Published:Updated:

நாணயம் லைப்ரரி: மகிழ்ச்சி தரும் முதலீட்டு சூட்சுமங்கள்!

நாணயம் லைப்ரரி: மகிழ்ச்சி தரும் முதலீட்டு சூட்சுமங்கள்!

புத்தகத்தின் பெயர்: த ஆஸ்பிரேஷனல் இன்வெஸ்ட்டர் (The Aspirational Investor)

ஆசிரியர்: அஸ்வின் பி சாப்ரா (Ashvin B.Chhabra)

பதிப்பாளர்:  Penguin Books Ltd

முதலீடு என்றாலே சந்தையில் எக்கச்சக்க பணத்தைச் சேர்ப்பது என்ற எண்ணமே நமக்கு  ஏற்படுகிறது; அது தவறு!

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது அஸ்வின் பி.சாப்ரா எழுதிய 'த ஆஸ்பிரேஷனல் இன்வெஸ்ட்டர்' எனும் புத்தகம். சொத்துக்களையும் சந்தோஷத்தையும் தரும் வகையில் முதலீடுகளைச் செய்வது எப்படி என்பதைச் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம்.

நாணயம் லைப்ரரி: மகிழ்ச்சி தரும் முதலீட்டு சூட்சுமங்கள்!

முதலீடு என்று நினைத்தவுடனேயே சந்தையில் அனைவரையும் தோற்கடித்து எக்கச்சக்கமான பணத்தைச் சேர்ப்பது என்ற எண்ணமே நம்மை உடனடியாக ஆக்கிரமிக்கிறது. இந்த எண்ணத்தைக் கைவிடுங்கள். குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்புக்கும், குழந்தைகளின் நல்ல எதிர்காலத்துக்கும், நீங்கள் செய்கிற தொழிலை விரிவாக்கம் செய்ய எதிர்காலத்தில் தேவைப்படும் பணத்துக் கான தேவைகளைப் பூர்த்தி செய்யவும் செய்யப்படுவதே முதலீடுகள் என நீங்கள் நினைக்கவேண்டும் என அதிரடி யாக ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். புத்தகத்தின் ஆசிரியர், மெர்ரில் லிஞ்ச் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் தலைமை முதலீட்டு அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.

இந்த உலகில் இரண்டுவிதமான முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். ஒருவகையினர், யாராலும் சந்தையை ஜெயிக்க முடியாது என்பவர்கள். இந்த வகை கோட்பாட்டை பின்பற்று பவர்கள் இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்துவிட்டு அக்கடா என கிடப்பதே சிறந்தது என்பவர்கள்.

இரண்டாவது வகை நபர்கள் மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களான வாரன் பஃபெட்

நாணயம் லைப்ரரி: மகிழ்ச்சி தரும் முதலீட்டு சூட்சுமங்கள்!

போன்றவர்களை பின்பற்றும் ஆக்டிவ் முதலீட்டு மேலாண்மை செய்யும் ரகம். எந்த ரகத்தை பின்பற்றுபவராக இருந்தாலும், ஒரு சராசரி முதலீட்டாளரால் எந்த அளவு லாபம் பார்க்க முடியும் என்று பார்த்தால், அவருடையை நிலைமை ரொம்பவே மோசம் எனலாம். அவரால் சந்தையின் இண்டெக்ஸ் தரும் வருமானத்தையும் பெற முடிவதில்லை. அவர்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகளும் நன்றாகச் செயல்படுவதில்லை என்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது.

இங்கேதான் உணர்ச்சிவயப்படுதலும் சைக்காலஜியும் தன்னுடைய பங்களிப்பை முழுமையாகச் செய்கின்றன. இதுகுறித்த ஆய்வுகள் பலவும் மேற்கொள்ளப்பட்டு, எந்தவித மான பிரச்னைகளை இவை நம்முடைய முதலீட்டு முடிவுகளில் கொண்டுவந்து சேர்க்கின்றன என்ற பல விஷயங்களும் அலசி ஆராயப்பட்டுவிட்டன. ஒருபுறம் இவை என்றால் மறுபக்கம், பல்வேறு விதமான 24/7 செய்தி மற்றும் பங்குச் சந்தை குறித்த தகவல்கள், அலசல்கள், பரிந்துரைகள் என ஓங்கி ஒலிக்கிறது பலரின் குரல்கள்.

