Published:Updated:

இனி எல்லாம் லாபமே - 17

நம் முதலீட்டுக்கு நாம்தான் எஜமான்!

இனி எல்லாம் லாபமே - 17

நம் முதலீட்டுக்கு நாம்தான் எஜமான்!

Published:Updated:

முதலீடு என்று வந்தவுடனேயே நம் மனது நினைப்பது சூப்பர் லாபத்தை மட்டுமே. அதைக் கையில் பெற முடியாமல் போனால், நமக்குக் கிடைப்பது சூப்பர் நஷ்டம்தான்!

முதலீட்டுச் சந்தையில் சாதாரணமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் (ஏற்றம் காணும் சந்தையோ/இறக்கம் காணும் சந்தையோ) நல்ல, ஓரளவு கணிசமான லாபத்தைத் தரக்கூடிய வாய்ப்புகள் தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றை நாம் பெரும்பாலும் கண்டுகொள்வதேயில்லை. ஏன் தெரியுமா? நாம்தான் இந்த சூப்பர் லாப முதலீட்டை கண்டுபிடிப்பதில்தான் குறியாய் இருக்கிறோமே! இதனாலேயேதான் ஒவ்வொரு முறை சந்தை மேலே போகும்போதும் அப்போதைய ஏற்றத்துக்கு காரணமான துறையின் பங்குகள் அனைத்தும் முதலீட்டாளர்களால் வாங்கிக் குவிக்கப்படுகின்றன.

இனி எல்லாம் லாபமே - 17

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெக்னாலஜி காலம், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் காலம், வங்கிகளுக்கான காலம், பார்மா நிறுவனங்களுக்கான காலம் என காலம்தான் பல்வேறு நிறங்களில் சந்தையில் செயல்படுகிறதே தவிர, அதில் கிடைக்கும் பலன்கள் மாற்றங்கள் அதில் பங்குபெறும் அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஏனென்றால், இந்த சூப்பர் லாபம் பார்க்க நினைக்கும் மனநிலைதான். இந்தத் துறை ஏறுகிறதா, அதில் எதையாவது ஒன்றை வாங்கிப்போட்டால் ஏறும் என்று கிளம்புகிறவர்களில் ஆரம்பித்து, ஃபண்டமென்டல்களை ஆராய்ந்து அறிந்து அதே துறையில் பங்குகளைத் தேர்ந்தெடுப்பவர் வரையிலும் பெரும்பாலும் இதே நிலையென்றே சொல்லுமளவிற்கே நிலைமை இருக்கும். இதனாலேயே சில கம்பெனிகள்கூட அவ்வப்போது தங்கள் நடவடிக்கைகளையும், பெயர்களையும் அந்தச் சூழலில் பாப்புலாராய் இருக்கும் துறைகளில் தங்களின் பங்களிப்பும் இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் மாற்றிக்கொள்ளக்கூட முயற்சிக்கின்றன எனலாம். அந்தத் துறையில் நிலைமை படுமோசமாக ஆகிவிட்டது என்றால் மீண்டும் பழைய நிலைமைக்கே வந்துவிடவும் செய்கின்றன இந்த வகை நிறுவனங்கள்.

இனி எல்லாம் லாபமே - 17

இவை அனைத்துக்கும் காரணம் நிறுவனங்களை நடந்துபவர்கள் எப்போதுமே சூப்பர் தொழிலிலும் கால் பதித்து அதிக லாபம் பெற நினைப்பதும், நிறுவனத்தில் முதலீடு செய்பவர்கள் எப்போதுமே சூப்பர் தொழிலில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைப்பதுமேயன்றி ஏதுமில்லை. இதையெல்லாம் தாண்டி முதலீடுகளில் சராசரியாக அதிக அளவிலான வளர்ச்சியைக் கொண்ட (வங்கி வட்டி விகிதத்தைவிட அதிக லாபம் தரும்வகையில்) நிறுவனங்கள் தொடர்ந்து சந்தையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அவற்றைப் பெரும்பாலானோர் புறக்கணித்தும் சிலர் கருத்தாகப் பார்த்து வாங்கிச் சேர்த்து லாபம் பார்த்துக்கொண்டும் இருக்கவே செய்கின்றனர். இதை நீங்கள் புரிந்துகொண்டு செயல்பட்டால் முதலீட்டில் நல்லதொரு சராசரி வெற்றியைப் பெறமுடியும் என்று ஒப்புக்கொள்வீர்கள் இல்லையா?

அடுத்தப்படியாக, முதலீட்டைப் பற்றித் தெரிந்துகொள்வதும் அதன் கணக்கீடுகளைச் செய்வதும் பற்றிப் பார்ப்போம். புதியதாக முதலீட்டுச் சந்தைக்கு வருபவர்களுக்கு ஒரு மிகப் பெரிய மனக்குறை இருக்கும். நீண்ட அனுபவம் இருப்பவர்களுக்கு நிறைய விஷயம் தெரிகிறது. இதை இதைப் பார்த்தால் போதுமானது என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். அதனால் அனுபவமிக்கவர்கள் அதிக லாபம் அடைவது என்பது சுலபம். அனுபவமில்லாத புதியவர்கள் சந்தையில் நஷ்டம் பண்ணாமல் இருப்பதே மிக மிக அதிர்ஷ்டத்தினால் மட்டுமே இருக்கும் என்ற எண்ணம்தான் அது. இந்த எண்ணத்தில் ஓரளவுக்குத்தான் உண்மை இருக்கிறது எனலாம். நீண்ட அனுபவம் கொண்ட ஒருவருக்கு இன்னென்ன விஷயங்களைப் பார்க்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும் என்று நினைப்பது சரி. ஆனால், தொடர்ந்து அந்த விஷயங்களைப் பார்த்துப் பழகியதாலேயே நமக்குத் தெரிந்ததுதானே என்ற அபரிமிதமான நம்பிக்கை (ஓவர் கான்ஃபிடன்ஸ்) அவர்களுக்கு வந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது எனலாம்.

ஆனால், புதிதாகப் பழகுபவர்களோ இதில் எதையாவது விட்டுவிடுவோமோ, அதில் எதையாவது விட்டுவிடுவோமோ என்ற பயத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகப் பார்ப்பார்கள். அதனாலேயே நல்லது, கெட்டது என்பது அவர்களுக்கு அனுபவஸ்தர்களைவிடச் சுலபத்தில் பிடிபட்டுவிடும். எனவே, புதியவர்கள் சந்தையில் ஃபண்டமென்டல்களை அலசும்போது பயம் கொள்ளத் தேவையில்லை. எப்படி அலசுவது, எதை அலசுவது என்பதனை கற்றுக்கொண்டாலே போதுமானது. ஒரு செக் லிஸ்டை வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்தாலே தெளிவாகப் புரிந்துவிடும்.

அனுபவமிக்கவர்களைவிட அனுபவமில்லாதவர்கள்தான் சுலபத்தில் ஃபண்டமென்டல்கள் மூலம் நல்லது, கெட்டதைச் சுலபத்தில் கண்டுபிடிக் கிறார்கள் என்கின்றன ஆய்வுகள். எனவே, நான் புதிது என்ற எண்ணத்தினால் வரும் பயத்தைப் புதியதாக முதலீட்டுச் சந்தைக்கு வரும் அனைவரும் விட்டொழித்துவிடலாம். ஃபண்டமென்டல்களை அடுத்து முதலீட்டுச் சந்தைக்கு வருபவர்களுக்குப் பெரியதொரு சவாலாய் இருப்பது, அன்றாட நிகழ்வுகள் மற்றும் அது குறித்த செய்திகள். ஒரு நிறுவனம் குறித்த நிகழ்வு ஒன்று நடக்கிறது. அது செய்தியாக மாறி பல்வேறு தரப்பட்ட நிபுணர்களிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு முதலீட்டாளரை வந்தடைகிறது. முதலீட்டாளர் கள் அந்தச் செய்தியையும், செய்தியினால் எந்தவிதமான பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் பாதிப்பு இருக்கும் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பவையையும், அந்தச் செய்தி குறித்த பல நிபுணர்களின் கருத்தையும் கேட்கிறார்கள்.

இங்கேதான் சிக்கலே உருவாகிறது. இங்கேதான் மனம் கொஞ்சம் சிக்கலான வேலைகளைச் செய்கிறது. சாதாரணமாக நாம் என்ன செய்யவேண்டும்? உலகச் செய்தியோ, உள்ளூர் செய்தியோ, நிறுவனம் குறித்த செய்தியோ எதுவானாலும் ஒரு செய்தி வருகிறது என்றால், அந்தச் செய்தியால் என்ன விதமான பாதிப்பு அந்த நிறுவனத்துக்கு எவ்வளவு இருக்கும் என்று நாம்தானே கணக்கீடு செய்ய முயலவேண்டும். முதலீட்டைச் செய்யும்போது நாம்தானே அந்தக் கணக்கீட்டை போட்டோம். செய்தி வரும்போது மட்டும் செய்தியில் உள்ள பாதிப்புக் கணக்கையோ அல்லது செய்தியில் குறிப்பிட்டுள்ள நிபுணரின் கருத்தையோ நாம் அப்படியே எடுத்துக்கொள்ள ஆரம்பிப்போம்.

இனி எல்லாம் லாபமே - 17

கருத்துக்கள் பொதுவானது. நம்முடைய ரிஸ்க் டாலரென்ஸ், நம்முடைய முதலீட்டுக் காலம், நாம் செய்திருக்கும் முதலீட்டின் அளவு போன்றவற்றை வைத்துக்கொண்டு நாம்தான் செய்தியின் வீரியத்தையும் அதனால் நாம் செய்திருக்கும் முதலீட்டுக்கு வரும் பாதிப்பையும் கணக்கிடவேண்டுமே தவிர, செய்தி சொன்ன மதிப்பீட்டையோ, நிபுணர்கள் சொன்ன மதிப்பீட்டையோ நம்பக்கூடாது இல்லையா?

ஆனால், நிஜத்தில் நாம் என்ன செய்வோம் என்றால் உடனடியாகச் செய்தியில் சொன்ன/நிபுணர் சொன்ன பாதிப்பு வந்துவிடும் என்று நினைத்து நம்முடைய முதலீட்டை விட்டு வெளியேறவோ அல்லது முதலீட்டை அதிகரிக்கவோ செய்துவிடுவோம். இதுவும் மிக, மிகத் தவறான போக்கேயாகும். நம்முடைய திறமையை நம்பித்தானே நாம் அந்த முதலீட்டில் இறங்கினோம். அதேபோல் தற்போது வந்த நிகழ்வையும்/செய்தியையும் நம்முடைய அறிவை பயன்படுத்தி ஆராய்ந்து தெரிந்துகொண்ட பின்னரே முதலீட்டை அதிகரிப்பது அல்லது முதலீட்டை விட்டு வெளியேறுவது என்ற இரண்டு முடிவையும் எடுக்கவேண்டும்.

ஏற்கெனவே நாம் ஒரு செய்தியில் நமக்குப் பிடித்த அல்லது நாம் எதிர்பார்க்கக்கூடிய விஷயத்தை மட்டுமே கெட்டியாகப் பிடித்துக்கொள்வோம் என்று பார்த்தோம் இல்லையா? அதே நிலைதான் இதிலும் நம்மைப் பாதிக்கிறது. ஏற்கெனவே முதலீடு செய்திருக்கிறோம். இறங்கினால் நஷ்டம் வரும் என்று மனது பயந்துகொண்டே இருக்கிறது. அந்தச் சூழ்நிலையில் செய்தி வருகிறது. செய்தி நெகட்டிவாய் இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். நம்முடைய மனம் எதை எடுத்துக்கொள்ளும்?

இறங்கிவிடுமோ என்று பயப்படும் நாம் இறங்கும் என்று செய்தியின் பாதிப்பாகச் சொல்லுவதை மட்டுமே எடுத்துகொள்வோம். இதைத் தவிர்க்கவே, செய்தியினால் வரும் பாதிப்பை நாமே ஒருமுறை நம்மால் இயன்றவரை ஃபண்டமென்டலாகச் சரிபார்த்துக்கொண்டு, பின்னர் முதலீடு குறித்த காரியத்தில் இறங்கவேண்டும். இதுபோன்ற மனநிலை சந்தையில் அதிகம் இருப்பதாலேயே ஃபண்டமென்டலாக நல்ல நிலையில் உள்ள ஒரு நிறுவனம் பற்றிய நெகட்டிவ் செய்திகள் வந்த நிமிடத்திலேயே தடாலடியாக இறங்குவதும் இரண்டொரு நாளில் அது மீண்டும் ஏற்றம் காண்பது என்ற நிகழ்வும் நடக்கிறது எனலாம்.

ஏனென்றால், சந்தையில் இருப்பவர்களும், இயங்குபவர்களும், இயக்குபவர்களும் மனிதர்கள்தானே! அனைவரின் மனமும் ஒரே மாதிரியாகத்தானே செயல்படும்!

(லாபம் தொடரும்)

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்