Published:Updated:

இனி எல்லாம் லாபமே!

லாபத்தைத் தடுக்கும் மாயவலை! வெற்றிகரமான முதலீட்டுக்கு...டாக்டர் எஸ்.கார்த்திகேயன், ஓவியம்: ஸ்யாம்

இனி எல்லாம் லாபமே!

லாபத்தைத் தடுக்கும் மாயவலை! வெற்றிகரமான முதலீட்டுக்கு...டாக்டர் எஸ்.கார்த்திகேயன், ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

ஒரு பிரச்னையில் நிறைய அனுமானம் செய்ய முடியாத விஷயங்கள் இருக்கும் போது, அதனால்வரும் வெற்றியும் தோல்வியும் நம் முடிவுகளின் போக்கை எப்படி பாதிக்கின்றது என்று சென்றவாரம் பார்த்தோம். அனுமானங்கள் தொடர்ந்து வெற்றி பெறும்போது ஏற்படும் சூப்பர் மனநிலையும், அனுமானங்கள் தொடர்ந்து தோல்வி அடையும்போது ஏற்படும் சொதப்பல் மனநிலையும் எதனால் என்பதையும் பார்த்தோம்.

இனி எல்லாம் லாபமே!

இதில் மற்றுமொரு விஷயமும் இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் நாம் அனுமானம் செய்யும்போது அது துல்லியமாய் நடந்தவுடன் நம் மனநிலை வலுவடைகின்றது. அது எப்படி என்னால் மட்டும் சரியான அனுமானங்களைச் செய்ய முடிகின்றது என்ற கேள்வியும், அதற்கான பதில் கிடைக்காதபோது பல மூடநம்பிக்கைகளும் நம்மைத் தொற்றிக் கொள்வது சகஜமான ஒன்றாகிவிடுகின்றது. அந்த டீலை முடிக்கின்றபோது போட்டிருந்த சட்டை, அந்த இன்டர்வியூவுக்குப் போனபோது அணிந்திருந்த பேன்ட், எதிரேவந்த ஆள், கூட வந்த ஆள், குறுக்கே வந்த பூனை, எதிராளியின் பெயர் என பல்வேறு மூடநம்பிக்கைகளுக்கு ஊற்றாக அது அமைந்துவிடுகின்றது எனவும் பார்த்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுமானங்கள் தொடர்ந்து சரியாக இருந்து லாபம் குவிகின்றபோது நம்முடைய ரிஸ்க் எடுக்கும் திறன் அதிகமாகிக்கொண்டே போகின்றது போன்ற மனநிலை நமக்கு வந்துவிடுகின்றது. உண்மையாகவே நம்முடைய ரிஸ்க் எடுக்கும் திறன் அதிகமாகிவிட்டதா என்பதை நாம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கவனிக்கத் தவறுகின்றோம். நான் போட்ட கணக்கு சரி என்பதிலிருந்து, நான் போட்டால் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என்ற நிலைமைக்கு மாறிவிடுகின் றோம்.

இங்கேதான் கொஞ்சம் இடற ஆரம்பிக்கின்றது. ராஜா கையவைச்சா அது ராங்கா போனதில்லே என்று ஜரூராய் செயல்பட ஆரம்பித்த வேளையில், நம் மனம் எப்படிச் செயல்படும் தெரியுமா? எல்லாமே என் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் என்றுதான்! நம் வீட்டிலும், நிறுவனத்திலும் அது ஓரளவுக்குச் சரியாக இருக்கலாம். ஆனால், வெளி உலகத்தில் இருக்கும் எக்கச்சக்கமான மாறுபாடுகள் நிறைந்த சூழலில் இந்தக் கணிப்புகள் எப்போதுமே உண்மை ஆவதில்லை.

உதாரணத்துக்கு, பங்குச் சந்தை முதலீடுகளை எடுத்துக்கொள்வோம். ஏற்ற இறக்கத்துக்கான காரணிகள் பலப்பல. ரஷ்யாவில் வட்டிவிகிதம் ஏற்றமாக இறங்குகின்றது, பெட்ரோலியம் விலை குறைவாக ஏறுகின்றது. பல சமயம் என்ன ஏது என்று தெரியாமலே இறங்கவும் ஏறவும் செய்கின்றது. பின்னால் இதனால் ஏறியது –  இதனால் இறங்கியது என்ற தகவல் வருகின்றது. இந்தவகை வியாபாரத்தில் நீங்கள் இறங்குகின்றீர்கள். ஒரு ஆறு மாத காலத்துக்கு நீங்கள் தொட்டது துலங்குகின்றது. என்ன செய்வீர்கள்?

கொஞ்சம் கொஞ்சமாக ரிஸ்க்கை அதிகமாக எடுக்க ஆரம்பிப்பீர்கள். ஏன் தெரியுமா? நீங்கள்தான் முடிவெடுப்பதில்  புலியாயிற்றே. ஆறே மாதங்களில் பங்குச் சந்தை நிபுணராக ஆகிவிடுவீர்கள். உண்மையில் ஆறு மாத அனுபவம் கொண்டவரானாலும் சரி, ஆறு வருட அனுபவம் கொண்டவரானாலும் சரி பங்குச் சந்தையில் விலைமாறுதலுக்கு உண்டான காரணிகளும் பங்குச் சந்தையின் போக்கும் அவருக்கு ஒருபோதும் கட்டுப்பட்டதல்ல. புதிதாக வருபவரைவிட ஆறு மாத அனுபவம் உள்ளவர் கொஞ்சம் பெட்டராய் இருக்கலாம். ஆறு மாத அனுபவத்தைக் கொண்டவரைவிட ஆறு வருட அனுபவம் உள்ள நபர் இன்னமும் கொஞ்சம் பெட்டராய் அனுமானம் செய்பவராய் இருக்கலாமே தவிர, நான் ஆறு மாதமாய்ச் சந்தையில் இருக்கிறேன். நான் கணிக்கும் வழியில் தான் சந்தை வரும், போகும் என்று ஒருவரோ, நான் ஆறு வருடமாய்ச் சந்தையில் இருக்கிறேன். நான் ஏறு என்றால் ஏறும், இறங்கு என்றால் இறங்கும் என்று இன்னொருவரோ கூற முடியாது. சந்தையின் போக்கு பலகாரணிகளை உள்ளடக்கியது. இதை யாராலும் துல்லியமாய்க் கணித்துக் கூறமுடியாது என்பதே உண்மை.

இனி எல்லாம் லாபமே!

ஆனால், நிஜத்தில் அப்படியில்லை. ஆறு மாதம் வெற்றிகரமாய் டிரேட்  செய்தவுடனேயே சந்தை நம் கையிலும் பையிலும் வந்ததைப் போன்ற மனநிலை வந்துவிடும். அலாவுதீனின் பூதம்போல் நான் உங்கள் அடிமை என்று நம்மைப் பார்த்து சந்தை சொல்வதைப் போன்ற மனநிலைக்கு நாம் சுலபத்தில் தள்ளப்பட்டுவிடுவோம். இதை ஆங்கிலத்தில் 'இல்யூஷன் ஆஃப் கன்ட்ரோல்’ என்பார்கள். அதாவது, நமக்குக் கட்டுப்படாத ஒரு விஷயத்தை நாம் நமக்குக் கட்டுப்படுவது என்று நினைத்துக்கொள்வது. ஏனென்றால், ஏற்கெனவே சிலமுறை நீங்கள் அனுமானித்ததைப்போல் விஷயங்கள் நடந்துள்ளதே. அப்படியானால் அடுத்து நடப்பதும் நீங்கள் அனுமானித்ததைப் போலத்தானே இருக்க வேண்டும் என்ற மனநிலைதான் 'இல்யூஷன் ஆஃப் கன்ட்ரோல்' என்ற மனநிலைக்கு உங்களைத் தள்ளுவதன் மூலம் இப்படி சிந்திக்க வைக்கின்றது.

வியாபாரத்தில் மிகவும் ஆபத்தான விஷயமே நமக்கு கன்ட்ரோல் இல்லாத சமயத்தில்/இல்லாத இடத்தில், நமக்கு கன்ட்ரோல் இருக்கின்றது என்ற கற்பனையை வளர்த்துக் கொள்வதாகும். இங்கே தான் நாம் தடுமாற ஆரம்பிக்கின்றோம். இந்த மனநிலைக்கு வந்தவுடனேயே நாம் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்கத் துணிந்துவிடுகின்றோம்.

