Published:Updated:

இனி எல்லாம் லாபமே - 23

இனி எல்லாம் லாபமே - 23

இனி எல்லாம் லாபமே - 23

இனி எல்லாம் லாபமே - 23

Published:Updated:

முதலீட்டில் ஜெயிக்க வைக்கும் சுய கட்டுப்பாடு!

நம் அனைவரிடத்திலுமே முதலீடு குறித்த பழக்கவழக்கங்களில் தடுமாற்றங்கள் இருக்கவே செய்கிறது. இதைப் பற்றி தெரிந்துகொள்வதன் மூலம் இவற்றின் பாதிப்பைக் குறைத்துக்கொள்ளலாமே தவிர, முழுமையாக இவற்றைத் தவிர்ப்பது என்பது ஏறக்குறைய சாத்தியமில்லாத ஒரு விஷயம் என்றே சொல்லலாம்.

இனி எல்லாம் லாபமே - 23

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏனென்றால், முதலீடுகளைப் பொறுத்தவரை, தனிமனித எண்ணங்களும் முடிவுகளும் மட்டுமே அவற்றை வெற்றி பெறச் செய்வதில்லை. தொழில் முதலீடுகளானாலும் சரி, பங்கு முதலீடுகளானாலும் சரி, முழுமையாக நம்முடைய பழக்கவழக்கத்தினால் ஏற்படுகிற தடுமாற்றங்கள் குறித்து நாம் தெரிந்துகொண்டிருந்தாலுமே, அவற்றை நடைமுறையில் மாற்றியமைத்து செயல் படுத்துவது என்பது கொஞ்சம் கடினமான விஷயமேயாகும். தெரிந்து வைத்துக்கொள்வது என்பது நாம் முதலீட்டில் செய்யும் தவறுகளில் இருந்து நம்மை ஓரளவு காப்பாற்றவும், தவறுகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உதவும் என்றே சொல்லலாம்.

முதலீடு என்பதே ரிஸ்க் எடுக்கும் ஒரு விஷயமாகும். நம்முடைய ரிஸ்க் எடுக்கும் திறன் என்பது நம்முடைய நிதி நிலையை ஒட்டியதாக கணக்குரீதியாக இருக்கிறது. ஆனால், கணக்குகளையும் கையில் இருக்கும் பணத்தையும் வசதி வாய்ப்புகளையும் புறந்தள்ளி நம்மை ரிஸ்க் எடுக்க வைப்பதுதான் நம்முடைய மனதினை சார்ந்த விஷயமாகிறது. இங்கேதான் பழக்க வழக்கத்தினால் ஏற்படுகிற தடுமாற்றங்களின் ஆதிக்கம் நம்முடைய முதலீட்டில் பங்கேற்க ஆரம்பிக்கிறது. இதனாலேயே பணம் படைத்த ஒருவர் ரிஸ்க்கே எடுக்காமல் இருப்பதையும், பணமில்லாத ஒருவர் ரிஸ்க் எடுப்பதில் புகுந்து விளையாடுவதையும் நாம் உலகத்தில் காண்கிறோம்.

என்ன மனநிலையில் முதலீடுகளைச் செய்கிறோம், டிரேடிங்கை செய்கிறோம் என்பதும்கூட லாப நஷ்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இறங்கும் சந்தையைக் கண்டு மிரண்டு ஓடுவதும், அளவேயில்லாமல் ஒரு நீர்க்குமிழி போல் ஏறிய சந்தையில் வாங்கிக் குவிப்பதும் மன ஓட்டத்தினாலேயே அமைகிறது. சாதாரண சூழ்நிலையில் பாமரனின் கண்ணுக்குப் புலப்படும் விஷயங்கள்கூட இதுபோன்ற சிறப்பான சூழ்நிலைகளில் மிகவும் அனுபவமிக்க முதலீட்டாளரின் அறிவுக்குக்கூட புலப்படாமல் செய்துவிடுவதில் மனதுக்கு பெரும்பங்கு இருக்கிறது. பசி, அசதி, இரைச்சல் போன்றவை மனதின் போக்கை பெரிய அளவில் மாற்றியமைத்துவிடும் வல்லமை வாய்ந்தவை. இதனாலேயே இவற்றை எதிர்கொள்ளும்போது முதலீட்டு முடிவுகளை எடுக்கக்கூடாது என்கின்றன ஆராய்ச்சிகள்.

இனி எல்லாம் லாபமே - 23

அதேபோல் போட்டி போடும் குணம் என்பது மனதின் முழுக் கட்டுப்பாடு செயல்படும் ஒரு விஷயமாகும். சந்தை முதலீட்டில் இந்த போட்டி போடும் குணம் என்பது உரமிட்டு வளர்க்கப்படும் போது மிகவும் சிக்கலான சூழ்நிலை தனிநபருக்கு உருவாகி விடும். அதுவும் பெருநிறுவனங்கள் பெரிய அளவில் பணத்தை தன்வசத்தே வைத்துக்கொண்டும், முதலீடுகளைச் செய்ய பல்வேறு நிபுணர்களையும், கணினிகளையும் வைத்துக்கொண்டு தயாராக இருக்கும்வேளையில் நாம் நம் மனதின் பிடியில் சிக்கிக்கொண்டு நம்மால் முடியாதது இல்லை என்று நினைக்கிறோம். அப்படி நினைத்து பெரும் முதலீட்டு நிறுவனங்களின் நடவடிக்கை களுக்கு எதிரான பாணியில் நம்முடைய முதலீடு மற்றும் டிரேடிங்கை அமைத்துக் கொண்டால், நிச்சயமாக லாபம் பார்ப்பது என்பது கடினமான ஒரு விஷயமாக மாறிவிடும்.

இந்தவகை பெரு நிறுவனங்களின் நடவடிக்கைகள் பலசமயம் நம்முடைய சாமான்ய அறிவுக்கு சவால்விடுவதைப் போன்றே அமைந்துவிடும். இயல்பாக சவால்களுக்கு துணிந்த நம்முடைய மனம் இதுபோன்ற அறைகூவல்களால் முதலீடு மற்றும் டிரேடிங்கை செய்யத் தூண்டிவிடும். இதை எப்போதும் நினைவில் வைத்தே நாம் முதலீட்டையும் டிரேடிங்கையும் செய்யவேண்டியிருக்கும்.

நம்முடைய மனதுக்கு மிகவும் பிடித்ததொரு விஷயம், அடுத்தவர்கள் நம்மைவிட நல்ல தகவல்களையும் நல்ல முடிவுகளையும் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை. இதனாலேயே முதலீட்டு முடிவுகள் பலவும் அடுத்தவர்கள் சொல்வதை முழுமையாக நம்பி மட்டுமே எடுக்கப்படுகின்றன.

துறை ரீதியாக எவ்வளவு அனுபவஸ்தர்கள் சொன்னாலுமே சில அடிப்படை விஷயங்களை நாம் சரிபார்த்த பின்னரே முதலீட்டில் இறங்கவேண்டும் என்பதுதான் சரியான வழிமுறையாக இருக்கும் என்பதை எப்போதும் நினைவில்கொள்ளுங்கள். ஏனென்றால், நாம் முதலீடு செய்யப்போவது நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தினை. யார் சொன்னாலுமே கொஞ்சம் சிந்தித்து, சொல்பவற்றை சரிபார்த்து, அந்த முதலீட்டில் இருக்கும் ரிஸ்க்குகள் நமக்கு சரிவருமா என்பதைக் கண்டறிந்து, பின்னர் செய்யப்படும் முதலீடே நிச்சயமாக லாபம் தருவதாக இருக்கும் என்பதை  புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.

இனி எல்லாம் லாபமே - 23

நம்முடைய கண்டுபிடிப்போ அல்லது நாம் முழுமையாக நம்பும் நிபுணரின் ஒரு முதலீட்டு ஸ்ட்ராட்டஜியோ சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இரண்டுமுறை சரிபார்த்த பின்னரே முதலீட்டில் இறங்கவேண்டும். இதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது. நம்முடைய கண்டுபிடிப்பையோ அல்லது நமக்குப் பிடித்தமான நிபுணர் சொல்லும் ஒரு விஷயத்தையோ எதிர்த்துச் சொல்லும் நபர் ஒருவரிடம் வாதம் செய்தாலே, மிகவும் சுலபத்தில் அந்த ஐடியாவில் உள்ள தவறுகள் வெளிவந்துவிடும். இதனை ஒரு முக்கிய முதலீட்டு முடிவில் செய்யும் படிநிலையாக நாம் வைத்துக்கொண்டே செயல்படவேண்டும்.

ஒரு செக்டார், ஒரு பங்கு, ஒரு குழுமம் என எதுவாக இருந்தாலும் சரி, நாம் முடிவு செய்து முதலீடு செய்வதற்குமுன் அந்த ஐடியாவைக் குறித்து எதிர்கருத்துகள் கொண்டிருக்கும் நபரிடம் நம்முடைய கணிப்புகளைச் சொன்னால் அதற்கு எதிர்கருத்துகள் எவ்வாறு இருக்கும் என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும். இந்த வகை வாதங்கள் எந்தளவுக்கு நம்முடைய முதலீட்டு முடிவுகளில் ரிஸ்க் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவும், விலை இறக்கம் எந்தளவுக்குப் போகலாம் என்பதையும் நமக்கு சுலபத்தில் தெளிவுப்படுத்திவிடும்.

ஏனென்றால், எப்போதுமே நம்முடைய பிரியமான கண்டுபிடிப்புகளில் இருக்கும் குறைகள் நம்முடைய கண்ணுக்கு சுலபத்தில் தெரியாது. இதற்குண்டான மாற்று ஏற்பாடுதான் இதுபோன்ற எதிர்மறை வாதத்தில் ஈடுபடுவது.

மனம் என்பது கணக்கு வழக்குகளை புறந்தள்ளி ஓடும் ஒரு விஷயம் என்பதாலும் என்னதான் மனதின் கட்டுப்பாட்டைக் குறைத்துக் கொள்ள முயற்சித்தாலும், அவ்வப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட வாய்ப்புள்ளது என்பதாலும் முதலீட்டு பயணத்தில் ஃபீட்பேக் என்பது மிக மிக முக்கியமான விஷயமாக திகழ்கிறது.

இந்த ஃபீட்பேக் என்பது நமக்கு நாமே செய்துகொள்ளும் ஒரு விஷயமாகும். யாரும் நமக்கு சொல்லவேண்டியதில்லை. நம்முடைய முதலீட்டுப்பாதை எப்படி இருக்கிறது என்பதை நாமே ஒருமுறை சரி பார்த்துக்கொள்வது என்றே இதைச் சொல்லலாம்.

போகும் பாதை சரிதானா என்பதை சரியான இடைவெளியில் திரும்பிப் பார்த்து ஆராய்ந்து உறுதி செய்துகொள்ளும் இந்த ஃபீட்பேக் மெக்கானிசம் என்பது நம்முடைய பாதையை சரி செய்துகொள்ளவும் எதிர்காலத்தில் தவறுகளைக் குறைத்துக்கொள்ளவும் மிகவும் உதவியாக இருக்கும். முதலீட்டாளர்கள் இதையும் கவனத்தில்கொண்டே செயல்பட வேண்டியிருக்கும்.

வெற்றிகரமாக முதலீடு செய்வது என்பது  அவ்வளவு சிரமமா என்ன என்று நீங்கள் கேட்கலாம். குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்பதுதானே சிறந்த முதலீடு என்று சிலர் சொல்லலாம். சரி, வாங்கிய பின்னர் இறங்க ஆரம்பித்து கரடிச் சந்தை (பியரிஷ் டிரெண்ட்) வந்துவிட்டால் என்ன செய்வது?

பொறுமையாக காலம் கடத்தவேண்டும். பயந்து கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு சந்தையை விட்டு ஓடிவிடக் கூடாது. வாங்கிய பின்னர் கடும் வேகத்தில் ஏற்றம் நடைபெற்றால் நம் கணக்குகளுக்கு கட்டுப்பட்டு விற்று வெளியேற வேண்டும். பேராசைக்கு இடம் கொடுக்கக் கூடாது.

ஆக, கூட்டிக் கழித்து கணக்குப் பார்த்தால், முதலீடு என்பது மிக சுலபமானதாகத் தெரியும். இதில் மனம் செய்யும் மாயம் முதலீட்டில் பல்வேறு விதமான சூழல்களில் பல்வேறு விதமான முடிவுகளை நோக்கி நம்மை ஓடச் செய்யும் வல்லமை கொண்டதாக உள்ளது. இதனை எதிர்கொள்ள சுய கட்டுப்பாடு என்பதே மிக மிக தேவையான ஒன்றாகும்.

முதலீடு என்பதே பயத்துக்கும் பேராசைக்கும் இடையே செய்யப்படும் ஒரு பயணம். இதில் சுயகட்டுப்பாடு என்பது மிக மிக அதிகமாக தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். பயந்தால் லாபமில்லை. பேராசைப் பட்டால் நஷ்டமோ நிச்சயம். பயப்படாமல் இருக்க கணக்குகள் உதவுகிறது. அதே கணக்குகள் பேராசையையும் சுட்டிக்காட்ட உதவுகின்றன.

இந்த இரண்டுக்கும் இடையே செய்யப்போகும் பயணம் திட்டமிட்டு செயலாக்கப்பட வேண்டியுள்ளது. திட்டமிடுதல் என்பது மூளையைச் சார்ந்த ஒரு விஷயம். அதைச் செயலாக்குதல் என்பது மனதைச் சார்ந்த ஒரு விஷயம்.

 இந்த இரண்டையும் இணைக்கும் பாலம் சுய கட்டுப்பாடு எனலாம். எனவே, சுய கட்டுப்பாடு என்பதை கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டால் மனதின் ஆளுமையை சுலபத்தில் வென்று நம்மால் லாபம் பார்க்க முடியும்!

(நிறைவுபெற்றது)

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்