Published:Updated:

வருமான வரி ரெய்டு... ஏன் இந்த அச்சம்?

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஞான ஒளி என்று ஒரு திரைப்படம். அந்தப் படத்தில் வரும் பிரபலமான வரிகள் இல்லை... ‘‘ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்.... நோ பீஸ் ஆஃப் மைண்ட்...’’ கோடி கோடியாக  சம்பாதித்தும் நிம்மதி இல்லையே என்று புலம்பும் கதாநாயகனின் பாடல் இது.

ஆனால், பணம் வந்தால், மன அமைதி தொலைந்துபோய் விடும் என்பதெல்லாம் ‘சும்மா’! இது உண்மை என்றால், எதற்காக இத்தனை பேரும் பணத்துக்காக நாயாய், பேயாய் அலைகிறார் கள்? உழைக்கிறார்கள்? நம் (தவறான) நடவடிக்கைகள் காரணமாக தொல்லைகள் வரலாமே தவிர, பணத்துக்கும் மன அமைதிக்கும் சம்பந்தமே இல்லை.

‘செல்வந்தர்கள், குறிப்பாக அதிக வருமானம் ஈட்டும் திரை நட்சத்திரங்கள் போன்றோர், வேறு எதற்கும் அஞ்சுகிறார்களோ இல்லையோ, வருமான வரி என்று சொன்னாலே அஞ்சு கிறார்கள்’ என்று பரவலாகப் பேசிக் கொள்கிறார்களே.. இது உண்மையா? அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? 

வருமான வரி ரெய்டு... ஏன் இந்த அச்சம்?

பிற எல்லா வரிகளில் இருந்தும், வருமான வரி முற்றிலும் மாறுபட்டது. மற்ற வரிகளைக் கட்டுவதற்கு உண்மையிலேயே நம்மிடம் பொருளாதார வசதி இல்லாமல் போகலாம். ஆனால், வருமான வரிக்கு அப்படிச் சொல்ல முடியாது. வருமானம் இருந்தால் தான் அதற்கேற்ப வருமான வரியே உண்டாகும். ஒருவர் ஆயிரம் ரூபாய் வரி கட்டுகிறார் என்றால், அதற்கான வருமானம் அவருக்கு இருந்திருக்கிறது. அவரே அடுத்த ஆண்டு பத்தா யிரம் கட்டினால்? அதற்கேற்ப அவரது வருமானம் உயர்ந்திருக் கிறது என்று அர்த்தம்.

‘லட்சம் லட்சமாய் வரி கேட்கிறார்களே?’

‘கோடி கோடியாய் வருகிறது என்று பொருள்.’  

இந்தியாவில் வருமான வரி விதிப்பு முறை, எல்லோருக்கும் சாதகமாகத்தான் வடிவமைக்கப் பட்டு இருக்கிறது. அது என்ன சாதகம்?

மேல் நோக்கிச் செல்லும் வரி (progressive taxation) முறைதான் நம் நாட்டில் கடைபிடிக்கப் படுகிறது. இதன்படி வருமானம், வெவ்வேறு தட்டுகள்/ நிலைகளாக (layers) பிரிக்கப்பட்டு வரி விதிப்புக்கு உள்ளாகிறது.

லட்சங்களில், கோடிகளில் சம்பாதிக்கும் நடிக, நடிகையர் தமது வருமானத்தில் சுமார்  30 சதவிகிதத்தை, அரசுக்கு வரியாகச் செலுத்தினால் போதும். வருமான வரி பற்றிய அச்சம் தேவை யற்றதாகிவிடும். (ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்கள், வரியின் மீது, 12% ‘சர்சார்ஜ்’ செலுத்த வேண்டும்.)

உதாரணத்துக்கு, ஒருவர் ஒரு படத்தில் நடிக்க 15 கோடி வாங்குகிறார் என்றால், சுமார் 5 கோடியை வரியாகச் செலுத்த வேண்டும். ஐந்து கோடியா? என்று மலைக்க வேண்டாம். வரி போக ரூ.10 கோடி இருக்கிறதே... அதுவே மிகப் பெரிய தொகை அல்லவா? வரி செலுத்தியதுபோக, தன் சம்பளம் 10 கோடிதான் என்கிற தெளிவு வந்துவிட்டால்  சஞ்சலத்துக்கு இடமே இல்லை.

வரிகளில் மறைமுக வரி, நேரடி வரி என்று இரு பிரிவுகள் இருக்கின்றன. விற்பனை வரி, மறைமுக வரிகளில் ஒன்று. நாம் வாங்குகிற பொருட்களுக்கான வரி, கடைக்காரருக்குப் போகிறது. அவர் மூலம் பிறகு அரசுக்கு சென்று சேரும்.

ஆனால், வருமான வரி என்பது நேரடி வரி. அதாவது, நமக்கும் அரசுக்கும் இடையே யாரும் இல்லை. நம்முடைய நிரந்தரக் கணக்கு மூலம் நாம் செலுத்துகிற வருமான வரி, நேரடியாக அரசுக்  கருவூலத்துக்குச் சென்றுவிடும். 

வருமான வரி ரெய்டு... ஏன் இந்த அச்சம்?

தவிர, வருமான வரி என்பது, அரசாங்கம் என்னும் ஆண்டவன் செய்யும் திருப்பணி களுக்காக, செலுத்தும் உண்டியல் காணிக்கை. இதன் மூலம் பல கோடி சாமான்யர்கள் நிரந்தர நன்மை பெற இருக்கிறார்கள். கல்விக் கூடங்கள், கிராமப்புறச் சாலைகள்,  நீர்ப் பாசனத்துக்கான கால்வாய்கள், இலவச பொது மருத்துவமனைகள், குடிநீர்த் தொட்டிகள்... எத்தனை எத்தனை அடிப்படைக் கட்டுமானங்கள்... மக்கள் நலத் திட்டங்கள்...! இத்தனையும், நாம் செலுத்தும் வருமான வரியின் துணையால் நிறைவேறுகின்றன! நாட்டு முன்னேற்றத்தில், நமது வருமானமும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதில் பெருமைப்பட வேண்டும். இந்தப் பெருமை, எத்தனை பேருக்கு வாய்க்கிறது?

அடுத்ததாக, சில ஆலோசனைகள். பொதுவாக, வரி விஷயத்தில் நினைவூட்டல் கடிதம், ‘நோட்டீஸ்’, ‘சம்மன்’ என்று ஏதேனும் ஒன்று வந்தால், அதனை அலட்சியப்படுத்தாமல், மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம்.

பல சமயங்களில் என்ன நேர்கிறது..? இது போன்ற கடிதம்/ நோட்டீஸ் ஏதும் வந்தால், நம்முடைய ‘பிரதிநிதி’  (Representative) வசம், இதனைத் தந்துவிடுவதுடன் கடமை முடிந் தது என்று விட்டுவிடுவோம்.

ஊஹூம். அதன் மீது, அவர் சரியான நடவடிக்கை எடுத்து இருக்கிறாரா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது முழுக்க முழுக்க நம் பொறுப்பு.  ‘அப்போதே அவரை அழைத்துத் தந்துவிட்டேன். அதன் மீது அவர் ஆவன செய்து இருப்பார் என்று நம்பி, அப்படியே விட்டுவிட்டேன்...’ என்பதெல் லாம் சரியான விளக்கமாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

வரி மொத்தமும் ஒரே தவணையில் கட்ட வேண்டும் என்றில்லை. சட்டம் சொல்கிற மாதிரி, தவணை முறையில் கட்டினால்கூட போதும். ஒவ்வொரு தவணையும், அதற்கான காலக்கெடுவுக்குள் கட்ட வேண்டும். இல்லையேல், கட்டத் தவறிய தவணைத் தொகைக்கு வட்டி செலுத்த வேண்டிவரும்.
வருமான வரிப் படிவம் (ரிட்டர்ன்) குறித்த நாளுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முன்வரிக்கான தவணை செலுத்துதல், வரிப் படிவம் சமர்ப்பித்தல் ஆகியவற்றுக்கான கெடு நாட்களை, தன்னுடைய குறிப்பேட்டில் (டைரியில்) எழுதி வைத்துக்கொண்டு, முறைப்படி எல்லாம் செய்யப்படு கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்வது மிக முக்கியம்.

அதிக வருமானம் ஈட்டும் ஒவ்வொருவருக்கும், மிக நல்ல எளிய வழி இருக்கிறது. அதுதான், வரிப் பிடித்தம். அதாவது, Tax Deduction. யாரிடம் இருந்து அல்லது எங்கிருந்து வருமானம் வருகிறதோ, அவர் அல்லது அந்த நிறுவனம், வருமானத்துக் கான வரியைப் பிடித்து, அவர் களே அரசுக்கு வரி செலுத்திவிடுதல்.

இவ்வாறு ‘பிடித்தம்’ செய்யப் படுகிற பட்டியலில் அடங்காத வரவுகளுக்கு மட்டும் (உதாரணம்:  பரிசுப் பொருட்கள்) நாம் தனியே வரி செலுத்துவதை உறுதி செய்துகொண்டாலே போதும்; ‘பிரச்னை’ வர வாய்ப்பில்லை. 

இவையெல்லாம் போக, ஒவ்வொரு நிதி ஆண்டின் முடிவிலும், அதாவது மார்ச் மாத வாக்கில், வருமான வரிக்கென்றே ஒரு நாள், ஒரு சில மணித் துளிகள் ஒதுக்கி வைத்துவிட வேண்டும். அந்த ஆண்டு பெற்ற வருமானம் சரியாகக் கணக்கிடப்பட்டு, அதற்கான வரியும் முறையாக முழுமையாக செலுத்தப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இது ஒன்றும் கடினமான காரிய மில்லையே! 

பொதுவாக, நிறைய சம்பாதிக் கிறவர்களின் ‘பிரதிநிதி’யாக ஒரு ஆடிட்டர்   இருப்பார். கடின உழைப்பு, பாடத்தில் ஆழமான அறிவு இல்லாமல், யாரும் ‘சி.ஏ.’ ஆகிவிட முடியாது. முழுத் தகுதி பெற்ற  இந்தப் ‘பிரதிநிதி’   சொல்வதையே அலட்சியம் செய்யாமல் இருந்தாலே போதும், பிரச்னை வராது. 

வருமான வரி ரெய்டு... ஏன் இந்த அச்சம்?

இதுவும் அல்லாமல், பல்வேறு சலுகைகள் (Concessions), கழிவுகள் (Deductions), விலக்குகள் (Exemptions) ஆகியவற்றையும் வருமான வரி சட்டம் பரிந்துரைக்கிறது. இவற்றின் மூலம், கணிசமான அளவுக்கு ‘வரி நிவாரணம்’ (Tax Relief) கிடைக்கிறது.

இறுதியாக, நாம் பெறுகிற வருமானம் மொத்தமும் நமக் கானதன்று.  அதில், அரசாங் கத்துக்கான வருமான வரி போக மீதம் உள்ளதுதான், நம் பங்கு என்பதை புரிந்துகொள்ளாதவர் கள்தான், ‘என் பணத்தை ஏன் தரவேண்டும்?’ என்று (தவறாக) நினைக்கின்றனர்.

நம்மிடம் உள்ளதைப் பிறருக்கு வழங்குவதுதான்  உண்மையான மகிழ்ச்சி.  ஆனால், ‘பிறருக்கு’ உரித்தானதை, நாமே வைத்திருக்கும் வரை, மன அமைதி என்பது எப்போதும்  சாத்தியமே இல்லை.

ரத்த தானம் செய்கிறவர்கள்,  ரத்தம் தரும்போதும் வலிக்க வில்லை என்பார்கள். 

‘எப்படி..? ஊசி குத்தித்தானே ரத்தம் எடுப்பாங்க..? அப்புறம் எப்படி வலிக்காமல் இருக்கும்..?’

‘வேறு யாருக்கோ குடுக்கறோம்னு நினைச்சா வலிக்கத்தான் செய்யும். இதுவே, உங்க குடும்பத்துல ஒருத்தருக்கு... இல்லை, நீங்க ரொம்ப நேசிக்கற ஒருத்தருக்கு ஆபரேஷன்... நீங்க ரத்தம் குடுக்கறதனால அவருக்கு சரி ஆவும்னா, ரத்தம் கொடுக்க மாட்டீங்களா..? அப்போ உங் களுக்கு வலிக்குமா..? வலிக்கும்னு சொல்லி குடுக்காமலேதான் விட்டுடுவீங்களா?’

ஆக, வரி கட்டுதல் என்பது பெருமிதத்துடன் ஆற்ற வேண்டிய காரியம்; எதற்காக அதனை பொருமிக்கொண்டே செய்ய வேண்டும்? முகமலர்ச்சி யுடன், மனமுவந்து செய்ய வேண்டிய செயலை, ஏன் ‘மூடி மறைத்து’ கட்டாயத்தின் பேரில் செய்ய வேண்டும்?

சரியான புரிதல் இருந்தால்  வரியானது சுமையாக அல்ல; சுவையாக மாறும். நேர்மையாக நடந்துகொண்டால், அஞ்ச வேண்டியதே இல்லை.

வருமானமும் வரியும்!

ஆண்டு வருமானம் சுமார் இரண்டரை லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், வருமான வரி செலுத்தத் தேவை இல்லை. ஐந்து லட்சம் வரை இருந்தால், 10%; அதுவும், மொத்த வருமானத்துக்கும் அல்ல. 2.5 லட்சத்துக்கு மேல் உள்ள வரு மானத்துக்கு 10%. அதாவது, ஒருவரின் ஆண்டு வருமானம் 3 லட்சம் என்றால், 2.5 லட்சம் போக மீதம் உள்ள ரூ.50,000-க்கு மட்டுமே 10% வரி. அதா வது, 5,000 ரூபாய் வரி. 5 லட்சத்துக்கு மேல் 10 லட்சம் வரை உள்ள வருமானத்துக்கு 20%. 10 லட்சத்துக்கு மேல் வருமானம் எனில் 30%. ஆக, வருமான நிலை அல்லது தளம் (layer) அதிகம் ஆகிறபோது, வரி விகிதம் கூடுகிறது. அதுவும் 30 சதவிகிதம்தான் உச்சபட்ச வரி விகிதம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு