Published:Updated:

இனி எல்லாம் லாபமே!

பங்குச் சந்தை என்பது சூதாட்டமில்லை!வெற்றிகரமான முதலீட்டுக்கு...டாக்டர் எஸ்.கார்த்திகேயன் ஓவியம்: ஸ்யாம்

இனி எல்லாம் லாபமே!

பங்குச் சந்தை என்பது சூதாட்டமில்லை!வெற்றிகரமான முதலீட்டுக்கு...டாக்டர் எஸ்.கார்த்திகேயன் ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

சந்தையில், நீண்ட கால அடிப்படையில் சிந்தித்தால் மட்டுமே புத்திசாலித்தனமாக லாபம் பார்க்க முடியும்.

நம்மில் பெரும்பான்மையானோர் பங்குச் சந்தைக் குறித்து கொண்டிருக்கும் கருத்து மிகவும் பயமுறுத்துவதாய் இருக்கும். ரொம்பவும் ரிஸ்க் நிறைந்த, ரேஷனல் (காரண, காரியங்களாலான) முடிவுகளை எடுக்க முடியாத அல்லது செயல்படுத்த முடியாத ஓர் இடமாகவே நாம் நினைத்துக் கொள்கிறோம். அதற்கு ஏற்றாற்போல் சந்தையிலும் பல நிகழ்வுகள் நடக்கவே செய்யும்.
 
தடாலடி ஏற்ற/இறக்கங்கள், நஷ்டத்தில் இருக்கும் கம்பெனிகள் விலை ஏறுவது, லாபம் தரும் கம்பெனி கள் விலை இறங்குவது, ஊழல்கள் (ஸ்கேம்), இன்சைடர் டிரேடிங் போன்ற ஏமாற்று வேலைகள் என சந்தையில் நடக்கின்ற பல விஷயங்கள் நமக்கு விநோதமானவையாகவும், பல சமயம் புரிந்துகொள்ள முடியாததாக வும், சில சமயம் இதெல்லாம் ஏமாற்று வேலையப்பா என்று நினைக்க வைக்குமளவுக்கும்கூட சந்தையில் விலை நடப்புகள் இருக்கவே செய்யும்.

 இப்படி புரிபடாத நிலைமை இருக்கும் இடத்தில், நாம் சுலபமாகச் சில விஷயங்களைக் கற்பனை செய்து கொண்டுவிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. புரிபடாத விஷயங்கள் நிறைய இருக்கும்போது, நமது கற்பனைக் குதிரை புறப்பட்டுப் போகும் தொலைவின் எல்லைதான் நம் அனுமானங்களின் எல்லை. சந்திரனில் பாட்டி முகம் தெரிவதெல் லாம் இதனால்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி எல்லாம் லாபமே!

அதேபோன்ற நிலைதான் பங்குச் சந்தையிலும். சென்ற வாரம் ஏன் சரிந்தது என்பது தெரிவதில்லை. இந்த வாரம் ஏன் மேலே பறந்தது என்பதும் புரிவதில்லை. அப்படியே ஒவ்வொரு ஏற்ற இறக்கத்துக்கும் காரண, காரியங்கள் ஏற்ற, இறக்கங்கள் நடைபெற்று முடிந்தபின்னர் சொல்லப்பட்டாலுமே, பல விஷயங்கள் நமக்கு நூறு சதவிகிதம் பிடிபடாததாகத்தானே இருக்கிறது. நம் கையில் இருக்கும் முதலீட்டின் அளவுக்கு, நமக்கு முழுமையாகப் புரியும் அளவுக்கு நேரம் ஒதுக்கவோ அல்லது அதைப் புரிந்து கொள்வதற்கான தகவல்களைத் திரட்டவோ சாதாரணமாக முடிவதில்லை. இதனாலேயே நமக்கு சந்தையின் நடப்புகள் பெரும் புதிராகின்றன.

சரி, அப்படி நேரம் ஒதுக்கினாலும்/தகவல்களைத் திரட்டினாலுமே ஏற்ற இறக்கங்களுக்கான காரண, காரியங்கள் துல்லியமாகத் தெரிந்து விடுகிறதா என்ன? இல்லவே இல்லை. ஒரு கம்பெனியையோ அல்லது ஒட்டுமொத்த சந்தையையோ பாதிக்கும் விஷயங்கள் நடைபெறும்போது துல்லியமாக அந்தப் பாதிப்பின் அளவு கணிக்கப்பட்டு, அந்த கம்பெனியின் விலையிலோ அல்லது சந்தையின் குறியீடுகளிலோ (நிஃப்டி/சென்செக்ஸ் போன்ற இண்டெக்ஸ்கள்) ஏற்றமோ, இறக்கமோ துல்லியமாக நடந்துவிடுவதில்லை. ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

இனி எல்லாம் லாபமே!

ஒரு கம்பெனி ஷேரின் விலை சந்தையில் இன்று காலையில் 100 ரூபாய் இருக்கிறது. மதியம் அந்த கம்பெனிக்கு புதிய ஆர்டர் வந்துள்ளது. அதனால் லாபம் அதிகரிக்கும் என்கிறது செய்தி. அதிகரிக்கும் லாபத்தின் அளவை வைத்துக் கணக்கிட்டால், சந்தையில் அந்த கம்பெனியின் விலை 10 ரூபாய் உயர வேண்டும் என்று கணக்குகள் சொல்கிறது. 100-ல் ஆரம்பித்து, 110-ல் போய் விலை நின்றுவிடுமா என்ன? பலபேர் வியாபாரம் செய்யும் இடமாயிற்றே. 120, 130 ஏன் 140 வரையிலும்கூடப் போய்விடலாமே! அதெப்படி 140 வரையிலும் போகும். 110 தானே சரியான விலை என்பீர்கள்?

இங்கேதான் சைக்காலஜி வேலை செய்கிறது. ஒவ்வொரு செய்தியும் அளிக்கப்போகும் கூடுதல் லாபம் எவ்வளவு என்பது சந்தையில் இருக்கும் ஒவ்வொரு நபராலும் துல்லியமாகக் கணக்கிட முடியாது. பலருக்குப் புரியாத விஷயமாய் இருக்கும். அதில் சிலருக்கு ரிஸ்க் எடுக்கப் பிடிக்கும். என்ன பெரிய நூறு ரூபாய் என்ற வீச்சு உள்ளவராக இருப்பார்கள். சிலர், ஏற்கெனவே இதுபோன்ற ஒரு செய்தி வந்தபோது, 10 ரூபாய் விலை ஏறும் என்று நினைத்து சும்மா இருந்து கடைசியாய் 50 ரூபாய் ஏறியதைப் பார்த்தவர்களாய் இருப்பார்கள். கடைசி அனு பவம் மனதில் ஆணியடித் தாற்போல் நிற்குமே!

இப்படி பல அனுபவமும் ரிஸ்க் டாலரென்ஸும் உள்ள மனிதர்கள் கூடி விலையை முடிவு செய்யும் இடம் சந்தை. அதனாலேயே, 10 ரூபாய் விலை உயர்வு தரும் செய்தி வெளிவரும்போது, சந்தையில் 40 ரூபாய் விலை உயர்வு வருகின்றது. 110 ரூபாய் வரை செல்ல வேண்டிய பங்கின் விலை தெளிவில்லாத சூழலாலும், பல்வேறு மனநிலையில் இருக்கும் மனிதர்களின் செயல்பாடுகளாலும் 140 வரை உயர்கிறது. விலையை இறக்கக்கூடிய நெகட்டிவ் செய்தி வருவதும் இதனாலேயேதான். 100 ரூபாய்க்கு விற்கும் பங்கு, 10 ரூபாய் இறங்கும் அளவுக்கு நெகட்டிவ் செய்தி வரும்போது 40 ரூபாய் இறக்கம் வருவதும் இந்தவிதமான மனநிலையில் மனிதர்கள் செயல்படுவதனாலேயேதான்.

இனி எல்லாம் லாபமே!

இன்னும் ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். அவ்வப்போது நாம் உலகளாவிய அளவில் கூட்ட நெரிசலில் சிக்கி மனிதர்கள் உயிரிழப்பு என்று செய்தியில் படிக்கிறோம். என்னதான் கூட்டத்தைக் கையாள்வதற்கான முன்னேற்பாடுகள் செய்யப் பட்டாலும், அதிக அளவில் மக்கள் கூடும் இடத்தில் சிறு அசம்பாவிதம் நடந்தால்கூட நான் முந்தி, நீ முந்தி என்று அந்த இடத்தில் இருந்து வெளியேற மனிதர்கள் படும் அவசரமே நெரிசலினால் ஏற்படும் உயிரிழப்புக்குக் காரண மாகிறது. அசம்பாவிதத்தினால் பாதிக்கப்பட்டுவிடு வோமே என்று பயந்து தப்பிக்கும் வேகத்தில் பாதிக்கப்பட்டுவிடுகிறான் மனிதன்.

இதே மனநிலைதான் சந்தையிலும். தப்பிக்க வேண்டுமா? விற்றுவிடு தாறுமாறான விலைக்கு. அனைவரையும் முந்திக்கொண்டு வாங்கிவிட வேண்டுமா? என்ன விலையானாலும் வாங்கிப் போடு என்ற மனநிலைதான் உண்மையான மதிப்புக்குச் சற்றும் சம்பந்தமில்லாத கடுமையான விலை ஏற்றத்தையும், உண்மையான மதிப்புக்குச் சற்றும் சம்பந்தமில்லாத கடுமையான விலை இறக்கத்தையும் சந்தையில் கொண்டு வருகிறது எனலாம்.

உண்மையில் சந்தையில் பங்குகளின் விலைகள் எதைப் பொறுத்து அமைய வேண்டும். ஒரு நிறுவனத்தின் சம்பாதிக்கும் திறனைப் பொறுத்தே அந்த கம்பெனியின் பங்குகளின் விலை இருக்க வேண்டும். மேலே சொன்னதையெல்லாம் வைத்துப் பார்த்தால், அன்றாடம் நடக்கும் அதிரடி விலை மாற்றங்கள் இதற்கு இடம் கொடுக் காதே என்பீர்கள்.

இனி எல்லாம் லாபமே!

நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், சந்தையில் ஒரு கம்பெனியின் பங்கின் விலை அந்த நிறுவனத்தின் சம்பாதிக்கும் திறனைக் கொண்டே அமைகிறது. நீண்ட கால அடிப்படை யில் பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இதைப் புரிந்துகொள்வது கைவந்த கலையாக இருக்கும். அவர்கள் வைத்திருக்கும் நிறுவனத்தின் பங்குகள் திடீரென ஒரே திசையில் (ஏற்றம் அல்லது இறக்கம்) பயணிக்க ஆரம்பித்தால், உடனே அந்தப் பயணத்துக்கான பல்வேறு காரணங்கள், சந்தையில் இருக்கும் நபர்களால் சொல்லப்படும். இதுபற்றி நீண்ட கால அளவிலான முதலீட்டாளர் கவலை படமாட்டார். ஏனென்றால், நீண்ட கால அடிப்படையில் இந்தவகை விலை மாறுதல்கள் குறித்தெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று அவருக்குத் தெரியும்.

குறுகிய கால அடிப்படையில் மட்டுமே சந்தையை நோக்கும் நபர்களுக்கு இது பிடிபடவே பிடிபடாது. ஆசையையும், பயத்தையும் தோற்று விக்கும் இந்த வகை விலை மாறுதல்களை வைத்தே அவர்கள் தங்கள் வியாபார முடிவை எடுப்பார்கள். இந்தவகை வியாபார முடிவுகள் நடுநிலையானதாக இருக்காது. குழப்பமான சூழ்நிலையில் எடுக்கப் படும் ஒருதலைப்பட்சமான முதலீட்டு முடிவாகத் தான் இருக்கும். அதாவது, ஏற்ற இறக்கத்துக்கான காரணம், சரிவர அலசப்படாமலேயே எடுக்கப்படுவதாகும்.

சந்தையில் இருக்கும் பெரிய சிக்கலே அதில் பங்கேற்பவர்களின் இதுபோன்ற குறுகிய காலநோக்கும், அது முதலீட்டாளர்கள் மனதில் வெற்றிகரமாக உருவாக்கும் ஒருதலைப்பட்சமான முதலீட்டு முடிவுகளும்தான். குறுகிய கால நோக்கத்துடன் செயல்படும் சிலர் அதிர்ஷ்டவசமாக லாபம் பார்க்க, அதைப் பார்த்து பலர் அதேபோல் முயற்சி செய்து நஷ்டப்படுவார்கள்.

மேலே சொன்ன அனைத்தும் சேர்ந்து வேகமாகச் செயல்படும்போது சந்தை நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. குறுகிய கால முதலீட்டாளர்களின் தவறுகள் எல்லாம் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பாக மாறுகிறது. அதனாலேயே, குறுகிய கால முதலீட்டாளர்கள் சந்தை ஏறும்போது அதிக விலைக்கு வாங்கி, அந்தப் பங்குப் பொதியை கொஞ்சகாலத்துக்குச் சுமந்து, பின்னர் இறங்கும்போது நஷ்டத்தில் விற்று, நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு லாபத்தைத் தரும் வகையில் நடந்துகொள்கிறார்கள்.

சந்தையில், கடைசியில் வந்த தகவலைக் கொண்டு மட்டுமே செயல்படாமல், நீண்ட கால அடிப்படையில் சிந்தித்தால் மட்டுமே புத்திசாலித்தனமாக லாபம் பார்க்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டீர்கள்தானே?

(லாபம் தொடரும்)