Published:Updated:

பிசினஸ் சீக்ரெட்ஸ் - 6

தொழில்முனைவோர்களுக்குத் துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்

பிரீமியம் ஸ்டோரி

வித்தியாசம் வெற்றி தரும்!

ந்தவொரு தொழிலாக இருந் தாலும் சரி, அதை எந்த அளவுக்கு நாம் வித்தியாசமாகச் செய்கிறோம் என்பதைப் பொறுத்தே அந்தத் தொழிலில் நம் வெற்றி இருக்கும்.

ஒரு ஸ்வீட் ஸ்டாலுக்குப் போகிறீர்கள். இனிப்பு, கார வகைகள் ஒவ்வொன்றும்  சுவையாக இருக்கிறது. தரத்தில் வித்தியாசம் இருப்பதை உடனே புரிந்துகொள்கிறீர்கள்.

பிசினஸ் சீக்ரெட்ஸ் - 6

அந்த ஸ்வீட் ஸ்டாலில் உட்கார இடம், ஏசி, மெல்லிய இசை, அனுசரணையான கவனிப்பு என்று வாடிக்கையாளர் சேவை பிரமாதமாக இருக்கிறது. சூழலில் அவர்கள் வித்தியாசம் காட்டி இருப்பதை உடனே புரிந்துகொள்கிறீர்கள். இதற்கு ஒரு நல்ல உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், கிருஷ்ணா ஸ்வீட்ஸை சொல்லலாம்.

இன்னொரு ஸ்வீட் கடை. ரோட்டை ஒட்டிய கடை என்பதால், உட்காரவெல்லாம் இடம் கிடையாது. விலை, தரம் ஆகிய விஷயங்களில்  சாதாரணம் என்பதால், அந்தக் கடை நம் மனதில் இடம் பிடிக்காமலே போய்விடும்.

ஏதாவது ஒரு விஷயத்தில் உங்கள் பிசினஸை நீங்கள் வித்தியாசமாகச் செய்தால்தான், வாடிக்கையாளர்கள் உங்களைக் கவனிக்கத் தொடங்குவார்கள். உங்களைத் தேடி மீண்டும் மீண்டும் வருவார்கள்.

இப்படி நீங்கள் காட்டும் வித்தியாசமானது வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு கார் நிறுவனம், ‘எங்கள் காரில் கூடுதல் குளுமை (extra chilling) கிடைக்கும்; குழந்தைகள் காரில் இருக்கும்போது கதவை மூடிக்கொண்டால் எளிதில் திறப்பதற்கு ‘சைல்டு லாக்’ வைத்திருக்கிறோம்’ என்று பத்து வகையான வித்தியாசங்களைக் காட்டுவதாக வைத்துக்கொள் வோம். இந்த வித்தியாசங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவசியம் தேவையா என்பதைப் பார்க்க வேண்டும்.

சிலர், கூடுதல் குளுமை தேவை இல்லை என்பார்கள். சிலர், என் வீட்டில் குழந்தையே இல்லை. எனக்கெதற்கு சைல்டு லாக் என்பார்கள். இப்படி ஒவ்வொரு வித்தியாசத்தையும் பல வாடிக்கையாளர்கள் ஒதுக்கி விடும் போது, அந்த பிசினஸே டல்லடிக்கத் தொடங்கிவிடுகிறது.

பிசினஸ் சீக்ரெட்ஸ் - 6

காரை பொறுத்தவரை, ஒரு வாடிக்கையாளர் முக்கியமாக எதிர்பார்க்கும் வித்தியாசம் என்ன? அந்த கார் எந்த அளவுக்கு மைலேஜ் தரும் என்பதைத்தான். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒரு கார் 10 கி.மீ தருகிறது எனில், இந்த கார் 14 கி.மீட்டர் தரும் என்றால் அது வித்தியாசம்தான். லேட்டஸ்ட் வசதிகளுடன் கூடிய ஒரு கார் 6 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கிறது எனில், அதே  வசதி களுடன் கூடிய இன்னொரு கார் 5 லட்சம் ரூபாய்தான் என்றால், அது வித்தியாசம். மாருதி நிறுவனம் தனது தொடக்கக் காலத்தில் இதைத்தான் செய்தது. அதிக மைலேஜ், குறைந்த விலை என்கிற வித்தியாசத்தைச் சரியாகக் காட்டியதன் விளைவு தான், இன்றைக்கும் கார் சந்தை யில் 60 சதவிகித பங்களிப்பை வைத்துக் கொண்டிருக்கிறது.

