Published:Updated:

தங்கத்தின் விலை: வீழ்ச்சி தொடருமா?

தங்கத்தின் விலை: வீழ்ச்சி தொடருமா?

பிரீமியம் ஸ்டோரி

நாணயம் விகடன் 21.06.2015 தேதியிட்ட இதழில் ‘வீழ்ச்சிக்குத் தயாராகிறதா தங்கம்’ என்ற தலைப்பில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.16,500 வரை விலை இறங்க வாய்ப்புகள் இருப்பதாக எழுதியிருந்தோம். நாம் சொன்னபடியே தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. தங்கம் விலை கடந்த பத்து நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு (8 கிராம் ஆபரணத் தங்கம்) ரூ.640 குறைந்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.2,400-க்குக் கீழே விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து குறைய என்ன காரணம், தங்கத்தை இப்போது வாங்கலாமா என்கிற கேள்விகளுடன் களத்தில் இறங்கினோம்.

தங்கத்தின் விலை: வீழ்ச்சி தொடருமா?

விலை குறையக் காரணம்!

அமெரிக்க ஃபெடரல் வங்கி விரைவில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், உலக நாடுகளில் ஒருவிதமான மந்தநிலை நிலவுகிறது. கிரீஸ், ஈரான் அணுகுண்டு ஒப்பந்தம் போன்றவற்றின் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு வலிமையடைந்து வருகிறது. டாலர் வலிமையடையும்போது, தங்கத்தின் விலை சரிவடையவே செய்யும்.

உலகிலேயே தங்கத்தை அதிகமாக வாங்குவது சீனாவும் இந்தியாவும்தான்.  சீனாவில் நிலவும் பொருளாதாரப் பிரச்னைகளினால் அங்குப் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தது. அந்த வீழ்ச்சியினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய தங்கத்தை விற்கவேண்டிய கட்டாயம் சீனர்களுக்கு. மேலும், சீனாவிடம் தங்கத்தின் கையிருப்பு போதிய அளவில் இல்லை. இதன் விளைவாக, தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் 1085 டாலர் என்கிற அளவில் வர்த்தக மாகி வருகிறது.

தங்கத்தின் விலை: வீழ்ச்சி தொடருமா?

இன்னும் விலை குறையுமா?

தங்கத்தின் விலை இன்னும் குறையுமா என மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் அண்ட் டைமண்ட் அசோசியேஷனின் தலைவர் ஜெயந்திலால் ஜே.சலானியிடம் கேட்டோம். “உலக அளவில் ஏற்கெனவே தங்கத்தில் முதலீடு செய்துவந்தவர்கள் தற்போது அதை நிறுத்தி உள்ளார்கள். இதனால் தங்கத்தின் விலையும் சரிய ஆரம்பித் துள்ளது. இந்த விலை சரிவு ஜூலை மாத இறுதிவரைத் தொடர வாய்ப்புள் ளது” என்றார்.

2013-ம் ஆண்டு தங்கத்தின் விலை குறைந்தபோது ஆர்வத்துடன் வாங்கிய அளவுக்கு தற்போது தங்கம் வாங்க மக்களிடம் ஆர்வமில்லை. ஆடி மாதத்தில்  திருமணங்கள் நடக்காது என்பதால் தங்கம் வாங்குவது குறைவாகவே உள்ளது. தவிர, பருவமழை சரியாகப் பெய்யுமா என்கிற சந்தேகம் நிலவுவதால், கிராமப்புற மக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

என்றாலும், தங்க நகைகள் வாங்க  சில நகைக் கடைகளில் கூட்டம் குறைய வில்லை. தங்கம் விலை தற்போது குறைந்துவரும் சமயத்தில் அதை வாங்குவதில் மக்கள் மனநிலை எப்படி உள்ளது என்பது குறித்து ஸ்ரீ கோல்டு ஜுவல்லரியின் நிர்வாக இயக்குநர் பவேஷ் கிரணிடம் கேட்டோம்.

தங்கத்தின் விலை: வீழ்ச்சி தொடருமா?

‘‘கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் மக்கள் அதிகமாக வாங்கத் துவங்கியுள்ளனர். முன்பு, தங்க நாணயங்கள் அதிகமாக வாங்கியவர்கள் இப்போது அதைத் தவிர்த்து, நகைகளையே அதிகம் வாங்க விரும்புகிறார்கள்” என்றார்.

உலகச் சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,085 டாலர் (வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி நிலவரப்படி, எம்சிஎக்ஸ் சந்தையில் 24 காரட் தங்கம் 10 கிராம் விலை ரூ.24,558) என்கிற அளவில் வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் விலை அடுத்துவரும் நாட்களில் எப்படி இருக்கும் என்பது குறித்து மும்பை காம்டிரென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகர் தியாக ராஜனிடம் கேட்டோம்.

“சர்வதேச சந்தையில் நிலவும் காரணங்களினால் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையவே செய்யும். அதாவது, 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.24,000 வரை வர வாய்ப்புள்ளது. ஒரு கிராம் 24 காரட் தங்கம் விலை ரூ.2,200 வரை வர வாய்ப்பு உள்ளது'' என்றார்.

தங்கத்தின் விலை: வீழ்ச்சி தொடருமா?

சிறந்த முதலீடு அல்ல!

தங்கத்தின் விலை  குறைந்து உள்ள நிலையில், தேவைப்படும்  அளவுக்கு அதை வாங்குவதில் தவறில்லை. ஆனால், அதையே மிகச் சிறந்த முதலீடாக நினைத்து, மொத்த பணத்தையும் தங்கத்தில் முதலீடு செய்வது சரியல்ல. தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பார்ப்பதைவிட வேறு முதலீடு களில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. கடந்த 20 ஆண்டுகளில் தங்கம் சுமார் 8.5 சதவிகித ஆண்டு வருமானமே தந்துள்ளது. ஆனால், பங்குச் சந்தை 20 வருடங்களில் சுமார் 14 சதவிகித வருமானம் தந்துள்ளது.

கோல்டு இடிஎஃப் பெஸ்ட்!

தங்கத்தின் விலை: வீழ்ச்சி தொடருமா?

தங்கத்தில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தற்போது அதை நகை களாக வாங்காமல், கோல்டு இடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஆபரணத் தங்கம் விலை உயர்ந்து லாபம் தருகிற மாதிரி, கோல்டு இடிஎஃப் திட்டங்களும் உயர்ந்து லாபம் தரும். தவிர, செய்கூலி, சேதாரம் போன்ற இழப்புகளும் இல்லை. தங்க நகைகளைப் போலவே, கோல்டு இடிஎஃப் யூனிட்களை யும் அடமானம் வைத்து கடன் பெறமுடியும். தேவைப்படும் போது சந்தை விலைக்கேற்ப உடனே விற்கவும் முடியும். தற்போது தேவையில்லையெனில், பிற்காலத்தில் தேவைப்படும் போது இந்த இடிஎஃப் யூனிட்களை விற்று, தங்கம் வாங்கலாம் என்பதால், கோல்டு இடிஎஃப் திட்டங்களே முதலீட்டுக்கு பெஸ்ட்!

தங்கத்தின் விலை: வீழ்ச்சி தொடருமா?

தங்க அடமானத்துக்குக் குறைந்த கடன்!

தங்கம் வாங்கினால் அவசரத்துக்கு அடமானம் வைத்துப் பணம் பெறலாம் என்பதே பலரது எதிர்பார்ப்பு. முன்பு, தங்கம் விலை அதிகமாக இருந்ததால், அடமானமாக வைத்துப் பெறும் கடன் தொகையும் அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது தங்கம் விலை குறைந்திருப்பதால், அடமானமாக வைத்துப் பெறும் கடன் தொகையும் குறைந்திருக்கிறது. தங்கத்தின் விலை மதிப்பில் 75 சதவிகிதம் வரை மட்டுமே கடன் தரவேண்டும் என ஆர்பிஐ அறிவுறுத்தி இருக்கிறது. விலை குறைந்துள்ளதால் நிதி நிறுவனங்கள் அடகுக் கடனின் ஒரு பகுதியை உடனே திருப்பிக் கட்டச் சொல்லி வலியுறுத்தி வருகின்றன. எனவே, தங்க அடமானக் கடன் அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது!

இரா.ரூபாவதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு