தோம்.

‘‘எஃப்ஐஐக்களின் முதலீடு எப்படி இருக்கிறது?’’ என்று கேட்டோம்.

‘‘முடிந்த செப்டம்பர் காலாண்டில் எஃப்ஐஐகளின் முதலீடு வங்கி மற்றும் டெலிகாம் பங்குகளில் கணிசமாக அதிகரித் துள்ளது. இந்தக் காலாண்டில் ஹெச்டிஎஃப்சி (77.8%), ராம் டிரான்ஸ்போர்ட் (52.3), ஜீ என்டர்பிரைசஸ் (50.8%), ஜெயின் இர்ரிகேஷன் (47.7%) ஆகியவற்றில் எஃப்ஐஐகளின் முதலீடு இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு அதிகரித் துள்ளது. அதேசமயம், உள்நாட்டு நிதி மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வங்கி, பார்மா, டெலிகாம் பங்குகளை விற்றிருக்கின்றன. வாகனத் துறை பங்குகளை வாங்கிச் சேர்த்திருக்கின்றன. 
இந்திய சந்தையில் எஃப்ஐஐக்களின் முதலீடு கணிசமாக எகிறி இருக்கிறது. நடப்பு 2014-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி வரையில் அந்நிய நிதி நிறுவனங்கள் (எஃப்ஐஐக்கள்) 3966 கோடி டாலரை (சுமார் ரூ.2,45,297 கோடி) கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பங்கு களில் முதலீடு செய்திருக்கின்றன. இது வரைக்கும் இல்லாத வரலாற்றுச் சாதனை இது’’ என்றார் ஷேர்லக்.

‘‘டிசம்பர் 2-ம் தேதி ஆர்பிஐ அதன் ஆய்வுக் கூட்டத்தில் கடனுக்கான வட்டியைக் குறைக்குமா?’’ ஆர்வத்துடன் கேட்டோம்.

ஷேர்லக் -  வாங்கிக் குவிக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் !

‘‘பணவீக்க விகிதம் குறைந்தாலும் கடனுக்கான தேவையைவிட தற்போதைய நிலையில்  டெபாசிட்டுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. அந்தவகையில் 2015 ஏப்ரலுக்குப் பிறகுதான் வட்டிக் குறைக்கப் படும் என பெரும்பாலான அனலிஸ்ட்டுகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் வட்டியைக் குறைப்பது தொடர்பாக திங்கட்கிழமை அன்று ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனை, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்து பேசப்போகிறார். இந்திய வங்கிகள் பேசல் 3 விதிமுறைகளை நடைமுறைப்படுத்த 2018-ம் ஆண்டுக்குள் 2.4 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்தத் தொகையை வங்கிகள் திரட்டிக் கொள்ள வேண்டும் அல்லது மத்திய அரசு தர வேண்டும். நிதி அமைச்சர் இதுபற்றி எல்லாம் ஆர்பிஐ கவர்னருடன் பேச வாய்ப்பிருக்கிறது’’ என்றார்.

‘‘நம்மூர் ஐஓபி வங்கியை ‘மூடி’ ரேட்டிங் நிறுவனம் தரமிறக்கி உள்ளதே?’’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டோம்.

‘‘மூடி’ ரேட்டிங் நிறுவனம், அந்த வங்கியை ‘D-’யிலிருந்து ‘E+’க்கு தரமிறக்கி உள்ளது. இதனால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்த வங்கியின் மற்ற ரேட்டிங்குகள் நிலையாக (Stable) இருப்பதாகச் சொல்லியிருக்கிறது ‘மூடி’. முடிந்த செப்டம்பர் காலாண்டில் இந்த வங்கி ரூ.245.5 கோடி நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. இந்த வங்கியின் வாராக் கடன் பிரச்னைதான்  கவலை தருவதாக இருக்கிறது. 2013, செப்டம்பர் மாதம் இந்த வங்கியின் வாராக் கடன் ரூ.8,201 கோடியாக இருந்தது. அதே வாராக் கடன் 2014, செப்டம்பரில் ரூ.13,333 கோடியாக உயர்ந்திருக்கிறது. இனியாவது வாராக் கடன் வளரும் வேகத்தை அந்த வங்கி குறைக்க வேண்டும்’’ என்றார்.

‘‘லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின் பங்கு விலை  அதிகரித்துள்ளதே, முதலீடு செய்யலாமா?’’ என்று கேட்டோம்.

‘‘கடந்த ஓராண்டில் காடி (Gati) - 860%), படேல் இன்டகிரேடட் (700%), சிகால் லாஜிஸ்டிக்ஸ் (190%), புளூடார்ட் (104%) பங்குகள் விலை அதிகரித்துள்ளன. ஆனால், இவற்றின் லாபம் அந்த அளவுக்கு உயரவில்லை. இ-காமர்ஸ் துறை சூடு பிடித்துள்ளதால், அந்தத் துறையைச் சார்ந்த லாஜிஸ்டிக்ஸ் துறை பங்குகள் அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லாமல் விலை உயர்ந்துள்ளன. எனவே , இந்த நிறுவனங்களின்  பண்டமென்டல் களை ஆராய்ந்து முடிவெடுப்பது அவசியம்’’  என்று புறப்பட்டார்.

‘‘சந்தை அடுத்து எப்படி இருக்கும்? ஷேர் டிப்ஸ் ஏதும் உண்டா?’’ என்று கேட்டோம்.

‘‘அடுத்த 6-12 மாதங்களில் நிஃப்டி 11000 புள்ளிகளுக்கும், சென்செக்ஸ் 33000 புள்ளி களுக்கும் உயரும் என பெரும்பாலான அனலிஸ்ட்டுகள் கணித்திருக்கிறார்கள். குறுகிய கால அளவுக்கான முதலீட்டுக்கு பின்வரும்  பங்குகளைக் கவனிக்கலாம்.’’

ரிலையன்ஸ் கேப்பிட்டல், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், எல்ஐசி ஹெச்எஃப்எல், இன்ஃபோசிஸ், ஹீரோ மோட்டோ கார்ப்., இந்தியன் ஆயில்.