Published:Updated:

இனி எல்லாம் லாபமே!

வெற்றிகரமான முதலீட்டுக்கு...சக்திக்கேற்ற ரிஸ்க்கே சரியான வழி! டாக்டர் எஸ்.கார்த்திகேயன் ஓவியம்: ஸ்யாம்

இனி எல்லாம் லாபமே!

வெற்றிகரமான முதலீட்டுக்கு...சக்திக்கேற்ற ரிஸ்க்கே சரியான வழி! டாக்டர் எஸ்.கார்த்திகேயன் ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

சரியான முதலீடுகளைச் செய்வதில்தான் எத்தனை சிக்கல்கள்? சரியான தொழிலைத் தேர்ந்தெடுப்பதில்தான் எத்தனை சிக்கல்கள்? நம்முடன் இருப்பவர்கள் முதலீடு செய்கின்றார்களே என்பதற்காக நம்முடைய ரிஸ்க் டாலரன்ஸ் குறித்துப் புரிந்துகொள்ளாமல், முதலீடு செய்துவிட்டு வருத்தப்படுவது ஒருரகம் எனில், மற்றொரு ரகம் தேவை இல்லாதவற்றுக்கெல்லாம் பயந்து நடுங்கி முதலீட்டைத் தவிர்ப்பதாகும்.

பொதுவாக, மனிதர்கள் பலரிடம் இருக்கும் குணம் இது. தேவையேயில்லாத விஷயங்களுக்குப் பயப்படுவது. முதலீட்டில் ரிஸ்க் என்பது எந்த அளவுக்குச் சேதாரத்தை உண்டு பண்ணவல்லதோ, அதே அளவுக்கு அபரிமிதமான பயமும் சேதாரத்தை உண்டு பண்ண வல்லதாக இருக்கிறது.
 ஏதோ ஒரு ஃபைனான்ஸ் கம்பெனி திவாலானது என்று செய்தித்தாளில் படித்து விட்டு, பணம் முழுவதையும் வங்கியில் போட்டு வைப்பது. அது மட்டுமா? கையில் இருக்கின்ற ஐந்து லட்சத்தை, பத்து ஐம்பதாயிரமாகப் பிரித்து பத்து நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் போட்டுவைப்பது. எங்கோ ரசீது திருட்டுப் போய்விட்டது என்று கேள்விப்பட்டு, ஆண்டுக்குப் பத்தாயிரம் ரூபாய் வட்டி வருகின்ற அளவுக்கான எஃப்டி ரசீதை ஆண்டுக்கு 1,500 வாடகை கொடுத்து வங்கியில் ஒரு லாக்கரை எடுத்து அதனுள்ளே வைப்பது என பல்வேறுவிதமான மோசமான மனநிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிடுவோம்.  

இவற்றை எல்லாம் செய்து முடித்த பின்னரும் நகரில் நூதன மோசடி என்று செய்தி வந்தால், தேடிப்பிடித்துப் படித்துப் பயப்படும் நபர்களும் நம்மிடையே உண்டு.  பொதுவாகவே, நாம் நம்மை ஒருபோதும் பாதிக்க வாய்ப்பில்லாத, ஆனால் பயமுறுத்தும் செய்திகள் பலவற்றையும் பற்றிப் பெருமளவில் கவலைப்படும் குணம் கொண்டவர்களாக இருப்போம்.  ஊருக்கு வெளியே, பொங்கலுக்கு ஊருக்குப் போகும்போது பூட்டி இருந்த ஒரு வீட்டில் திருடர்கள் இரண்டு நாள் தங்கியிருந்து சமைத்து சாப்பிட்டுவிட்டு, வீட்டை காலி செய்து (திருடித்தான்) விட்டுப் போனதாகச் செய்தியைப் படித்தால், இந்த நிலைமை நமக்கு வருமோ என அச்சப்படுவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி எல்லாம் லாபமே!

ஆனால், நம் வீட்டில் இருந்து ஒரு சேரை எடுத்துச்செல்ல வேண்டுமென்றாலும் பக்கத்து வீட்டுக்காரர் (24x7 மொத்த காரிடாரையும் தனது கடைக்குச் சரக்கு குடோனாகப் புழக்கத்தில் வைத்திருப்பவர் அவர் என்றாலுமே கூட!) மனது வைத்து வழிவிட வேண்டும் என்ற அளவுக்கு இண்டு இடுக்கில் குடியிருந்து கொண்டு இந்தக் கவலையைப்படுவோம்.

