Published:Updated:

பிசினஸ் சீக்ரெட்ஸ் - 3

தொழில்முனைவோர்களுக்குத் துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்

தவறான அபிப்ராயங்களை ஒழிப்போம்!

ன்றைக்கு மிகப் பெரிய நிறுவனங்களை நடத்திவரும் பிசினஸ்மேன்கள் ஏறக்குறைய ‘சூப்பர்மேன்’களாகத்தான் பார்க்கப்பட்டு வருகிறார்கள். டாடா, அம்பானி, பிர்லா, திலிப் சிங்வி, பிரேம்ஜி, முன்ஜால் என எத்தனையோ தொழிலதிபர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

முப்பது, நாற்பது ஆண்டுகளுக்குள் ஆயிரக்கணக்கானக் கோடிகளை இவர்களால் எப்படிச் சம்பாதிக்க முடிந்தது? அந்தத் திறமையும் புத்திசாலித்தனமும் நமக்குச் சுட்டுப்போட்டாலும் வராதே என்று நினைத்து பலரும் ஆச்சர்யப்படுகிறார்கள்.

பிசினஸ் சீக்ரெட்ஸ் - 3

பிசினஸில் வெற்றி பெற்ற எப்பேர்ப்பட்ட தொழிலதிபராக இருந்தாலும் சரி, அவர்களும் உங்களைப்போலச் சாதாரண மனிதர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களைவிடக் கொஞ்சம் புத்திசாலித்தனமாக, வித்தியாசமாக யோசித்து, வாய்ப்புகளைக் கண்டறிந்து, சிறிது ரிஸ்க் எடுத்து, கடினமாக உழைத்ததன் விளைவுதான் இன்றைக்கு அவர்கள் பலரும் கண்டுவியக்கும் மனிதர்களாக மாறியிருக்கிறார்கள்.

இத்தகைய வியக்கத்தக்க மனிதராக நீங்கள் மாற முடியும். அதற்கு பிசினஸ் பற்றி உங்கள் மனதில் இருக்கும் தவறான அபிப்ராயங்களை முதலில் களைவது அவசியம். காரணம், பிசினஸ் பற்றிய தவறான அபிப்ராயங்கள்தான் ஒருவரை பிசினஸ் உலகில் காலடி எடுத்து வைக்கவிடாமல் தடுத்துவிடுகிறது. எனவே, நமக்குள் குவிந்துகிடக்கும் தவறான அபிப்ராயங்களை முதலில் ஒழித்துக்கட்டி விடுவோம். பிசினஸ் பற்றி நமக்குள் இருக்கும் தவறான அபிப்ராயங்கள் என்னென்ன?

பணமிருக்கிறவர்களுக்குத்தான் பிசினஸ் லாயக்கு!

நிறையப் பணமிருந்தால்தான் பிசினஸ் செய்ய முடியும் என்று பலரும் நினைக்கிறார்கள். இது உண்மையானால், இன்றைக்கு உலகம் முழுக்க இருக்கும் பணக்காரர்கள் பலரும் மேலும் மேலும் பல பிசினஸ்களைச் செய்து பணம் சேர்த்திருப் பார்கள். ஆனால், நிறையப் பணமிருந்தும் பிசினஸை சரியாகச் செய்ய முடியாமல் போன பலரை எனக்குத் தெரியும்.

கையில் காசு இல்லாமல், வித்தியாசமான ஐடியாவை வைத்துக்கொண்டு, தொழில் செய்யப் புகுந்து, இன்றைக்கு பில்லியன் கணக்கில் டாலர்களைச் சேர்த்தவர்கள் பலர். இந்திய அளவில் ஃப்ளிப்கார்ட் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால், உலக அளவில் அலிபாபாவின் ஜாக் மா எனப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். இவர்கள் பணத்தை நம்பி தொழிலைத் தொடங்கவில்லை. தங்களது வித்தியாசமான சிந்தனையை அடிப்படையாக வைத்துதான் தொழிலைத் தொடங்கி ஜெயித்தார்கள்.

பிசினஸ் செய்வதற்குப் பணம் முக்கியம்தான். ஆனால், அதுவே எல்லாமாகிவிடாது. வித்தியா சமான ஐடியா 50%, கடுமையான உழைப்பு 25%, மீதமுள்ள 25% மட்டும்தான் பணம். பணத்தைத் திரட்டத் தெரிந்து, திறமையான ஆட்களை வைத்து சரியாக நிர்வாகம் செய்தால், பிசினஸில் வெற்றியே!

படித்தவர்களுக்குத்தான் பிசினஸ் லாயக்கு!

