Published:Updated:

மீண்டு எழுமா கமாடிட்டி ?

செ.கார்த்திகேயன், ச.ஸ்ரீராம்

மீண்டு எழுமா கமாடிட்டி ?

செ.கார்த்திகேயன், ச.ஸ்ரீராம்

Published:Updated:

2014-ம் ஆண்டில் கமாடிட்டி சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. குறிப்பாக தங்கம், வெள்ளி மற்றும் காப்பர் இந்த ஆண்டில் சென்ற ஆண்டைவிட  கணிசமான அளவு விலை குறைந்தும், அலுமினியம், ஜிங்க் மற்றும் நிக்கல் ஆகியவை ஏற்றத்துடனும் காணப்பட்டன. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது, வேலைவாய்ப்புகள் அதிகரித்ததுதான் இதற்கு முக்கிய காரணமாகும். மற்ற நாடுகளைவிட அமெரிக்கப் பொருளாதாரம் அதிக அளவில் சர்வதேச கமாடிட்டி சந்தைகளைத் தீர்மானிப்பதால் அதன் வளர்ச்சி தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

2015-ம் ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி பாதையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் முதல் இரண்டு காலாண்டுகளில் பெரிய அளவில் மாற்றம் இன்றி கமாடிட்டிகளின் விலைப்போக்கு இருக்கும்.  தற்போது உள்ள இறக்க நிலையே அடுத்த ஆறு மாதத்துக்குத் தொடர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 2015-ன் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டில் மீண்டும் கமாடிட்டி விலைகள் அதிகரித்து ஒரு நிலைக்கு வர வாய்ப்புள்ளது2015-ல் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைப்போக்கு குறித்து சொல்கிறார் மும்பை காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன்.

மீண்டு எழுமா கமாடிட்டி ?

தங்கம்!

‘‘தங்கத்தின் விலை சர்வதேச சந்தைகளில் 2015-ன் முதல் அரையாண்டில் விலை குறைந்தே வர்த்தகமாகும்.  காரணம், அமெரிக்கப் பொருளாதாரம் வலுவான நிலையில் வளர்ச்சி பெறுவதால், முதலீட்டாளர்களின் பார்வை பங்குச் சந்தை மீதே இருக்கும். இதனால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க வாய்ப்பில்லை.

அதேசமயம், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தில் கொண்டுவரும் மாற்றங்களைப் பொறுத்தும், அதன்பின் ஏற்படும் பொருளாதார மாற்றங்களைப் பொறுத்தும் இரண்டாவது அரையாண்டில் தங்கத்தின் விலை சற்று ஏற்றம் காணலாம்.சர்வதேச சூழலைப் பொறுத்தே இந்திய சந்தை களிலும் மாற்றம் இருக்கும். சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் குறைந்தபட்சமாக 1,050 டாலரும், அதிகபட்சமாக 1,250 டாலர் வரையிலும் இந்த வருடத்தில் வர்த்தகமாகலாம். இந்தியச் சந்தைகளில் தங்கத்தின் விலை 22,400 ரூபாயிலிருந்து 28,000 ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளது.

மீண்டு எழுமா கமாடிட்டி ?

வெள்ளி!

வெள்ளியை பொறுத்தமட்டில், தங்கத்தின் விலையைச் சார்ந்தே வர்த்தக மாகும். ஆனால், அமெரிக்கா வில் எலெக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்திக்கு வெள்ளி அதிகம் தேவைப்படுவதால், வெள்ளியின் விலை குறையாமல் தடுக்கப்படலாம். வெள்ளியின் விலை குறைந்து காணப்பட்டாலும் தங்கத்தின் விலை அளவுக்கு வெள்ளியின் விலை செல்ல வாய்ப்பில்லை. ஒரு அவுன்ஸ் 14 டாலரிலிருந்து 22 டாலர் வரை வர்த்தகமாக வாய்ப்புள்ளது. இந்தியச் சந்தைகளில் தங்கத்தின் விலைப்போக்கைப் பொறுத்தே வெள்ளியின் விலை அமையும்’’.

கச்சா எண்ணெய்!

2015-ல் கச்சா எண்ணெய்யின் விலைப் போக்கு குறித்து சொல்கிறார் கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர்.

 ‘‘2015-ல் கச்சா எண்ணெய்யின் விலையானது அமெரிக்கா எடுக்கக்கூடிய முடிவுகளைப் பொறுத்து அமையும். அமெரிக்காவின் ஷேல் எண்ணெய்யின் உற்பத்தி பல நாடுகளின் பொருளாதாரத்தைத் தலைகீழாக மாற்றிவிட்டது. உலக அளவில் எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நாடுகளுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனையில் கடும் வர்த்தகப் போட்டி நடைபெறுகிறது.

மீண்டு எழுமா கமாடிட்டி ?

அமெரிக்காவில் 2008-ல் ஈகிள் ஃபோர்டு ஷேல் பகுதியில் எண்ணெய் எடுக்கும் பணி துவங்கப்பட்டது. அந்தசமயத்தில் ஒருநாளைக்கு 4.7 மில்லியன் பேரல்கள் என்ற அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டது. இன்றைக்கு 200-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு, அங்கு ஷேல் ஆயில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கா உற்பத்தி செய்யும் எண்ணெய் தரத்தில் உயர்ந்து காணப்படுவதால், தனது இறக்குமதியை வெகுவாகக் குறைத்துக் கொண்டிருக் கிறது. 2008-ல் ஓபிஇசி

மீண்டு எழுமா கமாடிட்டி ?

நாடுகளிடமிருந்து 180.6 மில்லியன் பேரல்களாக இருந்த இறக்குமதி, 2014 செப்டம்பரில் 87 மில்லியன் பேரல்களாகக் குறைந்துள்ளது.

கடந்த முப்பது வருடங்களில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் உற்பத்தி ஒருநாளைக்கு 9.08 மில்லியன் பேரல்களாக அதிகரித்துள்ளது. இந்த உற்பத்தி அதிகரிப்பு, ஓபிஇசி நாடுகள் மற்றும் ரஷ்யாவின் பொருளாதாரத்தைப் பாதிப்படையும் வகையில் இருப்பதால், தற்சமயத்துக்கு இதனால் வரக்கூடிய இழப்பை தாங்கிக்கொண்டு, உற்பத்தியைக் குறைக்க முடியாது என்று அறிவித்துள்ளன. அதேசமயத்தில், சர்வதேச நிதி ஆணையத்தின் கணிப்பின்படி, ஓபிஇசி-ல் பங்குபெற்றுள்ள 12 நாடுகளில் பொருளாதாரம் வலுவாக இருக்கவேண்டும் எனில், ஐக்கிய அரபு எமிரேட், குவைத், கத்தார் ஆகியற்றில் கச்சா எண்ணெய்யின் விலை 70 டாலர்களை ஒட்டியும், வெனிசுலா, நைஜீரியாவில் 120 டாலர்களை ஒட்டியும், ஈரானில் 136 டாலர்களை ஒட்டியும் கச்சா எண்ணெய்யின் விலை இருக்க வேண்டும்.

ஒருபக்கம் உற்பத்தி அதிகரிப்பு, மறுபக்கம் ஐரோப்பா /ஜப்பான் /சீனா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவது ஆகியவற்றால் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் சரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, 2015-ல் முதல் ஆறு மாதங்களுக்கு சராசரியாக 60 டாலருக்கு அருகாமை யிலும்,  பிற்பகுதியில் 50 டாலருக்கு குறைவாகவும் வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”

அடிப்படை உலோகங்கள்!

2015-ல் அடிப்படை உலோகங்களின் விலைப் போக்கு குறித்துச்  சொல்கிறார் இந்தியா நிவேஷ்

மீண்டு எழுமா கமாடிட்டி ?

கமாடிட்டி நிறுவனத்தின் தலைவர் மனோஜ் குமார் ஜெயின். ‘‘அடிப்படை உலோகங்களின் விலை சர்வதேச சந்தைகளில் தற்போது நல்ல ஏற்றம் காணத் துவங்கியுள்ளது. தொழிற்துறை வளர்ச்சி அதிகரிக்கத் துவங்கியுள்ளதால், காப்பரின் தேவை அதிகரிக்கும். அதனால் காப்பரின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மிகப் பெரிய காப்பர் பயன்பாட்டாளரான சீனா தனது பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளதால், காப்பருக்கான விலை அடுத்த ஆறு மாதங்களுக்கு ஏற்றம் காண வாய்ப்புள்ளது.

அதேபோல, இந்தியாவில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அரசு அறிவித்துள்ளதால், காப்பரை கொண்டு இயங்கும் தொழிற்சாலைகளில் காப்பரின் தேவை அதிகரிக்கும். இதனால் இந்தியச் சந்தையிலும் காப்பரின் விலையில் ஏற்றம் இருக்கலாம். அதேபோல, அலுமினியமும் இந்தியாவின் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிப்பதால், அதன் விலையும் ஏற்றத்தில் வர்த்தகமாகும். நிக்கல் மற்றும் ஜிங்க் ஆகியவை காப்பரின் விலைப்போக்கின் விகிதத்திலேயே வர்த்தகமாகும். லெட் மட்டும் சற்று இறக்கத்தில் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.’’

2015-ல் அக்ரி கமாடிட்டிகளின் விலைப்போக்கு எப்படி இருக்கும் என்பதைச் சொல்கிறார் ஜேஆர்ஜி வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தென்மண்டல மேலாளர் முருகேஷ் குமார்.

ஏற்றத்துடன் வர்த்தகமாகும்!

“வருகிற 2015-ம் ஆண்டு அக்ரி கமாடிட்டி சந்தைக்கு நல்லதொரு காலம். இந்த ஆண்டில் நறுமணப் பொருட்களின் விலை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது. நம் நாட்டின் வேளாண் உற்பத்தியானது தேவைக்கும் குறைவாக இருக்கிறது.
அதனால் நாம் பெரும்பாலான அக்ரி பொருட்களை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறோம். சமையல் எண்ணெய்யின் தேவையும் அதிகரித்து வருகிறது.

 இதன்காரணமாக வருகிற ஆண்டில் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் விலையும் அதிகரித்து வர்த்தகமாகும்” என்றவர், பல்வேறு கமாடிட்டிகளின் விலைப் போக்கு குறித்து எடுத்துச் சொன்னார்.

மஞ்சள் (Turmeric)

மீண்டு எழுமா கமாடிட்டி ?

‘‘குறைந்த உற்பத்தி எதிர்பார்ப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களில் மஞ்சள் விலை 40% அதிகரித்துக் காணப்படுகிறது. தெலங்கானா மற்றும் மஹாராஷ்டிராவில் மழையின் அளவு குறைந்துள்ளதால், வருகிற பருவத்தில் மஞ்சள் உற்பத்தி 20% வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், இங்குள்ள விவசாயிகள் மஞ்சள் விதைப்பைத் தவிர்த்து, சோயாபீன் பயிர் விதைப்புக்கு மாறி வருகிறார்கள். இதுவும் மஞ்சள் உற்பத்தியைப் பாதிக்கும்.

கடந்த 2012-லிருந்து இன்று வரையும் ஒரு குவிண்டால் மஞ்சள் விலை ரூ.3,400-7,500 வரையிலேயே வர்த்தகமாகி வருகிறது. ஆனால், உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கும் இந்தநிலையில், மஞ்சள் விலை அதிகரித்து ஒரு குவிண்டால் விலை ரூ.10,000 - ரூ.12,000 வரை வர்த்தக மாகும். இதற்கு முன்னர் ஒரு குவிண்டால் மஞ்சள் விலை 2010-ல் ரூ.10,244-க்கு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

2015-ல் மஞ்சள் உற்பத்தியானது 45-55 லட்சம் பைகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுவே, முந்தைய ஆண்டில் 65 லட்சம் பைகளாக இருந்தது. ஆக, வருகிற ஆண்டு மஞ்சள் வர்த்தகம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சென்னா (Chana)

கடந்த 2012-ல் சென்னா ஒரு குவிண்டால் 5,000 ரூபாய் வரை வர்த்தகமானது. அதன்பிறகு இறங்கி 2013-ல்  நிலைபெற்றுக் காணப்பட்டது.கடந்த ராபி பருவத்தில் அதிகமான உற்பத்தி இருந்ததும் இதற்கான விலை இறக்கத்துக்குக் காரணமாக அமைந்தது. அந்தசமயத்தில் ஒரு குவிண்டால் சென்னாவின் விலை ஆதரவு விலையான 3,100 ரூபாயைவிடக் குறைந்து 2,500 ரூபாயாக இருந்தது.
ஆனால், கடந்த ஆறு மாதங்களாகவே சென்னாவின் விலையில் வளர்ச்சி காணப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், வருகிற ராபி பருவத்தில் சென்னாவின் பயிர் விதைப்பானது குறைந்திருப்பதே.

மீண்டு எழுமா கமாடிட்டி ?

அதேபோல, காரீஃப் பருவ பருப்பு வகைகளான பாசிப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு உற்பத்தி குறைந்திருப்பதும் சென்னாவின் விலை உயர்வுக்குச் சாதகமாக அமைந்திருக்கிறது.

அரசாங்க தகவல்படி, சென்னா விதைப்பு ஏரியா 16% குறைந்து, 7.51 மில்லியன் ஹெக்டேராக இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம்,
சென்னாவை அதிகம் விளைவிக்கும் மஹாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மழை குறைந்துள்ளதுதான்.

ஆக, உற்பத்திக் குறைவு காரணமாக வரும் ஆண்டின் மத்தியில் ஒரு குவிண்டால் சென்னா விலை ரூ.4,000 வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீரகம் (Jeera)

ஜீரகத்தின் பயிர் விதைப்பு ஏரியா குறையும் என்ற எதிர்பார்ப்பால், கடந்த மூன்று மாதங்களாகவே ஜீரகத்தின் விலை 38% வரை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் குறைவான மழை இருந்ததால், வருகிற பருவத்தில் உற்பத்தி 25-26 லட்சம் பைகளாகக் குறையும் என்று தெரிகிறது. இது, இதற்கு முந்தைய ஆண்டில் 45 லட்சம் பைகளாக இருந்தது.

உற்பத்தி குறைந்திருந்தாலும், வரும் ஆண்டில் ஜீரகத்துக்கான ஏற்றுமதி தேவையானது அதிகரிக்கும். வருகிற ஆண்டில் ஜீரகத்தின் ஏற்றுமதி 15-16 லட்சம் பைகள் என்கிற சராசரி அளவைவிட சுமார் 25 லட்சம் பைகள் வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆக, வரும் 2015-ம் ஆண்டில் ஒரு குவிண்டால் ஜீரகம் 16,000 ரூபாய் வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரத்து அதிகரித்தால் நிச்சயமாக விலை குறையும்.

ஏலக்காய் (Cardamom)

கடந்த எட்டு மாதங்களாகவே ஒரு கிலோ ஏலக்காய் விலை ரூ.800-1,130 வரை வர்த்தகமானது. ஏலக்காய் உற்பத்தி 18,000 டன் முதல் 20,000 டன் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பைசஸ் போர்டு தகவலின்படி, ஏலக்காய் ஏற்றுமதியானது ஏப்ரல்-ஜூன்,2014-ல் 645 டன்னாக (சிறிய மற்றும் பெரிய ஏலக்காய் வகைகள்) இருந்தது. வருகிற 2015-ல் தேவை அதிகரிப்பின் காரணமாக ஏலக்காய் விலை உயர்ந்து காணப்படும்.

இருப்பினும் 2010-ல் அடைந்ததுபோல அதிகபட்ச உச்ச விலையான 2,100 ரூபாயை அடைவதற்கான வாய்ப்புக் குறைவு. ஒரு கிலோ ஏலக்காய் விலை 2,100 ரூபாயை அடைந்தபிறகும் 550 ரூபாய் வரை வீழ்ச்சியைச் சந்தித்து மீண்டிருக்கிறது.

அதனால் வருகிற ஆண்டில் 550 ரூபாய்க்கும் கீழ் குறையாது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் வரை விலை அதிகரிப்பு இருக்கும்.

 2015-ம் ஆண்டின் இறுதி அரையாண்டில் விலை நிலவரமானது ஆகஸ்ட்-டிசம்பர் பருவத்தின் ஏலக்காய் உற்பத்தியைப் பொறுத்து இருக்கும். வருகிற ஆண்டில் ஒரு கிலோ ஏலக்காய் விலை 1,400-1,500 வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”