வித்தியாசம் வெற்றி தரும் என்பதற்கு எனது தொழில் அனுபவத்தையே உதாரணமாகச் சொல்கிறேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் சலூன் பிசினஸில் இறங்கினோம். எங்களது நிறுவனமோ கேசப் பாதுகாப்புத் தொடர்பான பொருட்களைத் தயாரிக்கும் ஓர் உற்பத்தி நிறுவனம். ஆனால், சலூன் என்பதோ சர்வீஸ் பிசினஸ். வாடிக்கையாளர் களுக்கு நேரடியாக சர்வீஸ் செய்வது என்பது எங்களுக்குப் புதிய அனுபவம். எனவே, அந்தத் தொழிலில் இறங்கலாமா, வேண்டாமா என்று தீவிரமாக யோசித்து, மார்க்கெட்டை ஆராய்ந்தோம்.

சலூன் பிசினஸில் இறங்குவ தால், நாங்கள் தயாரிக்கிற சில உயர்தரமான பொருட்களை வாடிக்கையாளர்களிடம் நேரடியாக விற்க முடியும். இதனால் எங்களுக்குக் கூடுதல் லாபம் கிடைக்கும். எனவே, இந்தத் தொழிலில் தைரியமாக இறங்கலாம் என்று முடிவெடுத் தோம்.

நம் ஊரில் அழகுக்கலை நிலையங்களோ அல்லது முடிவெட்டும் சலூன் கடைகளோ புதிய விஷயமல்ல. தெருவுக்குத் தெரு சலூன் கடைகள் இருக்கவே செய்கின்றன. அதேமாதிரியான சலூன் கடைகளை நாமும் திறந்தால், நம்மைத் தேடி யாரும் வரமாட்டார்கள். நம் அணுகு முறை வித்தியாசமாக இருந்தால் தான் நம்மைத் தேடி வருவார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, வித்தியாசமான ஐந்து வகை மாடல்களை உருவாக்கி,  சோதனை அடிப்படையில்  ஒரே நேரத்தில் செய்து பார்த்தோம். 

முதலாவதாக, எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் சாதாரண சலூன் போல, ஒரு அழகுக்கலை நிலையத்தை ஆண்களுக்காகத்  தொடங்கி னோம். அதேபோல, எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் சாதாரண அழகுக்கலை நிலையத்தைப் பெண்களுக்காக அமைத்தோம்.

மூன்றாவதாக, ஏசி வசதியுடன் கூடிய, ஆனால் குறைந்த கட்டணம் வசூலிக்கிற மாதிரி ஒரு சலூன் கடையைத் தொடங்கினோம். நான்காவதாக, விஸ்தாரமான இடம், உள்ளே அருமையான அலங்கார வேலைபாடுகள், ஏசி வசதி, ஆண்கள், பெண்களுக்குத் (குழந்தைகளும்) தனித்தனி சேவை, நடுத்தரக் கட்டணம் என்கிற மாதிரி ஒரு கடையைத் திறந்தோம். சூப்பரான அலங்கார வேலைபாடுகள், அருமையான ஏசி வசதி, கட்டணம் கொஞ்சம் அதிகம் என்கிற மாதிரி ஐந்தாவ தாக ஒரு கடையைத் திறந்தோம்.

