Published:Updated:

இனி எல்லாம் லாபமே !

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

இனி எல்லாம் லாபமே !

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:

தொழிலோ, முதலீடோ, நம் செயல்பாடும் அணுகுமுறையுமே லாபத்தைக் கொண்டுவரும் என்பதற்கான காரண, காரியங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். முதலீட்டில் வெற்றிபெற தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது என பல்வேறு காரணிகள் இருக்கின்றன. இந்தக் காரணிகள் பற்றி புரிந்துகொள்ள நாம் கொஞ்சம் நிறையவே பிரயத்தனப்பட வேண்டியிருக்கும்.

 பொதுவாக நம்மிடம் குடிகொண்டிருக்கும் சுறுசுறுப்புக் குறைவு என்பது (சோம்பேறித்தனம் என்று சொன்னால் கோபித்துக் கொள்ளக் கூடாது!) இந்தப் பிரயத்தனத்தைச் செய்யவிடாது. இதற்குப் பதிலாக, நம் கண்ணில் தெரியும் பல விஷயங்களை இணைத்து வெற்றிக்கான காரணத்தைச் சொல்ல முயலும்.

சிறிய பிசினஸோ, பெரிய பிசினஸோ - சென்டிமென்ட்டுகள், இதைச் செய்த பின்னர் இதைச் செய்தால் வெற்றி உறுதி என்று முடிச்சுப் போடுவது, இவரை வைத்து கடை திறந்தால் வியாபாரத்தில் ஜமாய்க்கலாம் என்று நம்பிக்கைக் கொள்வது, முதல் போணி செய்தவர் கைராசிக் காரராக இருந்தால் அன்றைக்கு வியாபாரம் பிரமாதமாக இருக்கும் என்று நினைப்பது, இந்த நிறத்தில் ஆடைகள் அணிந்தால் வெற்றி உறுதி  என கணக்குப் போட்டு அதே நிறத்தில் ஆடை அணிவது போன்றவை இந்த ரகத்தில் வரும் முடிவுகள்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி எல்லாம் லாபமே !

இதெல்லாம் நம்மிடம் சாதாரணமாகத் தொற்றிக்கொள்ளக்கூடிய நடைமுறை பழக்கங்கள். இதையெல்லாம் மாற்ற வேண்டுமா என்ன என நீங்கள் கேட்கலாம். இந்தப் பழக்கவழக்கங்கள் தவறென்று சொல்வதற்காக இங்கே தரப்படவில்லை. முதலீட்டில் இதுபோன்ற சம்பந்தா சம்பந்தமில்லாத நிகழ்வுகளை இணைத்து நாம் கணக்குகளைப் போட்டுவிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைச் சொல்லத்தான் இந்த உதாரணங்கள்.

உதாரணத்துக்கு, பங்குச் சந்தையை எடுத்துக் கொள்ளுங்கள். சூப்பர் கம்ப்யூட்டர்களும், பல்வேறு அல்காரிதங்களும், புரோகிராம்களும் இருந்தாலுமே அவை எவையும் பங்குச் சந்தையின் மூவ்மென்ட் களைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை இல்லையா? ஆனாலும், நாம் நம்மிடம் இருக்கும் சில விஷயங்களைக் கையில் வைத்துக்கொண்டு நண்பர் ஒருவர் வாங்கினால் அந்தப் பங்கு கட்டாயம் விலை ஏறும் என்பதைத் தொடர்ந்து அனுபவத்தில் பார்த்து அதனாலேயே அவர் வாங்கும் பங்குகளில் பணத்தை முதலீடு செய்துவிடு கின்றோம் இல்லையா?
நமக்குத் தெரிந்தவர்கள் பலர் ஒரு தொழில் செய்து வெற்றிகரமாகச் செயல்பட்டால், நாமும் அந்தத் தொழில் செய்தால் வெற்றி கிடைக்கும் என நினைத்து இறங்க நினைக்கிறோம். ஆனால், அவர்கள் கையில் இருந்த பணம், அவர்களின்  பின்னணி போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமலேயே அந்தத் தொழிலில் இறங்கிவிடுகின்றோம், இல்லையா?