இப்படி பல்வேறு விஷயங்களும் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட் டாளரை சூழ்ந்திருப்பதாலேயேதான் முதலீட்டாளர்களுக்கு உதவி செய்யும் சரியான டூல்கள் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது என்கிறார் ஆசிரியர்.

சரி, சந்தை குழப்புகிறதே என ஒரு ஃபைனான்ஷியல் அட்வைஸரிடம் போனால், அவர் பல்வேறுவிதமான கலர்கலரான முதலீட்டு பங்களிப்பு சார்ட்டுகளை காண்பித்து கலங்கடிக் கிறார். அப்புறம் என்னதான் சார் செய்வது என்கிறீர்களா? அல்லது ஏன் இந்த நிலை என கவலைகொள்கிறீர்களா?

இந்தப் புத்தகம் அதுகுறித்த தீவிர அலசலை செய்வதற்குத்தான். சந்தை உங்களை சட்டை செய்யாது என்பது உறுதி. அப்படியானால் சந்தையை நீங்கள் ஏன் சட்டை செய்யவேண்டும் என்று கேட்கிறார் ஆசிரியர்.

ஒவ்வொரு முதலீட்டாளரும் தனிப்பட்ட முதலீட்டு நோக்கங்களை கொண்டவர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுடைய முதலீட்டுத் திட்டங்கள் அவர்களுடைய நோக்கம் சார்ந்ததாக இருக்கவேண்டுமே தவிர, சந்தையின் குணாதிசயம் சார்ந்ததாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பு ஒருவருக்குத் தேவையான தாகவும், ரிஸ்க் எடுத்தல் என்பது மற்றொருவருக்குத் தேவையானதாகவும் இருக்கும்போது இருவரையும் ஒரே தியரியில் அடக்கவும் முடியாது. இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் ஒவ்வாத வகையில்  போர்ட்ஃபோலியோவை வடிவமைக்கவும் முடியாது.

ரிஸ்க் எடுப்பவருக்கு பாதுகாப்பான முதலீட்டை செய்துதந்்தால் என்ன வாகும்? என்னப்பா உப்புசப்பில்லாத ஒரு முதலீட்டுத் திட்டம் என சலித்துக் கொள்வார் அல்லவா? அதுவேதான் பிரச்னை என்கிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி: மகிழ்ச்சி தரும் முதலீட்டு சூட்சுமங்கள்!

அமெரிக்க தனிமனித முதலீட்டாளர்களை பொறுத்தவரை, 1987 முதல் 1993 வரையிலான ஏழு ஆண்டு கால முதலீடுகளை ஆராய்ந்ததில் தெரியவந்த ஒரு விஷயம் என்னவென் றால், முதலீட்டாளர்களுக்கு எதிரி முதலீட்டாளர்களே என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. இந்த ஏழு வருட காலகட்டத்தில் ஒரு ஷேரை விற்று மற்றொரு ஷேரை வாங்கிய முதலீட்டாளர்களை மட்டும் கணக்கில் எடுத்து இந்த விற்று வாங்கிய தருணத்தில் இருந்து ஒரு வருடம் கழித்து விலைகளைப் பார்த்தால் பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் விற்ற பங்குகள் ஏற்றத்திலும் வாங்கிய பங்குகள் இறக்கத்திலும் இருந்ததை காண முடிந்ததாம். அப்படியானால் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டாளர்கள்தானே முதல் எதிரி என்று கிண்டல் செய்கிறார் ஆசிரியர்.

பொதுவாக, நாம் அனைவருமே ரிஸ்க் என்பதில் ஷார்ட் டேர்ம் ரிஸ்க்கை மிகவும் துல்லியமாக உணர்ந்திருக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கிறோம். ஒரு சாலையை கடக்க முயலும்போது தூரத்தில் வரும் காரைக் கண்டவுடன் துல்லியமாக வேகமாக கடக்கிறோம். ஏனென்றால், மனிதர்கள் எப்போதுமே தன்னை தற்காத்துக்கொள்ளும் வடிவத்திலேயே எண்ணம் மற்றும் செயலைக் கொண்டிருக்கிறார்கள். குழப்பத்திலிருந்து வெளிவரவே நம்முடைய மூளை வேகமாக முயற்சிக்கிறது.