பிசினஸ் சீக்ரெட்ஸ் - 6

இதில் எந்த மாடல் வெற்றி பெற்றது தெரியுமா? முதல் இரண்டு மாடலில் எந்த வித்தியா சமும் இல்லாததால், வாடிக்கை யாளர்களின் கவனம் பெரிய அளவில் கிடைக்கவில்லை. மூன்றாவது மாடலில் ஏசி வசதி, குறைந்த கட்டணம் என்பதால், லாபத்துக்கு வழி இல்லாமல் இருந்தது. நான்காவது மாடல் மொத்த குடும்பத்துக்கானது என்பதால், வாடிக்கையாளர் களின் கவனத்தை உடனே ஈர்த்தது. ஐந்தாவது மாடலானது, வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே என்பதால், அந்தப் பிரிவினரின் கவனத்துக்கும் உடனே போனது.

எனவே, முதல் மூன்று மாடல்களுக்கான கடைகளை மூடிவிட்டு, நான்காவது மாடல் வித்தியாசமாக இருந்ததால், அதை ‘கிரீன் டிரென்ட்ஸ்’ என்கிற பெயரிலும், ஐந்தாவது மாடல் பிரீமியம் பிராண்டாக ‘லைம் லைட்ஸ்’ என்கிற பெயரி லும் நாங்கள் நடத்தி வருகிறோம். இன்றைக்கு ‘கிரீன் ட்ரென்ட்ஸ்’ சென்னை போன்ற பெரிய நகரத்தைத் தவிர, மதுரை, நாமக்கல் என எந்த நகரத்தில் தொடங்கினாலும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பையே பெறுகிறது.

எனவே, நீங்கள் எந்தத் தொழில் செய்வதாக இருந்தாலும், அதை எந்த அளவுக்கு வித்தியாச மாகச் செய்ய முடியும் என்பதைப் பாருங்கள். தொழிலில் வித்தியாசம் காட்டுவது என்பதற்கு வானமே எல்லை. இதை நீங்கள் வேறு எங்கும் சென்று படிக்க வேண்டாம். எந்தெந்த வகையில் கூடுதல் சேவைகள் அளித்தால், வாடிக்கையாளர்கள் இன்னும் அதிக மகிழ்ச்சி அடைவார்கள் என்பதைப் புரிந்துகொண்டு  செயல்படுத்தினாலே போதும்.

இதற்காக நிறையச் செலவு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. இதனால் கிடைக்கும் வருமானம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். நிறைய வருமானம் பெறத்தானே பிசினஸ் செய்ய வந்திருக்கிறோம். பிறகு அதில் கவனம் செலுத்தாமல் இருக்கலாமா?

(ஜெயிப்போம்)

சி.கே.ஆரிடம் கேளுங்கள்!

நான் இப்போது என்னுடைய குடும்பத் தொழிலை கவனித்து வருகிறேன். ஆனால், எனக்கான தொழிலை எப்படித் தேர்வு செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்...!

சரவணன் ராம்தாஸ்.

‘‘நீங்கள் குழப்பமடையத் தேவையில்லை. உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்தபடி உங்கள் கேள்விக்குப் பதில் காண முடியாது. சந்தைக்குச் செல்லுங்கள். என்னென்ன தொழில்கள் இருக்கின்றன என்பதை மனம் திறந்து ஆராயுங்கள். உங்களுக்குப் பிடித்தமான தொழில்களை முதலில் பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். இந்தத் தொழில்களை உங்களால் சிறப்பாகச் செய்ய முடியுமா என்பதை அங்குலம் அங்குலமாக ஆராய்ச்சி செய்து பாருங்கள். கடைசியில் உங்களுக்கேற்ற, உங்களுக்கான தொழிலை உங்களால் கண்டடைய முடியும். இதனுடன் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி இருந்தால், உங்களால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.’’

தொழில்முனைவோர்கள் கவனத்துக்கு!

தொழில்முனைவோர்களுக்கு ஏற்படும் பிசினஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு ‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன் இந்தப் பகுதியில் பதில் அளிக்க உள்ளார். உங்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை  businesssecrets@vikatan.com என்கிற மெயில் ஐடி-க்கு அனுப்பலாம்.

பிசினஸ் சீக்ரெட்ஸ் - 6
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு