Published:Updated:

செக்டார் ரிசர்ச் !

ஜி.சொக்கலிங்கம், நிர்வாக இயக்குநர், ஈக்வினாமிக்ஸ் ரிசர்ச் அண்ட் அட்வைஸரி லிமிடெட்.

புதிய தொடர் - 1

வங்கித் துறை!

இந்திய பொருளாதாரம் 2008-ம் ஆண்டு சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவுக்குப்பின் வேகமாக மீண்டு தற்போது வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கம், பொருளாதார ரீதியாக இந்தியாவை முன்னேற்றம் காண வைக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளது. இது தொழிற்துறையை ஊக்குவிக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின் கொண்டுவந்துள்ள ‘மேக் இன் இந்தியா’ திட்டம் இந்தியாவில் உள்ள முக்கியமான 25 துறைகளை மேம்படுத்தி, அதில் அந்நிய முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆட்டோமொபைல் துறையில், உலகில் 7-வது இடத்தில் இருக்கும் இந்தியாவை நான்காவது இடத்துக்கு முன்னேற்றுவது, 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆண்டுக்கு 6 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்வது போன்ற இலக்குகளை நிர்ணயித் துள்ளது.

செக்டார் ரிசர்ச் !

இதேபோல், இந்திய  ஜிடிபி-ல் 10 சதவிகிதமாக உள்ள கட்டுமானத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வது, ஐ.டி துறையை 2020-க்குள் 225 பில்லியன் மதிப்புள்ள துறையாக மாற்றுவது, பார்மா துறையை உலகின் மூன்றாவது மிகப் பெரிய பார்மா துறையாக 2020-க்குள் தரம் உயர்த்துவது, 2017-ம் ஆண்டுக்குள் 1 லட்சம் கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பது, ரயில்வே துறையில் புல்லட் ரயில் சேவை அறிமுகம் செய்வது, ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவது என பிரமாண்டமான திட்டங்களுக்கு அரசாங்கம்  திட்டமிட்டுள்ளது.

இந்தத் துறைகளின் தற்போதைய நிலை என்ன? இந்தத் துறையில் உள்ள பங்குகள் எந்த மாதிரியான வளர்ச்சியைக் காணும் என்பது பற்றிய விரிவான விவரங்களை இந்தத் தொடரில் தொடர்ச்சியாகப் பார்ப்போம்.

செக்டார் ரிசர்ச் !

இந்தியாவில் நீண்டகாலமாக மக்களுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் உதவும் ஒரு முக்கியமான அமைப்பாகச் செயல்பட்டு வரும் துறையாக வங்கித் துறை உள்ளது. இந்தத் துறையைப் பற்றிய விரிவான அலசலை இந்த வாரம் பார்ப்போம்.

இந்தியாவின் வங்கித் துறை இந்திய பொருளாதாரத்திலும், பங்குச் சந்தையிலும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் துறையாக உள்ளது. இன்று பொருளாதார ரீதியாக பெரிய அளவில் வளர்ந்துள்ள வங்கித் துறை, நாட்டின் பொருளாதாரம் சிக்கல்களைச் சந்திக்கும்போதும் மற்றும் வங்கிகளில் உள்ள பிரச்னைகளாலும் அதிகம் பாதிக்கப்படும் துறையாக உள்ளது.

இந்தியாவில் வங்கித் துறை 20 ஆண்டு களுக்கு முன்பு ஒரு துறையாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. வங்கித் துறைக்கான இண்டெக்ஸ் 12 ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்ததில்லை என்பது முதலீட்டாளர்களுக்கு ஆச்சர்யமளிக்கும் விஷயம். கடந்த 20 ஆண்டுகளில்தான் வங்கித் துறை வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியது. 1994-ம் நிதியாண்டில் மொத்த வங்கிக் கடன் மதிப்பு 1.64 லட்சம் கோடியாக இருந்தது.

ஆனால், தற்போது அதே வங்கிக் கடன் 37 முறை அதிகரித்து 61 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. 2004-ம் ஆண்டில் இருந்துதான் வங்கிக் கடன் அதிகரிக்கத் துவங்கியது. அதற்குக் காரணம், மொத்த ஜிடிபி வளர்ச்சி 9 சதவிகிதமாக இருந்ததுதான். மேலும், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, யெஸ் பேங்க், கோட்டக் மற்றும் ஆக்ஸிஸ் போன்ற புதிய தனியார் துறை வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தப் புதிய வங்கிகள் புதிய மார்க்கெட்டை ஏற்படுத்தின. இதனால் இந்தியாவின் வங்கிக் கடன் மதிப்பு அதிகரிக்கத் துவங்கியது. 2004-ம் நிதியாண்டில் 8.4 லட்சம் கோடியாக இருந்த வங்கிக் கடன், அடுத்த பத்து வருடங்களில் 7 மடங்கு அதிகரித்து 61 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

வங்கித் துறை மிகப் பெரிய அளவில் வளர்ந்துவிட்டதால், அந்தத் துறையில் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் பொருளாதாரத்தையும் பங்குச் சந்தையையும் சரிவில் கொண்டு செல்வதாக இருந்தது. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட லேமென் பிரதர்ஸ் நெருக்கடி உலகளவில் வங்கித் துறையைப் பாதித்ததால், இந்தியாவிலும் வங்கித் துறைக்கான இண்டெக்ஸ் (Bankex) 53 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்தது. அதே கால கட்டத்தில் பங்குச் சந்தைகளின் மொத்த மதிப்பில் வங்கி மற்றும் நிதித் துறை பங்குகள் 24 சதவிகிதம் இருந்தும், பங்குச் சந்தையும் 53 சதவிகிதம் சரிந்தது. மற்ற துறைப் பங்குகள் வளர்ச்சியைப் பதிவு செய்த போதிலும், வங்கித் துறையின் வீழ்ச்சியால் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் வீழ்ச்சியையே சந்தித்தது.

பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தைக்கு மட்டுமல்லாமல், வங்கித் துறையை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். சொத்துக்களைச் சேர்க்கவும், அதேபோல் சொத்துக்கள் எவ்வாறு மதிப்பிழக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும் வங்கித் துறையைப் புரிந்துவைத்திருப்பது அவசியம். 2008-ம் ஆண்டு சரிவுக்குப் பிறகான ஆறு வருடத்தில் (2009-2014) வங்கிக் குறியீடு சென்செக்ஸைவிட 4 வருடங்களில் (காலண்டர் வருடம்) சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.

செக்டார் ரிசர்ச் !

2009-ம் ஆண்டில் 9903 புள்ளிகளிலிருந்த சென்செக்ஸ், தற்போது 28500 புள்ளிகளை அடைந்து 188 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளது. இதே காலகட்டத்தில் வங்கித் துறைக்கான குறியீடு 5585 புள்ளிகளிலிருந்து 21000 புள்ளிகளை அடைந்து 275 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன்மூலம் வங்கித் துறை சொத்து உருவாக்கத்தில் வலுவான பங்களிப்பை வழங்கியுள்ளது என்பது தெளிவாகிறது.

இதேநேரத்தில், பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் மோசமான வளர்ச்சியைக் கண்ட போதிலும், இந்தத் துறை நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. காரணம், தனியார் துறை வங்கிகளின் செயல்பாடு சிறப்பாக இருந்ததே ஆகும். தனியார் துறை வங்கிகளின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது. ஜனவரி 2009-லிருந்து ஆக்ஸிஸ் மற்றும் யெஸ் வங்கிகளின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (வர்த்தகமாகும் பங்குகளின் சந்தை மதிப்பு) முறையே 730% மற்றும் 1600%  அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில் சிறிய வங்கிகள்கூட சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் சிட்டி யூனியன் வங்கி கடந்த பத்து வருடத்தில் 2500% ரிட்டர்னை தந்துள்ளது. இன்னொரு பக்கம், கார்ப்பரேஷன் வங்கியில் 2010 அக்டோபரில் முதலீடு செய்தவர்கள், தற்போது 54 சதவிகித இழப்பை சந்தித்துள் ளனர். அதாவது, 10,744 கோடி ரூபாயாக இருந்த கார்ப்பரேஷன் வங்கியின் மார்க்கெட் மதிப்பு 4,921 கோடியாக வீழ்ந்தது.

செக்டார் ரிசர்ச் !

கடந்த 20 வருடங்களில் வங்கித் துறை முக்கியமான இணைப்புகளையும் கையகப் படுத்துதலையும் சந்தித்துள்ளது. புதிய வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது, சில பழைய தனியார் துறை வங்கிகளை வாங்க வழிவகைச் செய்தது. இவற்றில் அதிகமான வங்கிகள் தென் இந்தியாவில் 50-100 வருடங்களாக செயல்பட்டு வந்தவையாகும்.

கடந்த 20 வருடங்களில் ஐசிஐசிஐ வங்கி பேங்க் ஆஃப் மதுராவை வாங்கியது. ஹெச்டிஎஃப்சி வங்கி லார்டு கிருஷ்ணா வங்கியை செஞ்சுரியன் வங்கி வழியாக வாங்கியது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. சமீபத்தில் ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை கோட்டக் மஹிந்திரா வங்கி வாங்கியது. அதற்குமுன் பழைய தனியார் வங்கியாக இருந்த வைஸ்யாவை ஐஎன்ஜி ஆஃப் யூரோப் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த இணைப்புகளால் முதலீட்டாளர் களுக்கு என்ன பயன் என்று பார்த்தால், இந்த வங்கிகளின் மார்க்கெட் கேப்பிட்டலை சேஷன் கடந்த 20 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. உதாரணமாக, வைஸ்யா வங்கியின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் 1990ல் வெறும் 100 கோடிதான். ஆனால், இன்று 15,000 கோடியாக உயர்ந்துள்ளது. தனியார் வங்கிகள் வளங்களை உண்டாக்கும் விதத்தில் இருக்கின்றன என சொல்லும் அதே நேரத்தில், நெடுங்காடி வங்கி மற்றும் குளோபல் டிரஸ்ட் வங்கி ஆகிய இரண்டு தனியார் வங்கிகள் சரியாக செயல்பட முடியாமல் பங்குச் சந்தையைவிட்டு வெளியேறின.

செக்டார் ரிசர்ச் !

அவை பெரிய வங்கிகளுடன்,  பங்குதாரர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காமல் இணைக்கப்பட்டன. அதனால் வங்கித் துறை என்பது முதலீடு செய்ய நினைக்கும் துறைகளில் முக்கியமான துறையாக உள்ளது. அதேசமயம், வங்கித் துறை பங்குகளைத் தேர்வு செய்யும்முன் எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும். இவற்றைப் பற்றியும், வங்கித் துறை பங்குகளை தேர்வு செய்வது பற்றியும்  அடுத்த வாரத்தில் பார்ப்போம்.

(ஆய்வு தொடரும்)