ஏதாவது ஒரு மோசமான நிகழ்வைப் பற்றிக் கேள்விப்பட்டால், அது நமக்கும் நடந்துவிடுமோ என்று நினைக்கும் குணம் அனைத்து மனிதர் களிடத்திலும் இருக்கவே செய்கிறது. அந்தக் குணத்தின் அளவுதான் கூடக் குறைவாக இருக்கிறது எனலாம். குறைவாக இருந்தால் செய்தியை மறந்து செயல்படுவோம். கூடுதலாக இருந்தால் செய்தியை பூதாகாரப்படுத்தி நமக்கு நிகழ்ந்தால் என்னவாகும் என பயத்தில் நடுங்கி விடுவோம். பங்குச் சந்தை சரிவு என செய்தியைப் பார்த்தவுடன் பங்குச் சந்தையில் முதலீடே செய்யாதவர்களும் கூட ஐயய்யோ என பதறுவதுதான்.

இதில் என்ன விந்தை என்றால், பங்குச் சந்தை ஏற்றம் என்ற செய்தி அனைவரின் கருத்தினைக் கவர்வதைவிட பங்குச் சந்தை சரிவு என்பது அதிகமான நபர்களின் கருத்தைக் கவர்ந்து விடுகிறது. உதாரணத்துக்கு, சந்தையில் 10, 15 நாள் தொடர்ந்து ஏற்றம் வந்தால் மட்டுமே பலரும், ‘என்ன சந்தை ஏறுகின்றது போலிருக்கே' என்று கேட்பார்கள்.

இனி எல்லாம் லாபமே!

 ஒரேநாள் பெரிய அளவிலான இறக்கம் வந்தாலே எல்லோரும், ‘என்ன சந்தை க்ராஷாயிடுச்சாமா?' என்று குசலம் விசாரிப்பார்கள் இல்லையா? 2008-ல் கிராஷ் ஆனதை சந்தைக்குச் சம்பந்தமே இல்லாத ஆட்கள்கூட சொல்லி இன்றைக்கு முதலீடு செய்யலாமா என நினைப்பவர்களை மிரட்டிவிட முடிகின்றது. இன்றைக்கு 21  வயதாகும் இளைஞன்கூட அவன் பிறப்பதற்கு முன்னால் 1992-ல் நடந்த ஷேர் மார்க்கெட் ஊழல் (ஸ்கேம்) குறித்துத்தெரிந்துவைத்துக் கொண்டுள்ளான்.

இதெல்லாம் என்ன பெரிய விஷயமா என்ன? 1960-ல் வந்த படிக்காத மேதை சினிமாவில் அப்பாவாக நடிக்கும் ரங்காராவ் கதைப்படி ஷேர்மார்க்கெட் வீழ்ச்சியில் 20 லட்சம்  ரூபாய் நஷ்டமாகி நொடித்துப்போவார். படத்தின் கதையில் அது முக்கியத் திருப்புமுனையாக இருக்கும். ஒரு பணக்காரர் திடீர் நஷ்டமடைகின்றார் என்பதற்கு கதைப்படி சொல்லப்பட்ட ஒரு நிகழ்வு அது. அது கதை என்பதைக்கூட மறந்து, பங்குச் சந்தையா, அது ரிஸ்க்கான விஷயமாச்சே! படிக்காத மேதையில் அவர்

இனி எல்லாம் லாபமே!

பட்ட கஷ்டத்தைச் சொல்லி மாளாதே என சொல்லி பங்குச் சந்தை முதலீட்டுக்கு அபாய சங்கு ஊதும் நபர்களை நான் பார்த்திருக் கின்றேன்.

இதிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், சூப்பர் முதலீடு என்று ரிஸ்க்கை மறக்கச்செய்யக் கூட்டம் வேண்டும். அதாவது, மந்தைக் குணம் வேண்டும், ரிஸ்க்கே எடுக்காதே என்று சொல்லவும் நினைக்கவும் ஒரேநபர் போதுமானது என்பதைத்தான். சூப்பர் லாபம் வரும் என்று சொன்னாலும் எப்படி என்று கேட்டுப் பழக வேண்டும். எண்களால்/டேட்டா களால் என்னவிதமான அனுமானங்களை வைத்து சூப்பர் லாபம் வருவதற்கான வாய்ப்புள்ளது என்பதை நாம் கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும். அல்லது அப்படிச் சொல்பவரை கணக்குப் போட்டு நிரூபிக்கச் சொல்ல வேண்டும்.

அதேபோல், முதலீடு என்பதே ரிஸ்க் மிகுந்தது. எல்லாவற்றையும் ரிஸ்க் இல்லாத வகையில் முதலீடு செய்வதே சிறந்தது என்று ஒருவர் சொன்னா லும் கூட அது தவறான கருத்து. தாங்கும் சக்திக்கு ஏற்றாற்போல் ரிஸ்க் எடுப்பதே லாபத்துக்கான வழி என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு செயல்படவேண்டும்.

தொழிலோ, முதலீடோ செய்யும் காலகட்டத்துக்கேற்ப, லாப நஷ்டங்கள் மாறுபடும் குணம் கொண்டது என்பதைப் புரிந்துகொண்டு செயல் பட்டால் மட்டுமே லாபம் பார்க்க முடியும். நிலைத்து நிற்கவும் முடியும். ஒரு உதாரணத்தின் மூலம் இதை நீங்கள் சுலபத்தில் புரிந்துகொள்ள முடியும்.

1988-ம் ஆண்டில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 390 லெவலில் இருக்கும் போது முதலீடு செய்ய ஆரம்பித்து, 1992-ல் சென்செக்ஸ் 4600 லெவலில் இருக்கும்போது வெளியேறிய நபரைக் கேட்டால், பங்குச் சந்தை முதலீடு சூப்பர் என்பார். அதே 1992-ல் சென்செக்ஸ் 4600 லெவலில் இருக்கும்போது முதலீடு செய்ய ஆரம்பித்து, 1993ல் சென்செக்ஸ் 1900 லெவலுக்குச் சரிந்தபோது வெளியேறிய நபரைக் கேட்டால், 'பங்குச் சந்தையா! ரொம்ப ரிஸ்க்குங்க' என்பார். அதே 1993-ல் சென்செக்ஸ் 1900 லெவலில் இருக்கும் போது முதலீடு செய்ய ஆரம்பித்து 2000ல் சென்செக்ஸ் 6100 லெவலில் இருக்கும்போது வெளியேறிய நபர் சந்தை சூப்பர் என்பார்.

அதே 2000-த்தில் சென்செக்ஸ் 6100-ல் இருக்கும்போது முதலீடு செய்ய ஆரம்பித்து 2002 கடைசியில் சென்செக்ஸ் 2600 லெவல்களில் இருக்கும்போது வெளியேறிய நபர் ஒன்றும் உருப்படியில்லை என்பார். 2002 இறுதியில் சென்செக்ஸ் 2600 லெவலில் இருக்கும்போது ஆரம்பித்து, 2008-ல் சென்செக்ஸ் 21000 லெவலில் இருக்கும்போது வெளியேறியவரோ இதுபோல் லாபம் பார்த்ததில்லை என்பார். அதே 2008-ல் சென்செக்ஸ் 21000 லெவலில் இருக்கும்போது முதலீடு செய்ய ஆரம்பித்து 2008 இறுதியில் சென்செக்ஸ் 7700 லெவலில் இருக்கும்போது வெளியேறியவர் பங்குச் சந்தை வேஸ்ட் என்பார்.

இனி எல்லாம் லாபமே!

அதேசமயம் 2008 இறுதியில் சென்செக்ஸ் 7700 லெவலில் முதலீடு செய்ய ஆரம்பித்து, 2014-ல் சென்செக்ஸ் 28500 லெவல்களில் இருக்கும்போது வெளியேறியவரோ இதைவிடச் சிறந்த முதலீடு ஏதும் உண்டோ என்பார். இவர்கள் சொல்வதைக் கேட்கும்போது நம்முடைய மனநிலை எப்படி உள்ளதோ அந்த நிலைக்குத் தேவையான செய்தி யையே நாம் விரும்பிக்கேட்டு உள்நிறுத்திக் கொள்வோம்.

பயம் மனதில் குடிகொண்டிருந்தால் இறங்கும் சைக்கிளைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்வோம். தைரியம் குடிகொண்டிருந்தால் ஏறும் சைக்கிளைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்வோம். இவை இரண்டுமே தவறான செயல். நடப்பது என்ன? இந்தச் சூழலில் இந்த முதலீடு சரியானதுதானா?  என் தாங்கும் சக்திக்கு இந்தவகை முதலீடு இந்தக் காலகட்டத்தில் ஏற்றதுதானா என்ற கேள்விகளுக் கான விடைதான் தேடப்படவேண்டுமே தவிர, பழைய நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கக்கூடாது.

(லாபம் தொடரும்)