Published:Updated:

மனம் போடும் பணக் கணக்கு!

இனி எல்லாம் லாபமே - 19

மனம் போடும் பணக் கணக்கு!

இனி எல்லாம் லாபமே - 19

Published:Updated:

னிதர்கள் இயல்பாகவே      பட்ஜெட் போட்டு இந்தப் பணம் இதற்கு, இந்தப் பணம் அதற்கு என்று பிரித்துக்கையாள்வதில் திறம்படச் செயலாற்றுபவர்களாக இருக்கின்றனர்!

முதலீட்டில் நம் மனத்தின் ஆளுமை குறித்துப் பல விஷயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது நம் மனது எப்படி முதலீடுகளையும், வரவுகளையும்,

மனம் போடும் பணக் கணக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செலவுகளையும், பணத்தையும் வகைப்படுத்துகிறது என்று பார்ப்போம். அதற்கு முன்னால் பணம், செலவு, கடன் மற்றும் மனம் குறித்த விஷயங்களில் சில ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளைப் பார்ப்போம்.

உங்கள் மகன் ஆறாம் வகுப்புப் படிக்கிறான். உங்கள் மகனின் பட்டப்படிப்புக்காக ஒரு தொகையை நீங்கள் சேமித்து வருகிறீர்கள். தற்சமயம் அது 7 லட்சம் ரூபாயாக இருக்கிறது. இதற்கு வங்கி டெபாசிட்டில்  வட்டியாக 8% கிடைக்கிறது. இடையில் நீங்கள் பெரிய கம்பெனியில் பதவி உயர்வுடன் வேலை மாறுகிறீர்கள். தற்போதைய சம்பளத்தைவிட 25% புதிய நிறுவனம் உங்கள் சம்பளத்தை உயர்த்தித் தருகிறது. பெரிய பதவியாயிற்றே! காரில் ஆபீஸ் போனால் நன்றாக இருக்குமே என நினைக்கிறீர்கள். 7 லட்சம் ரூபாய் மதிப்புடைய  காரை வாங்க முடிவு செய்கிறீர்கள். வங்கியில் கடன் கேட்டால், அவர்கள் 10.75 சதவிகிதத்துக்கு  நான்கு வருட காலத்தில் திருப்பிக் கட்டும் கால அளவுக்குக் கடன் தரத் தயாராய் இருக்கிறார்கள்.

வங்கியில் கடன் வாங்கி கார் வாங்குவீர்களா எனில், ஆம் என்பதுதானே உங்கள் பதில். இதையேதான் பெரும்பாலானோர் சொல்கிறார்கள் என்கிறார்கள்  ஆராய்ச்சியாளர்கள். காருடைய உபயோகம் 15 ஆண்டுகள் வரையில் இருக்கும். அதனால் நான்கு ஆண்டுகளுக்கு லோன் போட்டு கார் வாங்குவதில் என்ன தவறு என்பீர்கள். இதில் தவறேதுமில்லை. உங்கள் கையில் 7 லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது. அதற்கு வட்டியாக 8% மட்டுமே கிடைக்கிறது. அந்தப் பணம் என் மகனின் மேற்படிப்புக்கு என்று நீங்கள் உங்கள் மனதில் ஒரு கணக்கைப் போட்டு வைத்து விட்டீர்கள். அதில் கைவைக்க மனம் வருவதில்லை.

ஆறாம் வகுப்பு படிக்கும் பையன் கல்லூரிக்கு வர இன்னும் ஆறாண்டு காலம் இருக்கிறது. காருக்கு கடன் வாங்கும் காலமோ நான்கு ஆண்டுகள்தான். கடனை அடைக்கத் தேவையான அதிக வருமானத்துக்கும் வழி இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் கடனை நோக்கி போகும் நீங்கள் ஏன் மகனின் படிப்புக்காகப் போட்டுவைத்திருக்கும் வைப்புநிதியை குளோஸ் செய்து கார் வாங்கக் கூடாது? கிடைக்கும் வட்டி 8%தானே! கார் கடனுக்குச் செலுத்தப்போகும் வட்டி 10.75% ஆயிற்றே. தெரிந்தே 2.75% நஷ்டம் அடைகிறீர்களே என்று கேட்டால், டெபாசிட் வேறு; கடன் வேறு என்கிற மாதிரி பேசுவீர்கள்.

ஆனால், பிற்பாடு ஏதாவது ஒரு எமர்ஜென்ஸி என்று வந்து கார் கடனை அடைக்க முடியாது போனால் அந்த டெபாசிட்டில்தான் நீங்களோ/ பேங்கோ கையை வைப்பீர்கள் என்பது நமக்குத் தெரிந்தபோதிலும் நம்முடைய மனம் அந்தப் பணத்தை அந்த விஷயத்துக்கு என்று ஒதுக்கியாகி விட்டது. அதில் கையை வைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் வகையிலான சிந்தனையையே செய்ய முடியும்.

மனம் போடும் பணக் கணக்கு!

நம் மூளை பணத்தைப் பிரித்துப் பார்க்கும் குணம் கொண்டது என்பதை நிரூபிப்பதுதான் இந்த வகைத் தடுமாற்றமாகும். இந்த வகை லேபிள் களைப் பணத்தின் மீது மூளை ஒட்டிவைத்து விடுவதனாலேயே பல்வேறு விதமான விநோதமான நடவடிக்கைகளை நாம் எடுத்துவிடு கிறோம் எனலாம். மனிதர்கள் இயல்பாகவே பட்ஜெட் போட்டு இந்தப் பணம் இதற்கு, இந்தப் பணம் அதற்கு என்று பிரித்துக் கையாள்வதில் திறம்படச் செயலாற்றுபவர்களாக இருக்கின்றனர் என்கின்றன ஆய்வுகள்.

மாறுபட்ட இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு எல்இடி டிவி வாங்க நினைக்கிறீர்கள். ஒரு நிறுவனம் உங்களிடம், டிவியின் விலை 20,000 ரூபாய், மாதம் 2,000 என 10 மாதம் பணம் செலுத்துங்கள்; பிறகு நீங்கள் இந்த டிவியை எடுத்துச் செல்லலாம்; 10 மாதம் கழித்து விலை ஏறியிருந்தாலோ அல்லது இதே அளவில் புதிய மாடல் வந்திருந்தாலோ மறுபேச்சே இல்லாமல் இதே விலைக்கு டிவியை உங்களுக்குத் தந்துவிடுவோம் என்கின்றனர். இன்னொரு நிறுவனத்தினரோ, இன்றைக்கு டிவியை எடுத்துச் செல்லுங்கள்.மாதம் 2,000 ரூபாயைச் செலுத்துங்கள் என்கின்றனர். இரண்டு டீல்களிலும் வட்டி எதுவும் இல்லை. தர வேண்டிய தொகையில் எந்த மாறுதலும் இல்லாத பட்சத்தில் இன்றைக்கே டிவியை எடுத்துச் செல்லும் நிறுவனத்தைத்தானே தேர்வுசெய்வீர்கள்.

மேலும் ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். நீங்கள் 10 மாதத்துக்கு 2,000 செலுத்தினால் 10 மாத இறுதியில் உங்களை நான்கு நாள் சிங்கப்பூருக்கு டூர் கூட்டிச் செல்கிறோம் என்கிறது ஒரு நிறுவனம். அல்லது இப்போதே சிங்கப்பூர் பயணம் சென்று வாருங்கள். 10 மாதங்களுக்கு மாதம் 2,000 வீதம் செலுத்தலாம் என்கிறது. என்ன செய்வீர்கள்? டிவியைப் பொறுத்தவரை பதில் சுலபம். டிவிக்கு ஆயுள் அதிகம். நமக்கு நீண்ட நாட்கள் உபயோகப்படும். அதனால், இன்றைக்கு எடுத்துகொண்டு 10 மாதங்களுக்கு பணம் கட்டத்  தயாராக இருப்பீர்கள். அதேநேரம், சிங்கப்பூர் டூர் என்பது மிக மிகக் குறைந்த காலப் பலனைத் தருவது. நான்கு நாட்களில் முடியும் பலன். இதற்கு இன்றைக்குக் கடன் சொல்லி விட்டு பத்து மாத காலத்துக்குக் கடனை திருப்பிச் செலுத்துவதா என்று யோசிப்பீர்கள்தானே?

சுற்றுலாவுக்கு பணத்தைச் சேர்த்துவிட்டுச் செல்லலாம் என நினைப்பதும், டிவி என்றதும் வாங்கிவிட்டுப் பணத்தினைச் செலுத்த நினைப்பதும் மனம் சம்பந்தப்பட்டதுதான். தொகை ஒன்றாக இருந்தபோதும் டிவியைப் பொறுத்தவரை அதன் வாழ்நாள் அதிகமாக இருப்பதாலேயே கடன் வாங்கி டிவி வாங்க மனம் துணிகிறது. ஒரே தொகை. செயல் வெவ்வேறு. மனமும் வெவ்வேறு வகையில் பணத்தை எடைபோடுகிறது என்பது புரிகிறதா?

நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உங்களிடம் உங்களுக்கு மூன்று ஆப்ஷன் தருகிறது. தினமும் சம்பளம்,  இரண்டு வருட சம்பளத்தை இப்போதே வாங்கிக்கொள்வது, மாதாமாதம் சம்பளம் வாங்கிக்கொள்வது என இதில் எது உங்கள் விருப்பம் என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

மனம் போடும் பணக் கணக்கு!

தினம் தினம் சம்பளமா? சரிப்படாதே! இரண்டு வருடத்துக்கு இப்போதே சம்பளமா! பணத்தைக் கொடுத்துவிட்டு வேலையைக் கொட்டினால் என்ன செய்வது? மாதாமாதம் வாங்கிக்கொள்வதுதான் சிறந்தது என்றுதானே பெரும்பாலானோர் முடிவு செய்வார்கள். இரண்டு வருட சம்பளப் பணத்தை முன்பே பெற்றால் அது லாபம்தானே! ஆண்டுக்கு எட்டு சதவிகித வட்டி கிடைக்கும் என்ற பிசினஸ் நினைப்பெல்லாம் எங்கே போய்விடுகிறது?

பணம் குறித்து மிகவும் தர்க்கரீதியான எண்ணத்தைக் கொண்டிருந்தால் டிவி, சுற்றுலா  இரண்டுக்கும் ஓ.கே சொல்லியிருக்கவேண்டும். இரண்டு ஆண்டுச் சம்பளம் முன்கூட்டியே கிடைக்கிறது என்றால், அதை வாங்கி வட்டி மூலம் லாபம் பார்க்க முயலவேண்டும். ஆனால், முதலில் வேலை பார்க்கிறேன். அப்புறமாய்ச் சம்பளம் வாங்கிக்கொள்கிறேன் என்றுதானே சொல்கிறோம். பணம் கொடுப்பதைத் தள்ளிப் போடுவதும், பணம் வருவதைத் துரிதப்படுத்து வதும்தானே சூப்பரான உத்தியாய் இருக்க வேண்டும். இதைச் செய்ய முயலும்போது  ஏன் காரணகாரியம் பார்த்துச் செய்கிறோம். மனம் பணம் குறித்த பல அடுக்குகளை வைத்துக்கொண்டு கணக்குப் போடுகிறது.

இதேதான் முதலீட்டிலும். பல முதலீடுகளைச் செய்கிறோம். அதில் ஒன்று நஷ்டத்தில் போய் விடுகிறது. லாபத்தை புக் செய்துவிடத் துணியும் மனம் நஷ்டத்தைப் புக் செய்ய விடுவதில்லை. நஷ்டத்தை புக் செய்யக்கூட வேண்டாம். அந்த முதலீட்டை விற்று அதற்குச் சரிக்கு சரியான வேறொரு முதலீட்டினை செய்ய நினைத்தால்கூட அதனைச் செய்ய முடியாது. ஏனென்றால் நஷ்டத்தில் இருக்கும் முதலீட்டை விற்றால் நிகர நஷ்டம்  என்பது உறுதியாகிவிடுகிறதே! அதை விற்காதவரையில் ஏறுவதற்கு வாய்ப்புள்ளது என்று நம்மை நாமே தேற்றிக்கொள்ளலாமே!

டிவி, சுற்றுலா, கார் என்ற ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கணக்கை வைத்துக்கொண்டு ட்ரீட்மெண்டைத் தரும் மனதும் முதலீட்டிலும் லாபத்துக்கும்  நஷ்டத்துக்கும் தனித்தனியே ஒரு ட்ரீட்மெண்டை கொடுத்து நஷ்டத்தை விட்டு வெளியேவரவிடாமல் நம்மைத் தடுக்கிறது. இதனைக் கடந்துவந்தால் மட்டுமே நம் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை சுலபமாக நம்மால் மாற்றியமைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

(லாபம் தொடரும்)

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்