Published:Updated:

நாணயம் லைப்ரரி: வாழ்க்கையை வளமாக்கும் புதிய பாடங்கள்!

நாணயம் லைப்ரரி: வாழ்க்கையை வளமாக்கும் புதிய பாடங்கள்!

புத்தகத்தின் பெயர்:
கெட் ஸ்மார்ட்டர் (Get Smarter)
ஆசிரியர்கள்:
செய்மோர் ஷீலிஷ் மற்றும் டெரிக் டெகிலோயெட்
பதிப்பாளர்:
Key Porter Books

ந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் செய்மோர் ஷீலிஷ் மற்றும் டெரிக் டெகிலோயெட் என்ற இருவரும் இணைந்து எழுதிய ‘கெட் ஸ்மார்ட்டர்’ எனும் வாழ்க்கை மற்றும் பிசினஸ் பாடங்களைச் சொல்லும் புத்தகத்தை. இருபது முதல் நாற்பது வரையிலான வயதுடையவர்களுக்கு 67 வயதான கனடாவை சேர்ந்த பில்லியனர் சொல்லும் வாழ்க்கையின் தத்துவம்... என்ற பின்னணியுடன் ஆரம்பிக்கின்றனர் ஆசிரியர்கள்.

இந்தப் புத்தகத்தில் ஆசிரியர்கள் முதலில் பேசுவது, முடிவெடுப்பது பற்றி. பள்ளியில் சேர்வது, என்ன பாடத்தை விருப்பப் பாடமாக எடுப்பது, கல்லூரியில் எந்தப் படிப்பைப் படிப்பது, எந்த வேலைக்கு செல்வது என பலவிதமான கேள்விகளுக்கு நாம் முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

நாணயம் லைப்ரரி: வாழ்க்கையை வளமாக்கும் புதிய பாடங்கள்!

இந்த மாதிரி முடிவுகளை எடுக்கும்போது  ஒரு தாளை எடுங்கள். உங்கள்முன் இருக்கும் விஷயத்தில் நீங்கள் எடுக்க விரும்பும் முடிவு குறித்து உள்ள பாசிட்டிவ்வான விஷயங்களை பட்டியலிடுங்கள். மிகவும் நேர்மையாக அவற்றில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் பூஜ்ஜியம் முதல் பத்து வரையிலான மதிப்பெண்களை கொடுங்கள். அதேபோல், உங்களுக்கு பிடித்த அந்த முடிவு குறித்த பத்து நெகட்டிவ் விஷயங்களை பட்டியலிட்டு, அவை ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண்களை கொடுங்கள். இப்போது இரண்டையும் கூட்டுங்கள். மதிப்பெண்களில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ஆகிய இரண்டுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் இரண்டு மடங்கு இருந்தால், நிச்சயமாக நீங்கள் விரும்பும் விஷயத்தை செய்யலாம். அப்படி இல்லாமல் பாசிட்டிவ்வைவிட இரண்டு மடங்கு நெகட்டிவ் விஷயங்கள் இருந்தால், அந்த விஷயத்தை அடியோடு மறந்துவிட வேண்டியதுதான் என்கின்றனர் ஆசிரியர்கள். 

அட என்ன இது! முடிவெடுப்பது  இவ்வளவு சுலபமா என்கிறீர்களா? நிச்சயமாக! ஆனால், இந்த நவீன யுகத்தில் முடிவெடுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவும் சிக்கல்கள் நிறைந்த ஒன்றாகவும் நாம் உருவகப்படுத்திக்கொண்டு வாழ்கிறோம். அதனாலேயே முடிவெடுக்கவேண்டும் என்றாலே நாம் நடுங்க ஆரம்பிக்கிறோம் என்கின்றனர் ஆசிரியர்கள்.

இரண்டாவதாக ஆசிரியர் சொல்வது, நீங்கள் எதில் சிறந்தவரோ, அதில் மிகச் சிறந்தவர் என்ற நிலையை அடைவதைப் பற்றி. உலக செஸ் விளையாட்டு சாம்பியனான பாபி பிஷர் என்பவரை தோற்கடிக்க என்ன செய்யவேண்டும் என்று பல பிசினஸ்மேன்களை கேட்பாராம் புத்தகத்தின் ஆசிரியர். விடையைச் சொல்லுங்கள் பார்ப்போம். பாபி பிஷரிடம் செஸ்ஸைத் தவிர, வேறு எதையாவது விளையாடினால் மட்டுமே அவரை தோற்கடிக்க முடியும்! அதுபோல, நீங்கள் ஒரு விஷயத்தில் தலைசிறந்த மனிதராக இருக்கவேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள். அதனாலேயே நீங்கள் நான் எதில் சிறந்தவனாக இருக்கிறேன் என்ற கேள்வியை அடிக்கொரு தரம் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்கின்றனர். அந்தக் கேள்விக்கு சரியான பதில் கிடைத்தால், அந்த விஷயத்தில் மேலும் உங்களை மெருகூட்டிக்கொண்டே போனால்தான் வெற்றி என்பது உறுதியாகும் என்கின்றனர்.

நாணயம் லைப்ரரி: வாழ்க்கையை வளமாக்கும் புதிய பாடங்கள்!

உங்களுக்குத் தெரியுமா? கோகோ கோலா நிறுவனம் இரால் வளர்ப்பு பண்ணைகளையும், பிளாஸ்டிக் தயாரிப்பிலும், ஏன் சினிமா தயாரிப் பிலும்கூட (1980-களின் ஆரம்பத்தில் கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்தை கோகோகோலா நிறுவனம்தான் வைத்திருந்தது)  செயல்பட்டுவந்தது என்பதை! கில்லட் நிறுவனம் டிஜிட்டல் வாட்சுகள், ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் போன்ற துறைகளில் செயல்பட்டுவந்தது. அமெரிக்க எண்ணெய் நிறுவனமான மோபில் சிறிதுகாலம் பர்னிச்சர் ரீடெயில் தொழிலை நடத்தியது. இதிலெல்லாம் அந்த நிறுவனங்கள் ஜெயிக்கவில்லை. ஏனென்றால், அவர் களுக்கு அதனை சிறப்பாக நடத்த தேவையான தனித்துவம் எதுவும் இல்லாமல் இருந்ததுதான்.

இன்னமும் புரியவில்லையா? பணம் கடன் வேண்டுமென்றால் வங்கிக்கு போகிறோம். நல்ல அக்ரிமென்ட் எழுத வக்கீலிடம் போகிறோம். அதே போல்தான், நீங்கள் எதில் சிறப்பான திறமை கொண்டுள்ளீர்களோ, அதை செய்யுங்கள் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

அடுத்தபடியாக ஆசிரியர்கள் சொல்வது, அன்னியோன்யமாய் இருப்பது. கொஞ்சம் கணக்குவழக்கு பார்ப்பதை தள்ளிவைத்து முன்பின் பெரிய அளவில் பழக்கம் இல்லாதவர் களிடம்கூட கொஞ்சம் அன்னியோன்ய மாகவும் தன்மையாகவும் இருங்கள். அதன் பலன் உங்களுக்கு தேவையான நேரத்தில் கிட்டும் என்கிறார்கள்.

புத்தக ஆசிரியரும் அவருடைய நண்பரும் கல்லூரியில் படிக்கும்போது சேர்ந்த தினத்தில் ஒரு சாக்லேட் பாக்கெட்டை வாங்கி நூலகத்தில் இருப்பவர்களுக்கு முதல் நாள் அறிமுகத்தை முன்னிட்டு தந்தார் களாம். நாளடைவில் அது நல்ல பழக்கமாக மாற, நூலகத்தில் பல உதவிகள் அவர்களுக்கு கிடைத்ததாம். இதுவேதான் உலகம் எங்கும் நடக்கும். கொஞ்சம் கனிவாக, தன்மையாக நீங்கள் அனைவரிடமும் நடந்து பழகுங்கள். எந்த நபர் எங்கே உதவுவார் என்று யாருக்குத் தெரியும் என்கின்றனர் ஆசிரியர்கள். 

வாழ்க்கைக்கான முக்கிய விதிகளாக ஏழு விதிகளை ஆசிரியர்கள் குறிப்பிடு கின்றனர். முதலாவதாக, யாரும் உங்களை நினைவில் வைத்துக் கொள்ளப்  போவதில்லை. என் பாஸ் என்ன நினைப்பார், ரூம் மேட் என்ன நினைப்பார் என்றெல்லாம் நினைத்து பயப்படாதீர்கள். இந்த நினைப்பில் இருந்து முதலில் வெளியே வாருங்கள். அவர்களுக்கெல்லாம் அவர்களைப் பற்றி நினைத்துக் கொள்ளவே நேரம் இருக்காது என்கிறார்கள் ஆசிரியர்கள்.

இரண்டாவதாக, பேராசை பிடித்தவர்களின் அருகில் இருக்காதீர்கள்.  பேராசைக்காரர்களை திருத்துவது கடினம். அதனால் அவர்களை விட்டு வெகுதூரம் சென்றுவிடுங்கள் என்கின்றனர். மூன்றாவதாக, ஒருவரது தோற்றம் என்பது பெரும்பாலான சமயங்களில் உண்மையாக நினைக்கப் படுகிறது. என்னதான் தோற்றத்தைப் பார்த்து நம்பாதே என்று உங்களை சுற்றி யிருப்பவர்கள் உங்களிடம் சொன்னா லும், நம்மில் பலரும் பலசமயம் தோற்றத்தை பார்த்தே ஆட்களை நம்புகிறோம். 

நான்காவதாக, ஒருபோதும் ஒருவரையும் பார்த்து பொறாமைப் படாதீர்கள். ஐந்தாவதாக, முப்பது வயதுக்கு அப்புறமாக எங்க அப்பா சரியில்லை; சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றெல்லாம் சொல்லித் திரியாதீர்கள். ரொம்ப சிம்பிளான விஷயமாகத் தெரிந்தாலும், அவ்வப்போது நாம் நம்முடைய தகப்பனாரை குறை சொல்லத் தவறுவதில்லை இல்லையா என கிண்டலாக கேட்கின்றனர் ஆசிரியர்கள்.

ஆறாவதாக ஆசிரியர்கள் சொல்வது, ஒருபோதும் நண்பனுக்கு அவனைக் குறித்த பொய்க் குற்றாச்சாட்டு குறித்த செய்தியை சொல்லாதீர்கள். இது காலம் காலமாய் சொல்லப்படும் விதிக்கு எதிரானது. நண்பர்கள் மட்டுமே ஒருவரிடத்தில் தம்பி இப்படியெல்லாம் உன்னைப் பற்றி சொல்கிறார்கள். ஜாக்கிரதை என சொல்ல முடியும் என்று சொல்லி பழக்கப்படுத்தி வைத்துள்ளனர். ஆனால், நிஜத்தில் அது உண்மையல்ல. ஒரு எதிரி வந்து நம்மிடம் உன்னைப் பற்றி இப்படியெல்லாம் கதை ஓடுகிறது என்று சொன்னால், உடனடியாக நாம் அட, இவன் நம்ம எதிரியில்லையா, அதனால் இப்படி சொல்கின்றான் என நினைத்து மறந்துவிடு வோம். ஆனால் நண்பனே சொன்னால், தீவிரமாக அதைப்பற்றி கவலைப்பட ஆரம்பித்துவிடுவோம் இல்லையா?

நாணயம் லைப்ரரி: வாழ்க்கையை வளமாக்கும் புதிய பாடங்கள்!

ஏழாவதாக ஆசிரியர் சொல்வது, பிறருக்கு நல்லது செய்தால் நமக்கு நல்லதை அவர்கள் செய்வார்கள் என்பது எண்ணமாக இருந்தாலும் அது ஒருபோதும் எதிர்பார்ப்பாக மாறிவிடக் கூடாது என்கின்றனர்.

நன்றி விசுவாசம் என்பதை எதிர்பாராமலேயே வாழப் பழகுங்கள். அப்படி வாழப் பழகிவிட்டீர்கள் என்றால் யாராவது ஒருவர் நன்றி சொன்னாலுமே உங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்கின்றனர்.

அதேபோல், பணம் சம்பாதிப்பது குறித்து ஆசிரியர்கள் ஒரு சூப்பரான கருத்தை சொல்கின்றனர். நீங்கள் நிறைய சம்பாதிப்பதற்கு வழிவகை செய்யும் தொழிலையே தேர்ந்தெடுக்கவேண்டும். ஏனென்றால், நீங்களும் ஒரு நுகர்வோர். நீங்கள் வாங்கும் பொருட்கள் தயாரிப்பாளர்களும், நீங்கள் பயன்படுத் தும் சர்வீஸ்களை தருபவர்களும் உங்களிடம் இருந்து நிறைய பணத்தை பெறவே முயற்சிப்பார்கள்.

இறுதியாக, ஆசிரியர்கள் பயந்துகொண்டே வாழ்கிறவன் வாழ்வதேயில்லை. நீங்கள் என்று ஒருவர் இருப்பதை பலரும் மறக்கிற அன்றே நீங்கள் இறந்து போகிறீர்கள். புகார்கள் சொல்லாதீர்கள். புகார்களை விரிவாக்கவும் செய்யாதீர்கள் என்ற கருத்துடன் ஆசிரியர்கள் முடிக்கின்றனர்.
புத்தகத்தின் இறுதியில் நிறைவான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ எந்தெந்த புத்தகங்களை படிக்கவேண்டும் என்ற புத்தகங்களின் பட்டியலையும் தந்துள்ளனர் ஆசிரியர்கள். முன்னேறி வெற்றி பெற விரும்பும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது எனலாம்.

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.) 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு