Published:Updated:

பிசினஸ் சீக்ரெட்ஸ் - 7

தொழில்முனைவோர்களுக்குத் துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்

அதிக லாபம் தரும் தொழில்கள்!

லாபம்தான் எந்த ஒரு  தொழில் செய்வ தற்கும் அடிப்படை நோக்கம். சில தொழில்கள் அதிக லாபம் தருவதாக இருக்கும். சில தொழில்கள் குறைந்த அளவிலேயே லாபம் தருகிற மாதிரி இருக்கும். நீங்கள் தேர்வு செய்யும் தொழில் அதிக அளவில் லாபம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்கேற்ற மாதிரியான தொழிலை நீங்கள் ஆரம்பத்திலேயே தேர்வு செய்ய வேண்டியது அவசியம். அதிக லாபம் தரும் தொழில்களை எப்படித் தேர்வு செய்வது என்பதைச் சொல்கிறேன்.

பிசினஸ் சீக்ரெட்ஸ் - 7

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வேல்யூ செயின் (Value chain)

ஒரு பொருள் உற்பத்தியாகும் வேல்யூ செயினில் நீங்கள் வாடிக்கையாளருக்குப் பக்கத்தில் இருக்கிற மாதிரியான தொழிலை தேர்வு செய்துகொள்வது அவசியம்.

உதாரணமாக, ஒரு செல்போனை எடுத்துக் கொள்வோம். ஒரு செல்போனில் பல நூறு உதிரிபாகங் கள் இருக்கும். செல்போன் பாடியை ஒரு நிறுவனம் தயாரிக்கும். மதர் போர்டை இன்னொரு நிறுவனம் தயாரிக்கும். செல்போன் கவரை இன்னொரு நிறுவனம் தயாரிக்கும். ஸ்பீக்கர், கேமரா எனப் பல நிறுவனங்கள் பல பொருட்களைத் தயார் செய்து தரும்.

இந்த உதிரிபாகங்களை எல்லாம் வாங்கி, ஒரு செல்போனாக மாற்றி விற்கிறது ஆப்பிள் நிறுவனம்.

இப்படி செல்போன் தயாராகும்போது, உதிரிபாகங்களைத் தயார் செய்த நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைக்குமா  அல்லது தரமான பல உதிரிபாகங்களை ஒன்றிணைத்து செல்போனாக மாற்றித் தந்த ஆப்பிள் நிறுவனம் அதிக லாபம் சம்பாதிக்குமா?

நிச்சயமாக, தரமான உதிரிபாகங்களை ஒன்றிணைத்து, செல்போனாக மாற்றித்தரும் ஆப்பிள் நிறுவனத்துக்குத்தான் அதிக லாபம் கிடைக்கும்.

இதற்குக் காரணம், மற்ற நிறுவனங்கள் உதிரிபாகங்களைத் தயாரித்து தந்தாலும், அதை ஒரு முழுமையான பொருளாக, பிராண்டட் பொருளாக மாற்றித் தரக்கூடியது ஆப்பிள் நிறுவனம். வாடிக்கையாளர்களுக்கு அது அளிக்கும் அனுபவமே அலாதி என்பதால், அதன் பெயரே வாடிக்கையாளர் மனதில் தங்கும். எனவேதான், ஆப்பிள் நிறுவனம் என்றாலே எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும்  தரத் தயாராக இருக்கிறார்கள் உலகம் முழுக்க உள்ள வாடிக்கை யாளர்கள். ஆப்பிள் நிறுவனத்தைப்போல, நீங்களும் வேல்யூ செயினில் வாடிக்கை யாளருக்குப் பக்கத்தில் (B To C) இருந்தால், உங்களுக்குக் கிடைக்கும் லாபமும் அதிக மாகவே இருக்கும்.

பி டு பி (B To B) ஆக இருந்தாலும்..!

பி டு சி -ஆக, அதாவது வாடிக்கையாளருக்குப் பக்கத்தில் நீங்கள் இருந்தால்தான் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்பது உண்மை என்றாலும், பி டு பி-ஆக இருந்தபோதிலும், அதாவது, நிறுவனத்துக்கு நீங்கள் பொருட்களை சப்ளை செய்தா லும், உங்களாலும் அதிக லாபத்தைச் சம்பாதிக்க முடியும். பி டு பி-ஆக இருந்துகொண்டே அதிக லாபம் பார்த்த நிறுவனங் கள் பல உண்டு. அதில் ஒன்று, இன்டெல் நிறுவனம்.

இன்டெல் என்பது ஒரு பிராசஸர். இது கம்ப்யூட்டருக்கு மிக முக்கியம் என்றாலும், இதை வாடிக்கையாளர்களிடம் நேரடி யாகக் கொண்டுபோய் விற்க முடியாது. கம்ப்யூட்டரைத் தயாரிக்கிற நிறுவனங்களிடம் தான் விற்க முடியும்.

பிசினஸ் சீக்ரெட்ஸ் - 7

இப்படி ஒரு அசௌகரியம் இந்த நிறுவனத்துக்கு இருந்த போதும், அந்தத் தடையை உடைத்தெறிந்தது இன்டெல் நிறுவனம். தனது தயாரிப்பைத் தரமாகக் கொண்டு வருவதில் முதலில் அக்கறை காட்டியது இந்த நிறுவனம்.

அடுத்து, தனது தரமான தயாரிப்பை நன்கு விளம்பரப்படுத்தியது. இதனால் பிராசஸர் என்றாலே இன்டெல் என்கிற பெயரை வாடிக்கை யாளர்கள் நினைக்க ஆரம்பித்தனர்.

இதன் விளைவு, கம்ப்யூட்டரை வாங்க வருகிற வாடிக்கையாளர்கள் எல்லாம், இன்டெல் பிராசஸர் பொருத்தப்பட்ட கம்ப்யூட்டர்தான் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார்கள். இதனால் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் இன்டெல் பிராசஸரை அதிக விலை தந்தாவது வாங்க வேண்டிய கட்டாயத் துக்கு உள்ளாயின. ஒரு பி டு பி நிறுவனமாக இருந்தாலும், பி டு சி பெறும் மதிப்பினை இன்டெல் நிறுவனமும் பெற்றது. இதுபோல நீங்களும் பெறலாம்.

மதிப்பு கூட்டி விற்க முயலுங்கள்!

எந்தவொரு தொழிலிலும் மூலப்பொருளை அப்படியே விற்பதைவிட மதிப்பு கூட்டி விற்கும் போது நல்ல லாபத்தைப் பார்க்க முடியும். உதாரணமாக, ஒரு ஹோட்டலை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஹோட்டலுக்குத் தேவையான அரிசியைத் தருகிறார் ஒருவர். பருப்பு வகைகளை சப்ளை செய்கிறார் இன்னொருவர். மிளகாயை சப்ளை செய்கிறார் மற்றொருவர். இன்னொருவர் தண்ணீர் கேன், வாழை இலை என ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளை சப்ளை செய்கிறார்கள்.

இந்தப் பொருட்களை எல்லாம் வாங்கி, அவற்றைப் பயன்படுத்தி, இட்லியாக, தோசையாக, சாப்பாடாக விற்கிறார் ஹோட்டல்காரர். இப்படிச் செய்யும்போது, ஹோட்டலுக்குத் தேவையான பொருட்களை விற்கும் வியாபாரிகள் அடையும் லாபத்தைவிட, அதை உடனே பயன்படுத்தும் பொருளாக மாற்றித் தரும் ஹோட்டல்காரர் அதிக லாபம் சம்பாதிப்பார். எனவே, மதிப்பு கூட்டி விற்று, அதிக லாபம் பெறுகிற மாதிரி உங்கள் தொழிலை அமைத்துக் கொள்ளுங்கள்.

(ஜெயிப்போம்)

சி.கே.ஆரிடம் கேளுங்கள்!

 நான் கிராமத்தில் வசிக்கிறேன். எனக்கேற்ற தொழிலைக் கண்டுபிடிப்பதில் குழப்பமாக இருக்கிறது.

- வசந்த்.

“நீங்கள் கிராமத்தில் இருப்பது பிசினஸ் ஆரம்பிக்க ஒரு தடையே அல்ல. நான் கடலூர் என்கிற சின்ன ஊரில்தான் தொழில் தொடங்கினேன். பிற்பாடு தொழில் வளர்ந்தவுடன், சென்னையில் பலவகையான வசதிகள் கிடைத்ததால், இடம்பெயர்ந்தேன். அதுமாதிரி நீங்கள்  உங்கள் கிராமத்திலேயே தொழில் தொடங்கலாம். தொழில் வளர்ந்த பிறகு, பக்கத்தில் இருக்கிற பெரிய நகரத்துக்கு மாறிக்கொள்ளலாம். கிராமங்களில் பிசினஸ் செய்வதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.  உங்களைச் சுற்றி இருக்கும் மக்களுக்கு எப்படி நீங்கள் உதவ முடியும் என்று பாருங்கள். உங்களுக்கேற்ற தொழில் நிச்சயம் கிடைக்கும்.''

நான் என் நேரத்தை யாரிடமும் விற்கத் தயாரில்லை. ஒரு பிசினஸ்மேனாக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால், என்ன தொழில் தொடங்குவது என்று தெரியவில்லை!

                                                                                                - ஆர்.தாஸ்

“வேலையா, பிசினஸா என நீங்கள் இரண்டுங்கெட்டான் மனநிலையில் இல்லாமல் இருப்பதே பாராட்டத் தக்கது. உங்கள் மன உறுதியே உங்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பலம். நீங்கள் பாதிக்கிணற்றைத் தாண்டி விட்டீர்கள். இனி உங்களுக்கான தொழிலைக் கண்டுபிடிக்க களத்தில் இறங்குங்கள். நிறைய பேரை  சந்தித்துப் பேசுங்கள். உங்களுக்கான தொழிலையும் நீங்களாகவே கண்டுபிடிக்க முடியும்.''

தொழில்முனைவோர்கள் கவனத்துக்கு!

தொழில்முனைவோர்களுக்கு ஏற்படும் பிசினஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு ‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன் இந்தப் பகுதியில் பதில் அளிக்க உள்ளார். உங்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை businesssecrets@vikatan.com என்கிற மெயில் ஐடி-க்கு அனுப்பலாம்.