Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்

கமாடிட்டி டிரேடிங்

கமாடிட்டி டிரேடிங்

மெட்டல் & ஆயில்

இந்த வாரம் தங்கத்தின் விலைப்போக்கு பற்றி விளக்குகிறார் மும்பை காம்டிரென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஞானசேகர் தியாகராஜன்.

தங்கம்!

“கடந்த வாரம் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,180 டாலருக்கு வர்த்தகமாகத் தொடங்கி தோராயமாக 1,201 டாலர் வரை வர்த்தகமானது. இந்திய சந்தைகளில் 24 காரட் தங்கம் 26,913 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கி, வார இறுதி வர்த்தக நாளில் 27,162 ரூபாய் அளவில்  வர்த்தகமானது. இந்த வாரத்தில் மட்டும் தங்கம் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் சுமார் ஒரு சதவிகிதத்துக்குமேல் ஏற்றம் கண்டு வர்த்தகமாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திடீர் விலை உயர்வுக்கு அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித அறிவிப்பு தள்ளிப்போனதுதான் காரணமாகக் கூறப்படுகிறது. ஃபெடரல் வங்கி வட்டி விகித அறிவிப்பை இன்னும் தள்ளிப்போட்டதால் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டிருக்கிறது.

வட்டி விகித ஏற்றம் அறிவிக்கப்படும் பட்சத்தில் தங்கத்தின் விலை மீண்டும் இறக்கம் காண வாய்ப்பிருக்கிறது. வட்டி விகிதம் ஏற்றம் அறிவிக்கப்படாத வரை சர்வதேச அளவில் தங்கம் அதிகபட்சமாக 1,225 டாலர் வரை உயர வாய்ப்பிருக்கிறது. அதேபோல், 24 காரட் தங்கத்தின் விலை இந்திய சந்தைகளில் 27,400 முதல் 27500 வரை உயர்ந்து வர்த்தகமாக வாய்ப்பிருக்கிறது.

இந்திய சந்தைகளில் தங்கம் விலையின் ஏற்ற இறக்கத்தையும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகளே தீர்மானிக்கின்றன.  அமெரிக்க டாலரின் மதிப்பு 0.8% அளவுக்கு  வலுவிழந்திருக்கும் அதேநேரத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு 0.2% அதிகரித்திருக்கிறது.  அடுத்த வாரத்தில், இந்திய சந்தைகளில்  தங்கம் பக்கவாட்டில் வர்த்தகமாக வாய்ப்பு இருக்கிறது.''

கமாடிட்டி டிரேடிங்

வெள்ளி!

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸுக்கு சராசரியாக 16 டாலர் என்ற நிலையில் வர்த்தகமானது.  தங்கத்தின் விலையையொட்டி, வெள்ளியின் விலையும் ஒரு அவுன்ஸுக்கு 16.43 டாலர் உயர்ந்து  வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரத்தில் மட்டும் வெள்ளி 0.6%  ஏற்றம் கண்டு வர்த்தகமானது. இந்திய சந்தையில் கிலோ வெள்ளிக்கு 0.08% ஏற்றம் கண்டது.  அடுத்த வாரம் வெள்ளியின் விலை 16.30 டாலர் என்ற ரெசிஸ்டன்ஸ் லெவலுக்கு மேலே வர்த்தகமானால் சற்று ஏற்றத்துடன் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

கச்சா எண்ணெய்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் சென்ற வாரம் அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமானது. இந்திய சந்தையில் கச்சா எண்ணெய் ஜூலை மாத கான்ட்ராக்ட் 3860-3920 என்ற நிலையில் வர்த்தக மாகிறது. 3920 என்ற  ரெசிஸ்டன்ஸ் லெவலுடனும், 3780 என்ற சப்போர்ட் லெவலுடனும் வர்த்தகமாகி வருகிறது. 3780 என்கிற லெவலை உடைக்கும் பட்சத்தில், 3450-3550 வரை வருவதற்கான வாய்ப்பு கள் உள்ளன. 3920 என்ற ரெசிஸ்டன்ஸ் நிலையை உடைக்கும்பட்சத்தில் 4120 வரை செல்ல வாய்ப்பு களும் உள்ளன. சர்வதேச சந்தையில் 58 - 62 டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருவதால்,  கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் வர்த்தக மாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

கமாடிட்டி டிரேடிங்

காப்பர்!

காப்பர் இந்த வாரம் தோராயமாக 0.3%  இறக்கத்தில் வர்த்தகமானது. கிரீஸில் நிலவும் கடன் பிரச்னை மற்றும் பணவீக்கம் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தொழிற்சாலைக்குத் தேவையான மெட்டல்களுக்கான தேவை குறைந்திருக்கிறது. 

தவிர, அமெரிக்காவின் பணவீக்க விகிதம், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி டேட்டாக்கள் வெளிவர இருக்கின்றன. இந்த டேட்டாக்கள் மற்றும் மேற்கூறிய பிரச்னைகளால் அடுத்த வாரத்திலும் காப்பர் இறக்கத்திலேயே வர்த்தகமாக வாய்ப்பு இருக்கிறது. 

மு.சா.கெளதமன்

அக்ரி கமாடிட்டி!

இந்த வாரம் மஞ்சள் மற்றும் ஏலக்காய் விலைப்போக்கு குறித்து சொல்கிறார் ஜியோஃபின் காம்டிரென்ட் நிறுவனத்தின் ரிசர்ச் அனலிஸ்ட் விஷிதா விஜயகுமார்.

கமாடிட்டி டிரேடிங்

மஞ்சள் (Turmeric)

“தேவை குறைந்து காணப்பட்டதால், கடந்த வாரத்தில் மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமானது. அதுமட்டுமல்லாமல் மஞ்சள் விளையும் ஏரியாக் களில் நல்ல மழை என்பதால் வரும் பருவத்தில் சந்தைக்கு வரும் மஞ்சள் தரமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த ஜூன் 17-ம் தேதி நிலவரப்படி, என்சிடிஇஎக்ஸ் கிடங்கில் 13,754 டன் மஞ்சள் இருப்பு காணப்படுகிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 13,368 டன்னாகக் காணப்பட்டது. 

சமீபத்திய நிலவரப்படி, விலை குறைவான நிலையிலும் அனைத்து விவசாயிகளும் நடுத்தரத்திலுள்ள மஞ்சளைச் சந்தைபடுத்திவிட்டதாகத் தெரிகிறது.  பருவநிலை மாறிமாறி காணப்படுவதாலும், உற்பத்தி அளவில் பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதேசமயம், வரும் மாதங்களில் மஞ்சளுக் கான தேவை அதிகமாக இருக்கும் என்பதால், விலை மேலும் குறையாமல் தடுக்கப்படும் என வர்த்தகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்திய நறுமண வாரியத்தின் சமீபத்திய அறிக்கையில், கடந்த 2014-15-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மஞ்சள் ஏற்றுமதி 11% அதிகரித்து, 86,000 டன் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏலக்காய் (Cardamom)

பெரும்பாலான சந்தைகளில் வரத்து அதிகரிப்பு மற்றும் உற்பத்தி அதிகரிக்கும் என்கிற கணிப்பு காரணமாக கடந்த வாரத்தில் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது. தேவை குறைந்து  காணப்பட்டதும் விலை குறையக் காரணம்.  ஆனால், ஏலக்காய் அதிகம் விளையும் கெளதமாலா வில் நடப்புப் பருவத்தில் உற்பத்திக் குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளதால், விலை மேலும் குறையாமல் தடுக்கப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. 

2014-15ம் ஆண்டின் பருவத்தில் கெளதமாலாவின் ஏலக்காய் உற்பத்தி 8,000 டன் குறைந்துள்ளது. அதே போல, கடந்த ஏப்ரல்,2015 நிலவரப்படி, கெளதமாலா விலிருந்து ஏற்றுமதியாகி இருக்கும் ஏலக்காய் அளவு 4,500 டன் அளவுக்கு குறைந்து உள்ளது. வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் தரமான ஏலக்காய் வரத்து அதிகரிக்கும் என்றும், இதனால்  விலை உயரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.”

ஜீரகம் (Jeera)

ஜீரகத்தின் தேவை கடந்த வாரம் அதிகரித்து காணப்பட்டதால், விலையும் உயர்ந்து வர்த்தக மானது.  மொத்த விற்பனையாளர்கள் ஜீரகத்தை வாங்க அதிக ஆர்வம்காட்டியது விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்தது.  2014-15-ம் ஆண்டு ஏப்ரல்-மார்ச் காலகட்டத்தில் ஏற்றுமதியான நறுமணப் பொருட்களில் ஜீரகம் இரண்டாம் இடத்தில் இருக் கிறது. இந்த காலகட்டத்தில் 28% அதிகரித்து, 1,55,500 டன் ஜீரகம் ஏற்றுமதியாகி இருக்கிறது என இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது. 

நடப்புப் பருவத்தில் இந்தியாவின் ஜீரக உற்பத்தி 2.84 லட்சம் டன்னாக இருக்கும் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. இது 2013-14-ம் ஆண்டில் 4.02 லட்சம் டன்னாகக் காணப்பட்டது.  இதற்குக் காரணம், 2013-14-ம் ஆண்டில் 8.04 லட்சம் ஹெக்டேராக இருந்த ஜீரக பயிர் விதைப்பு,  2014-15-ம் ஆண்டின் நடப்பு  பருவத்தில் 5.07 லட்சம் ஹெக்டேராக குறைந்ததே!

கமாடிட்டி டிரேடிங்

கொத்துமல்லி (Coriander)

கொத்துமல்லியை வாங்க வர்த்தகர்கள் அதிக ஆர்வம் காட்டாததாலும், தரமற்ற கொத்துமல்லி வரத்து அதிக அளவில் காணப்பட்டதாலும் கடந்த வாரத்தில் கொத்துமல்லி விலை குறைந்து காணப் பட்டது. பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக தற்போது கொத்துமல்லியின் தரம் குறைந்திருப்பதாக வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது. 

இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தின் சமீபத்திய அறிக்கையில், 2014-15-ம் ஆண்டின் ஏப்ரல்-மார்ச் காலகட்டத்தில் ஏற்றுமதி 46,000 டன்னாக அதிகரித்துள்ளது. பயிர் சேதம் மற்றும் உற்பத்திக் குறைவு போன்ற காரணங்களால் அடுத்த வாரம் விலை அதிகரிக்கலாம்!

செ.கார்த்திகேயன்

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

அடுத்த கட்டுரைக்கு