Published:Updated:

நாணயம் லைப்ரரி: உங்கள் நிறுவனத்தை உயர்த்தும் நிர்வாக சூட்சுமங்கள்!

நாணயம் லைப்ரரி: உங்கள் நிறுவனத்தை உயர்த்தும் நிர்வாக சூட்சுமங்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புத்தகத்தின் பெயர்: அப் த ஆர்கனைசேஷன் (Up the Organization)

ஆசிரியர்: ராபர்ட் டவுன்சென்ட் (Robert C.Townsend)

பதிப்பாளர்: New Directions

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் ராபர்ட் டவுன்சென்ட் எழுதிய ‘அப் த ஆர்கனைசேஷன்’. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் டவுன்சென்ட் தலைமைப் பண்பு குறித்த மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர். நிர்வாகம் எனறால் என்ன என்று பீட்டர் ட்ரக்கர் உலகுக்கு எடுத்துச் சொன்ன மாதிரி, ’லீடர்ஷிப்’  என்றால் என்ன என்று கண்டுபிடித்து சொன்னவர் ராபர்ட் டவுன்சென்ட். 

இந்தப் புத்தகத்தின் அத்தியாயங்கள் ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் சில மணித்துளிகளில் படித்துவிடக்கூடிய அளவிலேயே  எழுதப்பட்டுள்ளது. எந்த தலைப்பை வேண்டுமென்றாலும் நீங்கள் படிக்க ஆரம்பிக்கலாம். 

இந்தப் புத்தகத்தில் ஆசிரியர் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் சிக்ஸர் ஷாட் மாதிரி அதிரடி ரகம்தான்.ஒரு சராசரி நிறுவனத்தைப் பாருங்கள். ரிசப்ஷனிஸ்ட்டில் ஆரம்பித்து, வைஸ்-பிரசிடென்ட், பிரசிடென்ட், ஆபிஸ் பையன், ஸ்மார்ட்டான பி.ஏ-க்கள் வரை மூன்று முக்கிய குணங்கள் அவர்களை ஆட்கொண்டிருக்கும். எளிதில் வளைந்து கொடுக்கும் தன்மை, ஒருவிதமான சோர்வுநிலை மற்றும் ஊக்கமற்ற நிலை என்ற மூன்று குணங்களே அவர்களிடத்தில் பிரதானமாக வியாபித்திருக்கும்.

நாணயம் லைப்ரரி: உங்கள் நிறுவனத்தை உயர்த்தும் நிர்வாக சூட்சுமங்கள்!

ஏனிந்த நிலை?

நிர்வாகத்தின் அமைப்பே அப்படி.  கட்டுப்பட்டு செயல்படவேண்டும் என்ற அமைப்பில் அவர்களை கிடத்தி விட்ட பின்னர் அவர்களுக்கு இந்த மூன்று குணமும் வராமல் என்ன செய்யும் என்று கேட்கிறார் ஆசிரியர்.

இதனாலேயே நம் எண்ணம் நம்மை சிறந்த ஆபீஸ் பையனாக்கிவிடுகிறது. அதிலும் பெரிய நிறுவனங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. எங்கும் இந்த நிலை நீக்கமற நிறைந்திருக்கும். இறவா நிலையுள்ள நிறுவனங்களை நிர்வகிக்க, பயிற்சி பெற்ற மாண்டு போகக்கூடிய மனிதர்கள்தானே முக்கியம் என்று கிண்டலாக சொல்கிறார் ஆசிரியர்.

இதை மாற்றுவது சுலபமா என்ன? நிச்சயமாக இல்லை. மனிதர்களாகிய நாம் எந்த விதமான நிலையில் இருந்து இந்த நிலைக்கு வந்துள்ளோம்.  வேட்டை, பேராசை, துஷ்டகுணம், நம்பிக்கை துரோகம் போன்றவற்றில் இருந்து மெள்ள மெள்ள வளர்ந்து இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். இதுதான் ஒரிஜினல். இதற்கு ஏற்றாற் போல்தான் நிர்வாகங்கள்  வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதை மாற்றினால் வளர்ச்சி நிச்சயம் என்பது உறுதி என்கிறார் ஆசிரியர்.

இந்த மாதிரியான நிலைமையில் வெற்றி பெற இரண்டு வழிகள் நம் முன்னே இருக்கிறது. முதலாவது வழி,  எது முக்கியமோ, அதை மட்டும் மாற்றிக் கொண்டு அதற்கேற்ப நிர்வாகம் செய்து அதனால் வரும் முன்னேற்ற பலாபலன்களைஅனுபவிப்பது. 

இரண்டாவது வழி, வன்முறை கலக்காத கொரில்லா முறை. அலுவலகத்தின் நடைமுறைகளை மொத்தமாக கழட்டிப் போடுவது. அப்படி கழட்டிப் போடும்போது எந்தெந்த நிர்வாக நடைமுறைகள், நம் குறிக்கோளை அடைவதற்காக செயல்படுகிறதோ, அவற்றை அப்படியே வைத்துக் கொள்ளலாம். எந்தெந்த நடைமுறைகள் குறிக்கோளை அடைய எள்ளளவும் உதவாமல் நிர்வாகம் நடக்கிறது என்பதை காட்டுவதற்காக இருக்கிறதோ, அதை மொத்தமாக கழட்டி வீசிவிடுவதே நல்லது. இந்தப் புத்தகம் இந்த இரண்டாவது வழியை விளக்குவதற்கு என்கிறார் ஆசிரியர்.

இனி இந்த வகையில் ஆசிரியர் சொல்லியுள்ள ஒரு சில முக்கிய விஷயங்களைப் பார்ப்போம். மூன்று வகை நிர்வாக அமைப்பை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இதில் எந்த வகையில் உங்கள் அலுவலகம் இருக்கிறது என்று பாருங்கள்.

முதலாவதாக, தலைமையின்/மேனேஜரின் கீழ் பலர் என்ற நிலையே மிக உயர்ந்த ரகம். இரண்டாவது ரகத்தில், படிநிலைகள் பலவானாலும் மொத்த நிர்வாகத்தில் 25% கம்யூனிகேஷன் கேப் இருக்கும். மூன்றாவது நிலையின்படி,  தலைமை மற்றும் அசிஸ்டென்ட்-டூ தலைமை (கீழ் லெவல் கனெக்‌ஷன்கள் எதுவும் இல்லாமல்) என்பது மிக மோசமானது. தலைமை வீக்காகவும், செயல்படாததாகவும் வேகமாக மாறிவிடும்.

ஏன் தெரியுமா? இதுபோன்ற அசிஸ்டென்ட்-டூ பதவியை ஏற்கத் துணிந்த நபரே ஒரு பகற்கொள்ளைக்காரர்/சுரண்டல் காரர் போன்ற மனநிலையை கொண்டவராகவே இருப்பார். அசிஸ்டென்ட் வேறு. அசிஸ்டென்ட்-டூ என்பது வேறு. அசிஸ்டென்ட்-டூ என்பவர் தலைமையை சுலபத்தில் முடமாக்கிவிடுவார். எங்கே உதவக்கூடாதோ, அங்கே உதவுவார். யாரையும் நேரடியாக தலைமையை சந்திக்க விடமாட்டார். மூளைக்கார வேலைக்காரர்கள், இந்த வகை அசிஸ்டென்ட்-டூ-க்களை சகித்துக்கொள்ளாமல் நடையைக் கட்டி விடுவார்கள்.

நாணயம் லைப்ரரி: உங்கள் நிறுவனத்தை உயர்த்தும் நிர்வாக சூட்சுமங்கள்!

பெரிய நிறுவனங்களில் இருந்து ரிட்டையரான நபரை சிறிய நிறுவனங்களில் பணியமர்த்துதலில் உள்ள சிக்கல்களை மிகவும் இளக்காரமாக சொல்கிறார் ஆசிரியர். வேலைக்கு சேர்ந்ததும் முதல் வேலையாக அவருடைய மருமகனை அவருக்கு அசிஸ்டென்ட்-டூவாக சேர்த்து சம்பளம் கொடுக்கப் பார்ப்பார். அவருடைய ஆபீஸுக்கு அருகே பிரைவேட் பாத்ரூம் அமைப்பார். அலுவலகத்தின் வாசலில் ரிசர்வ்டு பார்க்குக்கு ஏற்பாடு செய்து கொள்வார். அவருடைய மனைவியுடன் மூன்று மாத உலக சுற்றுலாவுக்கு சீக்கிரமே புறப்பட்டுவிடுவார். இந்த நடவடிக்கைகள் சிறிய நிறுவனத்தை உடனடியாக கொன்றுவிடும் என்பதே நடைமுறை உண்மை.

அதேபோல், ஒரு நிறுவனத்தில் ஓய்வு பெற்ற சிஇஓ-க்களை கன்சல்டன்ட்டு களாக தொடர்ந்து வைத்திருப்பதையும் பயங்கரமாக கேலி செய்கிறார்.  அதிலும் நிறுவனத்தின் உள்ளேயே தனி அறை கொடுத்து உட்கார வைத்தால், அதைவிட கேலிக் கூத்து ஏதுமில்லை என்கிறார்.

வேறு வழியே இல்லையா,  அலுவலகத்தை விட்டு தொலை தூரத்தில் கம்பெனி செலவில் அவருக்கென்று ஒரு ஆபீசை நிறுவி விடுங்கள். உங்கள் அலுவலகத்தின் உள்ளேயே அவர் இருந்தால், யார் பாஸ் (புதிய சிஇஓவா?) என்பதே பெரிய குழப்பம் ஆகிவிடும் என்கிறார் ஆசிரியர்.

தொழில் நிமித்தமாக வெளியூர் போகிறீர்கள். அங்கிருந்து போன் செய்து, உங்கள் கம்பெனியில் ஒரு கஸ்டமர் மாதிரி, அவ்வப்போது பேசிப் பாருங்கள். கம்பெனியின் அவல நிலை உங்களுக்கு தெளிவாய்ப் புரிய அதைவிட ஒரு வாய்ப்பு கிடைக்காது என்கிறார் ஆசிரியர்.

ஒரு நிறுவனத்தை வியாபார ரீதியாக நீங்கள் அணுகவேண்டுமா? நேராகப் போய், நீங்கள் யார் என்று சொல்லி அறிமுகப்படுத்தி பேசிப் பழகுங்கள். அதை விட்டுவிட்டு, அந்த நிறுவனத்துக்கு  நமக்கு தெரிந்த குழுவில் யாருக்காவது பழக்கம் இருக்கிறதா என்று பார்த்து, அவருடைய அறிமுகத்துடன் நீங்கள் அங்கே போனால், நீங்கள் போவதற்கு முன்னரே உங்களைப் பற்றிய தகவல் பலவற்றை உங்கள் நண்பர் அங்கே கொண்டு சேர்த்திருப்பார் என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படுங்கள் என்கிறார்.

புத்தம் புதிதாக ஒரு ஐடியாவை நீங்கள் கண்டுபிடித்து இருந்தால், சட்டுபுட்டென்று எல்லோர் முன்பும்  போட்டு உடைக்காதீர்கள். முதலில் உங்கள் நலம் விரும்புகிறவர்களிடம்  பேசுங்கள். இது சரிப்பட்டு வருமா என ஆலோசனை கேளுங்கள்.  அதை விட்டுவிட்டு ஐடியாவை உடனே போட்டு உடைத்தால், உங்களை ஆதரிக்க நினைப்பவர்கள்கூட பின்வாங்கலாம். இதனால் உங்கள் எதிரிகளுக்கு சூப்பராக யோசிக்க      நேரம் கிடைத்துவிடும். அதனாலேயே உங்கள் ஐடியாக்கள் ஏற்கப்படாமல் போய் விடலாம் என எச்சரிக்கை விடுக்கிறார்.

நீதி, நேர்மை, நியாயம் என எந்தப் பெயரை வைத்து வேண்டுமென்றாலும் அழைத்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான சராசரியான கம்பெனிகளில் அது கிடையாது அல்லது கிடைக்காது. ஒவ்வொருவரும் அவருடைய பெர்பார்மென்ஸை வைத்தே கணிக்கப்படுவார்கள். 

எப்படி உடை அணிந்துகொள்கிறார், நடத்தை எப்படி, யாரை அவருக்குத் தெரியும், யாருக்கு அவர் சொந்தம் என்பதெல்லாம் வியாபாரம் சூப்பராக போகும் வரைக்கும்தான். அதற்கு ரொம்பவே நாளாகும்.

 ஆனால், பெர்பார்மென்ஸ் காட்டுபவர்களுக்கு சன்மானம் தருகிற மாதிரி, பெர்பார்மென்ஸ் காட்டாத வர்கள் தண்டிக்கப்பட  வேண்டும் இல்லையா? அது நிறைய தடவை நடக்காமலேயே போகும். ஒரு நிர்வாகியாக நீங்கள் இவற்றையெல்லாம் சரிசெய்யும் வகையில் சிஷ்டங்களை உருவாக்கவேண்டும்.

உலகம் எப்படி இயங்குகிறது என பாருங்கள். சிலர் ரிசல்ட் காண்பிப்பார்கள். சிலர் அதற்குண்டான கிரெடிட்டை எடுத்துக் கொள்வார்கள். உலகம் முழுக்க இதுதானே நடைமுறை. அது எப்படி நிர்வாகத்தினுள் நுழையாமல் இருக்கும் என கிண்டலடிக்கிறார் ஆசிரியர்.

தலைமைப் பண்பை வளர்த்தெடுங்கள். நம் நிறுவனங்கள் பலவற்றிலும், ஒரு மனிதன் உச்சியை தொடுவதற்குள் சோர்ந்து போய் விடுகிறார். உச்சத்தை தொட்டவுடன்  ஓய்வு எடுக்க மலையின் உச்சியில் தூங்க ஆரம்பித்துவிடுகிறார். அதனால் உருண்டு மீண்டும் அடிவாரத்துக்கு வந்துவிடுகிறார்.

இறுதியாக ஆசிரியர் சொல்வது, `நன்றி' என்ற ஒரு சொல் கார்ப்பரேட் அகராதியில் மறக்கப்பட்டு வெகுநாளாகி விட்டது என்ற கசப்பான உண்மையை நிர்வாகிகள் உணரவேண்டும்.

தொழில் புரிவோருக்கும், தொழில் செய்ய திட்டமிட்டிருப்பவர்களுக்கும், கம்பெனியின் நிர்வாகிகளுக்கும் மிகவும் தேவையான தலைமைப் பண்புகள் குறித்த கருத்துக்கள் பலவற்றையும் மிகவும் தெளிவாகச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் கட்டாயம் ஒருமுறை படிக்கலாம்.

-நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப்  புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில்  விற்பனைக்குக்  கிடைக்கும்.) 

லாபத்தில் பிஎஸ்என்எல்!

கடந்த பல ஆண்டுகளாகவே நஷ்டத்தில் சிக்கித் தவித்த பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது முதல்முறையாக லாபம் பார்த்திருக்கிறது. 2014 - 15ம் நிதி ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லாபம் 672 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் இந்த நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பு மற்றும் நிர்வாக செலவு குறைந்ததே ஆகும். 2013 - 2014ம் நிதி ஆண்டில் இந்த நிறுவனம் அடைந்த நஷ்டம் 691 கோடி ரூபாய். பிஎஸ்என்எல் லாபம் கண்ட சூட்டுடன் ஏர்டெல்லுக்கு போட்டியாக 4ஜி சேவை தரும் வேலையிலும் ஜரூராக இறங்கியுள்ளது. தவிர, விரிவாக்கப் பணிகளுக்காக இந்த ஆண்டில் 7,700 கோடி ரூபாய் செலவு செய்யவும் திட்டமிட்டுள்ளதாம் பிஎஸ்என்எல். அட்ரா சக்கை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு