நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

BIZ பிட்ஸ் !

BIZ பிட்ஸ் !

BIZ பிட்ஸ் !

4000 சேவைகளை அளிக்கும் எம்-ஒன் ஆப்ஸ்!

மோடி அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் அரசின் 637 சேவைகளை உள்ளடக்கிய ஒரு ஆப்ஸை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதில் 3600-க்கும் மேற்பட்ட தனியார் சேவைகளையும் பெற முடியும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதனை கணினி , டேப்லெட், செல்போன் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக பெறமுடியும்விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. 2013-ம் ஆண்டு கர்நாடக அரசால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை ஆங்கிலம் உள்பட தேசிய மொழிகளிலும் இருக்கும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆஃப்ஸை வரும் டிசம்பர் 8-ம் தேதி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி துவங்கிவைக்கிறார்.

மோடிதான் எனக்கு இன்ஸ்ப்ரேஷன்: ஜாக் மா

சீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா, அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரேநாளில் 25 பில்லியன் நிதியைத் திரட்டியது. தற்போது சீனாவின் 80 சதவிகித இ-காமர்ஸ் மார்க்கெட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அலிபாபா, தனது மார்க்கெட்டை இந்தியாவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா, ‘‘நான் இந்திய பிரதமர் மோடியின் பேச்சைக் கண்டு வியந்துபோனேன். அவர்தான் எனக்கு ரோல்மாடல்’’ என்று புகழ்ந்திருக்கிறார். இந்தியாவில் வர்த்தகம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ள ஜாக் மா, இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BIZ பிட்ஸ் !


ஹைதராபாத்தைத் தேடிவரும் அலுவலகங்கள்!

பல்வேறு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான அலுவலகங்களை அமைப்பதில் ஹைதராபாத் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. அகில இந்திய அளவில் குஜராத் தலைநகர் அஹமதாபாத்தில் 11,40,000 சதுர அடியில் அலுவலகங்கள் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, முதலிடத்தில் இருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட 200% அதிகம். இரண்டாவது இடத்தில் இருக்கும் பெங்களூரில் 6,19,000 சதுர அடியில் அலுவலகம் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பெங்களூருக்கு அடுத்தபடியாக, ஹைதராபாத்தில் 3,87,000 சதுர அடியில் அலுவலகம் அமைக்க ஒப்பந்தம் நிறைவேறி இருக்கிறது. ஆனால், புனே, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அலுவலகம் அமைக்கும் விருப்பம் குறைந்து வருவதாகச் சொல்லிருக்கிறது ரியல் எஸ்டேட் நிறுவனமான குஷ்மேன் அண்ட் வேக்பீல்டு!


கடன் கட்டாதவர்களைக் கண்காணிக்க வேண்டும்!

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திரும்பக் கட்டாமல் இருப்பவர்களைத் தொடர்ந்து கண்காணித்து, அவர்களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். வங்கிகள் கடன் தரும்போதே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வாராக் கடன் அளவைக் குறைக்க வேண்டும் என வங்கிகளுக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார். எஸ்பிஐ வங்கி அதானி நிறுவனத்துக்கு வழங்கப்போகிற கடனுக்கு சொத்து உத்தரவாதம் மட்டும் இருந்தால் போதாது; மற்ற விவரங்களையும் கவனிக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.

BIZ பிட்ஸ் !


பணக்காரர்கள் எதற்கெல்லாம் அதிகம் செலவழிக்கிறார்கள்?

இந்தியாவில் பணக்காரர்கள் எதற்கெல்லாம் அதிகம் செலவழிக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் செலவழிக்கும் தொகையில் 16% ஆபரணங்கள் வாங்கவும், 15% ஆடைகள், மற்ற அணிகலன்கள் வாங்கவும், 14% சுற்றுலா செல்லவும், 13% எலெட்ரானிக் பொருட்கள் வாங்கவும், 12% வீட்டை அலங்கரிக்கவும், 9% சினிமாவுக்கும், 6% நன்கொடை அளிக்கவும், 15 சதவிகிதத்தை மற்ற செலவுகளை செய்யவும் ஒதுக்குவதாக டாப் ஆஃப் தி பிரமிடு 2014 அறிக்கை சொல்கிறது.