Published:Updated:

குறையும் வட்டி விகிதம்... சிறந்த முதலீடு எது?

குறையும் வட்டி விகிதம்... சிறந்த முதலீடு எது?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் 0.5 சதவிகிதம் கடந்த வாரம் குறைத்தார். இதனால் கடனுக்கான வட்டி விகிதம் குறையும்; தொழில் துறை வளர்ச்சி அடையும் எனப் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், ஆர்பிஐயின் இந்த நடவடிக்கையால், நிரந்தர வருமானம் தரும் முதலீடுகளின் மீதான வட்டி விகிதம் குறையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதாவது, ஃபிக்ஸட் டெபாசிட், மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட், பிபிஎஃப், ஆர்டி, பிஎஃப் ஆகியவற்றின் வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. 

குறையும் வட்டி விகிதம்... சிறந்த முதலீடு எது?

மேற்கூறிய இந்த முதலீட்டு திட்டங்கள் அனைத்தும் அரசின் கண்காணிப்பில் நடக்கக்கூடியவை; நிரந்தர வருமானம் தரக் கூடியவை. எனவேதான், இவற்றில்  பெரும்பாலான நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் உள்ள மக்கள் அதிக அளவில் தங்கள் அத்தியாவசியமான பணத்தை சேமித்து வைத்திருக்கின்ற னர். தவிர, எழுத்தறிவு அதிகம் இல்லாத கிராமப்புறங்களில் அஞ்சலக சேமிப்பு திட்டங்களையே மக்கள் பெரிதும் நம்புகிறார்கள்.

மேலும், வேலை பார்க்கும் நிறுவனங்களில் பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் தொகையுடன் கூடுதலாக விபிஎஃப் மூலமாக முதலீடு செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கையும் இதில் அதிகம்.

இந்த திட்டங்களில் தற்போது 8.5% அல்லது அதற்கு சற்று கூடுதலாக வட்டி தரப்படுகிறது. இனி இந்த வட்டி விகிதம் குறையும்போது அதிகம் பாதிக்கப்படுவது நகர்ப்புறத்து நடுத்தர மக்களும் கிராமப்புறத்து ஏழைகளும்தான். 

பெருவாரியான மக்கள் முதலீடு செய்யும் இந்தப் பணத்தை வைத்துதான் அரசின் பல திட்டங்கள் நிறைவேற்றப் படுகிறது. இதைவிடக் குறைவான வட்டி விகிதத்தில் அரசுக்கு வேறு எங்கும் கடன் கிடைக்காது. நிரந்தர வருமானம் தரும் இதுமாதிரியான பல  திட்டங்களை வரிசையாக அறிமுகப்படுத்திவிட்டு, அதன்பிறகு அதற்கான வட்டியைக் குறைப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்கிறார்கள் பலர்.

இந்த நிலையில், நிரந்தர வருமானம் தரும் இது மாதிரியான முதலீட்டு திட்டங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் குறையும்போது அதற்கு மாற்றாக உள்ள முதலீட்டு திட்டங்கள் எவை என்கிற கேள்வி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் பல லட்சம் பேரின் மனதில் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான பதிலை ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளானர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கே.ராமலிங்கம் விளக்கமாக கூறுகிறார். 

குறையும் வட்டி விகிதம்... சிறந்த முதலீடு எது?

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்!

``இதில் முதலிடத்தில் இருப்பது கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள்தான். இது வங்கி டெபாசிட் திட்டத்தைவிட 1 முதல் 2 சதவிகிதம் கூடுதல் வருமானம் தரக்கூடியது. இதில் முதலீடு செய்வதற்கு அந்த நிறுவனம் குறித்த அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்வது அவசியம். அதாவது, நிறுவனம் எத்தனை ஆண்டுகளாக தொழில் நடத்தி வருகிறது. இதற்குமுன் டெபாசிட் திரட்டி யுள்ளதா, அப்படி திரட்டி இருந்தால் அந்த டெபாசிட்டை சரியான நேரத்தில் வாடிக்கை யாளர்களுக்கு திரும்ப அளித்து உள்ளதா என்பதையெல்லாம் கவனிப்பது அவசியம்.

முதலீடு செய்ய தேர்ந்தெடுக் கும் கம்பெனியின் ஃபிக்ஸட் டெபாசிட் எந்த வகையான ரேட்டிங் பெற்றுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். ‘AAA’ ரேட்டிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது. வட்டித் தொகை காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடத்துக்கு ஒருமுறை என கால அளவில் பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு. முதலீட்டின் கால அளவின் அடிப்படையில் வட்டி விகிதம் இருக்கும். அதிகபட்சம் மூன்று வருடத்துக்கு டெபாசிட் செய்ய முடியும். அதன்பிறகு தேவைப் பட்டால் டெபாசிட்டை புதுப்பித்துக் கொள்ளலாம். 

தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ், திவான் ஹவுஸிங் ஃபைனாஸ்ரீன்ஸ், சுந்தரம் ஃபைனான்ஸ், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் மேற்கூறிய அம்சங்கள் உள்ளன. 

கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்!

ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

குறையும் வட்டி விகிதம்... சிறந்த முதலீடு எது?

இதில் வங்கி எஃப்டியைவிட 1 அல்லது 2 சதவிகிதம் கூடுதலாக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், டிவிடெண்ட் ஆப்ஷனும் உண்டு. ஆனால், இந்த வருமானம் நிரந்தரமாகக் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில் பங்கு சந்தையின் ஏற்ற இறக்க பாதிப்புகள் இதில் பிரதிபலிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், முதலீட்டுக்கான குறைந்தபட்ச கால அளவு உண்டு. அதற்கு குறைவான காலத்தில் முதலீட்டை வெளியே எடுத்தால்  வெளியேறும் கட்டணம் இருக்கும்.

மன்த்லி இன்கம் பிளான்!

சற்று கூடுதலாக ரிஸ்க் எடுக்கும் திறன் உடையவர்கள், மாதாந்திர வருமானம் தரக்கூடிய திட்டங் களில் (Monthly Income Plan) முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்யப்படும் தொகையில் 80% கடன் சார்ந்த திட்டங்களிலும், 20% பங்கு சார்ந்த திட்டங்களிலும் முதலீடு செய்யப்படும். 2  - 3 ஆண்டு முதலீட்டை வைத்திருப் பவர்களுக்கு இந்த முதலீடு சிறந்ததாக இருக்கும். இதில் சந்தை சார்ந்த ரிஸ்க் உண்டு.

பேலன்ஸ்டு ஃபண்ட்!

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மேற்கூறிய இரண்டு திட்டங்களைவிட சற்று கூடுதலாக ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் பேலன்ஸ்டு ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

முதலீட்டை 3 முதல் 5 வருடம் வைத்திருக்கும்போது, 10 முதல் 12 சதவிகிதம் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதில் முதலீடு செய்யப்படும் தொகையில் 40 சதவிகிதம் பங்கு சார்ந்த திட்டங்களிலும், 60 சதவிகிதம் கடன் சார்ந்த திட்டங்களிலும் முதலீடு செய்யப்படும். இதில் பங்குச் சந்தை சார்ந்த ரிஸ்க் இருக்கும். முதலீட்டுக் கால அளவின் அடிப்படையில் வருமானம் தரக்கூடியது.''

நிரந்தர வருமானம் தரும் திட்டங்களில் வட்டி விகிதம் குறைகிறதே என்று நினைப்பவர்கள் மேற்சொன்ன திட்டங்களில் தங்களுக்கு ஏற்ற திட்டங்களைத் தேர்வு செய்யலாம்!

இரா.ரூபாவதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு