Published:Updated:

`‘உரிமைகளைப் பறித்துக்கொண்டு உயிரையும் பறிக்காதீர்கள்!’’

`‘உரிமைகளைப் பறித்துக்கொண்டு உயிரையும் பறிக்காதீர்கள்!’’

`‘உரிமைகளைப் பறித்துக்கொண்டு உயிரையும் பறிக்காதீர்கள்!’’

`‘உரிமைகளைப் பறித்துக்கொண்டு உயிரையும் பறிக்காதீர்கள்!’’

Published:Updated:

“நம்ம வாழ்க்கையில வர்ற ஒவ்வொருத்தரும் ஏதோ ஒண்ணை நமக்காக விட்டுப் போவாங்க. அப்படி எனக்காக என் கணவர் விட்டுட்டுப் போன ஒரே சொத்து, எய்ட்ஸ்!’’

- துயரத்தின் சுவடில்லாமல் இயல்பாகப் பேசுகிறார் கௌசல்யா பெரியசாமி.

இந்த வருடம் டெல்லியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் குடியரசுத் தலைவரால் சாதனைப் பெண்களுக்கு வழங்கப்படும் ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். `ரீடர்ஸ் டைஜஸ்ட்' பத்திரிகை வழங்கிய ஆசியாவின் சிறந்த சமூக சேவகி விருது, ஸ்கோப் இன்டர்நேஷனல் விருது, வேர்ல்ட் பிசினஸ் அமைப்பு வழங்கிய 35 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சிறந்த பெண்மணி விருது என பத்துக்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`‘உரிமைகளைப் பறித்துக்கொண்டு உயிரையும் பறிக்காதீர்கள்!’’

இவரின் சாதனை?

கணவனால் பருவ வயதில் எய்ட்ஸுக்கு வாக்கப்பட்டு, தன் 38 வருட வாழ்க்கையில் சரிபாதியான 19 வருடங்களாக ஹெச்.ஐ.வி வலியுடனே வாழ்ந்தாலும், தன்னைப் போன்ற எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வழிகாட்டி வரும் ஒரு விடிவெள்ளி, கௌசல்யா. இந்தியாவிலேயே தனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை முதன்முதலாக வெளிப்படையாகச் சொன்ன பெண் இவ‌ர்தான். தமிழ்நாட்டில் எய்ட்ஸ் பாதிப்பு அதிகம் இருக்கும் நாமக்கல் மாவட்டத்தின் ஒரு குக்கிராமம்தான் கௌசல்யாவின் பூர்வீகம்.

‘‘சின்ன வயசுலயே அம்மாவைப் பறிகொடுத்துட்டு சித்தி கொடுமையில சிக்கிக்கிட்ட சராசரி கிராமத்துப் பொண்ணு நான். படிக்க ஆசை இருந்தாலும், வீட்டோட கட்டாயத்தால பன்னிரண்டாவது முடிச்சதோட அத்தை மகன்கிட்ட மூணு முடிச்சை வாங்கிக்கிட்டேன். அவர் லாரி டிரைவர். திடீர்னு காய்ச்சல்ல படுத்த படுக்கையான எனக்கு பிளட் டெஸ்ட் எடுத்தப்போ, ஹெச்.ஐ.வி பாசிட்டிவ்னு ரிசல்ட் வந்தது. எய்ட்ஸ்னாலே தப்பான உடலுறவு வெச்சிக்கிறவங்களுக்கு மட்டும்தான் வரும், அது வந்தா பொழைக்க மாட்டாங்கங்கிறதுதான் அப்போ இதைப்பத்தி எனக்குத் தெரிஞ்ச விவரம். நான் எந்தப் தப்பும் பண்ணலையேனு இடிஞ்சு போனப்போ, ‘உங்களுக்கு வந்துருக்கிறது ஏற்கெனவே இந்த நோய் இருக்கிறவங்களோட தாம்பத்யம் வெச்சுக்கிறதால பரவற ‘பாசிவ் டைப்’ எய்ட்ஸ். உங்க வீட்டுக்காரரையும் டெஸ்ட் பண்ணணும்’னு டாக்டர் சொன்னாங்க’’

- அவரின் உயிருக்கும் ஆபத்தா என்ற பதைபதைப்புடன் மாமியார் வீட்டுக்குச் சென்றவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி... 

‘‘எனக்கு எய்ட்ஸ் இருக்குங்கிறது எப்போவோ எனக்குத் தெரியும். இஷ்டம்னா வாழு, இல்லை வீட்டை விட்டுப் போடி. நான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறேன்னு என் வீட்டுக்காரர் பேசினப்போ, உடைஞ்சு போனேன். கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமப் பேசினவரை, அந்த நிமிஷமே வெறுத்து, விலகிட்டேன். ஆறு மாசத்துல அந்த ஆளு தற்கொலை பண்ணிக்கிட்டப்போகூட எட்டிப் பார்க்கல!’’

- வலிகளைச் சொல்லும்போதும் அவர் குரலில் வலிமைதான் இருந்ததே தவிர வாட்டமில்லை.

‘‘ வாழ்க்கையை வாழணும்னு எனக்கு இருந்த ஆசைதான் சிகிச்சைக்காக சேலம் வரைக்கும் என்னைத் தேடிப் போக வெச்சது. கர்ப்பப்பையை எடுத்துட்டு, வாழ்நாள் முழுக்க மருந்து எடுத்துக்கிட்டாதான் நோயைக் கட்டுப்படுத்த முடியும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. கர்ப்பப்பையை நீக்கினாலும் நோயின் வலி ஒருபுறம் வாட்டி வதைக்க, மருந்து மாத்திரைகளுக்கான பணத் தேவையும் என்னைப் பாடாப்படுத்துச்சு. ப்ளஸ் டூ-ல நர்சிங் குரூப் படிச்சிருந்ததால, எய்ட்ஸ் குறித்த விழிப்பு உணர்வுக்காக இயங்கிய  நிறுவனத்துல வேலை பார்த்து என்னைக் காப்பாத்திக்கிட்டேன்!’’ என்றவர், தான் பட்ட கஷ்டம் பிற பெண்கள் படக்கூடாது என்ற அக்கறையில் ஆரம்பித்ததுதான், ‘பாசிட்டிவ் வுமன் நெட்வொர்க்' (பி.டபிள்யு.என்). இந்தியாவில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் அமைப்பு. ஆசியாவிலேயே எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்காக 20,000 பேரை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கும் பெரிய அமைப்பும்கூட!

இன்றும்கூட எய்ட்ஸ் என்றால் தவறான பிம்பமே நிலைத்திருக்கும் போது, 17 வருடங்களுக்கு முன்னால், அதுவும் ஒரு கிராமத்துப் பெண்ணால் இது எப்படி முடிந்தது?!

‘‘எய்ட்ஸ் விழிப்பு உணர்வுக்காக வீடு வீடா போனப்போ, நாயைவிடக் கேவலமாதான் பார்த்தாங்க. என்னை மாதிரி பாதிக்கப்பட்ட ஜோன்ஸ், வரலக்ஷ்மியோட சேர்ந்து, 98-ம் வருஷம் ‘பி.டபிள்யு.என்’ அமைப்பை ஏற்படுத்தினோம். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட விதவைகள் உதவிப்பணம் பெறும் வயது வரம்பை 45-ல் இருந்து 18 ஆகக் குறைக்கச் செய்தது, இந்தியா முழுக்கவும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான இலவச (ஆன்டி ரெட்ரோ வைரல் டிரக்ஸ்) மருந்துகள் கிடைக்கச் செய்ததுனு இந்த அமைப்பு எங்களோட வலிகளை சமுதாயத்துக்கு அழுத்தமா சொல்லி, பல தீர்வுகளைச் சாத்தியமாக்கிச்சு. ஆனாலும்...’’

- குரலில் இன்னும் அழுத்தம் கொடுத்து கவனிக்க வைக்கிறார் கௌசல்யா.

‘‘ முன்ன எல்லாம் 20 நாளைக்கு சேர்த்து மாத்திரை தந்தவங்க, இப்போ 5 நாளைக்கு ஒரு முறை வரச் சொல்றாங்க. பிரசவமான ஒரு பெண், தன் உடல்நிலை காரணமா 5 நாளுக்கு ஒருமுறை போக முடியாம, மாத்திரை கிடைக்காம, ஆனா, பிறந்த பச்சக் குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய நிலை. மாத்திரை எடுத்துக்காம பால் கொடுக்கிறதால, அந்தக் குழந்தைக்கு நோய் பரவறதுக்கான வாய்ப்பும் அதிகம். கர்ப்பிணிகளுக்கான ஹெச்.ஐ.வி பரிசோதனை ‘கிட்’-டுக்கும் இங்க பற்றாக்குறை. எய்ட்ஸ் இருக்கிற புருஷனைக் கட்டின பாவத்துக்கு, நோய் வந்து நாங்கதான் கஷ்டப்படறோம்னா, அந்த சிசுவும் பொறக்கும்போதே சாகிறதுக்கு வரம் வாங்கிட்டு வரணுமா?’’

- அழுகையும் ஆத்திரமுமாக கேட்டார்.

‘‘எங்களுக்கு யாரும் வேலை தர்றதில்லை, வெளியூருக்கு வேலை தேடிப் போனாலோ, வேலை பார்த்துட்டு வந்தாலோ ஏதோ பாலியல் தொழிலுக்குப் போயிட்டு வந்ததா நினைக்கிறாங்க. சுயஉதவிக்குழுக்கள் ஆரம்பிச்சு வங்கிக் கடன் பெறலாம்னா, நாங்க சீக்கிரம் செத்துப்போய் விடுவோம் அவங்களுக்கு இருக்கிற நம்பிக்கை, எங்க மேல அவநம்பிக்கை கொடுக்குது. எய்ட்ஸ் நோயாளிகளோட நலத்திட்டத்துக்காக 2002-ல பார்லிமென்ட்ல பாஸ் ஆன ஒரு பில் இன்னும் நடைமுறைக்கு வரல!’’ என்று நோயாளிகளின் கையறு நிலைமையை நாம் உணரப் பேசிய கெளசல்யா,

‘‘தனக்கு எய்ட்ஸ்னு தெரிந்தும், 17 வயசுப் பொண்ணோட பாலியல் உறவுகொண்டா நோய் சரியாகிடும்னு யாரோ சொன்னதை நம்பி, கல்யாணம் என்ற பெயரில் எங்க அமைப்பில் இருக்கும் விமலா என்ற பெண்ணுக்கு எய்ட்ஸைக் கொடுத்துட்டான் அவள் கணவன். இப்படி பெண் எய்ட்ஸ் நோயாளிகளில், எந்தத் தவறும் செய்யாம தன் துணையால இந்த நோய்க்கு ஆளானவங்க 86%. குற்றமே செய்யாம ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ரணத்தால் நிரம்பிய வாழ்க்கை எங்களோடது! இந்த நிலை மற்ற பெண்களுக்கு கூடவே கூடாது.

லோ கிளாஸ், மிடில் கிளாஸ், ஹையர் கிளாஸ்னு யாரா இருந்தாலும், உங்க பொண்ணுக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கிறதோட... மெடிக்கல் ரிப்போர்ட்டையும் பார்க்க வேண்டிய காலம் இது. பொத்திப் பொத்தி வளர்த்த பொண்ணை, வாழைமரம் கட்டி, மங்கள அரிசி போட்டு, சாவு கையில கொடுத்துடாதீங்க!’’ என்று வேண்டுகோள் வைத்த கெளசல்யா, உரக்கச் சொன்னார் இப்படி...

‘‘வார்த்தைகளால் சாகடிக்கும் சமுதாயம், மருந்து கொடுக்காம சாகடிக்கும் அரசாங்கம்... இப்படி இந்தியாவுல மறைமுகப் படுகொலையாதான் தொடருது எய்ட்ஸ் நோயாளிகளோட வாழ்க்கை!’’

- குற்றமற்றவர்களின் குற்றச்சாட்டு மனதில் அறைகிறது!

க.தனலட்சுமி  படம்: கு.பாலசந்தர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism