Published:Updated:

இனி எல்லாம் லாபமே !

வெற்றிகரமான முதலீட்டுக்கு...டாக்டர் எஸ்.கார்த்திகேயன் ஓவியம்: ஸ்யாம்

இனி எல்லாம் லாபமே !

வெற்றிகரமான முதலீட்டுக்கு...டாக்டர் எஸ்.கார்த்திகேயன் ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்துடன் (சுற்றியிருக்கும் நபர்களுடன்) நாம் எப்படி டீல் செய்கின்றோம்? சந்தைக்கு காய்கறி வாங்கச் செல்கின்றோம், பல்வேறுவிதமான வியாபாரிகளைப் பார்க்கின்றோம், சிரித்த முகத்துடன் வியாபாரம் செய்பவர், சிடுமூஞ்சி, பேச்சால் மயக்கி வியாபாரத்துக்கு இழுப்பவர், கொஞ்சம் அதிகமாய்க் கொடுத்து அடுத்தமுறை வியாபாரத்துக்கு வரவழைப்பவர், ‘இது வேணாம், ஃப்ரெஷ்ஷாய் வந்தது அங்கே இருக்கு பாருங்க’ என நம்மை சிறப்பாகக் கவனிப்பவர் என பல்வேறு ரகம். கொஞ்சம் அலசி ஆராய்ந்து, நமக்குச் சரிப்பட்டுவரும் நபரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும் அனுசரித்து போகிறோம்.

கா ய்கறி சந்தையில் மட்டுமா? டீ    குடிக்கக் கடைக்குப் போகின்றோம். ‘தம்பி, சார் வந்துருக்கார். கிளாஸை சுடுதண்ணீரில் நல்லாக் கழுவி தூளை மாற்றி ஒரு ஸ்பெஷல் டீயைப் போடு’ என முதலாளியிடம் இருந்து உத்தரவு பறக்கின்றது. ஹோட்டலுக்குப் போகின்றோம். ‘தம்பி, தட்டில் இலை வைத்து கொண்டுவா’ என சூப்பர்வைசர் நம் ஆர்டரை சர்வரிடம் சொல்லும்போது ஸ்பெஷல் அக்கறை தெரிகிறது.

ஏன் இப்படி? நம் செலக்‌ஷனும், அதன் பின்னர் அவர்களுடன் நடந்த நம்முடைய பழக்கவழக்கங்களும்தான்! நம் எதிர்பார்ப்பை சொல்லாமலேயே புரிந்துகொண்டு, ‘இது வேண்டாம் சார், ஃப்ரெஷ்ஷாய் வந்ததில் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்பது, வெந்நீரில் கழுவுதல், தூள் மாற்றுதல், தட்டில் இலை வைத்து கொண்டுவருதல் போன்ற இதமான அனுபவங்களைத் தரமுயல்கின்றது நம்மைச் சுற்றியுள்ள உலகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி எல்லாம் லாபமே !

இதுபோன்ற சவுகரியங்களை நாளடைவில் நாம் நம் சுற்றுவட்டாரத்தில் பெற்றுவிடுகின்றோம். ஊரை மாற்றியோ அல்லது ஒரே ஊரிலேயே இடத்தை மாற்றியோ போனால் அங்கேயும் கொஞ்சநாளில் நாம் பழகிய நபராக மாறிவிடுகின்றோம். இந்தப் பழகும் காலத்தில் நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்போம். அவ்வப்போது கொஞ்சம் ஏமாறவும் செய்வோம். கொஞ்சமாய் அதிர்ஷ்டத்தை நம்பியும், நம் மூளையில் இருக்கும் அனுமானங்களை வைத்துக்கொண்டும் புதிய இடத்தில் நமக்கு இசைவானவர்களைத் தேட ஆரம்பித்து, பல்வேறு எதிர்வினைகளுக்குப் பின்னால் புதிய இடத்தில் செட்டிலாகிவிடு கின்றோம்.

இந்தச் சமயத்தில் நாம் என்ன செய்கின்றோம்? புதிய இடத்தில் இருக்கும் நபர்களை நம் அனுபவத் தராசை வைத்து எடைபோட ஆரம்பிக்கின்றோம். ஏற்கெனவே நாம் சந்தித்த நபரை மனதில்வைத்து அவருடைய குணாதிசயங்களை வைத்துக்கொண்டு இப்போது பார்க்கும் நபரின் குணாதிசயமும் அதேபோலவே இருக்கும் என நம்முடைய மனதில் நிலைநிறுத்திக் கொள்கின்றோம். அதாவது, கையில் இருக்கும் ஒரு புள்ளியில் (ஏற்கெனவே சந்தித்த நல்லவரின் குணாதிசயம்) இருந்து ஒரு கோட்டைப் (புதியதாய் சந்திப்பவரின் குணாதிசயம் வரை) போட்டுக் கொள்கின்றோம்.

சிலசமயம் நம் அனுபவத் தராசு மக்கர் செய்யத்தான் செய்யும். ஏன் இப்படி நடக்கின்றது? அனுபவம் சரியில்லையா? அல்லது புதிய இடத்தில் ஆட்கள் சரியில்லையா?

இனி எல்லாம் லாபமே !

ஏற்கெனவே நாம் சந்தித்த நபர்கள் மற்றும் அவர்கள் கொடுத்த நல்ல அனுபவங்கள், கெட்ட அனுபவங்கள், ஆச்சர்யங்கள் போன்றவற்றை நினைவில் இருந்து மூளையில் எடுத்துவைத்துக் கொண்டு ஒப்பீடு செய்ய ஆரம்பிக்கின்றோம்.

இதையெல்லாம் நாம் நிறுத்தி நிதானித்துச் செய்வதில்லை. கணநேரத்தில் எல்லாவிதமான ஒப்பீடுகளும் நிகழ்ந்து முடிவுகளும் புள்ளியிலிருந்து கோடுகளும் போடப்படுகின்றன. நம் வாழ்க்கையில் அன்றாடச் செயல்பாடுகளில் பெரும்பாலான சமயங்களில் நம்முடைய ஒப்பீடுகளில் வெற்றி பெறுகின்றோம். ஒருசில சமயங்களில் மட்டுமே தோல்வியும் அடைகின்றோம். தனிமனித அனுபவங்களுக்கேற்ப இந்த வெற்றி, தோல்விகளின் விகிதாசாரம் கொஞ்சம் மாறுபடவே செய்யும். நம் முடிவு எப்பவுமே கரெக்ட்டாய் இருக்கும் என்று பெருமிதப்படுபவரும்கூட, சில சமயங்களில் ஏமாந்திருக்க வாய்ப்புள்ளது எனலாம்.

பொதுவாக, நாம் நமக்குள் என்ன நினைக்கின் றோம்? என் முடிவு எப்பவுமே சரியாய் இருக்கும் என்றுதானே? நம்மில் யாரேனும் ஆட்கள் குறித்த என் முடிவு கொஞ்சம் தப்பாத்தான் இருக்கும் என்று ஒப்புக்கொள்கின்றோமா? இல்லையே! யாரையும் குருட்டுத்தனமாய் நம்புவதற்கு முன்னால் அவர் நம்பிக்கைக்கு உரியவர்தானா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள் என நம் முப்பாட்ட னாரிலிருந்து அத்தனைபேரும் நம்மிடம் சொல்லிவந்த போதிலும், நாம் ஒருவரைப் பற்றி முடிவெடுப்பதில் உற்சாகமாய் இறங்கிவிடுகின்றோமே! ஏன் தெரியுமா?

நம்முடைய முடிவுகள் தப்பாக வாய்ப்பு உள்ளது என்பதை நம் மனது ஒப்புக்கொள்ள விடவேவிடாது.

இதையும் தாண்டி பெரிய மனசு பண்ணி இந்த உண்மையை ஒப்புக் கொண்டுவிட்டால் மட்டுமே (அதற்குப் பின்னரே) நாம் முடிவு செய்யும் விதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் நம்மால் மாற்றி அமைத்துச் செயல்பட முடியும். மூளையின் பிராசஸிங் சக்தி என்பது நம் சுற்றுச்சூழல் வளரும் வேகத்தைவிடக் குறைவான வேகத்திலேயே வளர்கின்றது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கண் பார்ப்பதையே மூளை பிராசஸிங் செய்கின்றது. கண்ணில் படாத விஷயங்கள் ஒருபோதும் மூளையால் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை.

இனி எல்லாம் லாபமே !

உதாரணமாக, பஸ்ஸில் அழுக்குச் சட்டையுடன் ஒரு திருடனை ஏற்கெனவே நாம் எதிர்கொண்டிருந்தால், அடுத்த பஸ் பயணத்தில் டிப்-டாப் ஆசாமி நம்மிடம் பர்ஸைத் திருடும் வரை நம்முடைய மூளைக்கு இந்த ஆள் நடவடிக்கையே சரியில்லையே – ஒருவேளை திருடராய் இருப்பாரோ என்ற சந்தேகம் சாதாரணமாகத் தோன்றாது. ஏனென்றால், பஸ்ஸில் மூளைக்கு கண் சொல்லும் செய்தி, டிரஸ் டிப்-டாப் என்பதைத் தான்.

அந்தத் தகவலை வைத்தே மூளை அடுத்த பிராசஸிங்கை செய்யுமே தவிர, டிப்-டாப் ஆசாமி திருடனாய் மாறி, நம் பர்ஸை அடிக்கும்வரை வேறு கண்ணோட்டத்தை எடுக்காது. இந்த விஷயத்தில் நம் மூளை நம்மைவிட (!) அதிக நம்பிக்கையுடன் முடிவுகளை எடுக்கும் வல்லமைப் பொருந்தியது!

எப்படி வருகின்றது இந்த நிலைமை? அதாவது, முழுத் தகவல் இல்லாதபோதும், கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கும்போதும், இருக்கும் தகவல் இடைவெளிகளைக் கற்பனையால் பூர்த்தி செய்வதில் மூளைக்கு நிகர் மூளையேயாகும்.
நாம் பார்க்கும் விஷயத்துக்கும் நாம் நம்பும் விஷயத்துக்கும் இடையே இருக்கும் இடைவெளி, இதுபோன்ற இடைவெளியை பூர்த்தி செய்வதனாலேயே உருவாகின்றது.  பஸ் உதாரணத்தில், ஆசாமி போட்டிருக்கும்

டிப்-டாப் உடைக்கும் அவரின் தாறுமாறான நடவடிக்கைக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல் இருந்தாலும்கூட நம் பார்வை டிப்-டாப் என்பதை மூளைக்குச் சொல்ல, டிப்-டாப் திருடன் என்ற முன் அனுபவமில்லாத வரை (சிலசமயம் டிப்-டாப் திருடன் பிடிபட்டான் என்று செய்தித்தாளில் கொஞ்ச நாளைக்குமுன் படித்திருந்தாலும்கூட) மூளை அவரை நல்லவர் என்று சொல்லிவிடும் வாய்ப்பே மிக மிக அதிகம்.

அதனாலேயே பயணத்தில் கொஞ்சம் அஜாக்கிரதையாய் இருந்துவிட்டு, பர்ஸ் இழப்பு அனுபவத்தைப் பெறுவோம். அப்புறம்தான் என் முடிவு ரொம்பத் தப்பு என்று நமக்குள்ளேயே சொல்லிக்கொள்வோம் (ஆனால், வெளியே சொல்லவே மாட்டோம்!).

இதெல்லாம் உங்களை மாதிரி குண்டுசட்டி யில் குதிரை ஓட்டுறவங்களுக்கு. நான் ஊர் உலகம் பூராவும் சுற்றியவன். நம்ம கிட்ட முடியுமா? என்று சொல்பவர்களையும் பார்த்திருப்பீர்கள். உலகம் சுற்றியதால் அனுபவம் என்னும் பிரேம் பெரியதாக இருக்குமே தவிர, ஏமாற்று உலகின் கடைசி அப்டேட் வரையிலும் அவருடைய மூளையில் இறங்கியிருக்காது. இதனால் அவரை ஏமாற்ற ஒருவர் புதிய பிரேம் வொர்க்குடன் வர வேண்டுமே தவிர, ஏமாறாதவர் என்ற ஒருவர் இல்லையென்றே சொல்லலாம்.

இது என்ன வம்பாப்போச்சு. லாபம் பற்றித் தெரிந்துகொள்ள நினைத்தால், ஏமாற்று பற்றிப் பேசுகிறாரே என்று திகைக்காதீர்கள். மூளையின் செயல்பாட்டுத்திறன் குறித்த அடிப்படைகள் அனைவருக்கும் கட்டாயம் தெரிய வேண்டும். தகவல்கள் குறைவாக இருக்கும்பட்சத்தில் அனுபவத்தை வைத்து இடைவெளிகளை பூர்த்தி செய்வதில் நம் மூளை தலைசிறந்தது என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். லாபத்தை அடைவதற்கு இந்தப் புரிதல் மிக மிக அவசியம்.

(லாபம் தொடரும்)

உயர்ந்தது எம்சிஎக்ஸ்-ன் டேர்னோவர்!

கமாடிட்டி வர்த்தக சந்தையான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சின் டேர்னோவர் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 57% உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.14,809 கோடி அளவுக்கு உயர்ந்த டேர்னோவர், இந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.23,268 கோடி அளவுக்கு உயர்ந்திருக்கிறது. எம்சிஎக்ஸ்-ன் மொத்த டேர்னோவர் ரூ.4,65,351 கோடியாக இருக்கிறது. இதுவே, கடந்த ஆண்டு ரூ.3,99,831 கோடியாக இருந்தது. கமாடிட்டி வர்த்தகம் இந்தியாவில் தொடர்ந்து வளர்ந்து வருவதற்கு இது ஒரு நல்ல சான்று எனலாம்.