Published:Updated:

இனி எல்லாம் லாபமே !

வெற்றிகரமான முதலீட்டுக்கு...டாக்டர் எஸ்.கார்த்திகேயன் ஓவியம்: ஸ்யாம்

இனி எல்லாம் லாபமே !

வெற்றிகரமான முதலீட்டுக்கு...டாக்டர் எஸ்.கார்த்திகேயன் ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

சரியான தகவல்கள் கையில் இல்லாதபோது அந்த இடைவெளியை நம் அனுபவத்தைக் கொண்டு நிரப்பி,  செயல்படத் தொடங்குகின்றோம் என்பதை கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில் நாம் பார்க்கப்போவது நம் அனுபவத்தை வைத்து நாம் எப்படி அடுத்தடுத்து நம் பாதையை அமைத்துக் கொள்கின்றோம் என்பதை.

ஒரு சிறிய உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு பையன் சிறிய வயதில் கிளாஸுக்கு கட் அடித்துவிட்டு, சினிமாவுக்குப் போகலாம் எனத் திட்டம் தீட்டுகின்றான். திக்திக் பயத்துடன் சினிமாவுக்குப் போய், பள்ளிக்கும் வீட்டுக்கும் தெரியாமல்  தப்பித்துவிடு கின்றான். அந்த த்ரில்லும் வெற்றியும் அவனை அடுத்தடுத்து அதேபோன்ற செயல்களை செய்ய வைக்கிறது. வளர்ந்து பெரிய வனாகி வேலைக்குப் போகும் காலகட்டத்தில்கூட ஆபீஸை கட் அடித்துவிட்டு, அவுட்டிங் போகும் டீமில் அவனே தலைவனாக இருக்கும் அளவுக்கு வளர்ந்துவிடுவான்.

ஆனால், முதல் தடவை கிளாஸுக்கு கட் அடித்துவிட்டு, சினிமாவுக்குப் போகும்போதே கையும் களவுமாய் ஆசிரியரிடமோ, குடும்ப நண்பரிடமோ மாட்டிக்கொண்டு, சிக்கி சின்னா பின்னமான ஒரு பையன் பிற்காலத்தில்  இதுபோன்ற வாய்ப்பு கிடைத்தாலும், பழைய அனுபவத்தை மனதில்கொண்டு அதைத் தவிர்க்கவே முயல்வான்.

இனி எல்லாம் லாபமே !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏறக்குறைய இதே நிலைமையைத்தான்  முதலீடு களிலும் நாம் கடைப்பிடிக்கின்றோம். ஒருவகை முதலீடுகளில் முதல் தடவை நஷ்டம் வந்துவிட்டால், அந்தவகை முதலீட்டை செய்யவே நாம் தயங்கு வோம். அதேசமயம், ஒருவகை முதலீட்டு முடிவில் முதல் தடவையிலேயே நாம் பெரிய அளவில் வெற்றி பெற்றோமென்றால், அதே வகையான முதலீடுகளை நாம் மிகுந்த ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் செய்ய முயற்சிப்போம். இவை கற்பனைக் கதையோ, சூத்திரங்களோ அல்ல. பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகளும் இதையே காட்டுகின்றுன. மனிதர்கள் என்றில்லை. எலிகள், புறாக்கள் போன்றவற்றை இந்தச் சோதனைக்கு உள்ளாக்கியபோதும், இதே முடிவுகள் வந்தது.

இனி எல்லாம் லாபமே !

ஒரு எலிக் கூண்டில் உள்ள லிவரை எலி அழுத்தினால், உணவு வந்து விழுகிற மாதிரி ஏற்பாடு செய்திருந்தனர் ஆராய்ச்சியாளர்கள். கூண்டில் இருந்த எலி, லிவரை தெரியாமல் அழுத்த, உணவு வந்து விழுந்ததைக் கண்டது. உடனே இரண்டு செயல்களுக்கும் உள்ள தொடர்பை புரிந்துகொண்டு, உணவு வேண்டும் என்கிறபோது லிவரை அழுத்தக் கற்றுக்கொண்டது. இதை ‘பாசிட்டிவ் ரீ-இன்ஃபோர்ஸ்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வீட்டுப்பாடம் ஒழுங்காக செய்பவர்களுக்கு ரூ.100 பரிசு எனில், எல்லா   மாணவர்களும் வீட்டுப்பாடம் செய்வார்கள் இல்லையா?  

அடுத்து, கூண்டில் இருந்த எலிக்கு எலெக்ட்ரிக் ஷாக் தந்தனர். குறிப்பிட்ட ஒரு லிவரை மிதிப்பதன் மூலம் ஷாக் அடிப்பது நின்றுபோகிற மாதிரி அமைத்திருந்தனர். இதை புரிந்துகொண்ட எலி, ஷாக் அடிக்கும்போதெல்லாம் லிவரை மிதித்து, ஷாக்கிலிருந்து தப்பிக்க கற்றுக்கொண்டது. இதற்கு ‘நெகட்டிவ் ரீ-இன்ஃபோர்ஸ்’ என்று பெயர். உதாரணத்துக்கு, ஒரு மாணவன் வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்குச் சென்றால், ரூ.100  ஆசிரியருக்குத் தரவேண்டும் என்றால், வீட்டுப் பாடம் செய்யாமல் வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் இல்லையா? இதுதான் ‘நெகட்டிவ் ரீ-இன்ஃபோர்ஸ்’ என்கின்றார்கள்.

இன்னும் சிலர் தண்டனை கொடுத்தால்தான் தங்கள் தவறைத் திருத்திக் கொள்வார்கள். வீட்டுப்பாடம் செய்யாமல் வந்தால் ரூ.100 அபராதம் என்றால், கஷ்டப்பட்டாவது மாணவர்கள் செய்து வந்துவிடுவார்கள் இல்லையா?

இதெல்லாம் விலங்குகளுக்கு சரி. நாம் என்ன எலியா, பூனையா? ஆறறிவு படைத்த மனிதர்களாயிற்றே என்பீர்கள். ஆனால், இந்த விஷயத்தில் மனிதர்களின் நடவடிக்கைகளும் பெருமளவில் மாறுவதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த மூன்று வகை விஷயங்களுமே மனிதர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் அவர்கள் பெற்ற அனுபவம் மற்றும் சூழல்களுக்கு ஏற்றபடி பெற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தும் விஷயங்களாகும். யாரும் நமக்கு இதைச் சொல்லித் தருவதில்லை. நமக்கு நாமே என முற்றிலும் சொந்தமாகக் கற்றுக்கொள்ளும் விஷயம் இது.

இதை நாம் சிறிய வயதில் இருந்தே கற்றுக் கொள்கின்றோம். இதனால் இது நடக்கின்றது, இதைச் செய்தால் இது நடக்கும் என நமது மூளையில் ஸ்டோர் செய்துவைத்துக் கொண்டு அந்த விஷயங்களை எதிர்கொள்ளும்போது நம் செயல்பாட்டை அமைத்துக் கொள்கின்றோம். அதிலும் முதலீட்டு முடிவுகளை நாம் எடுக்கும்போது இதுபோன்ற பழைய பதிவுகளின் அலசல்கள் மூளையில் மிகவும் தீவிரமாகச் செயல்படுகின்றது.

அதனாலேயே முதல் முதலீட்டில் அதிக லாபம் பார்த்தவர், அடுத்துவரும் முதலீட்டில் அதிகபட்ச முதலீட்டை செய்யத் துணிகின்றார். சூப்பர் லாபம் ஏற்கெனவே கிடைத்த பதிவு மூளையில் இருக்கின்றதே, அது அதிகமாய்ப் பணத்தைப் போடு, லம்ப்பாய் லாபம் பார்க்கலாம் எனத் தூண்டுகின்றது. அதாவது, ஏற்கெனவே ஒர்க்-அவுட்டான ஒரு விஷயம் மீண்டும் மீண்டும் பலிக்கும் என  நினைக்க வைக்கிறது. 

இனி எல்லாம் லாபமே !

அதிக ரிட்டர்ன் தருவதாகச் சொல்லும், போலித் திட்டங் களில் சிறு தொகையைப் போட்டுப் பார்த்துத் தவணைத் தேதியில் பணம் அசலும் லாபமுமாய்த் திரும்புகின்றதா எனப் பார்த்து விட்டு, அடுத்து ஒரேயடியாய் வீடு வாசலை விற்று/அடமானம் வைத்துப் பணத்தினை அதிக ரிட்டர்ன் தரும் போலித் திட்டங்களில் இழப்பது இதனால்தான். அதேபோல் முதலில் செய்த முதலீடு இழப்பை உண்டு பண்ணியதென்றால், அதற்குப் பின்னால் எப்பேர்ப்பட்ட நல்ல முதலீட்டு வாய்ப்பு அதே வகையில் வந்தாலும் அதைத் தவிர்க்கும் குணம் மனித மனதில் தோன்றுவதும் இதனால்தான்.

ஹர்ஷத் மேத்தா காலத்தில் பங்குச் சந்தையில் கொஞ்சம் பணம் போட்டுவிட்டு, பெரும் நஷ்டம் கண்டதால், பிறகு அந்தப் பக்கமே தலைவைத்துக்கூட படுக்கவில்லை சிலர். தவறான ரியல் எஸ்டேட் டீலை முதலில் செய்தவர் நிலம் வாங்குவதே தப்பு என எல்லோருக்கும் அட்வைஸ் செய்வதும் இதனால்தான். எதிர்பார்த்த விஷயம் ஒரு முதலீட்டில் கிடைக்கவில்லையா? ரிஸ்க்கே எடுக்காமல் ஆர்.டி., எஃப்.டி. போன்ற ரிஸ்க் இல்லாத வழிகளில் திருப்தி அடைந்து நிற்பதும் இந்த வகை ரீ-இன்ஃபோர்ஸ்களினால்தான்.

இனி எல்லாம் லாபமே !

தொழில் செய்கின்றேன் என்று பார்ட்னர்கள் சேர்ந்து செய்து வெற்றி பெற்ற பின், பல்வேறு தொழில்களில் பல்வேறு பார்ட்னர்களைச் சேர்த்துக்கொண்டு வெற்றி பெறுவதும் இதனால்தான். முதல் பார்ட்னர் ஷிப்பே கவிழ்ந்தால், பிற்பாடு நல்ல நண்பர்கள் கிடைத்தும் கூட்டணி அமைக்கத் தயங்குவதும்  இதனால்தான்.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது   என்ன? என்னதான் ஆறறிவு என்று சொல்லிக் கொண்டாலும், ஒரு முதலீட்டில் நாம் என்ன தவறு செய்தோம் என ஆராய்ந்து பார்த்து அறிவை வளர்த்துக்கொள்ள முடியவில்லை. நம்மில் பெரும்பாலானோர் முதலீடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை முடிவு செய்ய முயலும்போது சரி அல்லது தவறு என நம் முந்தைய அனுபவத்தை வைத்து ஒரே போடாகப் போட்டுவிடுகின்றோமே தவிர, ஆராய முயல்வதில்லை. ஒரு சிலரே ஆராயும் திறன் கொண்டுள்ளனர். அவர்களே தங்கள் செயல்பாட்டை வெற்றிகரமாக மாற்றி அமைத்து வெற்றி பெறுகின்றனர்.

(லாபம் தொடரும்)