இடதுபக்கத்தில் உள்ள இந்த படத்தைப் பாருங்கள். என்ன தெரிகிறது? ஒரு பெண்ணின் முகம் முடியை லூஸாக வாரி, தலையில் அழகான தொப்பியுடனான அலங்காரம் இல்லையா? பெரும்பான்மையானவர்களுக்கு இந்தவிதமான காட்சியே தெரியும். வெகு சிலருக்கே ஒரு வயதான பெண்மணி மூக்கில் மருவுடன் இருப்பது தெரியும். அதிலும் வெகுசிலருக்கே இரண்டு படங்களும் உடனடியாகத் தெரியும் என்கிறார் ஆசிரியர்.

நம்முடைய மூளை முதலில் நாம் எதைப் பார்க்கிறோமோ, அதையே நிலை நிறுத்திக்கொள்கிறது. படத்தை பார்த்தவுடன் மூளை ஒரு விஷயத்தை முடிவுசெய்து அதையே ஊர்ஜிதம் செய்துகொள்கிறது. மூளைக்கு இந்தப் படத்தில் குழப்பமே இல்லை. முதலில் உங்கள் கண் படத்தின் மேல்பகுதியில் இடதுபக்கம் உள்ள இளம்பெண்ணின் தோற்றத்தைப் பார்த்தால், அதை ஊர்ஜிதம் செய்துகொள்கிறது.

மாறாக முதலில் (இளம்பெண்ணின் கழுத்தில்) படத்தின் நடுவில் உள்ள கோட்டை கணக்கில் எடுத்துக்கொண்டதென்றால், வயதான தலை சாய்ந்த மூக்கில் பெரிய மரு ஒன்றை கொண்ட பாட்டியின் முகத்தை மூளை ஊர்ஜிதம் செய்துகொள்ளும். இதனால்தான் சிலருக்கு சந்தை 10% இறங்கினால் விற்று வெளியேற வேண்டிய தருணமாகவும், சிலருக்கு குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பாகவும் தெரிகிறது என்கிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி: மகிழ்ச்சி தரும் முதலீட்டு சூட்சுமங்கள்!

சந்தையில் காலகட்டத்தின் அவசியத்தை அனைவரும் உணர்ந்தாக வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர், அதற்கான உதாரணமாக அம்ஸ்டெர்டாமில் இருந்த ரியல் எஸ்டேட் விலைகளை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

கீழே குறிப்பிட்டுள்ள அம்ஸ்டெர்டாம் நகர ரியல் எஸ்டேட் விலை இண்டெக்ஸை பாருங்கள்.

350 வருடம் முதலீடு செய்திருந்தால் (1628 முதல் 1973 வரை) விலை இரட்டிப் பாகியிருக்கும்.

அதுவே 250 வருடம் இருந்தால் லாப நஷ்டமில்லாத நிலை இருந்திருக்கும். எனவே, சந்தை மட்டுமே உங்களுடைய முதலீட்டுக்கான சொல்யூஷன் இல்லை. ஒவ்வொரு காளை  சந்தையிலும் ஆரம்பத்திலேயே பங்கேற்பவர்கள் சிறந்த லாபம் பார்க்கின்றனர் என்றால், அதில் பங்கேற்காதவர்கள் பங்கேற்றவர் களை ஒப்பிடும்போது ஏழைகளாகி விடுகின்றனர் இல்லையா? என்று கேட்கிறார் ஆசிரியர். அதனாலேயே ரிஸ்க்-ரிவார்ட் என்பதை சீர்தூக்கி உங்களுடைய முதலீட்டு நோக்கங்களை பூர்த்திசெய்யும் வண்ணம் மட்டுமே உங்கள் முதலீடுகள் இருக்கவேண்டும் என்கிறார் ஆசிரியர்.

வெல்த் அலோகேஷனுக்கான பல வழிமுறைகளை இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ள ஆசிரியர், அதுகுறித்த விரிவான விளக்கங்களையும் தந்துள்ளார்.

முதலீட்டாளர்களாகிய நீங்கள் ஆசைப்படுங்கள். உங்களால் அதை அடைய முடியும் என்று சொல்லும் ஆசிரியர், அதற்குண்டான வழிவகைகள் பலவற்றையும் கடைசி அத்தியாயத்தில் விளக்கியுள்ளார்.

எதிர்கால தேவைகளுக்காக முதலீடு செய்யும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது என்றால் அது மிகையாகாது.

-நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.) 

அடுத்த கட்டுரைக்கு