Published:Updated:

இனி எல்லாம் லாபமே

அதிக லாபம் தரும் புதிய பாதை!

இனி எல்லாம் லாபமே

அதிக லாபம் தரும் புதிய பாதை!

Published:Updated:

ம்முடைய அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நபர்களில் பலரும், என் அனுபவம் என்ன தெரியுமா என்று சொல்வதைக் கேட்டிருக்கி்றோம். அனுபவம் என்பதைப் பல இடங்களில் நாமும் உணர்கி்றோம். சில இடங்களில் அனுபவ முதிர்வு உபயோகத்தைத் தருவதாக இருக்கிறது. சில இடங்களில் அனுபவமானது எந்தவிதமான பயனையும் தருவதில்லை. உதாரணத்துக்கு, வாகனம் ஓட்டுதல். வாகன ஓட்டுதலில் ஆரம்பக் காலத்தில் நாம் விபத்துகளைச் சந்திப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதுவும், நீண்ட நாட்கள் வாகனம் ஓட்டிப்பழகிவிட்ட பின்னால் நாளடைவில் நம்முடைய தவறினால் ஏற்படும் விபத்துக்கான வாய்ப்புக் குறைந்துகொண்டே போகிறது. இங்கே மிகவும் கவனமாக விபத்து பற்றி சொல்ல வேண்டியுள்ளது.

இனி எல்லாம் லாபமே

அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க நம் தவறினால் ஏற்படும் விபத்துகளுக்கான வாய்ப்புக் குறைகிறது. ஏனெனில், நாம் பயணிக்கும் சாலையில் ஒவ்வொரு நாளும் நிறையபேர் புதிதாய் வாகனம் ஓட்ட ஆரம்பிக்கின்றனர். அவர்களின் கவனக் குறைவாலும் அனுபவ மின்மையாலும் ஏற்படும் விபத்துகளில் பாதிப்படை வது நாமாகவே இருக்கலாம். அதனால்தான் கவனமாக இந்த உதாரணத்தைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி எல்லாம் லாபமே

நமக்கு வாகனம் ஓட்டிய அனுபவம் அதிகம் இருக் கிறது. அனுபவம் அதிகமாக இருந்தாலும் நாம் அதிவேகத்தில் செல்வதேயில்லை. சாலையின் சட்ட திட்டங்களை மிகவும் கவனத்துடன் கடைப்பிடிக் கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இதுபோன்ற சூழலில் சாலையில் வரும் மற்றொருவரின் தவறால் நடக்கும் விபத்து என்பது நமக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை. இதே நிலைதான் முதலீட்டு அனுபவத்திலும்.

முதன்முதலாக முதலீடு செய்ய ஆரம்பிக்கும் காலத்தில் பொதுவாக அனைவருமே ஆர்வத்தின் அடிப்படையிலேயே முதலீடு செய்ய ஆரம்பிக் கிறோம். கல்லூரிக்குச் செல்லும் வயசுப் பையன் கையில் பல்சர் பைக் கிடைத்தால், நேரம் கிடைத்தபோதெல்லாம் ஓட்டி ரசிப்பதைப்போல் முதலீடு என்பதை மிகவும் கேஷுவலாக எடுத்துக்கொண்டு ஒரு த்ரில்லை அனுபவிப்போம். நாளடைவில் நமக்கு ஒரு விஷயம் புலப்படும்.

நாம் விற்ற கம்பெனிகளின் ஷேரின் விலை ஏறவும், புதியதாய் வாங்கிய கம்பெனிகளின் ஷேரின் விலை மாறாமலோ/இறங்கவோ செய்யவுமாய் இருக்கும்போதுதான், ஏன் இப்படி ஆகிறது என்ற கேள்வி நம் மனதில் பிறக்கும். இது ஒரு சுய ஆய்வுநிலை.

சரி, அதே வயசுப் பையன் பிற்காலத்தில்  சுற்றுலா போவான் இல்லையா? அதேபோல்தான் முதலீட்டிலும் இரண்டாம் நிலையில் நாம் செல்கிறோம். கொஞ்சம் முதிர்ந்து எல்லா காலகட்டத்திலும் வாங்கி விற்காமல் சந்தை மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் காலகட்டங்களில் மட்டும் வாங்கி விற்று வியாபாரம் செய்துவிட்டு ஏனைய காலங்களில் முதலீட்டாளராகத் திகழ முயற்சிபோம்.

இன்னமும் வயது முதிர்ந்த நிலையில் பைக்கை எடுத்துக்கொண்டு, பஜாருக்குப் போகவேண்டும் என்றாலே, இப்போதே போகணுமா? பிற்பாடு பார்த்துக்கொள்ளலாமே என்கிற எண்ணம் முளைக்கும். வாய்ப்பை உருவாக்கி பைக்கை எடுத்துக்கொண்டு போன காலம் போய், தேவை இருக்கும்போதுகூட பைக்கை ஓட்ட சங்கடப் படும் நிலைமை ஒரு மனிதனுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் வருவதைப்போல் முதலீட்டிலும் அசையா நிலை வயதான பின்னரே வருகிறது.

தேவையான நேரத்தில் பைக்கை எடுக்கவும், தேவையில்லாதபோது அதை எடுக்காமல் இருக்கிற மாதிரி, தேவையான நேரத்தில் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்கவும், தேவையில்லாத நேரத்தில் அதனை அப்படியே விட்டுவிடவும் வேண்டும் என்பதை நாம் ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு கொள்கையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த நிலையை சுலபத்தில் நம்மால் அடைய முடிவதில்லை. அனுபவமே இதனைக் கற்றுத் தருகிறது. அந்த அனுபவத்தைப் பெறும் வழியில் நாம் ஒரு தொகையை நஷ்டமாக இழக்கவும் செய்கிறோம். இதில் ஒரே ஒரு விஷயம், நாம் சந்தை முதலீட்டில் தொடர்ந்து இருக்கிறோமா என்பதை முடிவு செய்வதாக அமைகிறது. அது அனுபவப் பாடம் படிக்கும்போது நாம் அடைகிற நஷ்டத்தின் அளவு.

அனுபவப் பாடம் படிக்கும் போது அடையும் நஷ்டத்தின் அளவு மிக அதிகமானதாக இருக்கும்பட்சத்தில், நாம் இந்தச் சந்தை முதலீடே ரிஸ்க் கானது என்று கருதி ஒரேயடி யாக ஒதுங்கிச் சென்றுவிடவும் வாய்ப்புள்ளது. அப்படி ஒதுங்கிவிடுவதனால் நாம் நீண்டநாள் அடிப்படையில் சந்தை தரும் பலன்களை அனுபவிக்க மறுத்து ஒதுங்கி சிறிய அளவிலான வளர்ச்சி தரும் முதலீடுகளிடம் தஞ்சமடைந்து விடுகிறோம்.

வெற்றிகரமான முதலீட்டு ரகசியம் என்னவென்றால், மற்றவர்களின் பட்டறிவில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதேயாகும். இதைச் சொல்வதும் எழுதுவதும் சுலபம். ஆனால், செயல்படுத்துவது மிகக் கடினம். எல்லோரும் இதை அடுத்தவர்களுடைய அனுபவத்திலிருந்து புரிந்துகொள்ள முடியும் என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டால், சாலையில் நடக்கும் விபத்துகளின் அளவு மிக மிகக் குறைவானதாக இருக்கும்.

சந்தையில் நம்மில் பெரும்பாலானவர்களின் இயல்பான குணம் த்ரில்லை அனுபவிப்பது. முதலீட்டுச் சந்தையும் பணம் என்ற த்ரில்லை தருகிறது. அதனாலேயே, வரிந்துகட்டிக்கொண்டு நாம் அதில் இறங்கி ஒருகை பார்க்கலாம் என்று இளவயதில் நினைக்கிறோம். இயல்புக்கு ஒவ்வாத டிரேடிங் செய்து பார்க்கிறோம். அனைத்துவிதமான ரிஸ்க் டாலரன்ஸ் கொண்டவர்களுக்கும் முதலீடு என்பது லாபம் தருவதாய் இருக்கும். டிரேடிங் என்பது ஒருசில வகை ரிஸ்க் டாலரென்ஸ் கொண்டவர்களுக்கே உகந்ததாய் இருக்கும் என்பதை மறந்து, நாம் வேகமாய் நம் முதலீடுகளை மாற்றியமைக்க முயன்று அதில் தோல்வியையோ (நஷ்டத்தை) அல்லது குறைந்த லாபத்தையோ அடைந்து அனுபவம் பெற்று முதலீட்டாளர்களாக மாறுகிறோம்.

நம்முடன் ஒட்டியிருக்கும் அதீத தன்நம்பிக்கையும் இதற்கு நன்றாகத் தூபம் போட்டுவிடுகிறது. நம்முடன் இருக்கும் சிலவகைக் கற்பனை குணாதிசயங்களும் இதனைத் தூண்டும்.

மேலே சொல்லியுள்ள வற்றைக் கொஞ்சம் மீண்டும் லாப/நஷ்ட நோக்கத்தை மட்டுமே காரணக் காரியமாய் வைத்துக்கொண்டு சிந்தித்துப் பாருங்கள். எது அடிக்கடி நம்மை ஷேரை வாங்கவும் விற்கவும் தூண்டியது என்றால், அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை/ஆவல். நாளடைவில் எது நம்மை முதலீட்டில் நிதானிக்கச் செய்தது? அந்த வேகமான முதலீட்டு முடிவுகளால் வந்த நஷ்டம்.

இனி எல்லாம் லாபமே

லாபம் நோக்கிய ஆசையும், நஷ்டம் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணமும் நம்முள் இயல்பாகவே குடிகொண்டுள்ளது. அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாக வாங்கி விற்கும் முதலீட்டு முடிவுகளை (ஹை  ஸ்பீடு மற்றும் ஹை வால்யூம்டிரேடிங்) எடுக்கிறோம். பெரும்பாலும் அது நஷ்டம் தருவதாய் அமைகிறது. அட, நஷ்டம் வருகிறதே. நஷ்டம் நமக்கு அலர்ஜி யாயிற்றே என்ற எண்ணம் நம்மை நிதானிக்க வைத்து லாபத்தை நோக்கி பயணிக்கும் நீண்டகால முதலீட்டாளராக மாற்றுகிறது. லாபத்துக்காக முதலீடே தவிர, நஷ்டம் தவிர்க்க முதலீடு அல்ல என்பதை ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டால், நஷ்டத்தில் இருந்து லாபம் என்ற பாதையைத் தேர்ந்தெடுக்காமல், லாபத்தில் இருந்து அதிக லாபம் என்ற பாதையை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும்!

(லாபம் தொடரும்)

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்