இனி எல்லாம் லாபமே !

இதையெல்லாம் தாண்டி எந்தவிதமான அறிவியல் அணுகுமுறையும் இல்லாமல் பல முதலீடுகளில் பணம் போடுவதும் இந்தவகைக் குணாதிசயத்தால்தான். இந்த நம்பிக்கைகளை நாம் நமது சொந்த அனுபவத்தில் கண்டு, நாமே கடைப்பிடிக்கின்றோம் என்பது ஒருவகை என்றால், மற்றவர்கள் இதைக் கண்டுபிடித்ததாகச் சொல்லி வியாபார ரீதியாக நம்மை நம்பவைப்பதில்தான் சிக்கலே இருக்கின்றது.
எனவே, லாபம் பார்க்க நிஜமான காரண காரியங்களை ஆராய முயலவேண்டுமே தவிர, குறுக்குவழிகளைத் தேடி ஓடக் கூடாது என்பதுதான் கருத்து. லாபம் பார்க்க செய்யும் விஷயங்கள் குறித்த முழுமையான ஐடியா வேண்டும். சம்பந்த மில்லாத விஷயங்களை முடிச்சு போட்டு, இவ்வளவு சிம்பிளான விஷயம் இது என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது.

லாபம் தரும் எந்த விஷயமுமே மிக எளிதாக இருந்துவிட வாய்ப்பில்லை. அப்படி சிம்பிளாக, லாபம் பார்க்க முடிந்தால் அதில் உள்ள இடர்பாடுகளை நாம் அந்தத் தடவை செய்த முயற்சியில் எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டம் நமக்கு இல்லாமல் போனது என நினைத்துக்கொண்டு அடுத்தமுறை கவனமாகச் செயல்படவேண்டுமே தவிர, அதைவிட்டுவிட்டு ஏற்கெனவே இந்த பேனாவில் கையெழுத்துப்போட்டு ஜெயித்தேன். அதே பேனாவால் கையெழுத்துப்போட்டால், எத்தனை முறை வேண்டுமானாலும் ஜெயிப்பேன் என நினைத்து செயல்களில் இறங்கக்கூடாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்னொரு வகை மனிதர்களும் உண்டு. முதலீட்டிலும் சரி, தொழிலிலும் சரி முழுக்க முழுக்க நம்முடைய திறமையை நம்பாமல், அடுத்தவர்களை எக்ஸ்பர்ட் என்று நினைத்து அப்படியே நம்புவது. இதில் என்ன தவறு என்று கேட்கிறீர்களா? நாம் நம்பும் நபர் எக்ஸ்பர்ட்டாக இருந்தால் பரவாயில்லை. அவர் எக்ஸ்பர்ட் தானா என்பதை செக் செய்து, பின்னர் சொல்வதை நாம் கேட்டால் பரவாயில்லை. இங்கேதான் நம் மனதின் செட்டிங் நம்மை ஒரேயடியாகக் கவிழ்த்துவிடுகின்றது.

நம் மனது நாம் கேள்விப்படும் விஷயங்களில் நம்முடைய எதிர்பார்ப்புக்கு சரிவரும் விஷயங்களை மட்டும் தெளிவாகப் பிரித்தெடுத்து அர்த்தம் செய்துகொள்ளும். உதாரணமாக, உங்களுடைய வார ராசி பலன் சொல்கின்றேன், கேளுங்கள்.

“இந்த வாரம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். பண வசதி ஓரளவுக்கு இருக்கும். செலவுகளைக் குறைத்துச் சமாளிப்பீர்கள். வேண்டாதவர்கள்கூட உங்களுக்கு உதவி செய்வார்கள். அலுவல் பணியில் சற்றுப் பளு அதிகம் இருந்தாலும் திறம்படச் சமாளித்துவிடுவீர்கள். வார இறுதியில் மனஅமைதி பெருகும். நண்பர்கள், உறவினர் களுடன் சந்தோஷமாக இருப்பீர்கள்’’.

இந்த ராசி பலன் உங்களுக்கு சரியாக சொல்லப்பட்டு இருக்கிறதா என்று கேட்டால், ஓரளவு சரியாகத்தான் இருக்கிறது என்பீர்கள்.

இனி இன்னொரு ராசிபலனை பார்ப்போம்.  “திங்கட்கிழமை காலையில் சிறு விபத்து ஏற்படலாம், ஜாக்கிரதை. வாரத்தின் மத்தியில் வாந்தி, பேதி வரலாம், எச்சரிக்கை. கடன் கேட்ட இடத்தில் கிடைக்காது போகலாம். செலவுகள் கண்ணைக் கட்டும். மனப் போராட்டம் அதிகரிக்கும். மேலதிகாரிகள் குடைச்சல் தருவார்கள். நண்பர்கள் பகைவரா கும் வாய்ப்பு உண்டு. உறவினரிடத்தில் அளவாய்ப் பேசுங்கள். பிரச்னை வெடிக்க வாய்ப்பு அதிகம்.'' 

இனி எல்லாம் லாபமே !

இந்த ராசிபலன் உங்களுக்கு சரியாக சொல்லப்பட்டு இருக்கிறதா என்று கேட்டால்,  இதில் எதுவும் சரியாக சொன்ன மாதிரி தெரியவில்லை என்பீர்கள். அப்படித்தானே?

மேலே சொன்ன இரண்டு வார பலன்களுமே முற்றிலும் கற்பனையே! நாம் பாசிட்டிவ் விஷயங்களை எதிர்பார்க்கின்றோம். அதனாலேயே, உங்கள் நட்சத்திரம், ராசி, எண் என்ற எதையுமே கேட்டறியாமல் குத்துமதிப்பாகச் சொன்ன முதல் பலனில் பெரும்பான்மை சரியானதாகவும், நாம் சற்றும் விரும்பாத விஷயங்கள் நடக்கப்போவதாகச் சொல்லும் இரண்டாவது வகைப் பலன் நமக்கு சரியாக இல்லை என்றும் சொல் கின்றோம். நாம் விரும்புவது சொல்லப்படும் போது கரெக்ட்டாய் இருக்குதே என்கிறோம். எதிர்மறை கருத்துக்கள் வரும்போது அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறோம். இந்த குணம்தான் பெரும்பாலான சமயம் தொழில்ரீதியாக பாசிட்டிவ் பொடியைத் தூவி பேசும் மனிதர்களை நாம் எக்ஸ்பர்ட் என்று சுலபத்தில் நம்பிவிடக் காரணமாய் அமைகின்றது.

நமக்கு வேண்டியது அல்லது நாம் எதிர்பார்ப்பது என்ற ஒருசில விஷயங்களை நாம் நமக்குள்ளேயே வைத்துக்கொண்டு திரிகின்றோம். நாம் எதிர்பார்க்கிற விஷயங்கள் சொல்லப்படும்போது நம் தலை தானாகவே ஆமாம் என்று சொல்லத் தொடங்கினால் உஷாராகிவிட வேண்டும். நாம் நினைப்பதைச் சொல்கின்றார்கள். இதை கொஞ்சம் செக் செய்து பார்த்துவிடுவது நல்லது என்று நீங்கள் இறங்கி செயல்படத் தொடங்கினால், நீங்கள் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் நிச்சயம் லாபம் பார்க்க முடியும்.

 (லாபம் தொடரும்)

இந்திய ரியல் எஸ்டேட்டில் ஜப்பான் நிறுவனம்!

இந்தியாவின் வளர்ந்துவரும் ஆன்லைன் இணையதளமான ஹவுஸிங் டாட்காமில் ரூ.54 கோடியை முதலீடு செய்திருக்கிறது சாஃப்ட்பேங்க்.  மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹவுஸிங்.காம், இந்தியா முழுக்க 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆன்லைன் மூலம் அடுக்குமாடி வீடுகளை விற்று வருகிறது.