Published:Updated:

இனி எல்லாம் லாபமே - 16

நஷ்டம் தவிர்க்கும் முதலீட்டுக் கலை!

இனி எல்லாம் லாபமே - 16

நஷ்டம் தவிர்க்கும் முதலீட்டுக் கலை!

Published:Updated:

நீண்ட காலமாக முதலீடு செய்துவருபவர்களிடம், முதலீடு செய்யும் கலையைப் பற்றி பேசிப் பார்த்தீர்கள் என்றால், பல்வேறுவிதமான சுவையான தகவல்களைப் பெறமுடியும். அந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு இன்றைய முதலீட்டாளர்களிடம் பேசினீர்கள் என்றால், என்னதான் இன்டர்நெட், கம்ப்யூட்டர், டெக்னாலஜி, வயர்லெஸ் என்று முதலீடு செய்வதில் இருக்கும் சூழல் மாறிக்கொண்டே யிருந்தாலும், மனிதர்கள் பெருமளவில் அவர்களது இயல்பான குணாதிசயத்தில் இருந்து ஒருநாளும் மாறுவதேயில்லை என்பது தெளிவாய்த் தெரியும். பலரும், நான் இந்த முதலீட்டில் இருந்து வெகு சீக்கிரமாய் வெளியேறிவந்துவிட்டேன். அதன் பின்னால் அது பல மடங்கு விலை ஏற்றத்தை சந்தித்தது என்று கூறுவார்கள். சிலர் இந்த முதலீட்டை செய்த பின்னர் பெரிய சரிவு வந்தது. அதனால் அதைக் கையில்வைத்துக் காத்திருந்து அசல் கிடைத்தால் போதும் என்று நினைத்து விற்றுவிட்டு வெளியேறினேன். அதற்கப்புறம் பார்த்தால் நிலைமையே தலைகீழாய் மாறிவிட்டது. அந்த ஸ்டாக்தான் இன்றைக்கு டாப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பார்கள்.

இனி எல்லாம் லாபமே - 16

பலரும் வாங்கி விற்று லாபம் பார்த்த ஸ்டாக்குகளை, மீண்டும் மீண்டும் வாங்கி விற்க முயல்வர். அந்த நிறுவனம் எந்த அளவுக்கு மோசமான பெர்ஃபார்மென்ஸை காண்பித்தாலுமே விலை இறங்கும்போது அதனை வாங்கி விற்பது என்பது இயல்பாய் அவர்களுக்கு வரும் கலையாக இருக்கும். ஏனென்றால், பழைய லாபம் பார்த்த அனுபவம் அந்த வியாபாரத்தை அவர்களுக்குச் சுலப மாக்கிவிடும். அதேசமயம், வாங்கி நஷ்ட மடைந்த ஸ்டாக்குகளின் பக்கமே திரும்பமாட்டார்கள். அந்த நிறுவனம் எந்த அளவுக்கு பிரமாதமான செயல்பாட்டைக் காண்பித்த போதும் அந்தப் பக்கமே போக மாட்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏனென்றால், பழைய அனுபவம் அவர்களை எச்சரித்துக்கொண்டே இருக்கும். இதற்கு என்ன காரணம் என்று யோசித்தீர்கள் என்றால், பொதுவாக நாம் நஷ்டம் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே வளர்ந்து வருவதனால்தான். முதலீடு என்பது லாபம் மற்றும் நஷ்டம் வரக்கூடிய வாய்ப்புள்ளது என்பது அறிவுக்கு எட்டினாலும் மனதுக்குள் பதிவதில்லை. லாபம் மட்டுமே கிடைக்க வேண்டும். நஷ்டத்தின் பக்கம் தப்பித் தவறிக்கூடப் போய்விடக்கூடாது என்று நினைப்பதனாலேயே பல சமயங்களில் சரியாய்ப் போய் நஷ்டத்தில் சிக்கிக்கொள்கிறோம். இப்படிச் சிக்கிக் கொண்ட பின்னர் கூட்டிக்கழித்துக் கணக்கு பார்த்தால், என் முதலீடுகள் லாபத்தில்தான் இருக்கிறது என்று பேச ஆரம்பிப்போம். அதிலும் டிரேடிங் மற்றும் முதலீடு என்ற இரண்டையும் செய்யும் நபர்கள் இதைச் சுலபத்தில் சொல்வார்கள்.

