Published:Updated:

கல்விக் கடனை கட்டாவிட்டால் என்ன பாதிப்பு வரும்?

கல்விக் கடனை கட்டாவிட்டால் என்ன பாதிப்பு வரும்?

பிரீமியம் ஸ்டோரி

{?}நான் வங்கி ஒன்றில் கல்விக் கடன் வாங்கியிருந்தேன். என்னால் கடனை தொடர்ந்து செலுத்த முடியவில்லை. வங்கி என் மீது என்ன நடவடிக்கை எடுக்கும்?

செல்வம், திருவாரூர்.

ஆர்.கணேசன், உதவிப் பொது மேலாளர் (ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்.

கல்விக் கடனை கட்டாவிட்டால் என்ன பாதிப்பு வரும்?

‘‘கல்விக் கடனைச் செலுத்தாமல் இடையில் நிறுத்திவிட்டால் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை வங்கிகள் எடுக்க வாய்ப்பிருக்கிறது. கடன் வாங்கியவர் வேலை செய்து கொண்டிருந்தால் வேலை செய்யும் நிறுவனத்துக்கு கடனைச் செலுத்தச் சொல்லி வங்கி நோட்டீஸ் அனுப்பும். வேலையில் இல்லை என்றால், கடன் வாங்கியவரின் பெற்றோரை கடனைக் கட்டச் சொல்லும். அப்படியும் கடனைக் கட்டவில்லை என்றால், கடனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்ட நபரை கடனைச் செலுத்தச் சொல்லி வங்கி வலியுறுத்தும்.

அப்போதும் கடன் கட்டப்பட வில்லை என்றால், பெற்றோர் மற்றும் ஜாமீன் அளித்த நபர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வதுகூட நடக்கும். அப்படியும் எதுவும் நடக்கவில்லை என்கிறபட்சத்தில் செய்தித்தாள்களில், கடன் வாங்கியவரின் புகைப்படத்துடன் கடன் செலுத்த வேண்டிய தகவலை விளம்பரமாக அறிவிக்கும்.

இந்த நடவடிக்கைகளுக்கு உள்ளாவதைவிட, வாங்கிய கல்விக் கடனைச் செலுத்திவிடுவதே சரி. இதனால் உங்கள் கிரெடிட் ரேட்டிங் உயரும். எதிர்காலத்தில் புதிய கடன் வாங்கச் செல்லும் காலத்தில் உங்களுக்கு உடனடியாகக் கடன் கிடைக்க வாய்ப்பு உருவாகும்.”

{?}ஒரு வீட்டை விற்கும் போது எவ்வளவு தொகைக்கு மேல் போனால் மூலதன ஆதாய வரி (capital gain tax) கட்ட வேண்டும்? அதற்கு வரிவிலக்குப் பெற என்னவிதமான பாண்டுகளில் முதலீடு செய்யலாம்?

கே.சீனிவாசன், தர்மபுரி.

என்.பி.இசை அழகன், ஆடிட்டர்.

‘‘நீண்ட கால மூலதன சொத்தை விற்கும்போது உச்சவரம்பின்றி மொத்த ஆதாயத்தின் மீது 20% வரி செலுத்த வேண்டும். மாறாக, வருமான வரிச் சட்டம் பிரிவு 54EC-ன் கீழ் நேஷனல் ஹைவே அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (NHAI) அல்லது ரூரல் எலெக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் (REC) நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை முதலீடு செய்து, மூலதன ஆதாய வரி செலுத்தாமல் விலக்குப் பெறலாம்.

மேலும், குடியுரிமை பெற்ற தனிநபர், தனக்கு மூலதன ஆதாயம் தவிர வேறொன்றும் வருமானம் இல்லையெனில், வருமான வரி உச்சவரம்பு வரை வரிவிலக்குப் பெற முடியும்.

இருப்பினும், அந்த முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டிக்கு வருமான வரி உச்சவரம்பைத் தாண்டும்போது வரி செலுத்த வேண்டும். மாறாக, குறுகிய கால மூலதன சொத்தாக இருப்பின் எந்தவித வரிவிலக்கும் பெற முடியாது.’’

கல்விக் கடனை கட்டாவிட்டால் என்ன பாதிப்பு வரும்?

{?}எனக்கு வயது 45 ஆகிறது. மாதம் 10,000 ரூபாயை எந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், எனது ஓய்வுக்காலத்துக்குப் பிறகு நிரந்தரமாக வருமானம் கிடைக்கும்? 

அன்பு.

அ.முருகன், மண்டலத் தலைவர், ப்ளூசிப் கார்ப்பரேட் இன்வெஸ்ட்மென்ட் சென்டர் லிமிடெட்.

‘‘நான்கு டாப் டைவர்ஸிஃபைடு ஈக்விட்டி ஃபண்டுகளில் எஸ்ஐபி முறையில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்தால் 15 வருடங்கள் கழித்து நிரந்தரமான வருமானம் கிடைக்கும்.’’

{?}நான் எனது சுயச்சம்பாத்தி யத்தில் வாங்கிய 10 ஏக்கர் நிலத்தில், எனது நண்பருக்கு 5 ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுக்க நினைக்கிறேன். தானமாக எழுதிக் கொடுப்பதற்கு என்ன ஆவணங்கள் வேண்டும்? எனக்கு மனைவி மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களிடமும் கையெழுத்துப் பெற வேண்டுமா?

ஏ.சதீஷ், செஞ்சி.

டி.பார்த்தசாரதி, சொத்து மதிப்பீட்டாளர், டி.பார்த்தசாரதி அசோசியேட்ஸ், சென்னை.

‘‘ஒருவர் சுயச்சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தினை எவருக்கு வேண்டுமானாலும் விற்கலாம், செட்டில்மென்ட் செய்யலாம், தானமாகக் கொடுக்கலாம், உயில் எழுதிவைக்கலாம். எல்லா உரிமையும் அவருக்கு மட்டுமே. யாரிடமும் கையெழுத்துப் பெற வேண்டிய அவசியம் இல்லை.

ஒருவர் உறவினர் அல்லாதவருக்கு தன் சொத்தினைத் தானமாகக் கொடுக்கலாம். ஆனால், அதற்குச் சொத்தின் அரசு மதிப்பீட்டில் 7% முத்திரைத்தாள் கட்டணம், 1% பத்திரப்பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.’’

கல்விக் கடனை கட்டாவிட்டால் என்ன பாதிப்பு வரும்?

{?}நான் ஈக்விட்டி ஃபண்டில் மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன். முதலீட்டை ஓராண்டு (டிவிடெண்ட் ஆப்ஷன்), ஐந்தாண்டுகள் (குரோத் ஆப்ஷன்) கழித்து, திரும்பப் பெறும்போது ஏதாவது பிடித்தங்கள் இருக்குமா?

வெங்கட், கோவை.

எம்.எஸ்.ரவிக்குமார், நிதி ஆலோசகர்.

‘‘ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது டிவிடெண்ட் அல்லது குரோத் ஆப்ஷனில் நீங்கள் எதைத் தேர்வு செய்திருந்தாலும் பங்கு பரிவர்த்தனை வரி (எஸ்டிடி) பிடிக்கப்படும். அப்படி பிடிக்கப் படும் தொகையும் மிகச் சிறிய அளவாகத்தான் (0.125%) இருக்கும்.’’

{?}என் குழந்தைக்கு ஒரு வயதாகிறது. குழந்தையின் கல்விக்காகவும், திருமணத்துக்காகவும் இப்போ திருந்தே மாதம் ரூ.5,000 வரை முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன். நான் குழந்தை களுக்கான எந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் ஈட்ட முடியும்?

பழனி.

சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், மை அஸெட்ஸ் கன்சாலிடேஷன்.காம்

‘‘குழந்தைகளுக்கு என்று இருக்கும் குறிப்பிட்ட திட்டங்களில் முதலீடு செய்வது என்பது பழங்கதை ஆகிவிட்டது. குழந்தைகளுக்காக என்றில்லாமல், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு முதலீடு செய்ய நிறையத் திட்டங்கள் இன்றைக்கு இருக்கின்றன.
உதாரணத்துக்கு, டைவர் ஸிஃபைடு ஈக்விட்டி திட்டங் களில் குழந்தைகளுக்காக முதலீடு செய்யலாம். இதன்மூலம் 12 முதல் 14 சதவிகிதம் வரை வருமானம் கிடைக்கலாம்.

தவிர, எதிர்காலத்தில் குழந்தைகளின் கல்வி மற்றும் இதர செலவுகளுக்காக எவ்வளவு தொகை தேவைப்படும் என்று நிர்ணயித்து, அந்தத் தொகைக்கு நாம் ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது.இந்த பாலிசி மூலம் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை, நாம் இல்லாதுபோகும் நிலையிலும் குழந்தைகளின் படிப்பு மற்றும் இதர செலவுகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.”

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.

கல்விக் கடனை கட்டாவிட்டால் என்ன பாதிப்பு வரும்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு