Published:Updated:

இனி எல்லாம் லாபமே!

மூளையை மழுங்கடிக்கும் ஆட்டுமந்தைக் குணம்!டாக்டர் எஸ்.கார்த்திகேயன் ஓவியம் : ஸ்யாம்

இனி எல்லாம் லாபமே!

மூளையை மழுங்கடிக்கும் ஆட்டுமந்தைக் குணம்!டாக்டர் எஸ்.கார்த்திகேயன் ஓவியம் : ஸ்யாம்

Published:Updated:

வெற்றிகரமான முதலீட்டுக்கு...

முதலீடுகள் என்றாலே எதிர்பாராத இடர்பாடுகள் (ரிஸ்க்) என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். எதிர்பாராததை எதிர்கொள்ளத் துணிச்சல் வேண்டும். ஆதிமனிதனிடம் இருந்தே இடர்பாடுகள் என்பது தவிர்க்க முடியாததாக இருந்தது. ஆதிமனிதர்கள் சாப்பிடவும், வாழவும் பல இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆதிமனிதர்கள் தாங்கள் வசிக்கும் குகையினுள்ளேயே இருந்துகொண்டால் பாதுகாப்பு. சாப்பிடுவதற்கு உணவைத் தேடி வெளியே வந்தால் இடர்பாடு என்ற நிலையில் வாழ்ந்து வந்தார்கள்.

உணவு தேடிவந்த இடத்தில் அதிகபட்ச இடர்பாடாக வன விலங்குகளுக்கு இறையாகிவிட வும் வாய்ப்பு இருந்தது. சாப்பிடவில்லை எனில், மற்றுமொரு இடர்பாடாக உடல் நலிந்து இறந்துபோகவும் வாய்ப்பிருந்தது. எனவே, இதில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதில் அவர் களுக்குக் கட்டாயம் இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில் ஆயுதம் செய்து வேட்டையாட கற்றுக் கொண்டார்கள் மனிதர்கள். பலமுறை உணவு தேடும்போது வந்த வன விலங்கு களை வேட்டையாடி வென்ற போதிலும், சிலமுறை விலங்குகளுக்கு இரையாகியும் இருப்பார்கள் இல்லையா? அப்படி இரையான சமயத்தில் அனைவரும் பயந்து இனி சாப்பாடு தேடுவதில்லை என்று முடிவு செய்யவில்லையே! வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என குகையைவிட்டு வெளியே வரத்தானே செய்தார்கள்?

இனி எல்லாம் லாபமே!

முதலீடுகளைச் செய்வதி லும் இதுபோன்ற நிலைமை தான். பல முதலீடுகள் முழுமையாக நம் கையைக் கடித்துவிடும். சில முதலீடுகள் நமக்குப் பக்கபலமாய் அமைந்து நீண்ட பயனைத் தருவதாய் இருக்கும். கையைக் கடித்த அனுபவத் தால் முதலீடே ஆகாதப்பா என்று நினைத்து ஒதுங்குவது தவறு என்பதுதான் முதலீட்டில் மிக முக்கியமான விஷயமே. நிதானமாய், பொறுமையாய் எங்கே தவறு நடக்கின்றது என்பதைக் கூர்ந்து பார்த்து முதலீட்டு முறைகளைச் சரிசெய்து பழக வேண்டுமே தவிர, ஒருமுறை தோற்றால் இது நமக்கானதில்லை என நினைத்து ஒதுங்கிவிடக்கூடாது.

இனி எல்லாம் லாபமே!

பொதுவாக, தவறு எங்கே நிகழும் எனில், முதலீட்டு முடிவுகள் அவசர அவசரமாய் எடுக்கப்படும் தருணத்தில்தான். இன்று வாங்கா விட்டால் வாங்கவே முடியாது. இன்று சேராவிட்டால் சேரவே முடியாது. இன்று ஆரம்பிக்காவிட்டால் ஆரம்பிக்கவே முடியாது என்று அவசரம்காட்டும் / அவசரப்படுத்தும் முதலீட்டு முடிவுகள் நம் கையைக் கடித்துவிடும் வாய்ப்பு அதிகமாக இருப்பவையாகும். சரக்கு உள்ள வரையே விற்பனை, இன்றே கடைசி, உங்களுக்கு மட்டும்தான் என்ற வகை முதலீடுகள் சந்தேகத்துடன் பார்க்கப்பட வேண்டிய வகையைச் சேர்ந்தவையாகும்.
முதலீடு செய்வதில் மற்றுமொரு முக்கியமான விஷயம், ‘ஹெர்டிங்’ என்று சொல்லப்படும் ஆட்டுமந்தைக் குணம். ஆட்டுமந்தைக் குணத்தைப் பல்வேறு கோணங்களில் முதலீட்டாளர்கள் ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, ஆடுகள் ஏன் மந்தையாகச் செல்கின்றன என்பதற்குக் காரணம், பயம் என்று சொல்வார்கள். முதலீடுகளில் மனிதர்கள் கூட்டமாகச் செயல்படுவதற்குக் காரணமும் இதுதான். இதில் கூட்டமாக என்பதற்கு அர்த்தம் என்னவெனில், ஒரேமாதிரியான முடிவை எடுத்தல் என்பதேயாகும்.

ஏறும் சந்தையில் எல்லோரும் பங்குகளை வாங்கிக் குவிப்பதும், இறங்கும் சந்தையில் இது நமக்கு லாயக்குப்படாது என்று சொல்லி பங்குகளை ஒரேயடியாக விற்று வெளியேறுவதும் இந்த மந்தை போன்ற மனநிலையினால்தான். நண்பர்கள் பணம் போடுகின்றார்களே என நினைத்து முதலீடுகளைச் செய்யும்போது, நண்பர்கள் ஆய்ந்தறிந்து அந்த முதலீட்டைச் செய்கின்றனரா என்பதை நாம் ஒருபோதும் சிந்திப்பதில்லை. அலுவலகத்தில் எல்லோரும் முதலீடு செய்கின்றனர். அதனால், நானும் செய்கின்றேன் என்பது நமக்குச் செளகரியமான ஒரு காரணம்.

அலுவலகத்தில் நம்முடன் வேலை பார்க்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு வகையான ரிஸ்க் எடுக்கும் திறன்/நஷ்டம் தாங்கும் திறன் (டாலரன்ஸ்) இருக்கும். இன்னும் கொஞ்சம் புரியும்படி சொன்னால், ஒருவருடைய வசதி (பணம்/சொத்து/ஆதரவு தருகின்ற ஆள்பலம் போன்றவை)போல் இன்னொருவருக்கு இருக்காது. ஒருவருடைய தேவைகள் போல் இன்னொருவருக்கு இருக்காது. சிலருக்கு பார்க்கும் வேலை அடுத்த மாதம்/வருடம்/ அப்ரைசலுக்குப் பின்னால் இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கும். இன்னும் சிலர், இந்த நிமிடமே வேலையை விட்டுத் துரத்திவிட்டாலும் எப்படியும் பிழைத்துக்கொள்வார்கள் என்கிற நிலையில் இருப்பார்கள். வெளியே வேலைக்கு வருகின்றேன் என்று சொன்னால் இரண்டு/மூன்று மடங்கு என்று அதிகம் தந்து கொத்திக் போய்விடுவார்கள் என்கிற மாதிரியும் சிலர் இருப்பார்கள்.

இதுதான் உலக நியதி. இதில் நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அலுவலகமானாலும் சரி, நாம் வாழும் உலகிலும் சரி, இதுபோன்ற கலவையான நபர்களே வாழ்ந்து வருவார்கள். நாமும் இவர்களில் ஒருவராக வசதி வாய்ப்பில்லாமல் குறைந்த ரிஸ்க் எடுக்கும் திறன் உள்ளவரா கவோ அல்லது வசதி வாய்ப்புடன் அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் உள்ளவராகவோ இருந்து வருவோம்.

ஆனால், அலுவலகத்தில் ஒருவர் இந்த முதலீடு லாபகரமாக இருக்கிறது என்று சொல்லி முதலீடு செய்து வெற்றி பெற்று விட்டால், நாமும் அவருக்குப் பின்னால் க்யூவில் நின்று அந்த வகை முதலீட்டை செய்ய ஆரம்பித்துவிடுகிறோம். அவருடய ரிஸ்க் டாலரன்ஸ் என்ன என்பதை நாம் பார்க்கமாட்டோம். ஒருவேளை அவரே அவருடைய ரிஸ்க்குக்கு  ஒத்துவராத ஒரு முதலீட்டை செய்து அதிர்ஷ்டவசமாக லாபம் பெற்று, அதை நம்மிடம் அவர் சொல்லியிருக்கலாம். அவர் செய்த முதலீட்டில் இருந்த அல்லது இருக்கும் ரிஸ்க்கை அவர் உணராமலேயே அவர் முதலீட்டைச் செய்திருக்கலாம்.

வைரலாக விஷயங்கள் பரவும் இந்தக் காலத்தில், அவர் முதலீடு செய்ததும் லாபம் பெற்றதும் மட்டுமே வைரலாகப் பரவுமே தவிர, அவருக்கு இருக்கும் தாங்கும் சக்தி குறித்த செய்திகளும் அவர் செய்த முதலீடு அவருடைய தாங்கும் சக்திக்கு உகந்ததா, அதில் இருக்கும் ரிஸ்க்குகள் என்னென்ன என்பது குறித்த கேள்வி களும் கேட்கப்படாது. பதில்களும் வைரலாகப் பரவாது.

இனி எல்லாம் லாபமே!

அந்தவகை முதலீட்டில் இருக்கும் ரிஸ்க், முதலீடு செய்பவரின் ரிஸ்க் டாலரன்ஸ் போன்ற வற்றை எல்லாம் மறந்துபோய் அனைவரும் அந்த வகை முதலீட்டில் குதிப்பார்கள்.  ஏன் இந்த வகை மந்தைப் போக்கு? நிறையப் பேர் முதலீடு செய்திருக்கின்றார்கள். நானும் செய்கின்றேன். அவர்கள் நிச்சயம் பாதுகாப்பான பாதையில்தான் செல்வார்கள். நான் அவர்களுடன் சேர்ந்து கொண்டால், நாமும் பாதுகாப்பாக இருப்போம் என்ற எண்ணமும் இதுபோன்ற நடவடிக்கைகளில் நம்மை ஈடுபட வைக்கின்றது. இந்தப் பாதுகாப்பு எண்ணமே மேலே சொன்ன ரிஸ்க்/ரிவார்டு/ரிஸ்க் டாலரன்ஸ் போன்றவற்றை ஒரேயடியாக மறக்கச் செய்து, நம் மூளையை மழுங்கடித்து விடுகிறது. இதைப் புரிந்து கொண்டால், நாம் ஒருபோதும் மந்தைக் குணத்தை நம்மிடம் அண்டவிடமாட்டோம்.

மந்தைக் குணம் குறித்து உளவியலார்கள் சொல்லும் இன்னு மொரு சுவையான விஷயம், மந்தைக் குணம் என்பது மனிதனுக்கு மிகவும் பிடித்த பழிச்சொல்லும் செயலுக்கு வழிவகுக்கின்றது என்பதாகும். இவர்கள் சொல்லும் காரணம், மனிதர்களில் பெரும் பாலானோர்க்கு அவர்களுடைய தவறுகளுக்கு இயல்பாகவே அடுத்த வர்கள் மீது பழிபோடும் குணம் இருக்கின்றது. அவர்கள் செய்தார் கள், இவர்கள் செய்தார்கள் என்பதனால் ஒரு முதலீட்டைச் செய்துவிட்டு, அதில் சரியான லாபம் இல்லை என்றால் சுலபமாகப் பழியை அவர்கள் மீது போட்டுவிடலாம் இல்லையா?
இந்தப் பழிபோடும் வசதி இருப்பதாலேயே மந்தைக் குணம் என்பது சுலபத்தில் மனிதர்கள் நடுவே சட்டென ஒட்டிக்கொள்கின்றது. என்ன ஒரு விநோதம் பார்த்தீர்களா!

(லாபம் தொடரும்)