சென்னை கோயம்பேடு பஸ் நிலையம். எப்போதும் நிரம்பி வழிகிற கூட்டம் விடுமுறை வந்து விட்டால்..! வந்து குவிகிற கூட்டத்தில், பெரும்பாலானவர் கள் இளம் பெண்கள்!
ஏதோ ஒரு ‘ஊர் பேர் தெரியாத’இடத்தில் இருந்து, சென்னைக்கு வந்து, குறைந்த வாடகையில் ‘ஹாஸ்டல் ரூம்’ எடுத்துத் தங்கி, முழுக்க முழுக்க சொந்த முயற்சியினால் வேலை தேடி, வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆனவர்கள்தான் இவர்கள் எல்லாரும். ‘நிமிர்ந்த நன்னடை; நேர்கொண்ட பார்வை’ கொண்ட பாரதிப் பெண்கள் இவர்கள்.
முதுகிலே ஒரு பயணியர் பை ஒரு கையில் தண்ணீர் பாட்டில், மறு கையில் புத்தகத்துடன், காதில் செருகிய வாக்மேன்-ல் இசையை ரசித்தபடி, இவர்கள் நடந்து வருகிற தோரணையே, ‘தன்னம்பிக்கை’ என்றால் இதுதான் என்று பறைசாற்றும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவர்கள் எல்லாம் எப்படி வேலை தேடினார்கள்? இவர்களுக்கு மட்டும் எப்படி வேலை கிடைத்தது? பணம் கொடுத்தா வேலை பெற்றார்கள்? யாரிடமாவது பரிந்துரைக் கடிதம் வாங்கிக் கொண்டா, சென்னைக்கு பஸ் பிடித்தார்கள்? இன்றும் கூட, கோயம்பேட்டில் நின்று பார்த்தால், வெளியூரில் இருந்து வரும் ஒவ்வொரு பேருந்திலும், ஓரிரு இளம் பெண்கள், எதிர்காலக் கனவுகளைச் சுமந்தபடி, சென்னைக்கு வந்து இறங்குவதைக் காண முடிகிறதே... என்ன ‘தைரியத்தில்’ வருகிறார்கள்..? தன்னம்பிக்கை, துல்லியமான திட்டமிடல் மற்றும் கடுமையான உழைப்பு. இம்மூன்றின் கலவைதாம் இப்பெண்கள்.
தன்னுடன் படித்த தோழியின் தோழிக்கு தோழி என்று யாரோ ஒருவர் தங்கி இருக்கும் விடுதியில், முன்பின் அறிமுகமே இல்லாத, தன் வயதேயான ஐந்தாறு பெண்களுடன், ஒரு மிகச் சிறிய அறையில் தங்குகிற முதல் வாரம்தான், இவர்களுக்குக் கிடைக்கிற முதல் வரம்!
தன் தாய், தந்தை, சகோதரர் களின் பாசப் பிணைப்பில், கஷ்டம் தெரியாமல் வளர்ந்த பெண், ‘ஒண்டிக்கொண்டு’ படுத்து உறங்க வேண்டிய தருணம் வருகிறபோது, தூங்காமல், புரண்டு புரண்டு கழிக்கிற அந்த இரவில், அவளுக்குள் எழுகிற வைராக்கியம்தான் நல்ல வேலையை நோக்கி அவளைச் செலுத்துகிற ‘இக்னிஷன்’.
வேலை தேடும் இளைஞர் களுக்குத் தேவைப்படுவ தெல்லாம், விடாமுயற்சிதான். ‘என்னிடம் விடாமுயற்சி இல்லையா? நான் மட்டும் சும்மாவா இருக்கிறேன்? என்று கேட்கலாம். வெறுமனே, விண்ணப்பங்களை அனுப்புவது மட்டுமே முயற்சி ஆகாது.
தொடர்ந்து தன்னை வளர்த்துக் கொள்ளுதல் வேலை தேடுதலில் மிக முக்கியம். ‘படிச்சு முடிச்சுட்டேன்’ என்று சொல்வதே அபத்தம். அது எப்படி முடியும்? பட்டம் கிடைத்து இருக்கிறது. அவ்வளவுதானே..?
நாம் பெற்ற கல்வித் தகுதி மட்டுமே வேலை பெற்றுத் தந்து விடாது. அதற்கும் அப்பால், சில தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொண்டாக வேண்டும். இந்தத் திறமைகள் தான் நம்மை வேறுபடுத்தி காட்டும்; நல்ல பணிக்கான கதவுகளைத் திறந்துவிடும்.
அதிகம் பணம் செலவழித்து, பயிற்சி மையங்களுக்குச் சென்றுதான் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. நம்முடைய அறிவு, ஆர்வம், ஆற்றல், ஈடுபாடு ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்தினாலே போதுமானது.
வேலைக்கான உங்களது விண்ணப்பத்தை நீங்களேதான் சுயமாக எழுதுகிறீர்களா..?
எந்த நிறுவனத்துக்குச் சென்று கேட்டாலும், அங்கே இருக்கிற மனிதவள மேலாளர் சொல்கிற புகார் இதுதான்...
‘வேலை கேட்டு வர்ற அப்ளிகேஷன்ஸ் பெரும்பாலும், ஒரேமாதிரியா, ‘ஸ்டீரியோ டைப்’லயே இருக்கு!’
அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?
யாராவது ஒருவர் எழுதியதை அப்படியே காப்பியடிப்பது; அல்லது நெட்டுல இருந்து ‘டவுன்லோட்’ பண்ணுவது. இதைத்தானே செய்துகொண்டு இருக்கிறோம்?
நம்முடைய விண்ணப்பங்கள் நாம் எழுதியவையா? ஊஹூம். நம்மால் நிரப்பப்பட்டவை. அவ்வளவே.
அப்ளிகேஷன் அல்லது பயோடேட்டாவில், நம்மைப் பற்றிய சுயகுறிப்புகளைத்தானே தரப்போகிறோம்? அதை நம்மால் சொந்தமாக எழுத முடியாதா? முயற்சிசெய்து பார்த்து இருக்கிறோமா?
இப்போது முயற்சிப்போமா?
தொடர்ந்து படிக்க...
வேலைக்கான ஒரு விண்ணப்பத்தில் நாம் என்னவெல்லாம் சொல்ல வேண்டும், எந்த வரிசையில் சொல்ல வேண்டும், எந்த அளவுக்கு சொல்ல வேண்டும், என்ன நடையைப் பின்பற்ற வேண்டும்? இதுபோன்ற பல கேள்விகளுக்கு தெளிவான புரிதலை நீங்கள் பெற வேண்டுமா? nanayam.vikatan.com இணையதளத்தில் வாரம்தோறும் பதிவேற்றப்படும் 'சும்மா வருமா வேலை' தொடரில் உங்களுக்கான தெளிவான பதில்கள் கிடைக்கும். தொடர்ந்து படிக்க: http://bit.ly/1HdKRyj