Published:Updated:

இனி எல்லாம் லாபமே!

வெற்றிகரமான முதலீட்டுக்கு...டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

இனி எல்லாம் லாபமே!

வெற்றிகரமான முதலீட்டுக்கு...டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:

நல்லதை எதிர்பார்க்கும் குணம் கொண்ட நாம், நமக்கு நல்லது நடக்கும் என்று ஒருவர் சொல்லும் போது அதை ஏறக்குறைய முழுமையாக நமக்கே சொன்னதைப் போல் நம்பிவிடுவதும், அதேசமயம் ஒருவர் நமக்கு கெட்டது நடக்கும் என்று சொன்னால், அதைக் கொஞ்சம் சந்தேகக் கண்ணோடு பார்த்து, இதெல்லாம் எனக்குச் சொல்லப்பட்டதில்லை என நம்மை நாமே தேற்றிக்கொள்வதும் சகஜம்; அப்படி பார்ப்பதுதான் நமது குணம் என்று கடந்த இதழில் பார்த்தோம்.

தொழிலிலும், முதலீட்டிலும் இந்தக் குணம் பெருமளவுக்கு பண ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஏனென்றால், பெரும்பாலான சமயம் முதலீட்டில் பல விஷயங்கள் எதிர்காலத்தின் மீது செய்யும் அனுமானத்தின் பெயரில் நடப்பதாக இருக்கும்.

என்ன பெரிய அனுமானம், எங்க அனுபவத்தில நாங்க பார்க்காத ஏற்றத்தாழ்வுகளா? இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்லை. நாங்களெல்லாம் ரொம்ப ஸ்டெடியான ஆளாக்கும் என்றும் நாம் நினைப் போம். ஆனால், ஒரு தெளிவில்லாத விஷயத்தில் நாம் முடிவெடுக்க வேண்டியிருக்கும் போதுதான் நம் ஒரிஜினல் தடுமாற்றங்கள் பெரிய அளவில் நம்மிலிருந்து வெளிப்பட ஆரம்பிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி எல்லாம் லாபமே!

அதென்ன தெளிவில்லாத விஷயம்? இந்த இன்டர்நெட் உலகத்தில் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால், தெளிவுபடுத்த முடியாத விஷயம் என ஒன்று இருக்கின்றதா என்ன என நீங்கள் கேட்கலாம். இன்டர்நெட்டில் தேடி தெளிவு படுத்திக்கொள்ள முடிவதெல்லாம், ஒரு வார்த்தையின் அர்த்தமோ, ஒரு கான்செப்ட்டோ, ஓர் இடத்துக்குப் போகும் வழியோ/விலாசமோ அல்லது ஒரு பொருள் பற்றிய விவரங்கள் மற்றும் ஃபீட்பேக்கோ மட்டுமே.

இனி எல்லாம் லாபமே!

இவையெல்லாம் உலகத்தில் உள்ள பல நபர்களுக்குத் தெரிந்தவை. ஆனால், நமக்குத் தெரியாதவை, ஒரு பொருளையோ அல்லது இடத்தையோ பற்றி தெரிந்தவர்கள் அதுகுறித்து அவர்களின் கருத்தைப் பதிந்துவைக்க ஓர் இடத்தை யும், அதனை நாம் சுலபத்தில் தேடி எடுத்துப் பார்க்கவும்தான் இணையமும், இணையத்தில் தேட உதவும் கூகுளும் நமக்கு உதவுகின்றது.

உலகத்தில் ஏற்கெனவே பலருக்கும் தெரிந்து, அதேசமயம் நமக்கு மட்டும் தெரியாத ரகத் தகவல்கள் இவை. தொழிலிலும், முதலீட்டிலும் நமக்குத் தேவைப்படுவது எதிர்காலம் குறித்த கணிப்பு. இது நமக்குத் தெரியாது. இது எப்படி நமக்குத் தெரியாதோ, அதேபோல் உலகத்தில் இருக்கும் அனைவருக்குமே இதற்கான விடை துல்லியமாகத் தெரியாது. இவற்றுக்கு விடை கண்டுபிடிப்பதில்தான் சிக்கலே இருக்கின்றது. அவரவர் அனுபவத்தை வைத்தும், கைக்கு எட்டும்/கிட்டும் தகவல்களை வைத்தும், இவற்றை உபயோகித்து அனுமானம் செய்பவரின் திறனுக்கு ஏற்றாற்போல் இந்த அனுமானத்தின் தன்மையும் பெரிய அளவில் மாறுபடுவதாக இருக்கும்.

இதிலும் ஒரு பெரும் சிக்கல் இருக்கின்றது. வாழ்க்கையில் எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும்போது ஒருவரிடத்தில் இருக்கும் அனுமானத்திறனுக்கும் வாழ்க்கை கொஞ்சம் நொண்டியடிக்கும்போதோ அல்லது தொட்டது எதுவும் துலங்காத சூழலில் ஒருவரிடத்தில் இருக்கும் அனுமானத்திறனுக்கும் நிறையவே மாறுதல்கள் இருக்கும்.

இதனை ஓர் உதாரணத்தின் மூலம் சுலபமாகப் புரிந்துகொள்ள லாம். நீங்கள் சொந்தமாகத் தொழில் செய்ய நினைத்து ஒரு கடை ஆரம்பிக்கிறீர்கள். சூப்பராய்ப் போகிறது கடை. புதிய கிளையைத் திறக்கிறீர்கள். அதுவும் ஓஹோ. இரண்டு பத்தாகின்றது. இனி,  சென்ற இடத்திலெல்லாம் வியாபாரத்துக்கு வாய்ப்பிருக் கின்றதா என நீங்கள் கணித்து கிளை திறக்கின்றீர்கள். உங்கள் கணிப்புத் திறன் ஓஹோவென்று திகழ்ந்து லாபம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகின்றது. நான் கணித்தால் அது தப்புவதேயில்லை என உங்களுக்குத் தோன்றும். உங்கள் பணியாளர்களும் எங்க முதலாளி இருக்காரே! அவர் முடிவெடுப்பதில் கில்லாடி எனச் சொல்லித்திரிவார்கள்.

இதையே வேறு சூழ்நிலையில் பார்ப்போம். உங்கள் முதல் கடையே தடுமாறுகின்றது. இருந்தாலும், வேறு இடத்தை தேடிப்பார்த்து ஆராய்ந்து அங்கே வியாபாரத்துக்கு வாய்ப்பு இருக்கின்றது என்பதை உணர்ந்து கிளை திறக்கின்றீர்கள். என்னவோ தெரியவில்லை. புதிதாகத் திறந்த அந்தக் கிளையும் சரியாகப் போக வில்லை. அட, எல்லாம் கரெக்ட்டாத்தான் இருந்துச்சு. அப்புறம் ஏன் இப்படி என உங்களுக்கு சந்தேகம் வரும். அந்தச் சூழலில் இன்னுமொரு இடத்தில் வியாபாரத்துக்கு வாய்ப்பு இருக்கின்றது என உங்கள் நண்பர் சொல்கின்றார். ஓர் ஆசைக்கு சின்னதொரு ஆராய்ச்சி செய்துவிட்டு, அடப் போப்பா! அங்கேயெல்லாம் வியாபாரம் ஆகாது என்பீர்கள்.

ஏற்கெனவே செய்து தவறாய்ப் போன ஜட்ஜ்மென்ட்டுகளின் தாக்கம் நண்பர் சொன்ன இடத்தில் (வியாபாரத்துக்கு நிஜமாகவே வாய்ப்பிருந்தாலும்கூட – பின்னொரு நாளில் வேறொருவர் அங்கே கடை வைத்து உங்கள் கண் முன்னேயே ஜாம்ஜாம் என தொழில் செய்யக் கூடச் செய்யலாம்) வந்து நமது முடிவில் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும்.

இனி எல்லாம் லாபமே!

தொழில் சூப்பராய் போகும்போது உற்சாகமாய் வெற்றிதரும் வகையிலேயே எடுக்கப்படும் முடிவுகள், தொழில் டல்லாய் போகும்போது தோல்வி வந்துவிடுமோ என்ற மனநிலையிலேயே எடுக்கப்படுகின்றதற்கான வாய்ப்புகளே அதிகம். கையில் முழுமையான டேட்டாக்கள் இருக்கும் போது எடுக்கப்படும் முடிவுக்கும், முழுமையாக எதுவுமே தெரியாது என்ற சூழ்நிலையில் எடுக்கப் படும் முடிவுக்கும் இடையே வித்தியாசம் இருக்கின்றது. அதிலும், எதுவுமே தெரியாத சூழ்நிலையில் முடிவை மாற்றுவதில் பல மூடநம்பிக்கைகள் வந்து முழுமையாகக் குடிகொண்டுவிடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

ஒவ்வொருவரின் நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் கால் இடறுவது, குறுக்கே பூனை போவது போன்ற கெட்ட சகுனங்களிலிருந்து ஆரம்பித்து கண்ணில் காணும் பல நல்ல சகுனங்களை மனதில் வைத்து நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் முடிவெடுக்க நாம் துணிவதும் இதனால்தான்.

அதாவது, ஒன்றுமே தெரியாத சூழ்நிலையில் சம்பந்தமே இல்லாத எதையாவது வைத்து முடிவெடுக்கச் சுலபத்தில் துணிந்துவிடுகின்றோம் நாம். முடிவெடுக்கும் திறன் நம்முடைய கையில் இல்லையா, ஒரு செயலை முழுமையாக கன்ட்ரோல் செய்யும் விஷயங்கள் நம் கையில் இல்லையா, பூனை, காலில் கல் தட்டுதல், டயர் பஞ்சர் போன்ற நெகட்டிவ் விஷயங்களையும் படத்தில் இருந்து விழுந்த பூ, அலுவலகம் செல்லும்போது நடந்த பாசிட்டிவ் விஷயங்கள் போன்றவற்றையும் கோத்து முற்றிலும் தெளிவில்லாத விஷயங் களில் நாம் முடிவெடுக்க ஆரம்பிக்கின்றோம்.

இனி எல்லாம் லாபமே!

டேட்டாவை வைத்து முடிவெடுக்கும்போதே நஷ்டத்துக்கு வாய்ப்பு இருக்கின்றது. இதில் தெரியாத விஷயம் குறித்து, சம்பந்தா சம்பந்தமில்லாத விஷயங்களை லிங் செய்து எடுக்கப்படும் முடிவுகள் எந்த மாதிரி முடிவுகளைத் தரும் என்று நினைத்துப்பாருங்கள். கொஞ்சம் பயமாகவே இருக்கும். கண்ணுக்கும் மூளைக்கும் புலப்படாத விஷயங்களில் இதுபோன்ற நம்பிக்கைகளினால் எடுக்கப்படும் முடிவுகளைத் தவிர்க்கவே வேண்டும்.

இந்த விஷயத்தில் ஓரளவுக்குமேல் தெளிவில்லை எனில், நாம் இந்த அளவு பணம் போடுகின்றோம். எதிர்பார்த்தது நடந்தால் இந்த அளவு லாபம். நடக்காவிட்டால் இந்த அளவு நஷ்டம். எடுக்கின்ற ரிஸ்குக்கு லாபம் போதுமா, மோசமான சூழ்நிலையில் ஏற்படக்கூடிய நஷ்டத்தைத் தாங்கும் சக்தி நமக்கு இருக்கின்றதா என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, மனதைத் திடப்படுத்திகொண்டு இறங் கலாமே தவிர, இந்த பாசிட்டிவ் சகுனம் கிடைத்தது என்று ஒரேயடியாகத் தாங்கமுடியாத ரிஸ்க் இருக்கும் காரியத்தில் குதித்தோ, நெகட்டிவ் சகுனம் கிடைத்தது என்பதனால் எடுக்கக் கூடிய/வேண்டிய ரிஸ்கைக்கூட எடுக்காமல் தவிர்ப்பதோ லாபத்துக்கு வழி வகுக்காது.

எதிர்கால நிகழ்வுகள் உறுதியில்லாத சூழலில் தொழிலானாலும் சரி, முதலீடானாலும் சரி, அணுகுமுறை என்பது தாங்கும் சக்தியைப் பொறுத்தும், பலாபலன்களைப் பொறுத்தும் இருக்கவேண்டுமே தவிர, வேறு எதையும் அளவிடாகக் கொண்டு இருக்கவே கூடாது.
 

(லாபம் தொடரும்)