வியாபாரமோ/முதலீடோ, 'இல்யூஷன் ஆஃப் கன்ட்ரோல்' மிகப் பெரிய நஷ்டப்பாடங்களை நமக்குக் கற்றுத்தந்துவிடும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தெருக்கோடியில் கடை வைத்திருக்கும் கடைக்கார ரானாலும் சரி, கோடிகளில் புரளும் தொழிலதிபரானாலும் சரி இல்யூஷன் ஆஃப் கன்ட்ரோலி னால் கொஞ்சம் பாதிக்கப்பட்டவர் களாவே இருப்பார்கள். அவர்கள் அப்படி மாறிய சூழலில் அவர் களுக்கு அருகே இருப்பவர்கள், 'நீங்க நினைக்கின்ற மாதிரி இல்லை' என்று சொல்லவும் செய்திருப்பார்கள். அப்படிச் சொன்னவர்களிடம்,' இப்படி நினைத்திருந்தால் நான் இன்னைக்குத் தொழிலதிபராகவே இருந்திருக்கமாட்டேன்' என சவால்விட்டு இருப்பார்கள். பின்னர் தானாகவே கையைச் சுட்டுக்கொண்டு தனக்கு அதில் கன்ட்ரோல் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு  அதுபோன்ற முடிவுகளை எடுக்கமாட்டார்கள்.

இனி எல்லாம் லாபமே!

இதுபோன்ற மாற்றத்தைச் செய்து கொள்ளாத நபர்கள் நஷ்டத்தில் மூழ்கிவிடுகின்றார்கள். இந்தமாதிரி கையைச் சுட்டவுடன் உணர்ந்து கொள்ளத் தவறும் மனிதர்கள் மேனுபேக்சரிங் அல்லது சேவைத் தொழிலில் இருந்தால் பரவாயில்லை. பங்குச் சந்தைக்கு வந்தால் என்ன ஆவது? அதிக லீவரேஜ் சுலபத்தில் கிடைக்கும் இடமல்லவா பங்குச் சந்தை? நான்கு முறை ஜெயித்துவிட்டு ஐந்தாவது முறை சந்தை நான் சொன்னதையெல்லாம் செய்யும் என்ற அபிப்பிராயத்தில் அதிகமாய் ரிஸ்க் எடுத்து சிக்கிக்கொள்வார்கள். நம் கையில் இல்லாத ஒரு விஷயத்தை நம் கையில் இல்லை என்று ஒப்புக்  கொள்ளும் மனப்பாங்கு இல்லாத நபர்கள் ரிஸ்க் அதிகம் உள்ள முதலீடுகளில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

பங்குச் சந்தை முதலீடுகளில் இந்த நிலைப்பாடு என்பது மிக மிக அவசியம். நம்மிடம் இருக்கும் தகவல், பணம் மற்றும் அனுமானிக்கும் திறன் என்பது சந்தையின் பின்புலத்தில் இருக்கும் பல்வேறு காரணிகளின் வேகத்துக்கும் வீரியத்துக்கும் முன்னே மிகச் சாதாரணமானது. பின்புலத்தில் இருக்கும் காரணி கள் அனைத்தையும் அனுமானிக் கும் திறன்கொண்ட தனியொரு நபர் உலகத்தில் கிடையாது என்பதை நன்றாகப் புரிந்து கொண்டே பங்கு முதலீடுகளில்  ஈடுபட வேண்டும். ஏற்கெனவே எத்தனைமுறை நம் கணிப்புகள் இம்மி பிசகாமல் வெற்றிப் பெற்று இருந்தாலும், அடுத்த முறை அதே போல் நடக்க வேண்டும் என்பதற்கான உத்தரவாதம் எதுவு மில்லை என்பதை முதலீட்டில் ஈடுபடுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஃபண்டமென்டல்கள், டெக்னிக்கல்கள் போன்ற பல விஷயங்களைக் கரைத்துக் குடித்திருந்தாலும் கன்ட்ரோல் செய்யும் திறன் நமக்கு இல்லை என்பதையும், சந்தை யாருடைய கன்ட்ரோலிலும் இல்லை என்பதையும் புரிந்துகொண்டு முதலீடு செய்யும் மனநிலையே பிரதானமாக ஒருவரிடம் இருக்க வேண்டும். முதலீட்டின் அடிப்படைத் தத்துவங்கள் அத்தனையும் அத்துப்படியாய் இருந்தாலும்,

இனி எல்லாம் லாபமே!

இல்யூஷன் ஆஃப் கன்ட்ரோல்' என்ற மாயவலையில் இருந்து வெளியே வந்தால் மட்டுமே நம் முதலீட்டில் நம்மால் லாபம் பார்க்க முடியும்.  

 (லாபம் தொடரும்)