Published:Updated:

வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் பெஸ்ட் ஃபைனான்ஷியல் கிஃப்டுகள்!

வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் பெஸ்ட் ஃபைனான்ஷியல் கிஃப்டுகள்!

முன்பெல்லாம் குழந்தைகளின் பிறந்தநாளன்று பரிசாகப் பேனாவையும் பொம்மையையும் வாங்கித் தந்தார்கள். பிற்பாடு எலெக்ட்ரானிக் விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தர தொடங்கினார்கள். இன்னும் சிலர் குழந்தைகளிடம், ‘உனக்குப் பிடித்ததை நீயே வாங்கிக்கொள்’ என்று பணத்தைத் தந்துவிடுவார்கள்.

இப்போது குழந்தைகளின் பிறந்தநாள், வகுப்பில் தேர்ச்சி பெற்ற நாள், போட்டியில் ஜெயித்த நாள் என எல்லா மறக்க முடியாத தினங்களுக்கும் ஃபைனான்ஷியல் முதலீடுகளை பரிசுப் பொருளாகத் தரத் தொடங்கி இருக்கிறார்கள்.

வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் பெஸ்ட் ஃபைனான்ஷியல் கிஃப்டுகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிதி சார்ந்த அன்பளிப்பு களில் எவையெல்லாம் சிறந்தவை, எந்த மாதிரியான முதலீடுகளை ஃபைனான்ஷியல் கிஃப்டாகத் தரலாம் என நிதி ஆலோசகரும் மற்றும் மை அஸெட் கன்சாலிடேஷன் (www.myassetconsolidation.com) நிறுவனத்தின் இயக்குநரான சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

வங்கி எஃப்டி  அல்லது ஆர்டி!

‘‘நம்மில் பலருக்கும் பரவலாகத் தெரிந்த ஒன்று ஃபிக்ஸட் டெபாசிட். இதைப் பரிசாகத் தரலாம் என்கிற விஷயம்தான் பலருக்குத் தெரியாது. ஒரு தொகையை வங்கியில், பரிசு பெறுபவரின் பெயரில் குறிப் பிட்ட வருடத்துக்கு டெபாசிட் செய்துவிட்டு, வங்கியில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதற்கு அத்தாட்சியாகக் கொடுக்கப் பட்ட ஆவணத்தைப் பரிசாகக் கொடுத்தால் போதும். இப்படிச் செய்வதால் பரிசு பெறுபவருக்கு ஒவ்வொரு மாதமும் அல்லது ஆண்டு தோறும் வட்டியாக ஒரு குறிப்பிட்ட தொகை, முதலீடு செய்த தொகையிலிருந்து கிடைக்கும்.

நீங்கள் ஒருமுறை கொடுத்த பரிசு அவர்களுக்குப் பலமுறை பணம் கொடுத்து உங்களை என்றும் மறக்க முடியாதபடிக்கு வைத்திருக்கும். வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது ரெக்கரிங் டெபாசிட்டை யார் வேண்டுமா னாலும், யாருக்கு வேண்டுமானாலும் தரலாம்.

ஃபிக்ஸட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட், மூலம் பெறப்படும் வருமானம் வருமான வரம்பைத் தாண்டி கிடைக்கும் பட்சத்தில் வரி வரம்பின்படி பரிசு பெறுபவரிட மிருந்து வரி கணக்கிடப்படும்.

இன்ஷூரன்ஸ் பாலிசிகள்!

இன்ஷூரன்ஸில் ஹெல்த் இன்ஷூரன்ஸ், டேர்ம் இன்ஷூரன்ஸ் என்று பல வகையான

வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் பெஸ்ட் ஃபைனான்ஷியல் கிஃப்டுகள்!

இன்ஷூரன்ஸ்கள் இருப்பது நமக்குத் தெரியும். இந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் கூட பரிசாகக் கொடுத்து பரிசு பெறுபவரின் வாழ்க்கைக்கு ஒரு பாதுகாப்பை நாம் தரமுடியும். நாம் பரிசு தருகிறவருக்குத் திடீரென ஏதோ ஓர் அசம்பா விதம் ஏற்பட்டு, மருத்துவமனை யில் கிடக்கும்போது, நாம் பரிசாகத் தந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் மூலம் அவரது மருத்துவச் செலவுகளுக்கான பணம் கிடைக்கிறது என்றால் அவர் மனம் எத்தனை சந்தோஷப் படும்! அல்லது எதிர்பாராத விதமாக அவர் ஒரு விபத்தில் இறந்து, டேர்ம் இன்ஷூரன்ஸ் மூலமாக அவரது குடும்பத்துக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கிறது என்றால் அந்தக் குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய உதவி செய்த தாக இருக்கும்!

இன்ஷூரன்ஸ் பாலிசிகளைப் பொறுத்தவரை, உறவினர்கள் மட்டும்தான் அதை ஓர் அன்பளிப்பாக எடுத்துத் தர முடியும். இப்போது சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் திருமணத்துக்கு என்றே சிறப்பாகச் சில பாலிசிகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. இந்த பாலிசிகளில் குழந்தை பிறப்புக்குக்கூட க்ளெய்ம் கிடைப்பது போல பாலிசிகள் இருக்கின்றன.

இன்ஷூரன்ஸ் பாலிசி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு (கணவன், மனைவி, மகன் மகள்) எடுக்கப்பட்டிருந்தால், பிரீமியம் செலுத்திய தொகையை 80C (டேர்ம் இன்ஷூரன்ஸ்) மற்றும் 80D (ஹெல்த் இன்ஷூரன்ஸ்) ஆகிய வருமான வரி சட்ட பிரிவுகளில் கணக்குக் காட்டி செலுத்திய பிரீமியத் தொகைக்கு வரிச் சலுகை பெறலாம். எனவே, திருமணம் போன்ற மகிழ்ச்சி கரமான நேரங்களில் அவர்களுக்குத் தகுந்த மாதிரியான பாலிசிகளைப் பரிசளிக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட்!

பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்து அதன்மூலம் கிடைக்கும் நன்மைகளை நம்மால் அடைய முடியாதபோது, அந்த நன்மைகளை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் பெற முடியும். இந்த மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை நாம் பிறருக்குப் பரிசாக வழங்கலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

மியூச்சுவல் ஃபண்டிலேயே பலவகையான ஃபண்டுகள் இருக்கின்றன. நீங்கள் பரிசு வழங்க இருக்கும் நபரின் எதிர்காலத் தேவையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு ஃபண்டிலோ அல்லது சில ஃபண்டுகளிலோ பரிசு பெறுபவரின் பெயரில் முதலீடு செய்து கொடுத்தால், அவருக்குத் தேவையானபோது அந்த யூனிட்களை விற்றுப் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். அதுவரை சந்தையின் வளர்ச்சியைப் பொறுத்து, உங்கள் பரிசுப் பணமும் வளர்ந்துகொண்டிருக்கும்.

இந்த மியூச்சுவல் ஃபண்டுகளைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமே பரிசாகத் தர முடியும். மற்றவர்கள் இப்படி பரிசு வழங்க வேண்டும் என்றால் சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தேர்டு பார்ட்டி டிக்ளரேஷன் (Third party Declaration) என்கிற படிவத்தைப் பெற்றுக்கொண்டு, இந்த வசதியை வழங்குகிறது.

மியூச்சுவல் ஃபண்டுகள் ஈக்விட்டி சார்ந்தவை யாக இருந்தால் 1 வருடத்துக்கு முன்னும், கடன் மற்றும் மற்றவைகளாக இருக்கும் பட்சத்தில் 3 வருடத்துக்கு முன்னும் விற்றால் கிடைக்கும் வருமானத்துக்கு விற்றவர் வரி செலுத்த வேண்டும்.

வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் பெஸ்ட் ஃபைனான்ஷியல் கிஃப்டுகள்!

பங்குகள்!

நம் மாநிலத்தில் பெரும் பணக்காரர் கள் வீட்டிலும் வட இந்தியாவில் ஓரளவு வசதி படைத்த எல்லா வீடுகளிலும் பங்குகளைப் பரிசாகத் தருவது வழக்கமான விஷயம்தான். தன் மகள் திருமணமாகி செல்லும்போது  உதாரணமாக விப்ரோ நிறுவனத்தின் ஆயிரம் பங்குகளைப் பரிசாகத் தருவது அங்கு சர்வசாதாரணம்.

நாம் யாருக்கு பங்குகளைப் பரிசாகத் தர நினைக்கிறோமோ, அவரது பெயரில் ஒரு டீமேட் கணக்கு இருந்தால் போதும். பரிசு கொடுப்பவர் தன் பெயரில் உள்ள பங்குகளைப் பரிசு பெறுபவரின் பெயருக்கு எளிதாக மாற்றிவிடலாம். பரிசு வழங்கும் போது பரிமாற்றம் செய்ததற்கான சான்றிதழை மட்டும் பரிசாகக் கொடுத்தால் போதும்.

பரிசு பெறுபவருக்கு எப்போது தேவை ஏற்படுகிறதோ, அப்போது சந்தையின் போக்கை கவனித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக, 1981-ம் வருடம் ஒருவர் விப்ரோ நிறுவனத்தில் 10,000 ரூபாயை முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். இதில் ஒருபகுதியை அவர் பரிசாகக் கொடுத்தாலே, அதன் மதிப்பு மிகப் பெரிதாக இருக்கும்.

பங்குகளில் முதலீடு செய்யும் தொகைக்கு யாருக்கும் வரி விதிக்கப்படாது. ஆனால், பங்குகளை வாங்கி (பரிமாற்றம் செய்யப்பட்ட நாள் அல்ல, பங்குகள் பரிசு கொடுப்பவரால் வாங்கப்பட்ட நாள்) ஒரு வருடத்துக்குமுன் விற்றால் கிடைக்கும் வருமானத்துக்கு, பங்குகளை விற்றவர் வரி செலுத்த வேண்டும்.

ஒரு வருடத்துக்குப்பின் விற்றால் கிடைக்கும் வருமானத்துக்கு வரி கிடையாது.

கடன் பத்திரங்கள் மற்றும் பாண்டுகள்!

பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற சந்தை தொடர்பான ரிஸ்க் எடுக்க விருப்பமில்லாதவர்கள், வங்கி எஃப்.டியைவிட சற்றுக் கூடுதலாக நிலையான வருமானம் கிடைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், நல்ல நிறுவனத் தின் கடன் பத்திரங்கள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்து பரிசாகக் கொடுக்கலாம்.

கடன் பத்திரங்களில் நாம் முதலீடு செய்துவிட்டு பின்பு பரிசு பெறுபவரின் பெயரில் அந்தக் கடன் பத்திரங்களை மாற்றி, பரிசாகக் கொடுக்கும் போது கடன் பத்திரங்கள் மாற்றப்பட்டதற்கான சான்றி தழை வழங்கினால் போதும்.

இதே பாண்டுகளில் முதலீடு செய்யும்போது நேரடியாகவே பரிசு பெறுபவரின் பெயரிலேயே பாண்டுகளை வாங்கி அதை அப்படியே பரிசாக வழங்கி விடலாம். ஆனால், நிறுவனங் களின் கடன் பத்திரங்களைத் தேர்வு செய்யும்போது அவற்றின் தரக் குறியீடுகளின் அடிப்படை யில் தேர்ந்தெடுப்பது நல்லது.

எனினும், மியூச்சுவல் ஃபண்ட், பங்குகள், கடன் பத்திரங்களைப் பரிசாக வாங்குகிறவர்கள், இவற்றின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை அவ்வப் போது ஆராய்ந்து பார்ப்பது அவசியம். அப்போதுதான் பரிசின் மூலம் கிடைக்கும் மதிப்பை சரியாகப் பெற முடியும்.
ஒருவர் தன்னுடைய குழந்தையின் பெயரிலோ அல்லது வேறு ஒருவரின் பெயரிலோ கடன் பத்திரங்களில் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யவோ அல்லது பரிமாற்றம் செய்யவோ எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. இவை வருமான வரிச் சட்டம் பிரிவு 56-ன் கீழ் பரிசாகக் கருதப்படும்.

இருப்பினும் ரூ.50,000-க்கு மேல் உறவினர் அல்லாதவர் களிடம் பரிசுகள் பெற்றால் வரி செலுத்த வேண்டும். மாறாக, உறவினர்களிடம் பெறும் பரிசுகளுக்கு உச்சவரம்பின்றி வரிவிலக்குப் பெறலாம்.

மேலும், அத்தகைய கடன் பத்திரங்கள் மற்றும் பாண்டுகளின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு பரிசு பெற்றவர் வரி செலுத்த வேண்டும்.

இனியாவது, நாம் பரிசுப் பொருட்களாக ஏதேதோ தருவதைவிட, பெஸ்டான ஃபைனான்ஷியல் கிஃப்டுகளைத் தர ஆரம்பிப்போமே?

மு.சா.கெளதமன்

படங்கள்:  ஜெ.விக்னேஷ்

நிதிப் பரிசுகள்: வரி விதிமுறைகள் சொல்வதென்ன?

நிதிப் பரிசுகளுக்கான வரி விதிமுறைகள் என்னென்ன என்பதைப் பற்றியும் விளக்கமாக எடுத்துச் சொன்னார் சுரேஷ் பார்த்தசாரதி.

1.   நம் நாட்டின் வருமான வரித்துறை பரிசு வரிச் சட்டம் (Gift tax act) 1958-ன்படி பெறும் பரிசுகளுக்கு வரி விதிக்கிறது. அதேபோல், வருமான வரிச் சட்டம் 56(2)-ல் கூறப்பட்டுள்ள உறவினர்களிடமிருந்து பெறப்படும் பரிசுகளுக்குத்தான் வரிவிலக்கு உண்டு.

2.  ஒருவரின் திருமணத்தின்போது பெறப் படும் பரிசுகள் அனைத்துக்கும் முழுமையாக வரிவிலக்கு உண்டு.

3. கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கொடுக்கும் பரிசுத் தொகைகளுக்கு, அதை பெறுபவர் வரி எதுவும் கட்டத் தேவை இல்லை. அதேநேரத்தில், பரிசாகப் பெற்ற தொகை முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து ் வருமானம் கிடைத்தால், அந்த வருமானம் பரிசு வழங்கியவரின் வருமானத்தோடு சேர்க்கப்பட்டு, அவருக்கு வரி விதிக்கப்படும்.

4.  உறவினர்கள் என்று வருமான வரித் துறை குறிப்பிடுவர்களிடமிருந்து எந்தத் தருணத்திலும், பெறப்படும் தொகை எவ்வளவாக இருந்தாலும், முழுமையாக வரிவிலக்கு உண்டு.

இதே வருமான வரித் துறை குறிப்பிடாத உறவினர் அல்லது நண்பர்களிடமிருந்து பெறப்படும் பரிசுத் தொகை 50,000 ரூபாய்க்குக் கூடுதலாக இருக்கும்பட்சத்தில் பெறப்பட்ட முழுத் தொகைக்கும் வரி செலுத்த வேண்டும். 50,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், வரி செலுத்த வேண்டாம்.

மேற்கூறிய விதிகளுக்கு உட்பட்டுதான் இந்தப் பரிசுகளும் வழங்கப்பட வேண்டும்.’’