Published:Updated:

முதலீட்டு முடிவை எடுக்கும் சூழல்!

இனி எல்லாம் லாபமே - 20

முதலீட்டு முடிவை எடுக்கும் சூழல்!

இனி எல்லாம் லாபமே - 20

Published:Updated:

முதலீட்டில் தவறு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால், அந்தத் தவறை தொடர்ந்து எதிர்பார்த்த மாதிரியே மனிதன் செய்துகொண்டிருந்தால் கொஞ்சம் அடிப்படையே ஆட்டம் காண்பதைப்போல அல்லவா இருக்கிறது? என்னதான் பொருளாதார வல்லுநர்கள் மனிதர்கள் ரேஷனல் என்ற நினைப்பில் பல்வேறு தியரிகளைச் கண்டறிந்து சொல்லியிருந்தாலும் நடப்பில் அப்படியில்லை. மூளை பல்வேறு காரண காரியங்களைத் தேடினாலும் குணமும் மனமும் மனிதனை சுலபத்தில் தவறிழைக்க வைத்துவிடுகின்றன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

அதிக உற்சாகம், அளவு கடந்த நம்பிக்கை, அறிவாற்றலின் முரண்பாடு, தன் எதிர்பார்ப்பை உறுதிசெய்யும் விஷயங்களை மட்டுமே காண்பது, பாதுகாப்பான நிலையிலிருந்து மாறாதிருத்தல், முதலில் கேட்ட தகவலை முழுமையாக நம்பிவிடுதல் போன்ற பல்வேறு விதமான மாறுபட்ட விஷயங்களினாலேயே இந்த விதமான முதலீட்டு முடிவில் தவறுகள் இழைக்கப்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

முதலீட்டு முடிவை எடுக்கும் சூழல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுறுசுறுப்பு, புத்திசாலித்தனம், முன்னெச்சரிக்கை, விவேகம் போன்றவற்றை உள்ளடக்கிய நல்ல குணங்களையும், கொஞ்சம் சோம்பேறித்தனம், கொஞ்சம் அஜாக்கிரதை, எதிர்காலத்தைப் பற்றிய துல்லியமான அளவுக்கான அக்கறையின்மை, கொஞ்சம் ஊதாரித்தனம் போன்றவற்றையும் உள்ளடக்கிய கெட்ட குணங்களின் கலவையாகவே மனிதன் இருக்கிறான்.

பொருளாதார ரீதியாக ஒவ்வொரு முடிவை எடுக்கும் ஒவ்வொரு சூழலிலும் மனிதனைச்  சுற்றி அப்போதைக்கு இருக்கும் நிலைமைகளே அவனுடைய குணத்தை பரிமளிக்க வைக்கிறது. சில சமயம், அது கவனமாகவும், சாதுர்யமாகவும், லாப நோக்குடனும் செயல்பட வைக்கிறது. சில சமயம் கவனமில்லாமலும், பேராசையோடும் இன்னபிற லாபத்தை பெற இயலாத குணாதிசியங்களை செயல்படுத்த வைக்கின்றன என்ற ஒரு கருத்தையும் கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

முதலீட்டு முடிவை எடுக்கும் சூழல்!

இங்கு சூழல் என்பது சந்தை முதலீடுகளில் ஒரு மனிதன் முதலீட்டு முடிவு எடுக்கும் சூழல் எனலாம். பொதுவான ஒரு உதாரணமாகப் பார்த்தால், சந்தை மிகவும் உச்சத்தில் இருக்கும்போதும், சந்தை பாதாளத்தில் இருக்கும்போதும் சந்தையில் முதலீடு செய்வதற்குண்டான அறிவியல் பூர்வமான விஷயங்கள் என்னவோ ஒரே மாதிரி யானவையே. ஏறும் சந்தையில் இபிஎஸ், பி/இ ரேஷியோ போன்றவற்றுக்கு ஒரு ஃபார்முலாவும் இறங்கும் சந்தைக்கென்று பி/இ ரேஷியோ போன்றவற்றுக்கு ஒரு ஃபார்முலாவும் இல்லையே!

ஏறும் சந்தையோ, இறங்கும் சந்தையோ அளவீடுகள் ஒன்றேதான். ஆனால், அனுமானங்கள் செய்யும் விதம்தான் வேறுவேறாகி விடுகிறது.

சந்தை முதலீடென்று இல்லை. தொழில் முதலீடுகளும் அதேபோல்தான். பொருளாதார ஓட்டம் வேகம் பிடித்து உச்சத்தில் இருக்கும்போது தொழில் தொடங்குவதற்கு பலர் முயல்வார்கள். அருகருகே, ஒரே ஊரில், ஒரே இடத்தில் போட்டித் தொழில்கள் முளைக்கும். தேவையிருக்கிறதா, இல்லையா என்பது அளவிடப்படாமல் முதலீடுகள் குவிக்கப்படும். ஏனென்றால் பொருளாதாரம் தான் சூப்பராக இருக்கிறதே! இதே தொழிலைத்தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னால் நான் செய்யலாம் என்று நினைத்தேன். கொஞ்சம் யோசித்து நிறுத்திவிட்டேன். ஆனால், அந்த நேரத்தில் இதே தொழிலை ஆரம்பித்தவர்கள் எல்லாம் இன்றைக்கு பெரிய ஜாம்பவான்களாக இருக்கிறார்கள். என்னால் முடியாதா என்ன என்பது போன்ற கேள்விகளுடன் தொழில் முதலீடுகள் குவிக்கப்படும். பொருளாதார சுழற்சியும், ஏற்ற இறக்கங்கள் வந்துபோகும் என்பதும் புத்தகத்தில் இருக்கும். அந்த விஷயங்கள் தொழிலில் முதலீடு செய்ய நினைப்பவருக்கு நன்றாக தெரிந்தே இருக்கும். ஆனாலும் மூளையை மனம் விஞ்சிவிடும்.

ஏற்கெனவே இரண்டு வருடத்துக்கு முன்னாலேயே இதைச் செய்திருக்கவேண்டும்; இன்றைக்காவது செய்து அடுத்த இரண்டு வருடத்தில் பலனை அடைந்துவிடு என்று மனது சொல்லும். அதனாலேயே இரண்டு வருடத்துக்கு முன்பிருந்த வியாபார ரீதியான சூழலும் இன்று இருக்கும் வியாபார ரீதியான சூழலும் ஒட்டுமொத்தமாக மூளையில் இருந்து மறந்துபோகிறது.

இது எதனால் என்று பார்த்தால், பெரும்பான்மையான சமயம் மனரீதியிலான உந்துதலால்தான். இத்தகைய தவறான முடிவுகள் சந்தையில் எடுக்கப்படும் சூழல், சந்தையும் பொருளாதாரமும் உச்சத்தில் இருக்கும்போது என்றே சொல்ல லாம். ஏனென்றால், உச்சத்தில் இருக்கும்போதுதான் வளர்ச்சியும், வளர்ச்சியினால் வந்த பலன்களும் மனிதர்களின் கண்ணில் தெளிவாகத் தெரிகிறது. பங்குகளும், இண்டெக்ஸும், நிகர சொத்து மதிப்புகளும், விதவிதமான கார்களும், வில்லாக்களும் கண்ணில் தென்படுகின்றன. அனைவருமே பலன்களின் தன்மையைக் கண்டு வியந்து ரிஸ்க் எடுக்க தொடங்குகின்றனர். சிலர் அளவுக்கு அதிகமான ரிஸ்க்கும் எடுக்கின்றனர். அதற்குண்டான பாதிப்பையும் அடைந்து விடுகின்றனர்.

இதே பொருளாதாரச் சூழலோ, சந்தைச் சூழலோ மிக மிக மோசமாக இருக்கும்போது என்ன நிகழ்கிறது?

புதிய முதலீடுகள் செய்யப்படுவதில்லை. ஒரு இறுக்கமான சூழல் நிலவுகிறது. பலரும் லாபம் பார்ப்பது கடினமாக உள்ளது. தொழிலை நடத்துவது கடினமாக இருக்கிறது என்று சொல்லவே கேட்கிறோம். பொருளாதாரம் உச்சத்தில் இருந்தபோது தாறுமாறான ரிஸ்க் எடுத்தவர்களே நஷ்டத்தில் இருப்பதாக இதுபோன்ற சமயத்தில் சொல்லக் கேட்கிறோம்.

எனவே, தவறுகள் நிகழ்வது பொருளாதாரமோ, சந்தையோ உச்சநிலையில் இருக்கும் போதுதா ன். இந்த நிலையில்தான் மூளையினால் எடுக்கவேண்டிய முடிவுகள் மனதால் எடுக்கப்படுகின்றன. இதில் இருக்கின்ற பெரும் சிக்கல் என்னவென்றால், மனிதன் வெறுமனே மூளையினால் மட்டும் முடிவுகள் எடுக்குமாறு படைக்கப்பட்டிருந்தால், முடிவுகளை எடுப்பது என்பதே சாத்தியமாக இருக்காது. எல்லா வகை லாஜிக்கான கேள்வி களையும் கேட்டுக்கொண்டே யிருக்கும். மொத்தமும் லாஜிக்கலான கேள்விகள் கேட்கப்பட்டு, விடை சொல்லப்பட்டு முடிவுகள் எடுப்பது என்பது முதலீட்டிலும் தொழிலிலும் முடியாத காரியம். ஏனென்றால், தொழிலும் முதலீடும் எதிர்கால நடப்புகளை கணித்துச் செய்யவேண்டியவை. எதிர்கால நிகழ்வுகளுக்கு முழுமையான லாஜிக்கல் விளக்கங்கள் துல்லியமாகத் தரமுடியாது. அனுமானங்கள் பலவுமே அதில் உள்ளடங்கி இருக்கும். அதனாலேயே வெறுமனே தர்க்கரீதியிலான  விஷயங்களை மட்டும் வைத்துகொண்டு மனிதனால் முடிவெடுக்க முடியாது எனலாம்.

உணர்ச்சிகளே மனிதனை முடிவெடுக்க வைக்கிறது. இதில் பிரச்னை என்னவென்றால், மூளையும் மனமும் ஒரு சரியான கலவையில் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதாய் அமைகிறது. இந்தக் கலவையைப் பெறவும் அதைத் தொடர்ந்து கடைபிடிக்கவும் நல்லதொரு பயிற்சி மனிதனுக்கு தேவைப்படுகிறது. இந்தப் பயிற்சி இல்லாதபட்சத்தில் முடிவெடுப்பதில் பெரும்பாலான சதவிகிதம் உணர்ச்சிகளே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும் அளவுக்கு நாம் விட்டுவிடுகிறோம். இதனாலேயே நம்முடைய கண்ணுக்கு குறைந்த காலப் பார்வையும் (ஷார்ட் டேர்ம் வியூ), குறுகிய காலத்தில் கிடைக்கும் லாபமும் (ஷார்ட் டேர்ம் கெய்ன்) ரொம்பவுமே கவர்ச்சிகரமாக தெரிய ஆரம்பிக்கிறது. சுலபத்தில் நீண்ட கால நோக்கமில்லாமல் முதலீடுகளைச் செய்ய ஆரம்பித்துவிடுகிறோம். 

முதலீட்டு முடிவை எடுக்கும் சூழல்!

இந்த வகை குறுகிய காலப் பார்வை கொள்வதற்கு மற்றுமொரு காரணம், நம்மைச் சுற்றியுள்ள கூட்டத்தின் செயல்பாடாகும். அனைவரும் வெகு விமரிசையாய் தொழில் செய்யும்போதும், அனைவரும் துரத்தித் துரத்தி பங்குகளை வாங்கிப் போடும்போதும், எங்கே அவர்கள் பெறும் லாபத்தை பெறமுடியாமல் போய்விடுமோ என்ற எண்ணம் நம்மை படுத்தி எடுக்க ஆரம்பித்துவிடும். அதனாலேயே நாம் எடுக்க வேண்டிய முடிவுகளை மூளையின் கையில் இருந்து எடுத்து மனதின் கையில் கொடுத்துவிடுகிறோம்.

இதெல்லாம் சும்மா சார், செல்ஃப் கன்ட்ரோல் என்பது மனிதனுக்கு இருக்குமே! எனக்கு அதிகம் இருக்கிறது என சிலர் சொல்லலாம். செல்ஃப் கன்ட்ரோலில் ஒரு சில இடைஞ்சல்கள் இருக்கிறது என்கின்றனர். ஒவ்வொரு மனிதரிடமும் இருக்கும் செல்ஃப் கன்ட்ரோலின் ஸ்டாக் குறிப்பிட்ட அளவே என்கின்றனர். அதனால் ஒரு சூழ்நிலையில் அதை ஓரளவுக்கு மேல் உபயோகப்படுத்தி விட்டால், அடுத்தமுறை அதேபோன்ற சூழலில் நாம் உபயோகப்படுத்த நினைக்கும் போது அது தேவையான அளவுக்கு நம் வசம் இருக்காது என்கின்றனர்.

அட, அப்படி என்றால் நம்மால் சூப்பர் லாபம் பார்க்கவே முடியாது என்கிறீர்களா என்று நீங்கள் கேட்கலாம். தொடர்ந்து மூளையின் கட்டமைப்பு புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே யிருக்கும் அளவிலேயே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதனால் நம்முடைய மூளையின் கோணத்தை மாற்றி அமைத்து அதன்மூலம் வெற்றிகாண முடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

(லாபம் தொடரும்)

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்