இனி எல்லாம் லாபமே - 16

முதலீடு என்பது நீண்ட காலத்துக்கானது. அதிலும் ரிஸ்க் இருக்கவே செய்கிறது. நீண்ட காலத்துக்கான முதலீடுகளைச் செய்துவிட்டு, அது (அதில் உள்ள ரிஸ்க்கை எடுத்து அதற்குண்டான ரிவார்டுகளைத் தரும்போது பெற்றுக்கொண்டு) தரும் லாபத்தை டிரேடிங்கில் வரும் நஷ்டத்துக்கு ஈடாகக்காட்டி கூட்டிக்கழித்துப் பார்த்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்றே சொல்வார்கள்.

இதில் அவர்கள் உணரத் தவறுவது என்ன வென்றால், நீண்ட கால முதலீட்டில் போட்டது அவர்கள் சம்பாதித்த பணமேயாகும். ரிஸ்க் குணாதிசயம் அதிகம் கொண்ட டிரேடிங்குக்காக ஒதுக்கிய பணமும் அவர்கள் சம்பாதித்த பணமே யாகும். ஒருவகை ரிஸ்க் குணாதிசயம் கொண்ட முதலீட்டில் சம்பாதித்துவிட்டு அதற்கு நேர்மாறான ரிஸ்க் குணாதிசயம் கொண்ட நடவடிக்கையில் பணத்தை இழந்துவிட்டு, ஆவரேஜ் செய்து பார்ப்பது என்பது மிக மிகத் தவறான ஒரு விஷயம்.

நாம் பேசிக்கொண்டிருக்கும் உதாரணமாவது ஒரேவகையிலான அசெட் கிளாஸ். அதாவது, பங்குச் சந்தை முதலீடு. பலரும் அவர்கள் செய்திருக்கும் அனைத்து முதலீடுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு எல்லாம் கொஞ்சம் முன்னேபின்னேதான் இருக்கும் என்று சமாதானம் சொல்லிக்கொள்வதுதான் சிறந்த காமெடியாக இருக்கும். எல்லா அசெட் கிளாஸிலும் இருப்பது நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணமே என்பதைப் புரிந்துகொண்டால் மட்டுமே புத்திசாலித்தனமான முதலீடுகளைச் செய்ய முடியும்.

சராசரி லாபத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டுமே தவிர, சராசரியாக நான் நஷ்டம் பண்ணவில்லை என்று சொல்லும் முயற்சிகளில் இறங்கக்கூடாது. இந்தவகை எண்ணத்தைத் தவிர்க்க, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயம்.  முதலீடுகளில் இறங்கும்போது - குறிப்பாக, ஒரு கம்பெனியின் பங்குகளை வாங்க முயலும்போது அந்த நிறுவனத்தின் தொழில் பற்றிய முழுப் பின்னணி குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.

 என்ன தொழில், யார், என்ன, எங்கே, எப்போது என்பதையெல்லாம் தீவிரமாகத் தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அப்படி முழுமையாகத் தெரிந்துகொண்ட பின்னர் அந்தப் பங்குதனை வாங்கலாமா என்று ஆராய ஆரம்பித்தால், நாம் எடுக்கும் முடிவுகள் சரியானவையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

சாதாரண முதலீட்டாளராக இருந்தாலும் சரி, ஹைநெட்வொர்த் முதலீட்டாளராக இருந்தாலும் சரி, ஒரு பெரிய நிதியை நிர்வகிக்கும் மேனேஜராக இருந்தாலும் சரி, முதலீடு செய்யும் துறையும் தொழிலும் நன்றாகத் தெரிந்திருக்கும்போது அவரால் போடப்படும் ரிஸ்க் - ரிவார்டு கணக்குகள் மிகச் சரியாக இருக்கிறது என்கின்றன ஆய்வுகள். அதேசமயம், தெரியாத துறை மற்றும் தொழில்களில் முதலீடு செய்யும்போது போடப்படும் ரிஸ்க்-ரிவார்டு கணக்குகள் அந்த அளவுக்கு சரியாக இருப்பதில்லை என்கின்றன ஆய்வுகள்.  ஏனென் றால், முழுதாய்த் தெரியாத துறை/தொழிலில் முதலீடு செய்யும் போது அடுத்தவர்கள் சொல்வதை  நம்பியே இறங்க வேண்டியுள்ளது.

இதை ஒரு சாதாரண உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். நீங்கள் இருக்கும் ஊரில் நீங்கள் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று ரயில் ஏறி வெளியூர் செல்வதற்காகப் போக வேண்டும். என்ன செய்வீர்கள்? உங்களுக்கு ரோடுகள் எல்லாம் அத்துப்படி என்பதால், சரியான நேரக் கணக்கீட்டுடன் கிளம்புவீர்கள். நீங்கள் ரிஸ்க்கை குறைக்க நினைப்பவராக இருந்தால், எதிர்பாராமல்  நடக்கக் கூடிய ட்ராபிக் ஜாமுக்கும் சேர்த்து நேரம் ஒதுக்கி அதற்கு முன்னாலேயே வீட்டிலிருந்து கிளம்பிவிடுவீர்கள்.

இதுவே முன்பின் தெரியாத ஊர் என்று வைத்துக்கொள்வோம். அந்த ஊருக்கு வரும்போது அதிகாலையில் வந்தீர்கள். ரோடு முழுவதும் காலியாக இருந்தது. நீங்கள் தங்கும் ஹோட்டலுக்கு ஆட்டோக்காரர் அரைமணி நேரத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார். திரும்பவும் அன்று இரவு ஒன்பது மணி ரயிலைப் பிடிக்க வேண்டும். என்ன செய்வீர்கள்?

இனி எல்லாம் லாபமே - 16

ஹோட்டலில் ரிசப்ஷனில் ரயில்வே ஸ்டேஷன் செல்ல எத்தனை மணி நேரமாகும் என்று விசாரிப்பீர்கள். முக்கால் மணி நேரம் என்கிறார் என வைத்துக்கொள்வோம். எத்தனை மணிக்கு நீங்கள் கிளம்புவீர்கள்? ரிஸ்க்கை தவிர்க்க ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னால் கிளம்பிவிடுவீர்கள். ஒருவேளை ரிசப்ஷனில் இருப்பவருடைய பேச்சை நம்பி முக்கால் மணிநேரத்துக்கு முன்னால் கிளம்பினீர்கள் என்றால், ஸ்டேஷன் சென்றடையும் வரை திக்திக் என்றுதானேயிருக்கும்!

அதேதான் பங்கு முதலீட்டிலும். நன்கு தெரிந்த துறை/தொழில் (நன்கு பழகிய ஊர்) முதலீடுகள் செய்யப்படும்போது ரிஸ்க்/ரிவார்டு குறித்த ஜட்ஜ்மென்ட்டுகள் சரியாகவே இருக்கும். தெரியாத துறை/தொழிலில் முதலீடுகள் செய்யப்படும்போது அடுத்தவர்கள் சொல்வதை வைத்தே நாம் முதலீடு செய்ய வேண்டி யிருக்கும். அதனாலேயே ரிஸ்க்/ரிவார்டு கணக்குகளும் தாறுமாறாக ஓடும்.

ரயில் உதாரணத்தில் ரயிலைப் பிடிக்க முடிகிறதா, இல்லையா என்பதே இலக்கு. முதலீட்டிலோ பயம் அதிகரிக்கும்போது (புதிய ஊரில் ரயிலைப் பிடிக்கப்போகும்போது கிலோ மீட்டர் தூரத்துக்கு ட்ராபிக்ஜாமைக் கண்டால்/ ஆட்டோக்காரர் என்னது ஒன்பது மணி ரயிலா என ஏற/இறங்க லுக்விட்டால் - ஏற்படும் பயம் போன்று திடீரென விலை சரிந்தால் - நடுக்கம் வருமில்லையா!) அதனைவிட்டு வெளியேறி விடுவோம் இல்லையா? நாம்தான் நஷ்டம் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் திளைத்திருப்பவர்களாயிற்றே! இதே துறையும்/தொழிலும் தெளிவாகத் தெரிந்திருந்தால் நாம் என்ன செய்வோம்? இதெல்லாம் தற்காலிக இறக்கம் எனத் தைரியமாக இருப்போம் இல்லையா!

தெரிந்ததில் முதலீடு செய்வதும், முதலீடு செய்வதற்கு முன்னர் கட்டாயம் அதுபற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதன் அவசியம் பற்றியும் இப்போது உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்.

(லாபம் தொடரும்)

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism