ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் 1910-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம். இம்பீரியல் டுபாகோ கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பங்குகளைப் படிப்படியாக இந்தியர்கள் அதிக அளவில் வாங்கியபிறகு, இந்தியா டுபாகோ கம்பெனி லிமிடெட் என்று 1970-ல் பெயர் மாற்றப்பட்டு, 1974-ம் ஆண்டு ஐடிசி லிமிடெட் என்று பெயர் சூட்டப்பட்டது. தற்சமயம் உணவுப் பொருட்கள், பெர்சனல் கேர், சிகரெட், ரெடிமேடு பிராண்டட் துணிகள், கல்வி, எழுதுபொருட்கள், ஊதுபத்தி, தீப்பெட்டி, ஹோட்டல்கள், பேப்பர் அட்டைகள் மற்றும் பேப்பர், பேக்கேஜிங், விவசாயப் பொருட்கள், சாஃப்ட்வேர் எனப் பல்வேறு துறைகளிலும் கால்பதித்து வெற்றிநடை போடுகிறது. இப்படி பலதரப்பட்டத் தொழில்களிலும் இறங்கியதால், ஐ.டி.சி என்று இடையே புள்ளிகளோடு இருந்த பெயரினை மாற்றி, புள்ளிகளை நீக்கி ஐடிசி லிமிடெட் என்ற பெயரில் தற்போது செயல்படுகிறது.

கம்பெனி ஸ்கேன்: ஐடிசி!

என்ன செய்கிறது?

1925-ம் ஆண்டு பேக்கேஜிங் மற்றும் பிரின்டிங் துறையில் கால்பதித்தது இந்த நிறுவனம். இதில் பெரும்பான்மையான தேவை ஐடிசி நிறுவனத்தின் சொந்த தொழிலான சிகரெட் தயாரிப்புக்காகவே செயல்படுத் தப்பட்டது. 1975-ல் ஹோட்டல் பிசினஸில் கால்பதித்த ஐடிசி, ‘ஐடிசி-வெல்கம் குரூப் சோழா’ என்ற நட்சத்திர ஹோட்டலை சென்னையில் துவங்கியது. தற்சமயம் அதன் பெயர் ‘மை ஃபார்ச்சூன், சென்னை’ என்பதாகும். தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட ஹோட்டல்களை (சொந்தம் மற்றும் நிர்வகித்தல்) ஐடிசி ஹோட்டல்ஸ் - லக்சரி கலெக்‌ஷன்ஸ், வெல்கம் ஹோட்டல்ஸ், ஃபார்ச்சூன் ஹோட்டல்ஸ் மற்றும் வெல்கம் ஹெரிட்டேஜ் என்ற நான்கு பிராண்டுகளில் நடத்தி வருகிறது.

சமீபத்தில் ஹோட்டல் துறையில் வெளிநாடுகளில் கால்பதிக்கத் திட்டமிட்ட ஐடிசி, இலங்கை தலைநகர் கொழும்பில் ஒரு சூப்பர் பிரீமியம் லக்சரி ஹோட்டலை நிறுவி வருகிறது.

 இதுதவிர, ஆர்பி குரூப் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து துபாய் மற்றும் இந்தியாவிலுள்ள அந்த நிறுவனத்தின் ஐந்து ஹோட்டல்களையும் நிர்வகித்து வருகிறது.

1979-ம் ஆண்டு பேப்பர் அட்டைகள் மற்றும் ஸ்பெஷாலிட்டி பேப்பர்கள் தயாரிப்பதற்காக ஐடிசி பத்ராசலம் பேப்பர் போர்டு லிமிடெட் என்ற நிறுவனத்தினைத் துவங்கியது. 2002-ம் ஆண்டு இந்த நிறுவனத்தைத் தனது ஒரு டிவிஷனாக மாற்றி இணைத்துக் கொண்டது.

கம்பெனி ஸ்கேன்: ஐடிசி!

1990-களில் அக்ரி பிசினஸ் டிவிஷன் மூலம், ஏற்றுமதிக்கான விவசாயப் பொருட்கள் கொள்முதலை ஆரம்பித்தது. இந்த டிவிஷன்தான் இந்தியாவின் இன்றைய மிகப் பெரிய ஏற்றுமதி நிறுவனமாகத் திகழ்கிறது. 2000-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் சோயா விவசாயிகளுக்காக ஆரம்பிக் கப்பட்ட இ-சவுப்பல் என்ற வசதி தற்சமயம் 10 மாநிலங்களில் சுமார் 40 லட்சம் விவசாயிகளுக்குப் பலனளிக்கிறது.

2000-ம் ஆண்டில் துணி வகைகளில் ரீடெயில் தொழிலைத் துவங்கி பல பிராண்டுகளில் ஆயத்த ஆடைகளை வியாபாரம் செய்து வருகிறது. 2002-ம் ஆண்டு ஸ்டேஷனரி பொருட்கள் தயாரிப்பில் இறங்கிய ஐடிசி பிரீமியம் தயாரிப்புகளை பேப்பர் கிராஃப்ட் என்ற பிராண்டில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 2003-ம் ஆண்டிலிருந்து கிளாஸ்மேட் என்ற பெயரில் நோட்டுப் புத்தகம், ஜியோமெட்ரி பாக்ஸ், பிராக்டிகல் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது.

2000-ம் ஆண்டில் இன்பர்மேஷன் டெக்னாலஜி துறையில் ஐடிசி இன்ஃபோடெக் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்ததன் மூலம் கால்பதித்தது. தற்சமயம் அவுட்சோர்ஸிங் துறையில் பேங்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், கன்ஸ்யூமர் பேக்கேஜ்டு கூட்ஸ், ரீடெயில், மேனுபேக்சரிங், இன்ஜீனியரிங் சர்வீசஸ், மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட், டிராவல், ஹாஸ்பிடாலிட்டி, லைஃப் சயின்ஸ் மற்றும் டிரான்ஸ்போர்ட்டேஷன்/லாஜிஸ்டிக்ஸ் போன்ற துறைகளுக்கான சேவைகளைச் செய்து வருகிறது.

கம்பெனி ஸ்கேன்: ஐடிசி!
கம்பெனி ஸ்கேன்: ஐடிசி!

2001-ம் ஆண்டு பிராண்டட் பேக்கேஜ்டு உணவுகள் தயாரிப்பிலும், 2002-ம் ஆண்டில் அகர்பத்தி மற்றும் தீப்பெட்டிகள் உற்பத்தியிலும் இறங்கிய ஐடிசி 2005-ம் ஆண்டு பெர்சனல் கேர் பொருட்கள் தயாரிப்பில் இறங்கி, எசென்சா டீவில்ஸ் போன்ற பிராண்டுகளில் தன் தயாரிப்பு களை விற்பனை செய்துவருகிறது.

இப்படி காலப்போக்கில் சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் பல தொழில்களிலும் கால்பதித் திருக்கும் இந்த நிறுவனத்தின் வருமானம் புகையிலை சம்பந்தப்பட்டத் தொழில்கள், எஃப்எம்சிஜி தொழில், அக்ரி பிசினஸ், பேப்பர் தொழில், ஹோட்டல் தொழில் போன்ற தொழில்களிலிருந்து வருகிறது.

எதிர்வரும் காலத்தில் எஃப்எம்சிஜி பிசினஸில் முனைப்புடன் செயல்பட இந்த நிறுவனம் பால், பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், சாக்லேட்டுகள், பழரசம் போன்ற பிசினஸ்களிலும் இறங்குவதற்கான சில நடவடிக்கைகளைச் சமீபத்தில் எடுத்துள்ளது. இந்த முயற்சியில் பீஹாரில் பாலை பதப்படுத்தும் ஆலை ஒன்றை நிறுவியுள்ளது. வெகுவிரைவில் பால் சம்பந்தப்பட்ட நெய் போன்ற பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் என்று எதிர்பார்க் கலாம். சமீபத்தில் பி-நேச்சுரல் பழரச நிறுவனத்தை வாங்கியதன் மூலம் பேக்கேஜ்டு பழரச வியாபாரத்திலும் கால்பதித்துள்ளது இந்த நிறுவனம்.

ஓரளவுக்குக் கணிசமான லாப சதவிகிதமும், அதைவிடக் கணிசமான லாபத்தில் இருந்து கிடைத்த கையிருப்பும் இருப்பதால், இந்த நிறுவனம் தனது ஏனைய எஃப்எம்சிஜி தொழிலின் விரிவாக்கத் துக்குத் தேவையான நிதிவசதிகளைப் பெற்றிருக்கிறது. பிஸ்கெட்டுகளில் பிரீமியம் ரக பிஸ்கெட்டுகளான டார்க் பேன்டஸி, சாக்கோ பில்ஸ், சாக்கோ மெல்ட்ஸ் போன்றவற்றில் கணிசமான சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், பிராண்டட் ஆட்டா விற்பனை யிலும் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கம்பெனி ஸ்கேன்: ஐடிசி!

ரிஸ்க்குகள் என்னென்ன?

எஃப்எம்சிஜி துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுவரும் இந்த நிறுவனம், போட்டி நிறுவனங்கள் தரும் போட்டிச் சூழல்களை எதிர்கொண்டேதான் இருக்கும் எனலாம். இந்த நிறுவனம் கால்பதித்திருக்கும் மற்றுமொரு துறையான ஹோட்டல் துறை, பொதுவாக பொருளாதாரச் சுணக்கம் ஏற்படும்போதெல்லாம் வியாபார சுணக்கத்தைச் சந்திக்கும் ஒரு துறை என்பதை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

(குறிப்பு:  இந்தப் பகுதி பங்கு பரிந்துரை பகுதி அல்ல. வாசகர்களின் வசதிக்காக ஒரு பங்கினைப் பற்றி பொதுவாகக் கிடைக்கும் தகவல்களைத் தொகுத்து வழங்கும் பகுதியாகும். இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளரின் தனிப்பட்ட முடிவாகும்)

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு