Published:Updated:

வெற்றி தலைக்கு ஏறினால் ஆபத்து!

டாக்டர்.எஸ்.கார்திகேயன், ஓவியம்:ஸ்யாம்

வெற்றி தலைக்கு ஏறினால் ஆபத்து!

டாக்டர்.எஸ்.கார்திகேயன், ஓவியம்:ஸ்யாம்

Published:Updated:

ங்குச் சந்தை முதலீட்டைப் பொறுத்தவரை, ஒருவர் இரண்டுவிதமான சூழ்நிலைகளில் செயல்பட முயல்கிறார். ஒன்று, முதலீட்டாளராக. மற்றொன்று, டிரேடராக. இந்த இரண்டு செயல்களுமே ஒன்றுக்கொன்று எதிர்மறையான அடிப்படைத் தத்துவங்களைக் கொண்ட ஒன்றாகும்.

 நல்ல தொழில்களைக் கண்டறிவது, சரியான நேரத்தில் முதலீடு செய்வது, தொழில் சிறப்பாகச் செயல்படும் நாள் வரை காத்திருந்து விலை உயரும்போது பலனை அனுபவிப்பது என்பது முதலீட்டாளரின் கோட்பாடு. அன்றாடமோ, அந்த வாரமோ வரும்/வரவிருக்கும் விலைமாறுதல்களை ஏதாவது ஒரு சூட்சுமத்தைக் கொண்டு கணித்து, அந்தக் குறுகிய காலகட்டத்துக்கு உள்ளேயே சரியான நேரத்தில் வாங்கி, சரியான நேரத்தில் விற்று லாபம் சம்பாதிக்க முயல்வது டிரேடர்களின் கோட்பாடு.

வெற்றி தலைக்கு ஏறினால் ஆபத்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீவிரமாக ஆராய்ச்சி செய்தால், இந்த இரண்டுமே ஒன்றுக்கொன்று எதிர்மறையான விஷயமாகும். உதாரணப் புருஷராக விளங்கும் ஒரு முதலீட்டாளரை அணுகி,  நீங்கள் ஏன் தினசரி வர்த்தகத்தில் இறங்கக்கூடாது என்று கேட்டால், தினசரி வர்த்தகம் என்பது எப்படி சாத்திய மாகும்? ஒரு தொழில் வளர்ந்து செழிக்க 3 - 5  ஆண்டுகளாவது வேண்டுமே. காலையில் நிறுவப்பட்ட தொழில் மாலையில் செழித்து வளர்ந்துவிடுவதில்லை. அப்படி எதிர்பார்ப்பதும் தவறு என்று ஆணித்தரமாகக் கூறுவார்.

சந்தையில் ஒரு நிறுவனத்தின் உண்மை மதிப்பு சார்ந்த விலை என்ன என்பது கண்டறியப்படுவதற்கான போட்டிதான் ஒவ்வொரு நிமிடமும் நிலவுகிறது. ஏனென்றால், எதிர்காலத்தில் கம்பெனி எப்படிப்போகும் என்பதைக் கணித்தே இன்றைய விலை நிர்ணயமாகிறது. விலைகள் எதிர்காலம் குறித்த கணிப்பை வைத்து நிர்ணயம் செய்யப்படும்போது நல்ல செய்தி வந்தால் பரபரவென ஏறியும், கெட்ட செய்தி வந்தால் கடகடவென இறங்கியும் நடந்துகொண்டுதான் இருக்கும். நாங்கள் இந்தப் பரபரகடகடவுக்கு இடையே ஒரு லாபம் பார்க்க முயற்சிக்கிறோம். இதற்கென்றே பல்வேறு விதமான டெக்னிக்குகள் இருக்கின்றன. இதில் என்ன தப்பு என்பார்கள்.

டிரேடிங் மற்றும் முதலீடு என்பது இருவேறு வகைப்பட்ட பாதை. ஒரேசமயத்தில் இந்த இரண்டு பாதையில் பயணிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள முதலீடு செய்யும் அனைவருமே முயற்சிக்க வேண்டும். இல்லா விட்டால், லாபம் என்பது கடினமான ஒரு விஷயமாகிவிடும்.

டிரேடிங் மற்றும் முதலீடு என்ற இந்த இரண்டு எதிர்மறை அடிப்படை கொள்கையைக் கொண்ட இருவரும் உரசிக்கொள்ளும் இடம்தான் சந்தை. இந்தச் சந்தையில் வெற்றி  தோல்வியை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால்தான் மனிதனின் இயல்பு குணம், அவனை எப்படி சுலபத்தில் சந்தையில் தவறிழைக்க வைத்துவிடுகிறது என்பது புரியும்.

நாம் இயல்பாகவே கொஞ்சம் ஓவர்கான்ஃபிடன்ஸ் கொண்டவர் களாகத் திகழ்வோம். இதுவும் எங்கிருந்து வருகிறது என்றால், பொதுவாக முயன்றால் முடியாதது இல்லை என்ற கருத்தினைக்கொண்டே பல்வேறு விஷயங்களில் நாம் சிறுவயதில் இருந்தே செயல்பட்டுவருவோம். சிறுவயதில்  இந்த அடிப்படையில் முயற்சி செய்த பல விஷயங்கள் பணச் செலவு குறை வானதாகவும், நம்முடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் அதிகபட்சமாகத் தேவைப்படுவதாகவும் இருக்கும். சிறிது பணத்தையும் அதிக அளவிலான உழைப்பையும் போட்டு நாம் பலதடவை வெற்றி பெற்றிருப்போம். இது சிறிய வயதில் சாத்தியமாகவும் செய்யும்.

ஏனென்றால், சிறு வயதில் நாம் முயலும் வேலையைச் செய்வது மட்டுமே நம்முடைய பிரதான வேலையாக இருக்கும். அதனாலேயே வெற்றியும் கைகூடும். இதனாலேயே முயன்றால் முடியாதது இல்லை என்ற எண்ணம் நம்முடைய மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். ஏறக்குறைய  இது ஒரு ஓவர்கான்ஃபிடன்ஸாகவே நமக்கு இருக்கும். ஏனென்றால், பல இடங்களில் முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறோமே!

வெற்றி தலைக்கு ஏறினால் ஆபத்து!

ஆனால், முதலீட்டுச் சந்தைக்கு வரும்போது இந்தவகை ஓவர்கான்ஃபிடன்ஸே நமக்கு எதிரியாகிறது. இங்கே பணம் பெரிய அளவிலானது. முயற்சி என்பது நமக்குப் பிடிபடாத ஒன்றாகத் திகழும் பல விஷயங்களில் தேவைப்படுவதாய் இருக்கும். எதில் முயற்சி செய்வது, எதைத் தெரிந்து கொள்வது, எதைப் பழகிக்கொள்வது என்பது சுலபத்தில் பிடிபடாது. நாம் பார்க்கும் வேலை/செய்யும் தொழில் நம்முடைய நேரத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் வகையில் இருக்கும். அதனாலேயே நாம் சந்தை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தாலுமே நேரத்தை ஒதுக்கி முயற்சிசெய்ய முடியாது. இந்தச் சூழ்நிலை யில் முயற்சி என்பது கணிசமாகக் குறைய ஆரம்பிக்கும். ஓவர்கான்ஃபிடன்ஸ் நம்முள்ளே இருந்துகொண்டு முதலீடு செய்யத் தூண்டும். சரிவர விஷயங்களைத் தெரிந்துகொள்ளாமல் முதலீடு செய்ய ஆரம்பித்து நஷ்டமடைய ஆரம்பிப்போம்.

ஆரம்பத்திலேயே நஷ்டம் வந்தால், இது நமக்குச் சரிப்படாது என்று நினைத்து நல்ல வாய்ப்புகள் வரும்போதும் / கண்ணில் தெரியும் போதும்கூட அதை ஒதுக்கிச் சென்றுவிடுவோம். இது ஒருவகை நஷ்டம் என்றால், ஆரம்பத்தில் ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் நாலு காசு பார்த்து விட்டால் ஏற்கெனவே மனதில் இருக்கும் ஓவர்கான்ஃபிடன்ஸ் காட்டாற்று வெள்ளமாய்ப் புறப்பட்டுப் பொங்கி ஓடி தாறுமாறான முதலீட்டு முடிவுகளை எடுக்கவைக்கும். நஷ்டத்தையும் அடைய வைக்கும்.

இந்தவகை ஓவர்கான்ஃபிடன்ஸே தவறுகளைத் தூண்டி மதிப்பு அதிக மிக்க விலை ஏறும் வாய்ப்புள்ள பங்குகளை விற்க வைக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு உள்மதிப்பு குறைவான, இறங்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிற பங்கை வாங்கவும் வைக்கும். இதெல்லாம், நாம்தான் மார்க்கெட்டையும் கம்பெனியையும் கணிப்பதில் ஸ்பெஷலிஸ்ட் ஆயிற்றே  என்ற  ஓவர்கான்ஃபிடன்ஸ் கரைபுரண்டு ஓடுவதால் மட்டுமே. நினைவிருக் கட்டும், நீங்கள் உங்கள் வேலையில் அல்லது தொழிலில் சம்பாதிக்க ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம்  வகுப்பு வரையிலான அடிப்படை அடித்தளமும், அதற்குப் பின்னால் படித்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கான படிப்பும் வேலை பார்க்கும் நிறுவனம் கொடுக்கும் பயிற்சி யும் தேவைப்படுகிறது.

சம்பாதித்த பணத்தைச் சேமித்து முதலீடு செய்ய முற்படும்போது பெரும்பான்மையான விஷயங்கள் ஹேஸ்யங்களாகவே இருக்கிறது. மிகவும் குறுகிய காலகட்டத்தில் முதலீடுகளைச் செய்ய முயற்சிக்கிறோம். புரிந்துகொள்ளும் முயற்சியிலேயே முதலீடோ/டிரேடிங்கோ செய்து பணத்தை இழக்கிறோம். முதலீடு செய்யும் முன்னோ/டிரேடிங் செய்யும் முன்னரோ அது குறித்து முழுமையாக அறிந்துகொள்வதற்காக முயல்வது பெரும்பாலும் மிகக் குறைவே.

சந்தையில் அனுபவ அறிவல்லவா கைகொடுக்கும் என்று நீங்கள் சொல்லலாம்.  அந்த அனுபவத்தைப்  பெற நீங்கள் கொடுக்கும் விலை என்ன என்பதில்தான் வெற்றிக்கான சூட்சுமமே இருக்கிறது. விலை அதிகமாக ஆகும்போது இந்த வகை முதலீடே வேண்டாம் என்று ஒரு நல்ல வாய்ப்பை உதறிவிட்டல்லவா போய்விடுகிறோம்.

வெற்றி தலைக்கு ஏறினால் ஆபத்து!

முதலீட்டாளார் கதி இதில் இப்படி என்றால், டிரேடர்கள் கதையோ அலாதியானது. தொடர்ந்து நஷ்டம் வராமல் அவ்வப்போது லாபமும் வந்து போவதால் கடைசியாக வந்த லாபம் மனதில் நின்று அவர்களைத் தொடர்ந்து சந்தையில் இயங்க வைக்கும். இதில் எத்தனை நஷ்டங்கள் பட்டிருந்தாலும், கடைசியாக வந்த லாபம் மட்டுமே பல டிரேடர்களின் நினைவில் நிற்கும். அதனாலேயே டிரேடர்கள் உலகமே இயங்குகிறது.  

எப்போதும் விலை ஏறும் என்று நினைப்பவர் களும், எப்போது விலை இறங்கும் என்று நினைப்பவர்களும் புழங்கும் இடம் சந்தையாகும். இதில் மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், எப்போது இறங்கும், எப்போது ஏறும் என்பதை இவர்களில் ஒருவராலும் தொடர்ந்து சரியாக யூகிக்க முடியாது. யூகத்தின் வெற்றி என்பது பத்தில் ஐந்து தடவை ஒருவருக்குச் சரியாக இருக்கிறது என்றால், மற்றொருவருக்குப் பத்தில் மூன்று முறையும் வேறோருவருக்குப் பத்தில் ஒருமுறையும் யூகம் அப்படியே பலிக்கும். செய்வது யூகம் என்பதை நினைவில் கொண்ட படியே வியாபாரம் செய்பவர்கள் மட்டுமே டிரேடிங்கில் ஓரளவுக்கு வெற்றி பெறுகிறார்கள்.

ஓரிருமுறை நம் யூகங்கள் நிஜமாகிவிட்டால், அட, நாம் சொல்வதை சந்தை கேட்கிறது என்ற நினைப்பு வருவதே ஓவர்கான்ஃபிடன்ஸ் ஆகும். இதுதான் தவறுகளுக்கு அடிகோலுகிறது. முதலீட்டாளரோ, டிரேடரோ முதலீட்டுச் சந்தைக்கு பணத்துடன் வருமுன் அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதும், தெரிந்து கொண்டதை நடைமுறைப்படுத்தும்போது வெற்றி கைகூடும். இல்லாவிட்டால், நஷ்டம்தான் ஏற்படும் என்பதைப்  புரிந்துகொண்டீர்களா?

             (லாபம் தொடரும்)

அதிகரித்த வெளிநாட்டுப் பயணிகள்!

இந்தியாவுக்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 4% உயர்ந்திருக்கிறது. ஜனவரி 2015ல் 7.59 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகைதந்தனர். இதனால் 11,529 கோடி ரூபாய் வருவாயாகக் கிடைத்திருக்கிறது. இந்தியாவுக்கு வருகை புரிந்திருக்கும் பயணிகளின் விவரம்: அமெரிக்கா 16.35%, இங்கிலாந்து 11.82%, வங்காளதேசம் 9.29%, இலங்கை 2.93%, மலேசியா 2.91%,  சீனா 2.3%, ஆப்கானிஸ்தான் 1.76%.