Published:Updated:

ஷேர்லக் - புத்தாண்டுக்குப் பிறகு புதிய உச்சம்!

ஷேர்லக் - புத்தாண்டுக்குப் பிறகு புதிய உச்சம்!

ஷேர்லக் - புத்தாண்டுக்குப் பிறகு புதிய உச்சம்!

ஷேர்லக் - புத்தாண்டுக்குப் பிறகு புதிய உச்சம்!

Published:Updated:

‘‘புது வருடத்தைக் கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் பெங்களூருக்குப் போகிறேன். உம்மைச் சந்தித்து செய்திகளைச் சொல்லிவிட்டால், ஏர்போர்ட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான் பாக்கி’’ என்றவர், அடுத்த ஒரு மணி நேரத்தில் நம் கேபினுக்குள் நுழைந்தார். வந்தவர் சட்டென்று உட்கார்ந்து செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்கும் இன்றைய நிலையில் 2015-ல் எப்படி இருக்கும் என்பது பற்றி தெரிந்துகொள்ளத்தான் எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள். அமெரிக்கப் பொருளாதார நிலைமை  பரவாயில்லை என்றாலும், ஐரோப்பிய நாடுகளின் நிலைமை மோசமாகவே இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ரஷ்யப் பொருளாதாரம் உருக்குலைந்து போயிருக்கிறது. சீனாவின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. கடந்த சில மாதங்களில் சீனப் பங்குச் சந்தை அடைந்த வளர்ச்சி குறித்து சிலர் சந்தேகங்களை எழுப்புகிறார்கள்.

உலகம் முழுக்க இத்தனை களேபரங்கள் இருந்தாலும், இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய சிக்கல் எதுவும் இல்லை. கச்சா எண்ணெய்யின் விலை குறைவால், பணவீக்கம் குறைந்து வருகிறது. எனவே, அடுத்த இரண்டு மாதங்களில் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. பொது பட்ஜெட் தொழில் வளர்ச்சிக்கு அதிக அழுத்தம் தருவதாக அமையும்பட்சத்தில் பொருளாதார வளர்ச்சி இன்னும் வேகமெடுக்கும். ஜிடிபி உயர்ந்து, பங்குச் சந்தையும் உயரும். எனவே, 2015ல் பங்குச் சந்தை உயர்ந்து புதிய உச்சத்தைத்தொடும் என்று எதிர்பார்ப்போம். ஒருவேளை சந்தை சரிந்தாலும் நம் முதலீட்டை அதிகரிப்பதே சரியான முடிவாக இருக்கும்’’ என நம்பிக்கையுடன் பேசினார் ஷேர்லக்.

ஷேர்லக் - புத்தாண்டுக்குப் பிறகு புதிய உச்சம்!

‘‘கடந்த புதன்கிழமை அன்று சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகள் குறைந்ததே, என்ன காரணம்?’’ என்று வினவினோம்.

‘‘கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு என தொடர்ந்த கொண்டாட்டங்களுக்காக வர்த்தகர் கள் லாபத்தை எடுத்ததால், நிஃப்டி 8200 புள்ளி களுக்கு கீழே இறங்கியது. ரியல் எஸ்டேட் தவிர, அனைத்து இண்டெக்ஸ்களும் புதன்கிழமை இறக்கம் கண்டன. வியாழன் அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை. அன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை என்பதால் புதன்கிழமை எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி வந்தது. டிசம்பர் மாத ஃப்யூச்சர்ஸில் 63% மட்டுமே ரோல் ஓவர் ஆகி இருக்கிறது.

இது ஆறு மாத சராசரியான 69 சதவிகிதத்தைவிட குறைவு. குறைவான ஃப்யூச்சர்ஸ் ரோல் ஓவர் என்பது சந்தை இறக்கம் காண்பதற்கான அச்சாரம் என்கிறார்கள்’’ - எச்சரிக்கைக் குரலில் எடுத்துச் சொன்னார் ஷேர்லக்.

‘‘கடன் வளர்ச்சி கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்துள்ளதே?’’ என்றோம்.

‘‘ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது கடன் வளர்ச்சியையும் சார்ந்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 12 வரைக்கும்,  இந்தியாவின் கடன் வளர்ச்சி என்பது வெறும் 2.68 சதவிகிதமாக உள்ளது. இது 1998-ம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் குறைவான வளர்ச்சியாகும். வங்கிகளின் வாராக் கடன் மிக அதிகமாக இருப்பதால், வங்கிகள் அதிகம் கடன் தருவதில்லை. கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், பெரிய நிறுவனங்கள் கடன் வாங்குவதைத் தள்ளிப்போட்டு வருகின்றன. கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டால்தான், தொழில் வளர்ச்சி காணத் தொடங்கும் என பிரதமரின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் சொல்லியிருக் கிறார். 2015, பிப்ரவரி 3-ம் தேதி நடக்கும் பொருளாதார ஆய்வுக் கூட்டத்தில் ஆர்பிஐ 0.25% வட்டியைக் குறைக்கும் என பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் குறிப்பிட்டுள்ளது. குறைந்தபட்சம் 0.50% குறைத்தால்தான் ஏதாவது எஃபெக்ட் இருக்கும்’’ என்றார்.

‘‘பங்குச் சந்தையில் நிதி திரட்ட இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செபியை அணுகி இருக்கின்றனவே?’’ என்றோம்.

‘‘பங்குச் சந்தை முதலீட்டாளர் களின் மனநிலை பாசிடிவ்வாக இருப்பதை, தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக வீடியோகான் டி2ஹெச், ராஷ்டிரிய இஸ்பத் நிகாம், அட்லேப்ஸ் என்டர்டெய்ன்மென்ட் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு வெளியிட அனுமதிவேண்டி செபியிடம் விண்ணப்பித்திருக்கின்றன. 2014-ல் ஐபிஓ வந்த நிறுவனங் களில் 60% பங்குகளின் விலை அவற்றின் வெளியீட்டு விலையைவிட அதிக விலைக்கு வர்த்தகமாகி வருகின்றது. ரூ.47க்கு வெளியான ஸ்னோமேன் லாஜிஸ்டிக்ஸ், இப்போது ரூ.96-க்கு உயர்ந்துள்ளது. ரூ.125-க்கு ஐபிஓ வந்த ஒன்டர்லா ஹாலிடே தற்போது விலை ரூ.292-க்கு அதிகரித்துள்ளது.

மேலும், செபி அறிவிப்பின்படி, அடுத்த இரண்டரை ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசின் பங்கு மூலதனத்தை 75 சதவிகிதத்துக்கும் கீழே குறைக்க வேண்டும். இப்படி குறைக்கும்பட்சத்தில் பட்டியலிடப்பட்ட சுமார் 20 பொதுத்துறை நிறுவனங்களின் 5 - 10 சதவிகித பங்குகளின் விற்பனை மூலம் ஏறக்குறைய ரூ.60,000 கோடி திரட்டப்பட இருக்கிறது.  குறிப்பாக, கோல் இந்தியா, நால்கோ, என்ஹெச்பிசி, என்எம்டிசி, நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன’’ என்றார்.
 

‘‘ஜே.பி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் இரண்டு சிமென்ட் ஆலைகளை அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதே?’’ என்றோம்.

‘‘இந்த கையகப்படுத்துதல் மூலம் அல்ட்ரா டெக் சிமென்ட்ஸின் உற்பத்தித்திறன் அதிகரிப்பதோடு, அதன் விற்பனை மற்றும் லாபம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ் பங்கு முதலீட்டாளர்களுக்கு சாதகம். 5.2 மில்லியன் டன் உற்பத்தித்திறன் கொண்ட சிமென்ட் ஆலைகளை ரூ.5,400 கோடிக்கு வாங்குவது அதிகமல்ல என்கிறார்கள் அனலிஸ்ட்டுகள்'' என்றார். 

‘‘வருடத்தின் கடைசியில் ஐபிஓ வருகிறதே ஒரு நிறுவனம்?’’ என்றோம்.

‘‘டெல்லியைச் சேர்ந்த என்சிஎம்எல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஐபிஓ டிசம்பர் 29-ம் தேதி ஆரம்பித்து,  ஜனவரி 2-ம் தேதி நிறைவடைகிறது. பங்கின் விலைப்பட்டை ரூ.100-120 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ரூ.10 முக மதிப்புள்ள 60 லட்சம் பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இந்தப் பங்கு வெளியீட்டுக்கு தரக் குறியீடு நிறுவனமான இக்ரா, தரக்குறியீடு 3 (சராசரி அடிப்படை) வழங்கி இருக்கிறது. என்சிஎம்எல் இண்டஸ்ட்ரீஸ் சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது’’ என்றார்.

‘‘பங்குச் சந்தை அடுத்த 4, 5 வருடங்களில் மூன்று மடங்கு உயரும் என்கிறாரே சூப்பர் இன்வெஸ்ட்டர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா?’’ என்றோம்.

‘‘ஆமாம், குறிப்பாக டைட்டான் கம்பெனி, லூபின், எம்சிஎக்ஸ், கிரிஸில் போன்ற பங்குகள் நல்ல லாபத்தைத் தரும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்’’ என்றவர், வாசகர்கள் அனைவருக்கும் ஹேப்பி நியூ இயர் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.