Published:Updated:

நிதி... மதி... நிம்மதி - 8

குடும்ப நிதி மேலாண்மை தொடர்பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

உசுரு வந்துடுச்சி!

ட்டுமொத்த பொருளாதாரத் தின் ஓர் அங்கம் தானே செலவு மேலாண்மை என்பது..?  அதனால், பணப் புழக்கம் பற்றியும் நாம் பார்த்தே ஆக வேண்டும். அப்போதுதான், அடுத்த கட்டத்துக்கு நம்மால் நகர முடியும்.

‘ரொம்ப பெரிய வார்த்தை லாம் சொல்றீங்க... எனக்கு அர்த்தம் புரியலை. நான் என்ன சொல்றேன்னா.., யாரு கைலயும் காசு இல்லை; 500 ரூபா, 1000 ரூபா நோட்டெல்லாம் கண்ணுலயே பட மாட்டேங்குதே... எல்லாம் எங்க போச்சு..?’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நிதி... மதி... நிம்மதி - 8

‘நானும் அதையேதான் சொல்றேன். பணப் புழக்கம் குறைஞ்சு போச்சு...’

இப்படி இருவர் பேசுவதும் ஒரே பிரச்னை பற்றிதான். ‘செலவுக்குப் பணம் இல்லை...’ இதே பிரச்னையுடன் என்ன செய்வது என்று தெரியாமல் பல லட்சக்கணக்கானோர் இருக் கின்றனர். கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்...

‘அவசரமா ஒரு செலவு வந்துடிச்சி.. ஏதாவது பணம் குடுத்து ‘ஹெல்ப் பண்ண முடியுமா..?’ என்பதுபோல, ‘சேர்த்து வைக்க கையில காசு இல்லை.., கொஞ்சம் பணம் குடுத்தீங்கன்னா.., சேமிச்சு வச்சிக்குவேன்...’ என்று ஒருவர் வந்து கடன் கேட்டால், அவரை நாம் எப்படிப் பார்ப்போம்..?

என்ன அர்த்தம்..? கடன் என்பதே செலவு செய்யத்தான். கடனாக நம் கைக்கு வருகிற அல்லது நம் கையில் இருந்து போகிற தொகை, உடனடியாகக் ‘கைமாறி’ விடுகிறது.

அதாவது, கடன் என்பது, மிக நிச்சயமாக சுற்றில் இருக்கிற பணம் (‘மணி  இன்  சர்க்கு லேஷன்’). இதுதான் பணப் புழக்கத்தைத் தளர்த்தும்; புழுக்கத்தைப் போக்கும். எந்த அளவுக்குப் பணம் கைமாறு கிறதோ, அந்த அளவுக்கு அதன் பலன், பலருக்கும் சென்று சேர்கிறது.

எப்போதுமே, பொருளாதாரம் இரண்டு பக்கங்களைக் கொண்டது. ‘கடன்’ பணப் புழக்கத்தை உருவாக்கும்.

அதேபோல, பணப் புழக்கம் இருந்தால்தான், கடனே கிடைக்கும். எப்போதெல்லாம், பணம் அதிகமாக ‘வெளியே’ வருகிறதோ, அப்போதெல்லாம், கடன் பெறுவது எளிதாகிறது.

நிதி... மதி... நிம்மதி - 8

இதை நாம் பலமுறை அனுபவித்து இருக்கிறோம்.

‘சார்... உங்களுக்கு லோன் எதாவது வேணுமா..? நோ ஃபார்மாலிட்டீஸ் சார். ரெண்டே நாள்ல உங்க கைக்கு பணம் வந்துடும் சார்..’ என்று ஓயாமல், நமது மொபைல் போனில் தொந்தரவு செய்கிறார்களா..? பணப் புழக்கம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.
இதுவே, ‘எத்தனை படி ஏறி இறங்கினாலும், ஒண்ணும் நடக்க மாட்டேங்குது..’ என்கிறீர்களா..?

‘நெலைமை சரியில்லை’ என்று பொருள். அப்படி யாராவது கடன் கொடுக்கிறேன் என்று வந்தால், ராக்கெட் வட்டி கேட்பார்கள்.

ஏன் இங்கே இதுபற்றி பேசுகிறோம்..? செலவுக்கும், பணப் புழக்கத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்பதை எடுத்து சொல்லத்தான்.

ஒரு சிறிய நகரம். அந்த ஊரின் முக்கியமான கடைத் தெரு. எல்லா கடைகளும் திறந்து இருக்கின்றன.

10 மணி, 11 மணி, 12 மணி... ஊஹூம். எந்தக் கடையிலும் கூட்டம் இல்லை. கூட்டமா..? ஆள் நடமாட்டமே இல்லை. ‘நாலு பேரு அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டு இருந்தாத்தானே, கடைத் தெருவுக்கே அழகு..?’

ஆனால், கடைத் தெரு மொத்தமும் வெறிச்சோடிக் கிடக்கிறது. ‘கடை விரித்தேன், கொள்வார் இல்லை’ என்கிற நிலை.

 கடை முதலாளியில் இருந்து, கடைநிலைப் பணியாளர்கள் வரை, ஏதேதோ கதை பேசி, நேரத்தைப் போக்கிக் கொண்டு இருக்கிறார்கள். வெளியில்தான் சிரித்துப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். உள்ளுக்குள் வருத்தம், வேதனை.

‘ஏதாவது வியாபாரம் நடந்து நாலு காசு கைக்கு வந்தா, நானே கூப்பிட்டு குடுக்கமாட்டேனா..?’ என்று முதலாளி சொல்கிற போது, தொழிலாளியின் மனதில் ஏற்படுகிற வலியை யாரால் தீர்க்க முடியும்...?

இதற்கு, முதலாளியோ அல்லது வேறு எந்த தனி நபரோ பொறுப்பு அல்ல. பணப் பற்றாக் குறை.

அது ஒன்றுதான் காரணம். என்ன செய்தால் நிலைமை சீர்படும்..? உண்மையான பொருளாதார நிபுணர்களின் சிந்தனையும் செயல்பாடும் இதை நோக்கியே நகர்கின்றன.

சரி, பணப் பற்றாக்குறையை, எப்படித் தீர்ப்பது..?

நிதி... மதி... நிம்மதி - 8

ஒரு தீர்வு இருக்கிறது. இது நான் சொல்கிற தீர்வு அல்ல. நம் முப்பாட்டன் திருவள்ளுவர் சொன்னது! இந்தக் குறளை நினைக்கும் போதெல்லாம், ‘இப்படி ஒரு சிந்தனையா...’ என்று ஆச்சர்யமாக இருக்கிறது. அதுவும், வான் சிறப்பு என்கிற தலைப்பின் கீழ்!

“விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பதரிது.”

(‘மேலே இருந்து’, துளிகள் வீழ்ந்தால் அன்றி, ‘கீழே இருந்து’, பசும் புல்லும் தலை தூக்கல் அரிது’)

வெறிச்சோடிக் கிடக்கிற கடை வீதி. ஒரு கார் நுழைகிறது. அந்த ஊருக்கு அவர்தான் பெரிய செல்வந்தர். தன் பேத்தியின் பிறந்தநாளுக்காக, சிறுமியை அழைத்துக் கொண்டு, பரிசுகள் வாங்க வந்து இருக்கிறார்.

ஆபரணக் கடைக்குப் போய்ச் சில நூறுகள் செலவிடுகிறார். அதன்பிறகு, பொம்மைகளும், இனிப்புகளும் வாங்குகிறார்.

தொடர்ந்து, துணிக் கடைக்கு, ஹோட்டலுக்கு, ஐஸ்கிரீம் கடைக்கு...

‘கொட்டாவி விட்டுக் கொண்டு இருந்த’, கடை வீதியில் சிறிது முன்னேற்றம்.

‘வாடிக்கையாளர்’ சாப்பிட, ஆபரணக் கடையில் இருந்து, இரண்டு காபிக்கு ‘ஆர்டர்’ ‘காற்றில் பறக்கிறது’.

‘பொழுதுபோவதற்காக’, செல்வந்தரின் கார் டிரைவர், வேர்க்கடலை வாங்கிக் கொள்கிறார்.

பழம் விற்கும் பெரியவர், தள்ளுவண்டியை, ஆபரணக் கடை அருகில் கொண்டுவந்து நிறுத்துகிறார். ஒருவர் வந்து சென்றதில், உறங்கிக் கிடந்த கடைத் தெருவுக்கு, புத்துணர்வு வந்துவிட்டது. ‘ஒண்ணும் இல்லாததுக்கு, வியாபாரம்னு ஏதோ ஒண்ணு.. நடந்தது.’
விளைவு..?
துணிக் கடைக்காரர், ‘பையனுக்கு’, 200 ரூபாய் ‘அட்வான்ஸ்’ தருகிறார். ஆபரணக் கடையை, பெருக்கி சுத்தம் செய்கிற ஆயாவுக்கு 300 ரூபாய் ‘சம்பளம்’ கிடைக்கிறது.

சாம்பிராணி போடும் முஸ்லிம் பெரியவருக்கு, ஹோட்டல்காரர் 10 ரூபாய் வழங்குகிறார். ‘ஐஸ்கிரீம்’ கடை மேலாளர், பேப்பர் கடைக்குப் போய், ‘விகடன்’ வாங்கி வந்து படிக்கிறார்.

ஒருவர் வந்துபோனதற்கே, சங்கிலித் தொடராக, இத்தனை நடவடிக்கைகள் என்றால் என்ன பொருள்..?

‘மேலே’ வசதியாக இருப்பவர் கள், செலவு செய்கிறபோதுதான், ‘கீழே’ நலிந்த நிலையில் இருப்பவர் களுக்குப் பணம் வந்து சேரும். இது ஒன்றும் ‘கருணை’, ‘இரக்கம்’, ‘பச்சாதாபம்’ சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. அவ்வாறாக, தவறான பொருள் கொள்ளக் கூடாது. இது முழுக்கவும், பொருளாதாரம் சொல்லித் தருகிற வாழ்க்கையின் யதார்த்தம்.

‘வானம் பொழிந்தால்தான், பூமி விளையும்’. கையில் உள்ள பணம், பையில் முடங்கிக் கிடந் தால், யாருக்கும் பயன் இல்லை. ‘வெளியில வரணும்’. அதுதான் முக்கியம்.

காலணிகள் தைக்கிற பெரிய வரின் கண்களில் தெறிக்கிற வெறுமை, ‘ஷூ’வுடன் நடந்து வருகிற கால் தென்படுகிற போதுதான், சற்றேனும் மாறும். தயிர் பானையை, பூக்கூடையை, பொம்மைகளை, துணிமணி களை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தெருத் தெருவாய், வீடு வீடாய்ப் போய் விற்கும் ஏழை ‘வியாபாரிகள்’ முதல், மின்னொளியில் மினுமினுக்கும் நகைக்கடை அதிபர்கள் வரை, அத்தனை பேருக்குமே, வாங்கு வோர்தானே, வரம் தரும் தெய்வங்கள்!

எங்கே செலவு செய்யப்படு கிறதோ, அங்கேதான் அத்தனை பேரின் பொருளாதாரமும் தலை தூக்க முடியும்.

கூவிக் கூவி தன் பொருட் களை விற்கும் கடையால், அந்தக் கடைக்கு மட்டுமே பயன் கிடைக்கும் என்பதில்லை. ‘புல்லுக்கும் ஆங்கே கசியும்’. இதுதான் செலவு மேலாண்மை யின் ஆதார சுருதி.

நுகர்வோர் கலாசாரத்தைத் தூக்கிப் பிடிப்பதோ, அதற்கு ஆதரவாக விளக்கம் அளிப்பதோ நமது நோக்கம் அன்று. அதன் மறு பக்கத்தையும், பொருளாதாரக் கண்ணோட்டத்துடன் பதிவு செய்கிறோம், அவ்வளவே.

வர்க்க பேதங்களும் ஏழை -பணக்கார வேறுபாடுகளும், களையப்பட வேண்டும் ஏன்பதில்  இரு வேறு கருத்தில்லை.

அதேசமயம், எங்கிருந்து பணம் வரும்..? சிலர் செய்கிற செலவுகளின் மூலம், பலருக்கும் வரும்.   ஆகவே, பொருளாதாரத்தை உயிர்ப்புடன் வைத்து இருப்பதில், சேமிப்பைப் போலவே, செலவுகளுக்கும்் முக்கியப் பங்கு உண்டு.

எது எதற்கு, யார் யார் எவ்வளவு செலவு செய்யலாம் என்பதுதான் கேள்வி. ஒவ்வொரு வருக்கும் இது மாறுபடும். உதாரணத்துக்கு, நம்மிடையே வாழும் சுவாரஸ்யமான இரண்டு நபர்களைப் பற்றி தொடர்ந்து பார்ப்போமா..?

(சேர்ப்போம்)