பிசினஸ் செய்வதற்கும் படிப்புக்கும் பெரிய சம்பந்தம் எதுவுமில்லை. நீங்கள் ஏதாவது ஒரு

பிசினஸ் சீக்ரெட்ஸ் - 3

கல்லூரிப் படிப்புப் படித்திருந்தால் நல்லது. பிசினஸ் பற்றிப் படித்திருந்தால் இன்னும் நல்லது. ஆனால், படிக்கவே இல்லை என்பது பிசினஸ் செய்வதற்குத் தடையாக இருக்காது. சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியும், சரவண பவன் அண்ணாச்சியும் என்ன படித்துவிட்டு, பிசினஸில் இத்தனை பெரிய வெற்றி கண்டார்கள்?

பிசினஸ் செய்வதற்கு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியதெல்லாம், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய நான்கு கணக்குகள்தான். இவற்றுடன் பணியாளர்களை நன்கு நடத்திச் செல்லும் விதம் உங்களுக்குத் தெரிந்தால் போதும், பிசினஸில் நீங்கள் கொடிகட்டிப் பறந்துவிடலாம். நீங்கள் நன்றாகப் படித்திருந்தால், பிசினஸை இன்னும் அறிவுப்பூர்வமாகச் செய்ய முடியும்.

இளைஞர்களுக்குத்தான்  பிசினஸ் லாயக்கு!

இத்தனை நாளும் ஏதோவொரு நிறுவனத்தில் கஷ்டப்பட்டு உழைத்து, இப்போது ஓய்வு பெற்றுவிட்டேன். இனி, நான் எங்கே பிசினஸ் செய்வது என்று நினைக்கிறார்கள் சிலர்.

வயதுக்கும் பிசினஸ் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இளைஞர்கள் ஓடியாடி உழைக்கும் தெம்புடன் இருப்பார்கள் என்பது உண்மை தான். ஆனால், ஏறக்குறைய 30 ஆண்டுகள் பல்வேறு நிறுவனங் களில் வேலை பார்த்த அனுபவம் இருப்பது ரிட்டையர்டு ஆனவர் களுக்கு பாசிட்டிவ்வான அம்சம் அல்லவா?

இளைஞர்கள் அனுபவ மின்மையாலும் ஜெயிக்க வேண்டும் என்கிற துடிப்பினாலும் சில தவறுகளைச் செய்துவிட வாய்ப்புண்டு. ஆனால், அனுபவ சாலிகளான பெரியவர்கள் அப்படி எந்தத் தவறும் செய்ய வாய்ப்புகள் குறைவு. 

ரிட்டையர்டு ஆனவர்கள் தாங்கள் சேர்த்த பணம் முழு வதையும் பணயமாக வைத்துப் பிசினஸ் தொடங்க வேண்டும் என்பதில்லை. அதில் 10 சதவிகித பணத்தைப்போட்டு சிறிய அளவில் ஏதாவது ஒரு தொழிலை செய்வதற்கு வயது  என்பது நிச்சயம் தடையல்ல.
 ஆண்களுக்குத்தான் பிசினஸ் லாயக்கு!

பெண்களுக்கு பிசினஸ் சரிப்பட்டு வராது எனப் பல பெண்கள் நினைக்கிறார்கள். இதற்குக் காரணம், அவர்கள் அல்ல; காலம் காலமாகக் குடும்பப் பொறுப்பை அவர்கள் தலையில் சுமத்தி, வீட்டிலேயே அவர்களை அடைத்துவைத்து விட்ட ஆண்கள்தான். பல தலைமுறைகளாக அவர்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்ததால், தங்களால் பிசினஸில் ஜெயிக்க முடியுமா என்கிற சந்தேகம் அவர்களுக்குள் லேசில் உடைக்க முடியாத பனி போலக் குவிந்துவிட்டது.

ஆனால், பிசினஸை ஆண்கள் அளவுக்குப் பெண்களாலும் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம், பயோகான் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் எம்டியான கிரண் மஜும்தார் ஷா. எல்லா துறைகளையும் போலவே, தற்போது பிசினஸிலும் பெண்கள் அதிக அளவில் நுழையத் தொடங்கியிருப்பது ஆரோக்கி யமான மாற்றமே!

பிசினஸ் சீக்ரெட்ஸ் - 3

தோற்றுவிடுவோமோ என்கிற பயம்!

இந்தப் பயம்தான் பலரையும் பிசினஸை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதபடி செய்துவிடு கிறது. ஒரு விஷயத்தைச் செய்வ தற்கு முன்பே அதில் நாம் தோற்றுப்போய்விடுவோமோ என்று நினைப்பது அறியாமை. எந்த பிசினஸும் கட்டாயம் ஜெயிக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத மாதிரி, கட்டாயமாகத் தோற்கும் என்றும் உறுதியாகச் சொல்ல முடியாது.

எந்த பிசினஸாக இருந்தாலும் வெறும் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி செய்யாமல், அதை முறைப்படி தெரிந்துகொண்டு, அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்தறிந்து செய்வோம் எனில், அதில் தோல்வி என்கிற பேச்சுக்கே இடமில்லை. மிகப் பெரிய பொருளாதாரப் பலம் கொண்ட நிறுவனங்கள்கூட, புதிதாக ஆரம்பித்த சில தொழில்களில் தோற்கக் காரணம், அதைச் சரியாக ஆராய்ந்தறியா மல் செய்வதுதான்.

