Published:Updated:

பிசினஸ் சீக்ரெட்ஸ் - 15

தொழில்முனைவோர்களுக்குத் துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்

நான்கு வகை  ஊழியர்கள்!

ரு தொழில் சிறப்பாக நடக்க வேண்டும் எனில், சரியான நபர்கள் ஊழியர்களாக இருப்பது அவசியம்.

பிசினஸ் சீக்ரெட்ஸ் - 15

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு நிறுவனத்தில் நல்ல சூழல் நிலவும்போது அதில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவருமே நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும், தங்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிறவர்களாக இருப்பார்கள்.

ஒரு நிறுவனம் நல்ல முறையில் வளரும்போதுதான் தாங்களும் வாழ்க்கையில் நன்கு உயர முடியும் என்பதை இன்றைக்கு பலரும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றனர். ஒரு சில அலுவலகங்களில் ஒன்று, இரண்டு ஊழியர்கள் மோசமான ஊழியர்களாக இருக்கலாம். ஆனால், பெருவாரியான ஊழியர்கள் வாழ்க்கையில் தங்கள் நிலையை உயர்த்திக்கொள்ள கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்கிற எண்ணத்தையே கொண்டுள்ளனர்.

மனித நிர்வாகம் பற்றிப் பேசும்போது ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த ஜாக் வெல்ஸ் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. ஜி.இ. நிறுவனத்தில் சுமார் 21 ஆண்டு காலம் சிஇஓவாக இருந்தவர் ஜாக் வெல்ஸ். ஜி.இ.  நிறுவனத்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி காண வைத்தார். ஜி.இ. நிறுவனத்தின் ஒவ்வொரு ஊழியர்களையும் அவர் தொடர்புகொண்டு பேசிய விதம்தான் அந்த நிறுவனத்தை மிகப்பெரிய வளர்ச்சி காண வைத்தது.

ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் அந்த நிறுவனத்தின் முக்கியமான கோட்பாடுகளை (Values) கட்டாயமாக பின்பற்றுவது முக்கியம் என்கிறார் ஜாக் வெல்ஸ். உதாரணமாக, உணவுப் பொருட்களை தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை. அங்கே உணவுகளைத் தயாரிக்கும்போது ஈ ஒன்று அதில் கிடப்பதைப் பார்க்கிறார் ஊழியர் ஒருவர். உடனே அந்த மாவை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிதாக மாவை எடுத்து அதில் உணவு சமைத்து மக்களுக்குத் தருகிறார்.  இப்படிப் பட்ட ஊழியர்கள்தான் ‘சுத்தமான உணவு’ என்கிற நிறுவனத்தின் கோட் பாட்டினைக் கடைப்பிடிக் கிறார்கள். இந்த ஊழியர்கள் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இன்னும் சில ஊழியர்கள் இருப்பார்கள். இவர்களும் உணவில் ஈ கிடப்பதைப் பார்ப்பார்கள். இது யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்து, அந்த ஈயை எடுத்து தூரப் போட்டுவிட்டு, அந்த மாவிலேயே உணவினை சமைத்துத் தந்துவிடுவார்கள். நிறுவனத்தின் கோட்பாடுகளை பின்பற்றத் தவறும் இந்த ஊழியர்கள் தண்டிக்கத்தக்க வர்கள். இவர்களுடைய நடவடிக்கைகளை நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தண்டிக்கத் தவறினால், பிற்பாடு உணவில் கரப்பான் பூச்சி இருந்தால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள். இவர்களை வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

பிசினஸ் சீக்ரெட்ஸ் - 15

கோட்பாடு, உழைப்பு என்கிற இரண்டின் அடிப்படையில் ஒரு நிறுவனத்தின் ஊழியர்களை நான்கு வகைகளாகப் பிரிக்கிறார் ஜாக் வெல்ஸ்.

முதலாவது வகையினர், மிகத் திறமையானவர்களாகவும் அதே நேரத்தில் நிறுவனத்தின் சட்டதிட்டங்களையும் கோட்பாடுகளையும் முழுமை யாக மதித்து நடப்பவர்களாகவும் இருப்பார்கள்.

இந்த ஊழியர்களைப் பொறுத்தவரை, சொன்ன வேலையை மிகச் சரியாக செய்வதுடன், அதன் அடுத்த கட்டத்தைப் பற்றியும் சிந்தித்து செயல்படக்கூடியவர்களாக இருப்பார்கள். நிறுவனத்தை சரியாக நடத்திச் செல்வதில் இவர்களின் பங்கு அதிகம். அதேசமயம், நிறுவனத்தின் பெயர் கெடாதபடிக்கு நடந்து கொள்வதுடன், மற்றவர்களையும் நடக்கவிடாத படிக்கு தடுத்து நிறுத்துபவர்கள் இவர்கள்தான். நிறுவனத்தின் வழிகாட்டிகளாக இருக்கும் இவர்கள், எதிர்காலத்தில் நிறுவனத்தை நடத்திச் செல்பவர்களாக இருப்பார்கள். இவர்கள்தான் ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய பலம். இவர்களின்  எண்ணிக்கையை அதிகரிப்பது ஒரு நிறுவனத்துக்கு நலம். 

இரண்டாவது வகையினர், நிறுவனத்தின் சட்டதிட்டங்களையும் கோட்பாடுகளையும் மதித்து நடப்பதில் கண்ணும்கருத்துமாக இருப்பார்கள். ஆனால், வேலை செய்யும் திறமை இவர்களிடம் பரவாயில்லை என்கிற அளவிலேயே இருக்கும்.

இது மாதிரியான ஊழியர்கள் பிரச்னைக் குரியவர்கள் இல்லை என்றாலும் அவர்களின் வேலை செய்யும் திறனை உயர்த்திக்கொள்ள இரண்டு, மூன்று முறை வாய்ப்பு வழங்குவதில் தவறில்லை. இவர்கள் திறமையாக வேலை பார்ப்பதற்கு எது தடையாக இருக்கிறது, அவர்கள் தங்களின் வேலை செய்யும் திறமையை உயர்த்திக் கொள்ள இன்னும் என்ன பயிற்சி தரலாம் என தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் யோசிக்கலாம். நிறைய வாய்ப்புகள் தந்தபின்னும் இவர்கள் தங்கள் வேலை செய்யும் திறமையை அதிகரித்துக்கொள்ளவில்லை எனில் வேறு மாதிரி யோசிக்கலாம்.

மூன்றாவது வகை ஊழியர்கள், அதிக திறமைசாலிகளாக இருப்பார்கள். ஆனால், இவர்களிடம் வேல்யூ சிஸ்டம் என்பது குறைவாக இருக்கும். இவர்கள் தங்கள் நோக்கத்தை அடைய குறுக்கு வழிகளை பயன்படுத்துவதில் தயங்க மாட்டார்கள். இப்படி குறுக்கு வழிகளில் சென்று,  முன்னேற்றம் காணும் ஊழியர்களினால், நிறுவனத்தின் கோட்பாடுகள் சிதறும்.  என்னதான் திறமை இருந்தாலும், நிறுவனத்தின் கோட்பாடுகளை பின்பற்றாத ஊழியர்கள், அந்த நிறுவனத்தில் தொடர்ந்து இருக்கும் தகுதியை இழக்கவே செய்கிறார்கள்.

நான்காவது வகை ஊழியர்களிடம் திறமையும் பெரிய அளவில் இருக்காது. நிறுவனத்தின் கோட்பாடுகளையும் மதித்து நடப்பவர்களாகவும் இருக்க மாட்டார்கள். இது மாதிரியான ஊழியர்கள் தங்கள் வேலையை சரிவரச் செய்யமாட்டார்கள். நிறுவனத்துக்கு எதிரான கருத்துக்களை சக ஊழியர்களிடம் பரப்புவார்கள். அலுவலகத்தில் பாலிடிக்ஸ் செய்வார்கள். இவர்கள் அழகான மாம்பழத்தில் நுழைந்த வைரஸ் மாதிரி. இந்த வைரஸை நாம் அப்புறப்படுத்தத் தவறினால், பிற்பாடு ஒட்டுமொத்த நிறுவனத்தையே குட்டிச்சுவராக்கிவிடுவார்கள். எனவே, மூன்றாவது, நான்காவது வகை ஊழியர்கள் மீது எந்த வகையிலும் கருணை காட்டாமல், அவர்களை நிறுவனத்திலிருந்து அப்புறப்படுத்த தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் சிறிதும் தயக்கம் காட்டக்கூடாது.  

(ஜெயிப்போம்) 

சி.கே.ஆரிடம் கேளுங்கள்!

நான் சொந்தமாக தொழில் தொடங்க நினைக்கிறேன். ஆனால், எனக்கு தற்போது நேரம் சரியில்லை என்று என் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் சொல்கிறார். நான் பிசினஸ் ஆரம்பிக்கலாமா, வேண்டாமா?

முருகேசன், ஈரோடு.

‘‘பிசினஸ் செய்வதற்கு நல்ல நேரம், கெட்ட நேரம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. பிசினஸ் செய்வதற்கும் ஜாதகத்துக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பிசினஸில் நீங்கள் ஜெயிப்பதற்கு உங்கள் உழைப்பும் திறமையும்தான் முக்கியம். நல்ல நேரத்தில் பிசினஸ் தொடங்கினால் ஜெயித்துவிடலாம் என்றால் உலகத்தில் உள்ள எல்லோருமே நல்ல நேரத்தில் பிசினஸைத் தொடங்கி ஜெயித்துவிடுவார்களே! நல்ல நேரம் பார்த்து, தொடங்கிய பல தொழில்கள் தொடர்ந்து செயல்பட முடியாமல் போனதை பார்த்திருக்கிறேன்.

நானே கொழுத்த ராகு காலத்தில் சில பிசினஸை ஆரம்பிக்கவும் செய்திருக்கிறேன். எனவே, நேரம், காலம் பார்த்து, பிசினஸை ஆரம்பிப்பதைவிட, அந்த பிசினஸில் உங்கள் திறமையையும் உழைப்பையையும் காட்டி,  எப்படி புதிய உயரத்தைத் தொட முடியும் என்று யோசியுங்கள். நீங்கள் நிச்சயம் ஜெயிப்பீர்கள்.’’