Published:Updated:

என்ஆர்இ - என்ஆர்ஓ இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

என்ஆர்இ - என்ஆர்ஓ இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

என்ஆர்இ - என்ஆர்ஓ இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

என்ஆர்இ - என்ஆர்ஓ இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

Published:Updated:

?நான் குவைத்தில் கடந்த 13 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன். தற்போது என்னிடம் ஒரு லட்சம் குவைத் தினார் இருக்கிறது (தோராயமாக இரண்டு கோடி ரூபாய்). இந்தப் பணத்தை இந்தியாவில் ஒரு என்ஆர்இ (NRE) அல்லது என்ஆர்ஓ (NRO) கணக்குத் தொடங்கி அதில் வைத்துக்கொள்ள விரும்புகிறேன். இந்தக் கணக்குகளுக்கு இடையே என்னென்ன வித்தியாசம் இருக்கிறது. இந்த இரண்டு கணக்குகளின் பயன்பாடுகளையும் விரிவாக விளக்கவும்.

ஓ.ஏ.ஜ ஹபர்சாதிக், வடகரை.

ஆர்.கணேசன், உதவிப் பொதுமேலாளர்(ஓய்வு),

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பஞ்சாப் நேஷனல் பேங்க்.

‘‘என்ஆர்இ (NRE) கணக்கு: 1. இதில் செலுத்தும் பணத்துக்கு வருமான வரி கிடையாது. இதில் வட்டி சற்று குறைவாக இருக்கும்; கிடைக்கும் வட்டிக்கு வருமான வரிவிலக்கு பெற முடியும். 2. இந்தக் கணக்கில் உள்ள பணத்தை (முதலீடு மற்றும் வட்டி வருமானம்) முழுமையாக வெளிநாட்டுக்குத் திருப்பி எடுத்துச் செல்லலாம். 3. இந்தியாவிலிருந்து வரும் எந்த வருமானத்தையும் இந்தக் கணக்கில் வரவு வைக்க இயலாது.

என்ஆர்இ - என்ஆர்ஓ இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

என்ஆர்ஓ (NRO) கணக்கு: 1. இதில் செலுத்தும் பணத்துக்கு வருமான வரி உண்டு. இந்தக் கணக்குக்கு வங்கிகளால் வழங்கப்படும் வட்டி அதிகம், வரும் வட்டிக்கு வரி விதிப்பு உண்டு. 2. இந்தக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது. குறிப்பிட்ட அளவு மட்டும்தான் வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும். 3. இந்தியாவிலிருந்து வரும் வருமானத்தை இந்தக் கணக்கில் வரவு வைக்கலாம்.”

?வங்கி எஃப்டியில் என் தாய், தந்தை பெயரில் தலா ரூ.30 லட்சம் பணத்தை முதலீடு செய்ய விரும்புகிறேன். என் தாயின் வயது 50, என் தந்தையின் வயது 55. என் தாய்க்கு வேறு எந்த வருமானமும் கிடையாது. என் தந்தையின் மாத சம்பளம் ரூ. 25,000.  இதற்கு வரிப் பிடித்தம் செய்வார்களா?

எம்.அந்தோனிராஜ், கோவை.

எஸ்.சதீஷ்குமார், ஆடிட்டர்.

‘‘பொதுவாக, வட்டியாகக் கிடைக்கும் தொகை 10,000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் டிடிஎஸ் என்று சொல்லப்படும் மூல வரியை வங்கிகள் பிடிக்கும். இதைத் தவிர்க்க உங்கள் பெற்றோரின் பான் கார்டு எண்ணை வங்கியிடம் தர வேண்டும். இதனால் உங்கள் பெற்றோரின் வருமானம் தாய் மற்றும் தந்தைக்குத் தனித்தனியாக வருடத்துக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைத்தால், அது மட்டும்தான் வருமான வரிக்குக் கணக்கிடப்படும். பான் கார்டு இல்லையென்றால் 15G அல்லது 15H படிவத்தைப் பூர்த்திசெய்து தர வேண்டும். அப்போதுதான் டிடிஎஸ் பிடித்தத்திலிருந்து வெளியேறலாம்.’’

?நான் கடந்த எட்டு ஆண்டுகளாக பங்குச் சந்தையில் முதலீடு செய்துவந்தேன். தற்போது நிரந்தரமாக அமெரிக்காவில் என் மகனோடு குடிபெயற உள்ளேன். இப்போது நான் என் டீமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளை என்ன செய்ய வேண்டும்?

எஸ்.முரளிதரன், பீளமேடு.

ஏ.ஆர்.வாசுதேவன், மேலாளர், சிடிஎஸ்எல்.

‘‘நீங்கள் உங்கள் டீமேட் கணக்கை குளோஸ் செய்துவிடலாம். உங்கள் டீமேட் கணக்கை குளோஸ் செய்ய அக்கவுன்ட் குளோஸர் படிவத்தை நிரப்பிக் கொடுத்தால் போதுமானது. உங்கள் டீமேட் கணக்கில் ஏதாவது பங்குகள் இருந்தால், அதைப் பங்குச் சந்தையில் விற்றுவிட்டு பணத்தை வங்கியில் பெறலாம். அல்லது உங்கள் டீமேட் கணக்கில் உள்ள பங்குகளின் சான்றிதழ்களை பிசிக்கல் ஃபார்முக்கு மாற்றித்தருமாறு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தால், சான்றிதழ்கள் பிசிக்கல் ஃபார்மில் கிடைத்துவிடும். டீமேட் கணக்கில் உங்கள் பங்குகள் அனைத்தும் விற்கப்பட்டபின் அல்லது பிசிக்கல் ஃபார்முக்கு மாற்றப்பட்ட பின்தான் டீமேட் கணக்கு குளோஸ் செய்யப்படும்.’’

என்ஆர்இ - என்ஆர்ஓ இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

?என் பெண் குழந்தைக்கு தற்போது மூன்று வயது. அவளின் மேற்படிப்புக்காக கடந்த மூன்று வருடங்களாக ஃப்ராங்க்ளின் இந்தியா ப்ளூசிப் ஃபண்ட், எஸ்பிஐ எமெர்ஜிங் பிசினஸ் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி சில்ட்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்ட் ஆகியவற்றில் எஸ்ஐபி முறையில் மாதம் ரூ.2,000 வீதம் முதலீடு செய்து வருகிறேன். மேலும், டைவர்ஸிஃபைடு ஈக்விட்டி ஃபண்டில் ஃப்ராங்க்ளின் குரோத் கம்பெனீஸ் ஃபண்டில் மாதம் 2,000 ரூபாய் என 10 வருடங்களுக்கு முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன். இதே போர்ட்ஃபோபோலியோவைத் தொடரலாமா மாற்றம் எதுவும் தேவைப்படுமா?

கே.பி.செந்தில்குமார், தாராபுரம்.

யூ.என்.சுபாஷ், நிதி ஆலோசகர்.

‘‘நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஃபண்டுகள் நன்றாகச் செயல்படு கின்றன. இருப்பினும் ஃப்ராங்க்ளின் இந்தியா குரோத் கம்பெனீஸ் ஃபண்டுக்குப் பதிலாக எல் அண்ட் டி ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாம். உங்கள் குழந்தைக்கு மூன்று வயதுதான் ஆகிறது. எனவே, 10 வருடம் என்று நிர்ணயித்திருக்கும் முதலீட்டுக் காலத்தை 15 வருடமாகத் தொடருங்கள். அப்போது உங்கள் குழந்தையின் மேற்படிப்புக்குச் சரியான நேரத்தில் பயன்படுவதாக அமையும். அதேபோல், உங்கள் மாத சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க முதலீடு செய்யும் தொகையையும் கணிசமான அளவுக்கு அதிகப்படுத்தினால் அதிக வருமானம் ஈட்டலாம்.’’

?என் தந்தையின் சித்தப்பா (என் தாத்தாவின் தம்பி) தன் பெயரில் உள்ள வீட்டை என் பெயரில் உயில் எழுதி இருக்கிறார். ஆனால், அந்த வீட்டை என் பெயருக்குப் பதிவு செய்யவில்லை. இப்போது அந்த வீட்டை நான் எப்படி என் பெயரில் பதிவு செய்துகொள்வது? இதற்கான நடைமுறைகளைக் கூறவும். என்னிடம் அவர்கள் எழுதிய உயில் மட்டும் இருக்கிறது. அவர்களுக்கு எந்த வாரிசும் இல்லை.

கண்ணன், கோவை.

டி.ஜீவா, வழக்குரைஞர்.

‘‘நீங்கள் உயர் நீதிமன்றத்தில் இந்த உயிலின் உண்மைத் தன்மையைச் சொல்லும் புரொபேட் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், நீங்கள் குறிப்பிடும் உயில்தான் அந்த நபரால் கடைசியாக எழுதப்பட்ட உயில் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

நீதிமன்ற உத்தரவின்படி, உயிலின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டபின் அந்தச் சொத்து உங்களுக்குக் கிடைக்கும். அதன்பின் சொத்தை உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் உயில் மற்றும் உங்கள் சின்ன தாத்தாவின் இறப்புச் சான்றிதழுடன் ஒரு வழக்குரைஞரை அணுகுவது நல்லது.’’

என்ஆர்இ - என்ஆர்ஓ இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

?நான் கும்பகோணத்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை விலைக்கு வாங்கி, கடந்த ஐந்து வருடங் களாக வசித்து வருகிறேன். இப்போது எங்கள் பிளாக்கில் இருக்கும் மொட்டை மாடியில்  (டெரஸ்) தென்னங்கீத்துக்களை வேய விரும்புகிறேன். இதற்கு யாரிட மெல்லாம் அனுமதி வாங்க வேண்டும். மொட்டைமாடி யாருக்குச் சொந்தம்?

கே.சதீஷ், கும்பகோணம்.

சுரேஷ் பாபு, வழக்குரைஞர்.

‘‘நீங்கள் இரண்டாவது தளத்தை வாங்கி யிருந்தாலும், டெரஸ் (மொட்டைமாடி) அந்த பிளாக்கில் குடியிருக்கும் அனைத்து வீட்டு உரிமையாளர்களுக்கும் பொதுவானது. எனவே, டெரஸில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், அனைத்து வீட்டு உரிமையாளர்களின் சம்மதம் தேவை.

உங்கள் அபார்ட்மென்ட்டில் சங்கம் இருந்தால், அந்தச் சங்கத்தின் மூலம் அனைத்து உரிமையாளர்களின் அனுமதியோடு, டெரஸில் மாற்றம் செய்யத் தீர்மானம் செய்து சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றி டெரஸை மாற்றம் செய்யலாம்.
நீங்கள் டெரஸில் கூரை வேய விரும்புவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். கூரை எளிதில் தீ பிடிக்கக்கூடியது. எனவே, தீயணைப்புத் துறையிடம் கூரை வேய அனுமதி வாங்க வேண்டும்.’’


கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism