Published:Updated:

நாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்

நாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்

நாணயம் விகடன் ட்விட்டர்  கேள்வி பதில் பகுதியில் நுகர்வோர் பிரச்னைகள் மற்றும் உரிமைகள்

நாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்

குறித்த சந்தேகங்களுக்கு  சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் இயக்குநர்  எஸ்.சரோஜா அளித்த பதில்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த மாதம் ஆன்லைன் ரீடெயில் வலைதளம் ஒன்றில் வாட்ச் வாங்கினேன். சரியாக செயல்படவில்லை. ஆன்லைன் நிறுவனம் சொன்ன இடத்தில் சர்வீஸ் செய்தும் பலனில்லை. யாரை அணுகினால் தீர்வு கிடைக்கும்?

``நேரடியாக நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி பிரச்னைக்குத் தீர்வு காணலாம். அப்படி இல்லை என்றால் நீங்கள் ஏதேனும் பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்பை நாடி உங்கள் பிரச்னையை தீர்த்துக் கொள்ள முயற்சிக்கலாம்.''

நுகர்வோருக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றன?

``நுகர்வோருக்கு சில உரிமைகள்  உள்ளன. அவை, பாதுகாப்பு உரிமை, பொருட்களைத் தேர்வு செய்தல், தகவல் அறிதல், பிரதிநிதித்துவம், நுகர்வோர் கல்வி பற்றிய உரிமை, அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழல் போன்றவை ஆகும். இவற்றில் முதல் ஆறு உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.''

பொதுவாக நுகர்வோர்கள் செய்யும் தவறுகள் என்ன?

``வாங்கும் பொருட்களின் ஒரிஜினல் பில்லை எப்போதும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதேபோல் எந்தப் பொருளையும் வாங்குவதற்குமுன்பு, அந்த பொருள் வாங்குவதற்கான பத்திரங்கள், பேப்பர்களில் கையெழுத்திடும்போது ஒன்றுக்கு இரண்டு முறை படித்துப் பார்த்து கையெழுத்திட வேண்டும்.

நாம் பொருள் வாங்கும்போது கடைக்காரர் அல்லது சேவை வழங்குபவர் தரும் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக இருக்கவேண்டும். இந்த விஷயத்தில்தான் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விழிப்பு உணர்வு இல்லாமல் தவறு செய்கிறார்கள்.''

நாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்

என் நண்பரின் நுகர்வோர் பிரச்னைக்கு நான் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து வாதாடலாமா?

``நிச்சயமாக, நீங்கள் வாதாடலாம். உங்களுடைய நண்பர் உங்களை அதிகாரப்பூர்வமாக (Authorize) பரிந்துரைக்க வேண்டும்.''

நுகர்வோர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டால் யாரிடம் புகார் செய்வது? உடனடித் தீர்வு ஏதேனும் உண்டா?

``ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விலை கொடுத்து வாங்கும்போது நாம் நுகர்வோர் ஆகிறோம். இவற்றில் ஏதேனும் குறை ஏற்பட்டால் மட்டுமே நாம் நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுகலாம். ஆனால், நுகர்வோர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டாலோ, அவர்களின் மீது தவறான வார்த்தை பிரயோகம் செய்யப்பட்டாலோ உடனே அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகி புகார் செய்யலாம்.''

 நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகும்போது எதுமாதிரியான விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் அணுக வேண்டும்?

``ஒரு விற்பனையாளரின் மீது குறை சொல்கிறோம் என்றால், அதை நிரூபிப்பதற்கான அனைத்து ஆதாரபூர்வமான ஆவணங்களையும் (ரசீது, கடிதப் போக்குவரத்து விவரங்கள், புகார் கடிதத்தின் நகல் மற்றும் வேறு சம்மந்தப்பட்ட ஆவணங்கள் இருப்பின் அவை அனைத்தும்) சமர்பிப்பது ஒரு நுகர்வோரின் கடமையாகும். அந்த வகையில் ஒரு பொருளை வாங்கியதில் பிரச்னை ஏற்பட்டால், நுகர்வோர் அதுசார்ந்த முழுமையான விவரங்களை குறிப்பிட்டு, பின்னர் அதை மாற்றிக் கொடுக்கச் சொல்கிறாரா அல்லது அதற்கான பணத்தை திரும்பத் தரச் சொல்கிறாரா அல்லது அதை சரிசெய்து தரச் சொல்கிறாரா என்கிற விவரங்களை தெளிவாக நுகர்வோர் குறைதீர் மன்றத்திடம் தெரியப்படுத்துவது அவசியம். இதுதவிர, இந்த பிரச்னையால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருப்பின் அதற்காகவும் நஷ்டஈடு கேட்கலாம். நஷ்ட ஈடானது இவ்வளவுதான் என வரையறுக்கப்படவில்லை என்றாலும், நியாயமான கோரிக்கையையே நுகர்வோர் நீதிமன்றம் எதிர்பார்க்கும் என்பதைக் கருத்தில்கொள்வது அவசியமாகும்.''

வாரண்டி, கியாரண்டி என்ன வேறுபாடு? எது சிறந்த சலுகை?

