Published:Updated:

நாணயம் லைப்ரரி: வேலையில் வெற்றிக்கு வித்திடும் விதிகள்!

நாணயம் லைப்ரரி: வேலையில் வெற்றிக்கு வித்திடும் விதிகள்!

புத்தகத்தின் பெயர்: யூ கான்ட் வின் எ ஃபைட் வித் யுவர் பாஸ் (YOU CAN'T WIN A FIGHT WITH YOUR BOSS)

ஆசிரியர் : டாம் மார்கெர்ட் (Tom Markert)

பதிப்பாளர் : Harper Collins

ந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் ‘யூ கான்ட் வின் எ ஃபைட் வித் யுவர் பாஸ்.’  வெற்றிக்கான முக்கிய 55 விதிகளைச் சொல்லும் புத்தகம் இது. இதன் ஆசிரியர் டாம் மார்கெர்ட்.

யாராவது உங்களை உடனடியாக பணக்காரர் ஆக்குகிறேன் என்று சொன்னால் அதை ஒரு போதும் நம்பாதீர்கள். பணம் சம்பாதிக்க வேலை பார்க்கவேண்டும். அதிகமான பணம் சம்பாதிக்க அதிகமான வேலை பார்க்க வேண்டும். அதுமட்டுமல்ல, ஸ்மார்ட்டான வேலையும் பார்க்கவேண்டும் என்ற மூலாதார விதியுடன் ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி: வேலையில் வெற்றிக்கு வித்திடும் விதிகள்!

கடின உழைப்பும் புத்திசாலித்தனமான செயல் பாடுமே அதிக பணத்துக்கான வழி என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். பணிசெய்யும் இடமோ, தொழிலோ யாருக்கும் எதுவும் எப்போதும் நிரந்தரமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தொழில் என்பது எதிர்காலத்தில் நிச்சயமாக நடக்கப்போகிற விஷயங்களின் கோர்வை அல்ல. தொழில் என்பது செயலில் வெற்றி காணுதல். தொடர்ந்து நல்ல விஷயங்களை தந்துவந்தால் மட்டுமே தொழிலில் வெற்றி என்பதும் தொடர்ந்து வரும் என்பதை உணருங்கள் என்கிறார் ஆசிரியர்.

வேலை நிரந்தரம் என்ற நிலைமை இருந்தால், வளர்ச்சி அந்த நிறுவனத்துக்கும்,  நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக் கும் குறைவானதாகவே இருக்கும் என்கிறார் ஆசிரியர். சிறப்பாக செயல்படாவிட்டால் வேலையை தக்கவைத்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் உள்ள நிறுவனங்களே உரிமையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் நிறைய பயன்களைத் தருவதாக இருக்கும் என்கிறார்.

சிலருக்கு பணம் என்பது உத்வேகம் தரக்கூடிய விஷயமாக இருக்கும். சிலருக்கு மனதிருப்தி என்பது உத்வேகம் தரக்கூடிய விஷயமாக இருக்கும். பணத்தை நோக்கமாக வைத்திருப்பவர்கள் இன்றைய கார்ப்பரேட் உலகில் வெற்றிபெற தகுதியானவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென் றால், செயல் பாடுகளுக்கு ஏற்ற பணத்தையும் அங்கீகாரத்தையும் கார்ப்பரேட் உலகம் அளிக்க தயாராக இருக்கிறது. பணம் என்பது உங்களுக்கு நோக்கமாக இல்லாமல் மனதிருப்தியே உங்கள் நோக்கமாக இருந்தால் யோசிக்காமல் நீங்கள் கார்ப்பரேட் அல்லாத சேவை நிறுவனங்களில் பணிபுரியுங்கள் என்கிறார்.

பணிபுரியும் இடத்தில் நேரத்தை வீணே போக்கி கடிகாரத்தை ஏமாற்ற முயலாதீர்கள் என்று சொல்லும் ஆசிரியர், நீங்கள் என்னதான் அறிவுஜீவியாக இருந்தாலுமே ஈடுபாட்டுடன் கூடிய அர்ப்பணிப்பு  இல்லாவிட்டால் வெற்றி பெறுவது கடினம் என்கிறார் ஆசிரியர். நீங்கள் தேவையான நேரத்தை கமிட் செய்யாவிட்டால் வேறொருவர் அந்த வேலையைச்செய்து பெயரும், புகழும், பணமும் பெற்றுச் சென்றுவிடுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியர்.

வெற்றி பெற ஒரு மனிதன் பச்சோந்தியைப் போன்ற குணம் கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லும் ஆசிரியர், அதற்காக தவறான வழியில் செல்ல ஒருபோதும் நினைக்கக்கூடாது என்கிறார். சூழ்நிலைக்கேற்ப புதிய வழிமுறைகளை கண்டறிந்து செயல்பாடுகளை மாற்றிக்கொள்பவரே வெற்றி பெறுகிறார் என்று ஆணித்தர மாக சொல்கிறார் ஆசிரியர்.

இதற்கு உதாரணமாக மைக்கேல் என்பவரின் கதையை சொல்கிறார். ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், முதலாளியை பார்த்து சில தொழில் ஐடியாக்களை சொல்ல நேரம் ஒதுக்கித் தர கேட்டாராம். பலமுறை கேட்டும் நேரம் ஒதுக்கவில்லை.ஒருநாள் மைக்கேல், பாஸின் பிஏவிடம் போய், பாஸ் அடுத்து என்றைக்கு வெளியூர் போகிறார் என்று சொல்லுங்கள்.  எந்த ஊராயிருந் தாலும் நாடாயிருந்தாலும் அவர் போகும் விமானத்தில் நானும் போகிறேன். அப்போதாவது பேசிவிடமுடிகிறதா என்று பார்க்கிறேன் என்றாராம்.

முதலாளி அடுத்து பயணித்த விமானத்தில் இவரும் சொந்த செலவில் போய் அந்த பயணத்தின்போது அவருடன் பேச இன்று இருவரும் பார்ட்னராக மாறி வெற்றி கரமாக தொழில் செய்கின்றனர். எந்த ஊருக்கு என்று தெரியாமலேயே போட்ட திட்டம் அவரை அவர் போகவேண்டிய இடத்துக்கு கொண்டு போய் சேர்த்துவிட்டது இல்லையா என்று கேட்கிறார் ஆசிரியர்.

இன்றைக்கு ஒரு மனிதன் வெற்றிகரமாக திகழ சிறந்த விற்பனையாளராக இருக்க வேண்டியிருக்கிறது. பலமுறை வெளியாட்களிடமும் சில சமயம் தன் அலுவலகத்தில் இருப்பவர்களிடமும். அதனால் வீட்டைவிட்டு கிளம்பிய நேரத்தில் இருந்து வசீகரமாக திகழ ஆரம்பியுங்கள். லேசானவ ராக, சந்தோஷமானவராக, சிரித்த முகத்துடன், விருப்பப் படத்தக்கவராக, உதவி செய்பவ ராக தோற்றமளிக்க கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி பெற்றவர்கள் அனைவருமே எப்போதுமே தங்களை விற்பனை செய்வதில் சிறந்தவர் களாகவே இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி: வேலையில் வெற்றிக்கு வித்திடும் விதிகள்!

பாஸ்கள் பல சைஸ்களில், பல உருவங்களில், பல சுவைகளில் இருக்கிறார்கள். சிலரை உங்களுக்குப் பிடிக்கும். பலரை உங்களுக்குப் பிடிக்காது. ஆனால் பாருங்கள், வேலைக்கு போவோரில் பெரும்பாலா னோருக்கு சாப்பாட்டுக்கு வழியே பாஸ்தான் இல்லையா? அவர்கள்தான் நம்முடைய வாழ்வையும் தாழ்வையும் முடிவு செய்பவர்களாக இருக்கிறார்கள் இல்லையா?

நம்முன்னேற்றத்துக்கான  கேட்டை திறக்கவும் மூடவும் சக்தி படைத்தவர்கள் அவர்கள் தானே! இயன்றவரை பாஸிடம் அடங்கியும் அமைதியாகவும் இருந்து பழகுங்கள். பாஸுடன் எந்த தகவலையும் மறைத்து சர்ப்ரைஸ் சூழ்நிலைகளை உருவாக்காதீர்கள். அப்படி செய்தால் அது பாஸ்களை நிலைமை தங்களுடைய கன்ட்ரோலில் இல்லை என நினைக்க வைத்துவிடும் என்கிறார் ஆசிரியர்.

உங்கள் கேரியரை பாழாக்கிக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் உங்கள் பாஸிடம் சண்டை போடுவது மட்டுமே சிறந்த வழியாக இருக்கும் என்கிறார் ஆசிரியர். எந்த சூழ்நிலையிலும் பாஸுடன் சண்டை போட்டு ஜெயிப்பது என்பது சாத்தியமில்லாதது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சண்டை என்ற சூழலுக்கு மிக அருகேயுள்ள இடம் வரையே உங்கள் வாக்கு வாதங்களை பாஸிடம் எடுத்துச் செல்ல முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியர்.

மாற்றுக் கருத்துக்களும், வாதங்களும் நிறுவனத்துக்கு  நல்லதுதான். இவை சண்டை யாக மாறாதவரை! அது மட்டும் நடந்துவிட்டால் அது உங்களுக்கு கேடு என்பதை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள். அதேபோல், பாஸின் பொறுமையின் அளவு என்ன என்பதையும் நீங்கள் அறிந்துவைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

இதனை தெளிவாகத் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தால் மட்டுமே எந்த இடத்தில் நீங்கள் சமரசம் செய்துகொண்டு விட்டுக்கொடுக்க வேண்டி யிருக்கும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட முடியும்.  இதில் தன்னுடன் பணியாற்றி யவரின் அனுபவத்தை சொல்லுகிறார் ஆசிரியர்.

அடிக்கடி அந்த நபருக்கும் அவருடைய பாஸுக்கும்  பிரச்னை ஆகுமாம். ஒரு மீட்டிங்கில் இதேபோல் அவர் எதிர்வாதம் செய்ய மற்றவர்கள் தலையிட்டு சூழ்நிலையை இலகுவாக்க முயன்று தோற்றன ராம். இறுதியாக, பாஸ் போட்டாரே ஒரு போடு! அதற்கு பிறகு அவர் வாக்குவாதம் செய்யவில்லையாம். ஆனால், அவரை சரியில்லை என சொல்லி இன்னொரு மேனேஜருக்கு மாற்றி விட்டாராம் அவருடைய பாஸ். அப்புறம் என்ன அவரது கேரியர் ஏறக்குறைய அந்த நிறுவனத்தில் முடிந்தேவிட்டது என்கிறார் ஆசிரியர்.

ஒருபோதும் பாஸிடம் சண்டையிட்டு ஜெயிக்க முடியாது என்பதை நினைவில் வையுங்கள் என்கிறார் ஆசிரியர். உங்களுடைய பாஸை பற்றி  முழுமையாகத் தெரிந்து வைத்துக்கொள்வது உங்கள் கடமை என்று சொல்லும் ஆசிரியர், உதாரணத்துக்கு  உங்கள் பாஸுக்கு ஒரு தகவல் சொல்லவேண்டும். அவருக்கு சுருக்கமான இ-மெயில், அல்லது போன்கால் அல்லது எஸ்எம்எஸ்  அல்லது எதன் மூலம் அனுப்ப வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் தகவல் அனுப்ப வேண்டுமா? இது உங்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டும் இல்லையா? பாஸுக்கு அவருக்கு பிடித்த முறையில்தானே தகவல் சொல்லவேண்டும். குறிப்பாகச் சொன்னால், உங்கள் பாஸை உங்களுடைய முக்கியமான வாடிக்கையாளராக மனதில் வைத்து செயல்படுங்கள் என்கிறார். 

அது சரி, நீங்கள் ஒரு நாள் பாஸ் ஆவீர்கள் இல்லையா? அப்போது என்ன செய்யவேண்டும். சரியான ஆட்களை வேலைக்கு எடுக்கவும், மோசமான ஆட்களை வேலையைவிட்டு தூக்கவும் தெரியவேண்டும். வேலையைவிட்டு தூக்குவது ரொம்பவும் சுலபமல்ல. வேலை ரீதியான திருடர்கள், துரோகிகளை ஒரு நிர்வாகம் உடனடியாக வேலையைவிட்டு தூக்கிவிடலாம்.வேலை பார்ப்பது சரியில்லை என வேலையை விட்டு தூக்க நிஜமாகவே கல் மனது வேண்டும். அப்படி தூக்கா விட்டால் பாஸாகிய உங்களை நிர்வாகம் தூக்கிவிடும் என்பதை உணர்ந்தீர்கள் என்றால் மட்டுமே இது சுலபம் .

நிறுவனம் என்பது வெற்றிபெறுவதற்கு எப்போதும் போராடிக்கொண்டேயிருக்கும். அதனால், நான் இல்லாவிட்டால்  என்ற எண்ணம் ஒரு நிமிடம் கூட உங்களிடத்தில் வரவே கூடாது. ஏனென்றால், நிறுவனத்தில் நீங்கள் என்னதான் முக்கிய புள்ளியாக இருந்தாலும் ஒரு புள்ளிதான். இந்தப் புள்ளியை வேறொரு புள்ளியால் நிச்சயமாய் நிரப்ப முடியும் என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால் பணியிடத்தில் சந்தோஷமாக செயல்பட முடியும் என்கிறார் ஆசிரியர்.

இதுபோன்ற பணியிடத்தில் வெற்றிபெருவதற்கான 55 விதிகளை ஆசிரியர் இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ளார். வேலைக்கு போகும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது!

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

ஜெட்லி - சிறந்த நிதி அமைச்சர்!

ஆசியக் கண்டத்து நாடுகளில் மிகச் சிறந்த நிதி அமைச்சராக நமது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தேர்வாகி இருக்கிறார். லண்டனை தலைமையகமாகக் கொண்டு வெளியாகும் ‘எமர்ஜிங் மார்க்கெட்ஸ்’ என்கிற பத்திரிகை அருண் ஜெட்லிக்கு சிறந்த நிதி அமைச்சர் என்கிற விருதினை வழங்கியுள்ளது. ‘‘இந்தியா இப்போது அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடியும், ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜனும் காரணம் என பலராலும் புகழப்படுகிறார்கள். ஆனால், அருண் ஜெட்லியின் முக்கியமான பல நடவடிக்கைகளும் இந்தியா இன்று இந்த அளவுக்கு வளர முக்கிய காரணம்’’ என்று பாராட்டி இருக்கிறது அந்த பத்திரிகை. 2010-ல் இந்த விருதை அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கியது கொசுறு செய்தி!

அடுத்த கட்டுரைக்கு