Published:Updated:

நாணயம் லைப்ரரி: உங்கள் முன்னேற்றத்துக்கான சரியான பாதை!

நாணயம் லைப்ரரி: உங்கள் முன்னேற்றத்துக்கான சரியான பாதை!

புத்தகத்தின் பெயர்: சோ குட் தே கேன்னாட் இக்நோர் யு (So Good They Can’t Ignore You)

ஆசிரியர் : கால் நியுபோர்ட்

பதிப்பாளர்: Hachette Book Group USA

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் கால் நியுபோர்ட் எழுதிய ‘சோ குட் தே கேன்னாட் இக்நோர் யு’  எனும் முன்னேறவேண்டும் என்றால் உனக்கு பிடித்ததைச் செய் என்பது ஒரு மோச மான அறிவுரை, நீ என்ன செய்ய வேண்டுமோ அதை கண்டுபிடித்து செய் என்பதே முன்னேற்றத்துக்கு சரியான பாதை என்பதைச் சொல்லும் புத்தகத்தை.

நாணயம் லைப்ரரி: உங்கள் முன்னேற்றத்துக்கான சரியான பாதை!

உனக்கு ஆர்வம் இருப்பதில் ஈடுபடு என்பது ஒரு தீமை விளைவிக்கக் கூடிய பயங்கரமான அறிவுரை என இந்தப் புத்தகத்தை அதிரடியாக ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.  2005-ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக வளாகத்தில் பட்டமளிப்பு விழாவில் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆற்றிய உரையில் 'உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். சாதனைகளை செய்யவேண்டும் என்றால் நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு பிடித்ததாய் இருக்கவேண்டும். இதுவரை நீங்கள் உங்களுக்கு பிடித்த வேலையை கண்டுபிடிக்கவில்லை என்றால் தொடர்ந்து அதைத் தேடி கண்டுபிடிக்க முயலுங்கள்' என்று கூறி முடித்தார். அனைவரும் எழுந்து நின்று கைதட்டி கரகோஷம் எழுப்பினர். அந்தப் பேச்சில் நிறைய விஷயங்களை அவர் சொன்னபோதிலும் பிடித்ததை செய்யுங்கள் என்ற விஷயமே மாணவர்கள், மீடியா, ஆசிரியர்கள் என அனைவரின் கருத்திலும் பதிந்தது.

ஏறக்குறைய இன்றைய அமெரிக்க சூழலில் பிடித்த வேலையை செய்தால் மட்டுமே சந்தோஷம், வெற்றி போன்றவையெல்லாம் வரும் என்பதே தாரக மந்திரமாக ஒலிக்கிறது. சந்தேகமாக இருக்கிறதா? அருகில் இருக்கும் புத்தக கடைக்கு சென்று கேரியர் அட்வைஸ் குறித்த புத்தகங்களைப் புரட்டிப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்த வேலையே உங்களுக்கு வெற்றியை தரும் என பல்வேறு ரூபத்தில் சொல்லி இருப்பார்கள். வேலையை விட்டுப் போய் பிடித்ததை செய்து வெற்றி பெறுங்கள் என்றெல்லாம்கூட புத்தகங்கள் இருக்கும்.

ஏன், ஸ்டீவ் ஜாப்ஸின் கதையை கொஞ்சம் விலாவாரியாக பார்த்தாலே இந்த தத்துவத்தின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும். ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பிக்கும்முன் என்ன செய்தார் என்று பார்த்தால், இது கொஞ்சம் புரியும்.

ஜாப்ஸ் கல்லூரியில் படிக்கும்போது பிஸினசும் படிக்கவில்லை, டெக்னாலஜியும் படிக்கவில்லை.

நாணயம் லைப்ரரி: உங்கள் முன்னேற்றத்துக்கான சரியான பாதை!

சரித்திரமும் நடனமும் படித்தார். கொஞ்சம் ஈஸ்டர்ன் இறைநிலை இணைவில் ஈடுபாடும் கொண்டிருந்தார். காலேஜிலும் ஒழுங்காக படித்தாரா? முதல் ஆண்டிலேயே படிப்பை நிறுத்திவிட்டார். ஆனால், கல்லூரி வளாகத்தில் தங்கிக்கொண்டு தரையில் படுத்து தூங்கி, அருகிலுள்ள ஹரே கிருஷ்ணா கோயிலில் இலவச உணவினை சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அந்த காலகட்டத்தில் அப்படி நடப்பவரை ‘ஃப்ரீக்’ என்பார்கள்.  ஃப்ரீக்குகள் ரொம்பவும் பாப்புலராக இருப்பார்கள். அதே போல்தான் அவரும் இருந்தார்.

கஷ்டத்தில் இருந்து விடுபடுவதற்காக தன் வீடு இருக்கும் கலிபோர்னியா நகருக்கு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ், அடாரி நிறுவனத்தில் நைட் ஷிப்ட் வேலைக்கு போனார். ஏன் தெரியுமா? அந்த நிறுவனம் ஜாலியாய் இருந்துகொண்டே பணம் சம்பாதியுங்கள் என விளம்பரம் செய்திருந்தது. பிறகு அடாரி நிறுவன வேலையையும் விட்டுவிட்டு, இந்தியா சென்று திரும்பி அல்டோஸ் சென் சென்டரில் பயிற்சியளிக்க ஆரம்பித்தார்.

இந்தியாவில் இருந்து திரும்பிய சமயம், அமெரிக்காவில் அலெக்ஸ் காம்ராட் எனும் என்ஜினீயர் மற்றும் தொழில் முனைவோர் நடத்திய கம்ப்யூட்டர் டைம் ஷேர் நிறுவனத்துக்கு  ஒரு டெர்மினல் டிவைஸ் செய்ய வேண்டியிருந்தது. அந்த வேலை வொஸ்நியாக் என்பவரிடம் தரப்பட இருந்தது. அவர் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் ஜீனியஸ். கல்லூரியிலும் அதையே படித்தவர்.  அவருக்கு பிசினஸ் குறித்த வேலைகளை செய்துதர ஸ்டீவ் ஜாப்ஸை வைத்துக் கொண்டார்.

ஒரு வருடம் எல்லாம் சரியாகப் போயிற்று. திடீரென ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்லாமல் கொள்ளாமல் ஆல் ஒன் கம்யூனுக்கு போய்விட்டார். சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்ட தால், அவர் திரும்பி வரும்போது அவருடைய இடத்தில் வேறொருவரை பணிக்கு அமர்த்திவிட்டார் வொஸ் நியாக். இதுதான் டெக்னாலஜியை ஆர்வமாகவும் பிசினஸை மூச்சாகவும் கொண்டிருப்பதாகச் சொல்பவரின் நடவடிக்கைகள். அதுவும் ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு சுமார்  ஒரு வருடம் முன்வரை என்கிறார் ஆசிரியர்.

பல முரண்பாடுகள் நிறைந்த இளைஞனாகவே ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்து வந்தார். இறை ஞானோதயம் தேடிக் கொண்டும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், எலெக்ட்ரானிக்ஸில் பொருட்களை தயாரித்து விற்றும் லாபம் பார்த்து வந்தார். இப்படி செய்துகொண்டு இருக்கும்போது ஒரு எதிர்பாராத லாபம் கிடைத்த தருணத்தில்தான் ஆப்பிள் கம்ப்யூட்டர் பிறந்தது. அப்போதும்கூட மிகுந்த எச்சரிக்கையுடனும் கொஞ்ச காலத்துக்கு நடத்தும் எண்ணத்துடனும் மட்டுமே ஆரம்பித்தார்.  உலகத்தையே தங்களுக்கு கீழ் கொண்டு வரும் எண்ணத்துடன் எல்லாம் ஆரம்பிக்கவில்லை'' என்கிறார் ஆசிரியர்.

புத்தகத்தின் ஆசிரியர், ஜாப்ஸின் கதையை ஏன் இவ்வளவு விலாவாரியாக சொல்கிறார் தெரியுமா?

ஸ்டீவ் ஜாப்ஸ் அவருடைய தியரியான பிடித்ததை செய்திருக்கும் பட்சத்தில் அவர் இன்றைக்கு ஜென் அல்டோ சென்டரில் நல்லதொரு பயிற்சியாளராக மட்டுமே இருந்திருப்பார். ஆனால், அவருடைய அட்வைஸை அவரே பின்பற்றவில்லை.  ஆப்பிள் நிறுவனமும் ஆர்வத்தினால் நிறுவப்படவில்லை. ஒரு அதிர்ஷ்டவச மான பிசினஸ் பிரேக் கிடைக்கப்போய் அதில்தான் அது உருவானது'' என்கிறார் ஆசிரியர்.

பார்க்கும் வேலையைப் பொறுத்த வரை ஆர்வம் (passion)என்பது மிக  அரிதான ஒரு விஷயம். ஒரு மனிதன் தனக்குப் பிடித்ததை உணர்ந்துகொள்ள நீண்ட நாட்களாகும். இதுவும் தவிர, நீங்கள் ஒரு வேலையில் கைதேர்ந்தவராக ஆகும்போது ஆர்வம் என்பது சைட் எஃபெக்ட்டாக உருவாவதுதான் என்பதற்கான ஆணித் தரமான விளக்கங்களை ஆசிரியர் சொல்கிறார். ஆர்வம் என்பது தவறு என்பது மட்டுமல்ல, அது மிக  மிக ஆபத்தை விளைவிக்கக்கூடியதும் ஆகும்  என்கிறார் ஆசிரியர். அப்படி எனில் என்னதான் செய்வது என்கிறீர்களா?

நாணயம் லைப்ரரி: உங்கள் முன்னேற்றத்துக்கான சரியான பாதை!

கைதேர்ந்த திறமையை வளர்த்துக் கொள்வது என்பதில்தான் வெற்றியே இருக்கிறது. ஒருவருக்கு இணை அவர்தான் என்ற நிலையில் இருக்கும் அளவுக்கு திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அனைவரும் உங்களை நிச்சயம் கவனிக்கத் தவற மாட்டார்கள் என்று ஆலோசனை சொல்கிறார்.  என்ன மாதிரியான வேலையை நீங்கள் பார்த்துக்கொண்டிருந்தாலும் சரி, எப்படி கைதேர்ந்த வகையில் அந்த வேலையை செய்கிறீர்கள் என்பதுதான் மேட்டரே என்கிறார்.

இந்த கைதேர்ந்த நிபுணராதல் என்ற கொள்கையும் மூன்று சூழ்நிலைகளில் வெற்றி பெறாது என்கிறார் ஆசிரியர். ஒன்று,  நீங்கள் பார்க்கும் வேலையில் என்ன தான் சிறப்பாக செயல்பட்டாலுமே மிக மிகக் குறைந்த அளவிலேயே உங்களை வேறுபடுத்திக் காட்டும் வாய்ப்பையே கொண்டிருந்தால். இரண்டு, நீங்கள் பார்க்கும் வேலை உங்களுக்கும் உலகத்துக்கும் ஒரு பலனளிக்காத வேலையாய் இருந்தால். மூன்று, நீங்கள் பார்க்கும் வேலை உங்களுக்கு பிடிக்காத நபர்களுடன் உங்களை வலுக்கட்டாயமாக வேலை செய்யவைத்தால். இந்த மூன்று விஷயங்களில் எந்த விஷயத்தின் கலவையைக் கொண்டதாக நீங்கள் பார்க்கும் வேலை இருந்தாலும், அதில் ஒன்றும் பெரியதாய் சாதித்துவிட முடியாது.

பின்வரும் கேரியர் கேப்பிட்டலிசம் என்ற தத்துவத்தை ஆசிரியர் விரிவாக விளக்கியுள்ளார் இந்தப் புத்தகத்தில். ஒரு வேலையை மிகவும் நேர்த்தியான வேலை என்று குறிப்பிடும் அளவில் செய்யும் தகுதியும் திறமையும் மிகவும் அரிதாகவே உலகத்தில் இருக்கிறது.  நேர்த்தியாக ஒரு வேலையைச் செய்ய அந்த அரிதான திறமை உங்களிடம் இருக்கவேண்டும். உங்கள் முதலாளி கேப்பிட்டலாக முதலீடு செய்வது பணத்தை.  அதனால் அதற்குரிய லாபத்தை அவர் பெருகிறார். நீங்கள் நேர்த்தியாக வேலை செய்யும் திறனை கொண்டிருந்தீர்கள் என்றால், நீங்கள் அதை முதலீடு செய்து அதற்கான லாபத்தை பெறுவீர்கள்.  நினைவிருக்கட்டும், நேர்த்தியான திறமையை எந்த பணம் போட்ட முதலாளியும் கண்டுகொள்ளாமல் விட மாட்டார் என்கிறார் ஆசிரியர்.

தொழிலோ வேலையோ முன்னேற்றம் பெற விரும்பும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது எனலாம்.

-நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம்  ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில்  விற்பனைக்குக் கிடைக்கும்.) 

சேவை வரி மீண்டும் அதிகரிப்பு!

தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்காக சேவை வரியை 0.5% உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த பட்ஜெட்டில் 12.36 சதவிகிதமாக இருந்த சேவை வரியை 14 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தி இருந்தது. இந்த சேவை வரி உயர்வு கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இப்போது, தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்காக சேவை வரியை 0.5% உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வரி உயர்வு நவம்பர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை அடுத்து மொபைல் ரீசார்ஜ், வங்கிச் சேவை, ரயில், காப்பீடு, கிரெடிட் கார்டு, சுற்றுலாப் பயணம் உட்பட பல செலவினங்கள் அதிகரிக்கும்.

அடுத்த கட்டுரைக்கு