Published:Updated:

நிதி... மதி... நிம்மதி - 6

குடும்ப நிதி மேலாண்மை தொடர்பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

‘கடவுளாவே இருந் தாலும், வாழ்க்கை யில் என்னைக்கா வது ஒருநாளேனும், கடன் வாங்கத்தான் வேணும்.’

கடன் என்கிற பிடியில் சிக்காத மனிதனே இல்லை; கடன் வாங்காமல் வாழ்வது, சாத்தியமே இல்லை என்கிற அளவுக்கு, நமது வாழ்க்கைமுறை மாறிவிட்டது.

ஏன் கடன் வாங்குகிறோம்..? ‘பற்றாக்குறைதான்’ என்று சொன்னால், அது மட்டுமே சரியான பதில் அல்ல.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நிதி... மதி... நிம்மதி - 6

‘ஏழைங்க’ மட்டும்தான் கடன் வாங்குகிறார்களா..? மிகப் பெரிய செல்வந்தர்களும்கூட, தொழில் முன்னேற்றத்துக்கு, கடன் என்கிற பாதையைத் தேர்ந்தெடுக்கிறார் களா, இல்லையா..?

ஆக, ஒவ்வொருவருக்கும், கடன் வாங்குதலை நியாயப் படுத்துவதற்கான ஏதேனும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது.

கவனித்தீர்களா..? நியாயப் படுத்துதல். கடன் வாங்குவதாக இருந்தால், அதற்கு ஒரு நியாயமான காரணம் இருந்தாக வேண்டும். இதையே திருப்பிப் போட்டும் சொல்லலாம். நியாயமான காரணத்துக்காகக் கடன் வாங்கலாம்.

அது சரி.., எவையெல்லாம் நியாயமான காரணங்கள்? காரணங்கள் என்று சொல்வதை விட, சூழ்நிலைகள் அல்லது தருணங்கள் என்று சொன்னால் இன்னமும் பொருத்தமாக இருக்கும்.

‘இருப்பு’, அதாவது ‘சர்வைவல்’ பிரச்னை. உடனடியாக ஏதாவது செய்து, நிலைமையைச் சமாளிக்காவிட்டால், ஒருவரின் வாழ்க்கை அல்லது தொழில் அல்லது எதிர்காலம் மொத்த முமே அழிந்துவிடக்கூடிய ஆபத்தானக் கட்டம்.

இத்தகைய சூழலில் அவருக்கு, கடன்தான் கடவுள். கடன் தருகி றவர்தான், உண்மையில், கடவுளின் தூதுவர்.

‘கடவுளாட்டம் வந்து எங்களைக் காப்பாத் துனீங்க... எங்க உடம்புல உசுரு இருக்கிற வரைக்கும், இந்த உதவியை நாங்க மறக்கவே மாட்டோம்...’ அடிமனதில் இருந்து வந்துவிழுகிற இந்த வாக்கியத்தை, இன்று சமுதாயத்தில் மிக உயரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் முதற்கொண்டு, அடித்தட்டு மக்கள் வரை, எத்தனை பேர் பயன் படுத்தி இருப்பார்கள்..? இனியும் பயன்படுத்தப் போகிறார்கள்..?

இதேபோல், இன்றைய கடன், நாளைக்கு நேரவிருக்கும் பெரிய இழப்பைப் போக்கும் என்றால், கட்டாயம் கடன் வாங்கலாம்.

நிதி... மதி... நிம்மதி - 6

உதாரணமாக..? பல குடும்பங்களில் நடைபெறுகிற விஷயம்தானே..? கல்விக் கட்டணம். ‘நாளைக்குள்ள கட்டலைன்னா, ‘ஸ்கூல்’ல இருந்து பேரை எடுத்துவேன்னு சொல்றாங்க.. அப்படி எதுவும் நடந்துச்சின்னா, புள்ளைக்கு பாவம் ஒரு வருஷம் வீணாப் போயிடுங்க...’ என்று அடிவயிறு கலங்க, கண்ணீருடன் முறையிடு கிறார்களே.., இந்தச் சூழ்நிலையில், கடன் வாங்குதல் தவறு என்று சொல்ல முடியாது.

பொதுவாகப் பார்க்கும்போது, தக்கசமயத்தில் கிடைக்கிற பண உதவிதான், ‘காலத்தினாற் செய்த நன்றி’யாக, பரிணமிக்கிறது. பணத்தை மையமாகக் கொண்ட, முற்றிலும் வணிகமயமாகிவிட்ட வாழ்க்கைமுறையில், ‘உடுக்கை இழந்தவன் கைபோல்’, அவசரத்துக்குப் பணம் தந்து உதவுவதுதான் ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று புது இலக்கணம் வகுத்துவிட்டோம். அதனால்தான், பல்வேறு வங்கி களும், ‘உற்ற நண்பனாக’ தங்களை விளம்பரப்படுத்திக்கொள்     கின்றன.  (பல சமயங்களில், அப்படியே செயல்படவும் செய்கின்றன!)

சரி, இப்போது, வேறொரு கேள்வி முளைக்கிறது. கடன் வாங்காமலே வாழ்க்கையை நடத்த முடியாதா..? ‘என்ன ஆனாலும் சரி, நான் யார் கிட்டயும் போயி, எனக்குக் கடன் குடு என்று நிக்கவே மாட்டேன்...’

இப்படி வைராக்கியத்துடன் வாழ்கிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

‘அப்பப்போ, ஏதோ அவசரத்துக்கு, கைமாத்தா வாங் கிக்கறதுதான்... குடுத்துக்கறது தான். அதுவும் கூடாதுன்னா எப்படி..?’ என்று யதார்த்தம் பேசுகிறவர்களும் உண்டு. இவர்களைப் பொறுத்தமட்டில், ‘இது ஒரு பெரிய விஷயமே இல்லை...’ இதைத்தான் செலவு மேலாண்மையும் வலியுறுத்து கிறது. ஆனால், கடன் பற்றிய நமது சமுதாயத்தின் பார்வையே வேறு.

‘கடன்’ என்று வருகிற போது, நாம் இன்னமும் ‘கட்டுப்பெட்டி’யாகவே தான் இருக்கிறோம். ‘தப்பு’, ‘தீமை’, ‘குற்றம்’, ‘அவமானம்’ என்று, கடன் வாங்குதலை, செய்யக்கூடாத செயலா கவே வகைப்படுத்தி வைத்து இருக்கிறோம். ‘கடன் வாங்கி ஓட்டற தெல்லாம் ஒரு பொழப்பா..?’ என்று கோபமாகக் கேட்ப வர்கள், உண்மையான அக்கறையுடன்தான் சொல்கிறார்கள். சந்தேகம் இல்லை. ஆனால், கடன் வாங்குதலை ஒரு சமூகத் தீமை யாகப் பார்ப்பது சரிதானா..?

ஊஹூம். ‘செலவு மேலாண்மை’, அப்படிச் சொல்ல வில்லை. வெற்றிகரமான நிதி ‘ஆலோசகர்’ யார்..? எவர் ஒருவர், தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு, அதிக அளவில் பல முனைகளில் இருந்தும் கடன் பெற்றுத் தருகி றாரோ, அவர்தான்.

தேவையானபோது, தேவை யான அளவுக்கு, ‘நிதி ஓட்டம்’ (fund flow) இருப்பதை உறுதி செய்வதுதான், நிறுவனங்களில், நிதி இலாகாவின் முழுநேரப் பணியாக இருக்கிறது. ‘நிதி ஓட்டம்’ சீராக இருக்க உதவுவது, ஒன்றே ஒன்றுதான். கடன்.

நம்மிடம் இருக்கிற நிதியை வைத்துக்கொண்டு, அதற்குள்  ‘வியாபாரத்தை’ நடத்திக் கொண்டு, சிறிது சிறிதாக வளர்ந்தால்போதும் என்கிற எண்ணம், நவீன மேலாண்மைச் சிந்தனையாளர்களைப் பொறுத்தமட்டில், பிற்போக்குத் தனமானது.

‘பிசினஸுன்னாலே, ரிஸ்க்குதானே..? அப்புறம்..? கடன் வாங்கறதுக்குப் பயந்தா, பொட்டிக் கடையிலயே, வாழ்நாள் முழுக்க முடங்கிக் கிடக்க வேண்டியதுதான்’ என்று யாரேனும் சொன்னால், ‘வீராப்பு’ பேசுகிறான் என்று ஒதுக்கிவிட முடியாது. தனது வியாபாரத்தில், அடுத்தநிலைக்குத் தாவத் தயாராக இருக்கிறான் என்று பொருள்.

நிதி... மதி... நிம்மதி - 6

நம் கையில் இருக்கிற பணத்தை மட்டும் அல்ல; நம்மிடம் இல்லாத பணத்தையும், சரியாகப் பயன்படுத்த தெரிந்து இருக்க வேண்டும். அதுதான் மேலாண்மை.

நம்மிடம் இல்லாத பணம்? கடன்தான். வேறென்ன..? என் கையில் 1000 ரூபாய் இருக்கிறது. எனக்கு வேண்டியதை வாங்க, 900 ரூபாய் ஆகும். இதிலே என்ன மேலாண்மை இருக்கிறது..? இதுவே, 1,100 ரூபாய்க்கு வாங்க வேண்டும். அதுவும் அவசரம். பற்றாக்குறையை, எப்படிச் சரிக்கட்டுவேன்..?

யாரிடம், என்ன சொல்லி வாங்கப் போகிறேன்..? அதுவும் குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்க வேண்டும். என்னுடைய தொடர்புகள் மற்றும் இதுநாள் வரை நான் தக்கவைத்து இருக்கும் நம்பகத்தன்மை ஆகிய இரண்டும், இந்த 100 ரூபாய்ப் பற்றாக் குறையைச் சமாளிப்பது சவாலான விஷயமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்.

கடன் வாங்குவதும் அதைச் சரியாகத் திருப்பிச் செலுத்து வதும், அது தீர்ந்ததும் அல்லது அதற்கும் முன்னதாகவே மேலும் வாங்குவதும்... ஒரு சங்கிலித் தொடர் நடவடிக்கை. வியாபார மாக இருந்தாலும், குடும்பம் சார்ந்ததாக இருந்தாலும், முன்னேற்றத்துக்கான அடுத்தப் படிக்கு நம்மை அழைத்துச் செல்வதில், ‘கடன்’ போன்ற சிறந்த சாதனம் இல்லை.

‘மொத்தமாக கையில் வச்சிக்கிட்டு, ரொக்கமா குடுத்து வாங்கவேண்டும்’ என்று யார் சொன்னாலும் அந்த மனிதரை, இன்றைய பொருளாதாரச் சிந்தனையாளர்கள், ஒரு பித்துக் குளியாகத்தான் பார்ப்பார்கள்.

‘அந்தக் காலம் எல்லாம் மலையேறிப் போயிடுச்சி... இப்பல்லாம் கடன் வச்சிருந்தாத் தான் மரியாதையே...’ என்று சொல்பவர்கள்தாம், பொருளாதாரத்தைச் சரியாகப் புரிந்துவைத்து இருப்பவர்கள்.

‘கண்ணை மூடிக்கிட்டு’ கடன் வாங்கச் சொல்லவில்லை. முயற்சித்தால் கிடைக்கும்; அதன் மூலம், நல்ல எதிர்காலம் அமை யும் என்றால், அந்த வாய்ப்பை ஏன் நிராகரிக்க வேண்டும்? நீண்ட கால நன்மைக்கு, மதிப்பு கூடிக்கொண்டே போகிற ஒரு சொத்துக்கு, இன்று நாம் கடன் பெறுகிறோம் என்றால், என்ன தவறு இருக்க முடியும்...?

ஆனால் ஒன்று. மிகுந்த நிதானத்துடனும் பொறுப்பு உணர்வுடனும் முடிவெடுக்க வேண்டும். காரணம், கடன் - இருபுறமும் கூர்மையான கத்தி போன்றது. பார்த்து கவனத்துடன் கையாள வேண்டும். அப்படி யானால், கடன் வாங்கும்போது, நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்கள் என்னென்ன..?   

(சேர்ப்போம்)

2017-ல் 50 கோடி இன்டர்நெட் இணைப்பு!

இந்தியா முழுக்க 35 கோடி யாக இருக்கும் இன்டர்நெட் இணைப்புகளின் எண்ணிக்கை, வருகிற 2017-ம் ஆண்டுக்குள் 50.30 கோடியாக அதிகரிக்கும் என இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த 2014-ல் ஸ்மார்ட் போன் கள் மூலம் இணையம் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை 15.90 கோடி. இது, 2017-ல் 31.40 கோடியாக அதிகரிக்குமாம்!