Published:Updated:

சாக்லேட் பிசினஸ்...

அசத்தும் அம்மா,பிள்ளை!

ங்களுக்குப் பரிசாக அளிக்கப் படுகிறது ஒரு சாக்லேட். அது, வழக்கமாக கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் சாக்லேட்டாக இல்லாமல், ஏதேனும் ஒரு வாசகம், உங்கள் பெயர் அல்லது உங்கள் புகைப்படம் பிரின்ட் செய்த கவரில் சுற்றப்பட்டு, உங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ஹோம்மேட் கஸ்டமைஸ்டு சாக்லேட்டாக இருந்தால்... கண்கள் விரியும் அல்லவா?!

சாக்லேட் பிசினஸ்...

இதைத்தான், தன் பிசினஸ் வெற்றியாக்கியிருக்கிறார்கள் உமா ராணியும், அவர் மகன் அசோக்குமாரும்! சமீபத்தில் நடந்த நடிகர் பாபி சிம்ஹாவின் நிச்சயதார்த்தத்துக்கு, இவர்களின் ‘மெர்லின் ஃபுட் புராடெக்ட்ஸ்’ சார்பாக பார்சல் ஆகியிருக்கிறது 100 பெர்சனலைஸ்டு சாக்லேட்டுகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னை, அயனாவரத்தில் உள்ள தன் வீட்டிலேயே சத்த மில்லாமல் சாக்லேட் பிஸினஸில் கலக்கி வரும் உமாராணி மற்றும் அசோக் குமாரிடம் பேசினோம்.

‘‘கணவர் கள்ளக்குறிச்சி யில ரைஸ் மில் வெச்சிருந்தார். பையன் சாஃப்ட்வேர்ல வொர்க் பண்ணிட்டு இருந்தான். திடீர்னு வேலையை விட்டுட்டு, எங்க ரைஸ் மில்லுல நாலு வருஷம் சேர்ந்து வேலை பார்த்து, பல தொழில் நடைமுறைகளைக் கத்துக்கிட்டான் அசோக். அவனுக்குத் திருமணம் முடிஞ்சப்போ, மருமகள் டாக்டர் என்பதால், அவளோட மேற்படிப்புக்காக அவங்க சென்னைக்குப் போனாங்க.

கிண்டி, ஆன்ட்ரபிரனர்ஷிப் டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்து ஃபுட் கோர்ஸ் படிச்ச அசோக், சென்னையில என்னென்ன பிசினஸ் பண்ணினா நல்லா மூவ் ஆகும், அதுக்கான அரசோட மானியம் என்னனு தான் தெரிஞ்சுக்கிட்டதை எல்லாம் அப்பப்போ என்கிட்ட சொல்லிட்டே இருப்பான். அந்த வகையில உணவும், சாக்லேட்டும் முதலிடம் பிடிச்சிருந்ததைக் கவனிச்சு எங்கிட்ட ஆலோசிச்சான். இங்க பொதுவா, சாக்லேட் இன்விடேஷன் என்பதை, பெரிய கம்பெனிகளோட சாக்லேட்டை வாங்கி அது மேல டிசைன் டிசைனான கவர்களைப் போட்டுதான் பண்ணிட்டு இருந்தாங்க. நாம இதே சாக்லேட் இன்விடேஷன்ல, அந்த இன்விடேஷன் என்றென்றும் நினைவில் நிக்கிற மாதிரியான சுவாரஸ்யங்களைச் சேர்த்து கஸ்டமைஸ்டா பண்ணலாம்னு யோசிச்சு, அதுக்கான களத்தில் இறங்கினோம்!’’ என்று உமாராணி சொல்ல, செகண்ட் ஹாஃப் சொன்னார் அசோக்குமார்...

‘‘தன் கைப்பக்குவத்தில் வீட்டிலேயே ஹோம்மேட் சாக்லேட் செய்றதா அம்மா சொல்ல, அதுக்கான அரசாங்க அனுமதி வாங்கி வேலையை ஆரம்பிச்சோம். எங்க தொழிலுக்கு ‘மெர்லின் ஃபுட் புராடக்ட்ஸ்’ என்ற பெயரையும் சாக்லேட்டுக்கு, ‘சாக்லேட் பாய்’ என்ற பெயரையும் பயன்படுத்துறோம். சாக்லேட் கவர் டிசைனை அவுட்சோர்ஸ் மூலமா வாங்குவோம். திருமணம், காதுகுத்து போன்ற விழாக்களுக்கான இன்விடேஷன்களில் கஸ்டமர்ஸ் சொல்ற டிசைன், வார்த்தைகளை கவர்ல பிரின்ட் செய்வோம். குழந்தைகள் பிறந்தநாள் பார்ட்டி சாக்லேட்டுக்கு அந்த பேபியின் போட்டோ, ரிட்டர்ன் கிஃப்ட்டுக்கு அதுக்கேற்ற வாசகங்கள்னு, ஃபங்ஷன் ஆர்டருக்குத் தகுந்த மாதிரி சாக்லேட் கவரை வடிவமைப்போம்!’’ என்ற அசோக்குமார்,

சாக்லேட் பிசினஸ்...

‘‘ஆரம்பத்துல இந்த பிசினஸ்ல நிறைய அடி வாங்கியிருக்கோம். இப்போ வளைகாப்பு தொடங்கி, காதுகுத்து வரை பல வெரைட்டி ரேப்பரை தாங்கி எங்க சாக்லேட் வருது. 45 கிராம் சாக்லேட்டை 38 முதல் 42 ரூபாய் வரை விற்கிறோம். கொஞ்சம் கனமான சாக்லேட்டை ஹேண்ட் மேட் அட்டை பாக்ஸ்ல கொடுக்குறோம். அந்த பாக்ஸ் பார்க்க ரொம்ப ஸ்டைலிஷ்ஷா இருக்கும்; சாக்லேட்டும் கொஞ்சம் காஸ்ட்லியா இருக்கும். இப்போ இந்தியா முழுக்க எங்க சாக்லேட் டெலிவரி போகுது. வெளியூருக்கு மூணு நாட்களுக்குள் டெலிவரி கொடுத்துடுவோம். இதை ரூம் டெம்ப்ரேச்சர்லேயே வைக்கலாம்!’’ என்றார், துறுதுறுவென்ற பேச்சில்.

‘‘ஒரு தடவை பெரிய ஹோல்சேல் ஆர்டர் கிடைச்சப்போ, ரீடெய்ல் விலையையே அவங்களுக்கும் சொல்லி, அந்த ஆர்டர் கேன்சல் ஆயிருச்சு. அப்போதான் ஹோல்சேல் டீலிங் எப்படி இருக்கணும்னு கத்துக்கிட்டோம். இப்படி இந்த பிசினஸில் ஒவ்வொரு அடியிலும் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேதான் இருக்கோம். அதே அடியால எங்க தவற்றைத் திருத்தி, அடுத்த ஆர்டரை வாங்கவும் செய்றோம். என் பையன் இந்த பிசினஸுக்கான தயாரிப்பு மற்றும் டெக்னாலஜி விஷயங்களைத் தொடர்ந்து கத்துட்டு பிசினஸை விரிவாக்கிட்டே வர்றான்!’’ என்கிறார் உமாராணி புன்னகையுடன்.

‘‘சமீபத்தில் நடிகர் பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் நிச்சயதார்த்தத்துக்கு நாங்க தயாரிச்ச ‘தேங்க்ஸ் ஃபார் கமிங்!’ என்ற ரிட்டர்ன் கிஃப்ட் சாக்லேட்ஸ், செம ஹிட் ஆச்சு! ஹிட் ஃபார்முலா தொடரும்!’’

- ஆர்வத்துடன் சொல்கிறார்கள் அம்மாவும், பையனும்!

ம.பிரியதர்ஷினி படங்கள்:தே.சிலம்பரசன்