எனவே, வெற்றி, தோல்வி குறித்த சிந்தனை இல்லாமல், பிசினஸை சரியாகத்தான் செய்கிறோமா என்கிற சிந்தனை யுடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தால், நிச்சயம் வெற்றிதான்!

நஷ்டம் வந்துவிடுமோ என்கிற அச்சம்!

பிசினஸ் ஆரம்பித்தபின், அதில் தோல்வி ஏற்பட்டு, கஷ்டப் பட்டுச் சேர்த்த பணம் அத்தனை யையும் இழந்து விடுவோமோ என்கிற பயம் எல்லோருக்குமே உண்டு. அப்படியொரு நிலைமை வந்தால், மீண்டும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறுவேன் என்கிற மனத்திடம் உங்களிடம் இருக்க வேண்டும். எங்கள் வீட்டில் நாங்கள் கூட்டாகத் தொழில் தொடங்கினோம். பிசினஸ் நன்றாக நடந்ததால், சகோதரர்கள் ஒவ்வொருவருக் கும் ஒரு கார் வாங்கினோம். ஆனால், எனக்குத் தனியாக பிசினஸ் தொடங்க வேண்டும் என்று ஆசை. அதனால், எங்கள் வீட்டுக்கு அருகிலேயே தனியாக ஒரு வீடு எடுத்து, அங்கு பிசினஸ் செய்யத் தொடங்கினேன். அப்போது காரை விட்டுவிட்டு, சைக்கிளிலில்தான் சென்றேன். உனக்கு இதெல்லாம் தேவையா என்று என்னிடம் கேட்டார்கள். நான் அதைப் பொருட்படுத்தவே இல்லை. காரணம், பிசினஸில் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறிதான் என்னிடம் இருந்தது. நஷ்டம் வந்துவிடுமோ என்று நினைத்துப் பயப்படவே இல்லை. இப்படி நீங்களும் நினைத்தால் பிசினஸில் ஜெயிப்பது உறுதி.

பிசினஸ் பற்றி உங்கள் மனதில் உள்ள தவறான அபிப்ராயங்களை இப்போது ஒழித்துக்கட்டி யிருப்பீர்கள். இனி, பிசினஸ் செய்வதற்கான தொழிலை எப்படித் தேர்வு செய்வது என்பது பற்றிச் சொல்கிறேன்.

(ஜெயிப்போம்)

தொழில்முனைவோர்கள் கவனத்துக்கு!

தொழில்முனைவோர்களுக்கு ஏற்படும் பிசினஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு ‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன் இந்தப் பகுதியில் பதில் அளிக்க உள்ளார். உங்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை businesssecrets@vikatan.com என்கிற மெயில் ஐடி-க்கு அனுப்பலாம்.

சி.கே.ஆரிடம் கேளுங்கள்!

நான் ஒரு  தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே என் சகோதரன் நடத்தும் இந்த ஸ்வீட் ஸ்டாலுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்து வருகிறேன். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை. நாங்கள் என்ன செய்யலாம்?

விஜய்.

‘‘ஒரு தொழில் அதிக லாபம் தரவில்லை என்றால், அதற்கு மூன்று விஷயங்கள்தான் இருக்க முடியும். முதலாவது விஷயம், தரம். நீங்கள் தயார் செய்து விற்கும் பொருட்களின் தரம் அற்புதமாக இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள். நீங்கள் தயாரிக்கும் பொருள் பத்தோடு பதினொன்றாக இருக்கிறது என்றால், உங்கள் கடையை அவர்கள் தேடிவர வேண்டும் என்று என்ன அவசியம்?

இரண்டாவது விஷயம், விலை. நீங்கள் விற்கும் பொருளின் விலை சரியாக இருக்க வேண்டும். சாதாரணத் தரத்தில் செய்யப்படும் பொருளுக்கு அதிக விலை வைத்தால், அதை யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.

 மூன்றாவது விஷயம், கடை அமைந்துள்ள இடம் மற்றும் சூழல். ஒரு வாடிக்கையாளர் உங்கள் கடைக்கு வந்தால், அந்தக் கடையின் சூழல் அவருக்குப் பிடிக்க வேண்டும். அந்தச் சூழலே அவரை மீண்டும் மீண்டும் கடைக்கு வரவழைக்கிற மாதிரி இருக்க வேண்டும்.
இந்த மூன்று விஷயங்களிலும் உங்கள் ஸ்வீட் ஸ்டால் சரியாகத்தான் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, தேவையான மாற்றங்களைச் செய்துபாருங்கள். அதன்பின் மாற்றம் வருவதை நீங்களே உணர்வீர்கள்.’’

அடுத்த கட்டுரைக்கு