Published:Updated:

நிதி... மதி... நிம்மதி - 7

குடும்ப நிதி மேலாண்மை தொடர்பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

நல்லா யோசிச்சு ‘கேளுங்க’!

‘‘நம்மகிட்ட இருக்கறதை வச்சு, ஏதாவது ஏற்பாடு பண்றதுன்னா பண்ணுங்க; இல்லியா.., வுட்டுடுங்க. எப்படி ஆவுதோ ஆவட்டும். அவ்வளவுதான்.’’

‘‘ஏன் இப்பிடிப் பிடிவாதம் பிடிக்கிறே...? உங்க அண்ணனுக்கு இதெல்லாம் ஒரு பெரிய ‘அமௌன்ட்’டே இல்லை. கேட்டவுடனே குடுத்துடுவாரு...’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘அவரு குடுத்தா..? நாம உடனே வாங்கிடணுமா..?’’

நிதி... மதி... நிம்மதி - 7

‘‘ஏன் கூடாது..? இப்போ வாங்கிட்டு, போனஸ் பணம் வந்ததும், திருப்பித் தந்துடப் போறோம்... இதுக்கு முன்ன நாம வாங்குனது இல்லியா..? இல்ல... திருப்பிக் குடுத்தது இல்லியா..?’’

“பாருங்க... பையனுக்கு காலேஜு ஃபீஸு... அப்புறம், பெண்ணுக்குக் கல்யாண செலவு... அப்படியும் இல்லியா... ஏதாவது வீடு வாங்கறோம்... அப்படின்னா, போய்க் கேட்கறதுல நியாயம் இருக்கு. சும்மா... சும்மா, எடுத்ததுக்கு எல்லாம் கடன் குடுங்கன்னு போய் நிக்கறது நல்லது இல்லை.’’

‘ஏன்... நம்ம ப்ரஸ்டிஜ் போயிடும்னு நினைக்கறியா..?’’

‘சேச்சே... இது ப்ரஸ்டிஜ் பிரச்னை இல்லைங்க. ரொம்ப வும் அவசியம்னாதான், ஒருத்தர் கிட்ட கடன்னு போய் நிக்கலாம்.  கடன் குடுக்கறவங்களே, ‘ஆமா... நாம கண்டிப்பா குடுத்துதான் ஆவணும்’னு நினைக்கணும்.. அவங்களால குடுக்க முடியாட்டி யும், ‘சமயத்துல குடுக்க முடியாமப் போயிடுச்சே’ன்னு உண்மையா வருத்தப்படறதா இருக்கணும். அதை விட்டுப்புட்டு, துணி வாங்கணும்... ஊருக்குப் போவணும்னு சொல்லி, கடன் கேட்டா நல்லாவா இருக்கும்..?’’

ஆம். கடன் வாங்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய மிக முக்கியமான அம்சம் - நோக்கம். ஆங்கிலத்தில் ‘ட்ரிவியல்’ என்று ஒரு சொல் உண்டு. அதுமாதிரியான, சில்லறை விஷயங்களுக்குக் கடன் வாங்குவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். கேளிக்கை களுக்கு, ஆடம்பர செலவுகளுக்கு, ‘அந்தஸ்து’ குறைந்து போகாமல் இருப்பதற்கு (‘ஆமா... இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை...’) கடன் - வேண்டவே வேண்டாம்.

நிதி... மதி... நிம்மதி - 7

தொடர்ந்து எழுகிற ‘ரொட்டீன்’ செலவுகளுக்கும், விடமுடியாத அடிமைப் பழக்கங் களாய் இருக்கிற ‘அடிக்‌ஷன்’ களுக்கும், கடன் கேட்பதும் கூடாது; தருவதும் கூடாது.

சரி, இந்த நோக்கத்துக்கு, கடன் கேட்கலாமா கூடாதா... என்று எப்படி வகைப்படுத்துவது..? இது முக்கியமா, இல்லையா என்பதை எப்படித் தீர்மானிப் பது...? மிக எளிது.

எவற்றுக்கெல்லாம் வங்கிக் கடன் கிடைக்குமோ.. (பெர்ஷனல் லோன், கிரெடிட் கார்டு கடன் கள் வங்கி மூலம் கிடைத்தாலும் வாங்கக் கூடாது!),  எந்தப் பொருட்கலெல்லாம் ‘இன்ஷூரன்ஸ் கவரேஜ்’ வளையத்துக்குள் வருமோ, எவையெல்லாம்,  மனிதாபி மானம் உள்ள எவரையும் உருகச் செய்யுமோ, இந்த வகை நோக்கங்களுக்காக, மிக நிச்சயமாகக் கடன் கேட்கலாம். தவறு இல்லை.

அடுத்த அம்சம், கடன் தொகை. ‘‘நமக்கு 400 ரூபாய்தானே வேணும்...? எதுக்கு 1000 ரூவா, கடனாக் கேட்கறீங்க..?’’

‘‘சும்மா கேட்டுப் பார்ப்போமே... கிடைச்சா, அப்படியே வேற ஏதேனும் செலவையும் பார்த்துக் கலாம் இல்லை..?’’

‘‘வேற என்ன செலவு இருக்கு..? வேணாங்க. நானூறே போதும்னு சொல்லிடுங்க. அதிகமா வாங்கிட்டா, அப்புறம் திருப்பித் தர்றப்போ, கஷ்டமாப் போயிரும்...’’

சில சமயங்களில் இப்படியும் நடப்பது உண்டு. ‘‘அறுவடை முடிஞ்சு, கையில ஏராளமா  வச்சிருக்காரு. இல்லைன்னே சொல்ல மாட்டாரு... தாராளமாவே கேளு.. ஆமாம்...’’

கேட்பார் பேச்சைக் கேட்டு, ‘தாராளமாக’ கடன் வாங்குகிற வழக்கம் வேண்டாம். வாங்கிய கடனை, குறிப்பிட்ட காலத்துக் குள் திருப்பிச் செலுத்த, நமக்கு ‘வல்லமை’ இருக்கிறதா என்பதை, கவனத்தில் கொள்ள வேண்டும். இதைத்தான், கடன் வழங்குகிற போது, வங்கிகள் துருவித் துருவி, ஆராய்கின்றன. (பிறகு எப்படி, இத்தனை கோடிகள், வாராக் கடன்கள் என்பது வேறு விஷயம்!)

எவ்வளவு தொகையைக் கடனாக வாங்கலாம் என்பதற்கு, ‘மருந்துச் சீட்டு மனநிலை’ சரியான வழிகாட்டி எனலாம்.

அது என்ன..?

நமக்கு உடல்நிலை சரியில்லை என்று டாக்டரிடம் போகிறோம். அவரும் பத்து நாட்களுக்கு எடுத்துக்கொள்ளும்படி, மருந்து எழுதித் தருகிறார். ஆனால், உண்மையில் நம்மில் எத்தனை பேர், டாக்டர் எழுதிக் கொடுத்த படியே பத்து நாட்களுக்கு மருந்து வாங்குகிறோம்..? மருந்துக் கடைக்குப் போய், ‘மூணு நாளைக்குக் குடுங்க... போதும்’ என்று சொல்கிறோமா... இல்லையா..? ஏன் இப்படி..?

‘டாக்டர் அப்படித்தான் எழுதுவாரு... மூணு நாள்ல சரி ஆயிடும். பத்து நாளைக்கு வாங்கினா, வீணாதானே போகும்..?’ கடன் வாங்குவதைத் தவிர வேறு வழி இல்லையா..? மருந்துச் சீட்டு மனநிலைக்கு வந்து விட வேண்டும்.

‘ஐயாயிரம் ரூபா எதுக்கு வீணா..? மூணாயிரத்துலயே முடிச்சுடுவோம்.’ இந்த உணர்வு இருந்தால் போதும். கடன் என்கிற கண்ணி வெடிக்குள் சிக்கமாட்டோம்.

நிறைவாக, கால அவகாசம். ‘எப்போ வாங்கணும்..? எப்போ திருப்பணும்..?’ ஜூன் மாதம் கட்ட வேண்டிய கல்விக் கட்டணத்தை, ஏப்ரல் மாதமே, கடனாக வாங்கி வைக்கலாமா..? அதேபோல, இந்தப் பணத்தை, அடுத்த ஆண்டு மே மாதம் வரை திருப்பித் தராமலே இருக்கலாமா..?

நிதி... மதி... நிம்மதி - 7

கடன் வாங்குவதில் ‘கோல்டன் ரூல்’ என்னன்னா.., ‘ரொம்ப முன்னாடியும் வாங்கக் கூடாது; திருப்பித் தர்றதை, ரொம்பவும் தள்ளிப்போடவும் கூடாது’.

ஆக, மூன்று அம்சங்களில் தெளிவாக இருத்தல் வேண்டும். கடனுக்கான காரணம், கடன் தொகை மற்றும் கால அவகாசம் என மூன்று அம்சங்களைப் பார்த்தோம் இல்லையா..? இதே போல, மூன்று வகைக் கடன்கள் இருக்கின்றன.

‘கைமாத்து’.

சொல்லவே வேண்டாம். நம் நாட்டில் மிக அதிகமாகப் பயன் பாட்டில் உள்ளது இதுதான். உப்பு, புளி, காபித்தூள் தொடங்கி, பணம், நகைகள் வரை, ‘இரவல்’ வாங்குவதும், கொடுப்பதும் மிகச் சாதாரணம் ஆகிவிட்டது. ‘பொருளாதாரம்’ என்கிற வட்டத் துக்குள் இது அடங்குமா என்பது கூட, ஐயத்துக்கு உரியதுதான். உறவுகள் வலுப்படக் காரணியாக இருக்கிறது என்கிற அளவில், இதை ‘இருகரம் நீட்டி’ வரவேற்கலாம்.

அடுத்து வருவது, ‘குறுகிய காலம்; குறைந்த தொகை’. எந்த ‘சம்பிரதாயங்களும்’ இல்லை. உடன்பணிபுரிவோர், நண்பர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட, எழுதப்படாத விதிகளால் இயங் கும் நடைமுறை. இந்தியாவில் மிகப் பிரபலமான இந்த முறை, உலகமயமாக்கலில் உருவான, பன்னாட்டு நிறுவனங்களில் நிலவும் பணிக் கலாசாரத்தால், (‘வொர்க் கல்ச்சர்’) மெள்ள அழிந்து வருவதாகத் தோன்றுகிறது.

முன்பெல்லாம், ஒரு நிறுவனத் தில் பணிபுரிகிறவர்கள் மத்தியில், தனிப்பட்ட, ஆரோக்கியமான உறவுமுறை இருந்து வந்தது. ஒருவரின் குடும்ப நிகழ்ச்சிகள் உட்பட, எந்தவொரு நிகழ்விலும், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் தானாகவே சேர்ந்து கொண்டது. இது, கடன் வாங்குவதிலும் பிரதிபலித்தது.

நாம் அறிந்த வரையில், இவ் வாறான ‘உதவிகள்’, இப்போதைய தலைமுறையினரிடம் அரிதாகி வருகின்றன. எவ்வளவுதான் சம்பாதித்தாலும், ஒருவருக்கொரு வர் ‘கொடுக்கல் - வாங்கல்’ வைத்துக்கொள்வது இல்லை. இது சரியா, தவறா என்பது வேறு விஷயம். ஆனால் இது, நாம் பல காலமாகப் பின்பற்றி வந்த வாழ்க்கை முறை அல்ல என்பது மட்டும் உண்மை.

‘‘இப்போ எதுக்கு இடிஞ்சி போயி உட்கார்ந்துக்கிட்டு இருக்கே..? இதைப் பிடி. இதை வச்சிக்கிட்டு, ஆக வேண்டியதைப் பாரு. எல்லாம் தானா நடக்கும். பாரேன்...’’ என்று, கேட்காமலே வந்து ஆதரவு தருபவர்கள், இன்று எத்தனை பேர்..? இந்த வகையில், சென்ற தலைமுறை யினர், ‘கொடுத்து வைத்தவர்கள்’. ‘பரஸ்பர உதவி’, நமது பொருளா தாரக் கட்டமைப்பில், முக்கிய இடம் வகித்து வந்த காலம், முற்றிலுமாக மறைந்து விடுமோ என்கிற அச்சம், நம் கண் எதிரில், நிதர்சனம் ஆகிக்கொண்டு வருகிறது.

மூன்றாவது வகை: பதிவு செய்யப்பட்ட, சட்டங்கள், விதி களால் ஆன முறையான கடன். வங்கிகள், நிதி நிறுவனங்கள், சில சமயங்களில், தனிநபர் மூலமும் பெறப்படுகிற கடன்கள்.

 ஒரு சுவாரஸ்யமான செய்தி. நாம் முன்னர் சொன்ன மூன்று அம்சங்களில், முதல் வகைக் கடனுக்கு, முதல் அம்சமும், இரண்டாவதுக்கு, முதல் இரண்டும், மூன்றாவது வகைக் கடனுக்கு, முழுவதுமாக மூன்று அம்சங்களும் பொருந்தும்.

சரி... யார் கிட்டபோய்க் கேட்டா, கடன் கிடைக்கும்..? இதற்கு நம்மால் பதில் சொல்ல முடியாது. ஆனால், எப்போது போய்க் கேட்டால் கிடைக்கும் என்று சொல்ல முடியும். ‘இது கல்யாண காலம்’ ‘வீடு வாங்க சரியான நேரம்’ என்று ஜோதிடர் கள் சொல்வதுபோல, பொருளா தார நிபுணர்களும், ‘இது கடன் கேட்க உகந்த காலம்’ என்று சொல்வது உண்டு.

‘‘அப்படியா..! சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க.. அது எந்தக் காலம்..?’’

(சேர்ப்போம்)

இனி இல்லை சஹாரா மியூச்சுவல்!

சஹாரா நிறுவனம் நடத்தி வந்த மியூச்சுவல் ஃபண்ட் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துக்கான (AMC) அனுமதியை செபி ரத்து செய்து உள்ளது. கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.340 கோடி மதிப்புள்ள சொத்துக்களை  நிர்வகித்தது.  இந்தச் சொத்துக்கள் அனைத்தை யும் செபி அனுமதி அளிக்கும் புதிய ஏஎம்சி-க்கு மாற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.