``வாரண்டி என்பது வாக்குறுதி வழங்குவது ஆகும். அதாவது, வாங்கும் பொருளில் உள்ள பாகங்களில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதைச் சரிசெய்து தருவது அல்லது அந்தப் பாகத்தை மாற்றித் தருவதற்கான உறுதி வழங்குவதுதான் வாரண்டி ஆகும்.

கியாரண்டி என்பது வாங்கும் பொருளில் குறிப்பிட்ட சில வருடங்கள் அல்லது மாதங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது என அக்ரிமென்ட் கொடுப்பது ஆகும். உதாரணமாக, ஒரு பொருள் வாங்கும்போது 60 நாட்கள் மணி பேக் கியாரண்டி, 2 வருடம் வாரண்டி எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது, 60 நாளில் வாங்கிய பொருளில் பிரச்னை ஏற்பட்டால் பொருளை கொடுத்துவிட்டுப் பணத்தைத் திரும்ப வாங்கிக்கொள்ளலாம் என்பது கியாரண்டி. அதுவே அந்தப் பொருளில் இரண்டு வருடத்துக்குள் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதை சரிசெய்து தருவது வாரண்டி ஆகும்.''

நான் மூன்று ஆண்டுகளுக்குமுன் ஒரு புகழ்பெற்ற நகைக்கடையில் 1 பவுன் எடையுள்ள நகை வாங்கினேன். தற்போது அந்த நகையை அதே கடையில் விற்கச் சென்றபோது 7 கிராம்தான் என்று கூறுகிறார்கள். இந்தப் புகாரை யாரிடம் தெரிவிப்பது?

``நகை வாங்கியதற்கான ரசீதில், அதில் நீங்கள் வாங்கும்போது எத்தனை கிராம் போட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் 8 கிராம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும், தற்போது அந்த நகையின் எடை எவ்வளவு உள்ளது என்பதை வேறு கடையில் எடை போட்டு பார்க்கவும். எடையில் ஒரு கிராம் வித்தியாசம் இருந்தால் நகை வாங்கிய கடையில் அது குறித்து ஒரு புகார் கடிதத்தை அளிக்க வேண்டும். அதற்கு அந்தக் கடை எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை எனில், நுகர்வோர் நீதிமன்றம் அல்லது நுகர்வோர் அமைப்பை அணுகலாம்.''

நுகர்வோர் நீதிமன்றத்தை எப்படி அணுகுவது?

``பணம் கொடுத்து பொருள் வாங்கி அதில் ஏதாவது பிரச்னை இருந்தால், அது குறித்து நீங்கள் பொருள் வாங்கிய நிறுவனத்திடம் முதலில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அந்தப் பிரச்னை குறித்து எந்தவிதமான நடவடிக்கையையும் அந்த நிறுவனம் எடுக்கவில்லையெனில், நுகர்வோர் குறைதீர் மன்றத்தை  அணுகலாம். இங்கு புகார் பதிவுசெய்வது மிகவும் எளிதுதான். புகார் கடிதத்தில் உங்களின் பெயர், நீங்கள் புகார் கொடுக்கும் நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரியைக் குறிப்பிடுவது அவசியம்.

மேலும், அந்த நிறுவனத்தின் மீது எந்தக் காரணத்துக்காக புகார் கொடுக்கிறீர்கள் என்பதையும் அதில் குறிப்பிட வேண்டும். புகார் கொடுக்கும் உங்களின் க்ளெய்ம் தொகை 20 லட்சம் ரூபாய்க்குக் கீழ் இருக்கும்போது மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளிக்கலாம். அதேசமயம் க்ளெய்ம் தொகை 20 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி வரை எனில், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் எனில் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் வழக்குப் பதிவுசெய்யலாம். புகார் கொடுக்கும் நிறுவனத்தின் அலுவலகம் இருக்கும் இடத்திலோ அல்லது கிளை அலுவலகம் இருக்கும் இடத்திலோ அல்லது பிரச்னை உருவான இடத்துக்கோ அருகில் உள்ள குறைதீர் மன்றம் அல்லது ஆணையத்தில் வழக்குப் பதிவு செய்யலாம்.

சென்னை மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் மன்றம்/ ஆணையத்தின் முகவரி: தலைவர், மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்/சென்னை மாவட்ட (வடக்கு/தெற்கு) நுகர்வோர் குறை தீர்ப்பு மன்றம், ஃப்ரேசர் பாலம் சாலை, வ.உ.சி. நகர், பார்க் டவுன், சென்னை - 600 003  தொலைபேசி:  044-2534 0050.E-mail :scdrc@tn.nic.in, & tn-sforum@nic.in தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முகவரி:  Upbhokta Nyay Bhawan, F-Block, GPO Complex, INA, New Delhi-110 023 Fax No: 011-24651505, 24658505 PBX No : 011-24608801, 24608802, 24608803, 24608804 Web Site: http://ncdrc.nic.in/ 

ட்விட்டர் கேள்வி-பதில் பகுதியை விரிவாகப் படிக்க: https://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=10821      

படம்: மீ.நிவேதிதன்